முகத்திரையும் முஸ்லிம்களும்

  • 13
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தில் இருந்து வந்த முகத்திரை என்ற அடையாளம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்ற காரணத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் தற்காலிகமாக முஸ்லிம் பெண்கள் அணிகின்ற முகத்திரையை அகற்றி இரு காதுகளும் வெளியில் தெரிகின்ற அளவு தமது தலையை மறைக்கலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அச் சட்டம் மாற்றப்பட்டு அது காதுகளை மறைக்கலாம் என்ற ரீதியில் தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது. இலங்கை அரசினால்  நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டமாக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இதன் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களில் ஒரு சாரார் இந்த முகத்திரை விடயத்தில் கருத்து முரண்பாட்டில் பலத்த வேறுபாட்டை முன்வைத்தனர். அதில் ஒரு சாரார் முகத்திரை முஸ்லிம் பெண்களின் அடையாளம் எனவும் அது இஸ்லாத்தின் பால் கட்டாயம் என்பதாகவும் பெண்கள் முகத்திரை அணிவது வாஜிப் என்றும் வாதித்தனர். அடுத்த சாரார் முகத்திரை என்பது நபி (ஸல்)  அவர்களின் மனைவிகளுக்கு மட்டும் தான் கடமையாக்கப்பட்டது எனவும் ஏனைய பெண்களுக்கு கடமையாக்கப்படவில்லை அதாவது, முகத்திரை அணிவது வாஜிப் இல்லை என்ற கருத்தை முன்வைத்தனர்.
இது இவ்வாறு இருக்க பல மாதங்களுக்கு முன்னரே நாங்களும் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற கருப்பு நிற ஆடை கலாச்சாரம் சம்பந்தமாகவும் முகத்திரை சம்பந்தமாகவும் இன்றைய சூழலுக்கும் காலநிலைக்கும் பொருத்தப்பாடு இல்லை என்ற கருத்தை முன்வைத்து இருந்தோம். அப்போது நாங்கள் எமது சமூகத்தால் எதிர்க்கப்பட்டோம். ஆனால், நாங்கள் இக்கருத்தை அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும்  மருத்துவத்தின் அடிப்படையிலேயே  முன்வைத்தோம். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத எம் சமூகம் இன்று அரசின் சட்டமாக அதை ஆக்கிய பின்னர் நடைமுறைப்படுத்துகின்றனர்.
இந்த முகத்திரை விடயத்தை பொருத்தமட்டில் இன்றைய நேற்றைய பிரச்சினையாக இது காணப்படவில்லை. இது பல வருடங்களாக எம் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்டு வந்த ஒரு பிரச்சினையாகவே காணப்பட்டது. எனினும் இதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு தகுந்த இடம் கிடைக்காத காரணத்தினால் இப்போது நடந்து முடிந்த அந்த தீவிரவாத தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் மீது அடிக்கப்பட்ட ஒரு பலமான ஒரு அடியாகவே இந்த முகத்திரை விடயம் காணப்படுகின்றது.
இதன் பின்னரான காலப்பகுதியில்  முஸ்லிம்களின் ஒவ்வொரு விடயமாக அலசி ஆராயப்பட்டு  முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு கால கட்டத்திலேயே எம் சமூகம் இன்று இந்த நாட்டிலே வாழ்ந்து  கொண்டிருக்கின்றது என்பது நாங்கள் மறுக்க முடியாத உண்மையாக விளங்குகின்றது. இதன் அடிப்படையிலே இஸ்லாத்துக்கும் முகத்திரைக்கும் என்ன தொடர்பு என்பதை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்துக்கும் முகத்திரைக்கும் என்ன தொடர்பு உள்ளது?

என்பதனையும் முஸ்லிம் பெண்களுக்கு முகத்திரை இஸ்லாம் கட்டாயப்படுத்தி உள்ளதா என்பதையும் நாங்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் நாம் ஆராய்கின்ற பொழுது முகத்திரை என்பது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்ட ஓர் ஆடையாகவே இது காணப்படுகின்றது. இது இவ்வாறு இருக்க ஏனைய பெண்கள் மீது இஸ்லாம் முகத்திரையை கட்டாயப்படுத்தவில்லை. அதாவது, வாஜிப் என்ற நிலைக்கு இஸ்லாம் முகத்திரையை ஆக்கியதாக தெளிவான சான்றுகள் எங்கேயும்  கிடைக்கப் பெறவில்லை. இதனை நாங்கள் நன்றாக விளங்கிக் கொண்டால் எம்மிடத்தில் பிரச்சினைகள்  வரமாட்டாது.
முகத்திரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களுக்கு மாத்திரம்தான் கட்டாயமாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கீழ்வருமாறு.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (24:31)

நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.(33:59)

இவ்விரு வசனங்களும் (24:31, 33:59) பெண்களின் ஆடைகளுக்கான வரம்புகளைப் பற்றி பேசுகின்றன. பெண்கள் தமது ஆடைகளுக்கு மேல் ஜில்பாப் என்ற மேலங்கியை அணிய வேண்டும் என்று 33:59 என்ற வசனம் கூறுகிறது. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற கருத்துடையோர் இந்த வசனத்தை தங்களின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். ஜில்பாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை என்று இவர்கள் கொடுக்கும் விளக்கமே இந்த வாதத்திற்கு அடிப்படையாகும்.

ஜில்பாப் என்ற சொல்லுக்கு அகராதி நூல்களில் தலை மீது போட்டுக் கொள்ளும் கிமார் எனும் முக்காட்டை விட பெரிய துணி என்றும், ஆடைக்கு மேல் போர்த்திக் கொள்ளும் மேலங்கி என்றும், வேட்டி போன்ற ஆடை என்றும், உடலை முழுமையாக மறைக்கும் ஆடை என்றும் பல அர்த்தங்கள் உள்ளன. பெண்கள் தமது முகம் உட்பட அனைத்து உறுப்புக்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடையோர் உடல் முழுவதும் மறைக்கும் ஆடை என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டு வாதிடுகின்றனர்.

ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருந்தால் குறிப்பிட்ட இடத்தில் எது பொருத்தமான அர்த்தம் என்று கவனித்துத் தான் அதற்குப் பொருள் செய்ய வேண்டும். அகராதியில் இருக்கிறது என்பதற்காக நாம் விரும்புகின்ற ஒரு அர்த்தத்தைச் செய்யக் கூடாது. இந்த அடிப்படையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவ்வசனத்தில் (33:59) பயன்படுத்தப்பட்டுள்ள ஜில்பாப் என்ற சொல்லுக்கு முழு உடலையும் மறைக்கும் ஆடை என்று பொருள் செய்ய முடியாது. தலையில் போட்டு மார்பில் தொங்க விடும் ஆடை என்ற அர்த்தம் தான் செய்ய வேண்டும். இப்படித்தான் பொருள் செய்ய வேண்டும் என்று இவ்வசனமே நமக்கு வழிகாட்டுகிறது.
 

முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது

என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஜில்பாப் எனும் ஆடை இரண்டு அம்சங்களைக் கொண்டது என இவ்வசனத்தில் கூறப்படுகிறது. ஜில்பாப் அணிவதால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பது முதல் விஷயம். அவர்கள் அறியப்பட வேண்டும் என்பது இரண்டாவது விஷயம்.
ஜில்பாப் எனும் மேலங்கி ஆண்களால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அவர்கள் யார் என்று அறியப்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் மேற்கண்ட வசனத்தில் உள்ள இரு அம்சங்கள். பொதுவாகப் பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவதுதான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது. ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.

அதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு போட்டுக் கொண்டால் அவர்கள் அறியப்படுவது அவசியம் என்ற இரண்டாவது அம்சம் அடிபட்டுப் போய்விடும். யார் என்று அறியப்படும் வகையில் தான் பெண்களின் ஆடை இருக்க வேண்டும் என்று இவ்வசனம் தெளிவாகக் கட்டளையிடுகிறது. ஒருவர் யார் என்று அறியப்படுவதற்கு முகம் திறந்திருப்பது அவசியமாகும். முகத்தை வைத்துத் தான் இன்னார் என்று அறிய முடியும்.

24:31 என்ற வசனத்தில்

தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்

என்று சொல்லப்படுவதும் இதையே குறிக்கிறது. ஜில்பாப் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஜில்பாப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள சில ஹதீஸ்களை நாம் துணையாகக் கொள்ளலாம்.

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்திலிருந்து மாதவிடாயுள்ள பெண்கள் விலகியிருக்க வேண்டும் (என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள ஜில்பாப் (மேலங்கி) இல்லையே என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது ஜில்பாப்களில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும் என்றார்கள். (நூல் : புகாரீ 351)

33:59 என்ற வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜில்பாப் என்ற சொல்லே இந்த ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு அவர்கள் ஜில்பாப் அணிவது அவசியம் என்றும், ஜில்பாப் இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.
பெருநாள் தொழுகைக்கு வரும் பெண்கள் ஜில்பாப் போட்டுக் கொண்டு தான் வர வேண்டும் என்பது இதில் இருந்து தெரிகிறது. ஜில்பாப் அணிந்த பின்னரும் பெண்களின் முகம் திறந்து இருந்துள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும், இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும், நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் ‘தர்மம் செய்யுங்கள்! நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகுகள் ஆவீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து, ‘ஏன் (இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே?’ என்று கேட்டார்கள்.  அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள். (நூல் : முஸ்லிம் 1607)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட பெண்மணி பற்றி அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) குறிப்பிடும்போது கன்னங்கள் கருத்த பெண்மணி என்று கூறுகிறார். அந்தப் பெண்மணி முகத்தை மறைக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. பெண்கள் முகம் மறைப்பது அவசியம் என்றால் தன்னை நோக்கி கேள்வி கேட்ட பெண்ணின் முகம் வெளியே தெரிந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். அவர்கள் கண்டிக்காமல் இருந்தது, பெண்கள் அந்நிய ஆண்கள் முன்னிலையில் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஜில்பாப் என்பதற்கு தலையிலிருந்து முகத்தை மறைக்கும் வகையில் தொங்கவிடுதல் என்ற பொருள் இருக்குமானால் அப்பெண்ணின் முகம் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் பெண் ஜில்பாப் போடவில்லை என்றும் கூற முடியாது. பெருநாள் தொழுகைக்கு வரும்போது பெண்கள் அவசியம் ஜில்பாப் அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதால் அப்பெண் ஜில்பாப் இல்லாமல் பெருநாள் தொழுகைக்கு வந்திருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் ஏன் ஜில்பாப் அணியவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள்.
அந்தப் பெண் ஜில்பாப் அணிந்திருந்தும் கூட அவரது கன்னம் கருப்பாக இருந்ததை ஒரு ஆண் சொல்ல முடிகிறது என்றால் ஜில்பாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை அல்ல என்பதும், தலையில் இருந்து மார்பின் மீது போடும் ஆடை தான் என்பதும் உறுதியாகிறது.
பெண்கள் முகத்தை மறைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கட்டளையிடவும் இல்லை. ஆர்வமூட்டவும் இல்லை. தமது முன்னிலையில் பெண்களின் முகம் திறந்திருந்தும் அவர்கள் அதைக் கண்டிக்கவில்லை என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நம்பிக்கையுள்ள (முஃமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது. (நூல் : புகாரீ 578)

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் அந்த முகத்திரையே அவர்கள் யார் என்று அறிவதற்குத் தடையாக இருந்திருக்கும். ஆனால் இருளின் காரணமாக அப்பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதிலிருந்தே தொழுகைக்கு வந்த பெண்கள் தொழுது விட்டு வெளியே செல்லும்போது முகத்திரை அணிந்திருக்கவில்லை என்பதை விளங்கலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும், மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது தர்மமாகக் கருதப்படுமா என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் எனது கணவருக்கும், எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு, ஸைனப் என பிலால் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால் (ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள். (நூல் : புகாரீ 1466)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்த இரண்டு பெண்களும் “நபியவர்களிடம் நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்” என பிலால் (ரலி) அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அந்த இரு பெண்களும் முகத்திரை அணிந்திருந்தால் தாங்கள் யார் என்பதை பிலால் அவர்களிடமே தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் முகத்தை வெளிப்படுத்தியவர்களாக வந்திருந்த காரணத்தினால் தான் அவர்கள் யார் என்பதை பிலால் தெரிந்து கொண்டிருக்க முடியும். அவர்களை பிலால் அறிந்து கொண்ட காரணத்தினால்தான் அவ்விரு பெண்களும் வீட்டிற்குள் இருந்த நபியவர்களிடம் தங்களைப் பற்றி சொல்ல வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் தான் இருந்துள்ளார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் சான்றாகத் திகழ்கிறது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள். (நூற்கள் : புகாரீ 193)

ஆண்களும், பெண்களும் ஒரு இடத்தில் சேர்ந்து உளூ செய்துள்ளார்கள் என்றால் பெண்களின் முகத்தை ஆண்கள் பார்க்காமல் இருக்க முடியாது. முகத்தை மறைத்துக் கொண்டு உளூச் செய்ய முடியாது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் அமர்ந்து கொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்! என்று சொன்னார்…. (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) (நூல் : புகாரீ 5030)

இந்தச் சம்பவத்தில் அப்பெண் நபியவர்களின் சபைக்கு வரும்போது முகத்திரை அணியாமல்தான் வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, சபையிலிருந்த அனைத்து நபித்தோழர்களும் பார்க்கிறார்கள். ஒரு நபித்தோழர் எழுந்து அப்பெண்ணைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறு நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார். அப்பெண்ணின் முகம் அந்த நபித்தோழரைக் கவர்ந்த காரணத்தினால்தான் அவர் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார். ஏனெனில் திருமணம் செய்பவர்கள் மணமுடிக்கும் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முகத்திரை அணிவது கட்டாயம் என்றிருந்தால் நபித்தோழர்களோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்த சபைக்கு முகத்திரை அணியாமல் ஒரு பெண் வந்திருக்க மாட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?  என்று கேட்டார்கள். அப்பெண்மணி, ஆம் (தெரியும்) என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுது கொண்டிருக்கும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது ‘அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண் ‘என்னைவிட்டு விலகிச் செல்வீராக! எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)’ என்று சொன்னாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார். அப்பெண், எனக்கு அவர் யாரென்று தெரியாது எனக் கூறினாள். அம்மனிதர், அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்று சொல்ல அவள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை என்று சொன்னாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என்று சொன்னார்கள். (நூல் : புகாரீ 7154)

கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்த பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்த சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்தது. பின்னாளில் ”இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா” என அனஸ் (ரலி) அவர்கள் தம் வீட்டிலுள்ள பெண்களிடம் கேட்கிறார்கள். அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெண்ணைக் கண்டித்தார்களோ அப்பெண்ணை அனஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் பார்த்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
சமாதிக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் முகத்தை மறைத்திருந்தால் அப்பெண் யார் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிந்திருக்க முடியாது. சமாதிக்கு அருகில் அந்தப் பெண் அழுது கொண்டு இருந்தபோது அனஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் முகத்தைப் பார்த்துள்ளார் என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னரும் அப்பெண்ணின் முகத்தை அவர் பார்த்துள்ளார் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் (மனைவிமார்களாக உள்ளவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தபோதும் சரியே. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.(33 : 52)

இவ்வசனத்தில் பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் இனி வேறு பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகின்றான். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சட்டம் இருந்திருந்தால் அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தபோதும் என்று கூறுவது பொருளற்றதாகி விடும். இதிலிருந்து நபியவர்களின் காலத்தில் பெண்களின் முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.(நூல் : முஸ்லிம் 4363)

பெண்கள் முகத்தை மறைப்பவர்களாக இருந்தால் அந்நியப் பெண்ணைப் பார்த்து பார்வையைத் திருப்பிக் கொள்ளுதல் தேவை இல்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள் என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். பாதையின் உரிமை என்ன? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை எடுத்துச் சொல்வதும், தீமையைத் தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும் என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரீ 2465)
இந்தச் சான்றுகளில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, “நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!” என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்து விட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?” என்று கூறினாள். உடனே உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு ஸுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள்………..(சுருக்கம்) (நூல் : முஸ்லிம் 5073)

கிமார் அணிந்து வரும் உம்முஸுலைம் (ரலி) அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைமே! உமக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கிறார்கள். முகம் தெரிந்தால்தான் இவ்வாறு கேட்கமுடியும். முகம் மறைக்கப்பட்டிருந்தால் நபியவர்களுக்கு அந்தப் பெண் யாரென்றே தெரிந்திருக்காது. இதிலிருந்து உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் முகம் மறைக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். …. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்தபடி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார். (நூல் : புகாரீ 565)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் உம்மு ஸுஃபர் (ரலி) அவர்களைப் பார்த்திருக்கிறார்கள். நபியவர்களின் காலத்திற்குப் பின்னர் அதாவு பின் அபீ ரபாஹ் அவர்களுக்கு உம்மு ஸுஃபர் அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்மு ஸுஃபர் அவர்களை இப்னு அப்பாஸ் பார்த்த காரணத்தினால்தான் நபியவர்களின் காலத்திற்குப் பிறகும் அவர்களைச் சரியாக இனம் கண்டு கொள்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்மு ஸுஃபர் (ரலி) அவர்கள் தமது முகத்தை மறைத்திருந்தால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் நபியவர்களின் காலத்திலும், நபியவர்களின் காலத்திற்குப் பிறகும் உம்மு ஸுஃபர் (ரலி) அவர்களை அடையாளம் கண்டிருக்க முடியாது. உம்மு ஸுஃபர் அவர்கள் தமது முகத்தை மறைத்திருந்தால் அவர் கருப்பு நிறப் பெண்மணி என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் கூறமுடியாது. உம்மு ஸுஃபர் (ரலி) அவர்கள் நபியவர்களின் காலத்திலும் தம்முடைய முகத்தை மறைத்திருக்கவில்லை. அவர்களின் காலத்திற்குப் பிறகும் தமது முகத்தை மறைத்திருக்கவில்லை என்பதை இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
மேலே கூறிய ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கின்ற போது இந்த முகத்திரை விடயத்தை நாங்கள் சரிவர புரிந்து கொள்ள முடியும். இது இவ்வாறிருக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட முகத்திரை சட்டத்தை தமது பள்ளிகளில் ஒருவர் தெளிவு படுத்திய பின்னர் அதனை அரைகுறையாக விளங்கிய ஒரு கூட்டம் இந்த விடயத்தை கூறியவருக்கு  எதிராக கையொப்பம் சேகரிப்பதும் ஊர்வலம் செல்வதும் அவரை இழிவுபடுத்தவும் முன்வந்துள்ளனர். இவர்களை நாம் என்ன வென்று கூறுவது? இவர்களுக்கு மார்க்கம் விளங்குவதில்லை. உலகம் புரிவதில்லை. அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.
இதேபோல் இன்னும் ஒரு கூட்டம் ஏகத்துவக் கொள்கைக்கும் ஏகத்துவ வாதிகளுக்கும் சமாதி கட்ட வேண்டும் என்ற நினைப்பில் இந்த சமூக வலைத்தளங்களிலும் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றனர். முகத்திரை முஸ்லிம்களுக்கு கட்டாயம் இல்லை என்ற விடயத்தை எந்த ஒரு ஏகத்துவ வாதியும் கூறவில்லை. மாறாக அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளுமே கூறுகின்றன. நீங்கள் சரியாக   சண்டையிடுவது என்றால் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் தான் அதனை செய்ய வேண்டும். நீங்கள் அதனை செய்ய மாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள் அதனை செய்தால் பாவிகளாக மாறிவிடுவீர்கள் என்பதனாலாகும்.
நம்முடைய சமூகம் இன்னும் தக்லீத்வாதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. மேற்கத்திய வாதிகள் அல் குர்ஆனையும் நபி வழியையும் ஆராய்ந்து இஸ்லாத்திற்கு நுழைகின்ற காலகட்டத்திலேயே நாங்கள் இன்னும் தக்லீதை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனால்தான் நாங்கள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதனை நாங்கள் இன்னும் விளங்கவில்லை. எப்போது நாங்கள் தக்லீதை விட்டுவிட்டு சரிவர அல் குர்ஆனையும் நபி வழியையும் ஆராய்ந்து பின்பற்றுகிறோமோ அப்போது தான் எமது சமூகத்திற்கான விடிவு நிலை உண்டாகும்.

அண்மையில் கூட  ஒரு முஸ்லிம் பெண் வைத்தியர் முகத்திரையை அகற்ற வேண்டும் என்பதற்காக தனது தொழிலை இராஜினாமா செய்து விட்டார். அவர் ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கை தேசத்தில் பல துறைகளிலும் முஸ்லிம்களுக்கான இடங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. அந்த ரஹ்மத்தை அருளைப் பெற்றவர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். இக்காலகட்டத்திலேயே முஸ்லிம்களுக்குப் பணிவிடைகள் செய்யக்கூடிய இவர்கள்  படித்தவர்களே இவ்வாறு செய்தால் இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் நிலை கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

எனவே முகத்திரை என்பது தான் விரும்பியவர்கள் அதை அணியலாம் அதை அணிய வேண்டும் என்பதில் யாருக்கும் கட்டாயம் கிடையாது. அதை அணியாதவர்களையும் யாரும் குறைகூற வேண்டாம். அதற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. ஏனென்றால் இஸ்லாத்தில் வாஜிப் என்ற நிலையில் இல்லாத ஒன்றுக்காக யாரும் நிர்ப்பந்திக்கப்பட எந்த ஒரு தேவைப்பாடும் கிடையாது. எனினும் இலங்கை நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டும் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள  அவசரகால சட்டத்தின் பிரகாரமும் முஸ்லீம் பெண்கள் முகத்திரையை முழுமையாக நீக்கி இந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் முஸ்லீம்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காகவும் அவர்களின் இருப்புக்காகவும் அல்லாஹ்வின்பால் நாங்கள் அதிகமாக நெருங்கக்கூடிய கூட்டத்தினராக மாறுவோமாக.
NAFEES NALEER
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தில் இருந்து வந்த முகத்திரை என்ற அடையாளம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்ற காரணத்தின் அடிப்படையில்…

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தில் இருந்து வந்த முகத்திரை என்ற அடையாளம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்ற காரணத்தின் அடிப்படையில்…