இலங்கைக்கு ஏற்ற இஸ்லாம்

  • 21

இலங்கையில் கடந்த 5 வருட கால வரலாற்றிலும் இடம் பெற்ற ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னாலும் இனங்காணப்பட்ட விடயங்களே இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான தலைமைத்துவமும் சட்டக்கோவை (மத்ஹப்¸ஜமாஅத்¸தரீக்கா) ஒன்றும் தயாரிக்க வேண்டியதாகும். மேலும் நமக்கான பலமான பொது ஊடகமொன்றையும் உருவாக்க வேண்டியுள்ளோம். இன்றைய பகுதியில் எமது அவதானம் தலைமைத்துவம், சட்டகோவை சார்ந்ததாகும்.

தலைமத்துவமும் சட்டக்கோவையும் உருவாக வேண்டும் என்றால் சமூகத்தின் அடித்தளமாகிய சிவில் சமூகம் அல்லது பொதுமக்கள் தளத்தில் முதலாவது ஒற்றுமை ஏற்படவேண்டும். அவ்வகையில் இலங்கை முஸ்லிம்களிடம் ஒற்றுமை சீர்குலையக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததில் கடந்த பத்து ஆண்டுகால அனுபவத்தினூடாக இனங்காணப்பட்ட விடயமே இலங்கையில் அழைப்புப் பணி மேற்கொள்ளவென உருவாக்கப்பட்ட ஜமாஅத்களின் தாக்கம் இளைஞர்களிடம் அதிகம் தாக்கம் செலுத்தியமையாகும்.

தஃவா (அழைப்பு) பணி என்பது முஸ்லிம் சமுகத்தில் இடம்பெறுகின்ற தீமைகளை தடுத்து நன்மைகளை ஏவும் பணியாகும், மேற்படி அழைப்பு பணியில் ஈடுபடுவோர் சமுகத்தில் உள்ள நல்லவர், கெட்டவர் பாரமல் தமது பணியை செய்ய வேண்டும். ஆனால் இலங்கையில் உருவாகிய ஜமாஅத்கள் படித்த இளைஞர்களை மாத்திரமே இலக்காக கொண்டு செயற்பட்டது. படிக்காத ஊர் சுற்றும் பாடசாலை பருவ மாணவர்களையும், இளைஞர்களையும் களத்தில் சென்று திருத்தி நல்வழிப்படுத்த முயற்சிக்கவில்லை.

மேற்குறித்த ஜமாஅத்கள் சமுகத்தில் பரவியிருந்த மாணவப்பருவ காதலுடன் விபச்சாரம், போதைப்பொருள் பாவனை, வட்டி போன்ற பாவங்களை சமுகத்திலிருந்து அகற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை விட அதிகமாக தமக்குள் இருக்கும் கருத்து முரண்பாடான பகுதிகளை மாத்திரம் அடிக்கடி நினைவுபடுத்தி அதனூடாக தமது இருப்பை உறுதி செய்ய முற்பட்டனர்.

இதனைவிட பயங்கரமானதும் இந்த சமுகத்தை ஒற்றுமைபடுத்த முடியாமைக்கான பிரதான காரணம் கருத்து முரண்பாடான பகுதியில் தம் கருத்தையேற்காத மாற்றுத்தரப்பாரை ஓர் இஸ்லாமிய சகோதரன் என பார்க்காமல் அவனை எதிரி அல்லது இஸ்லாத்தைவிட்டு நீங்கிய காபிர் என்ற நிலைப்பாட்டில் பார்த்மையாகும்.

இதனால் சமுகத்தில் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் கிராமத்திலிருந்த பல ஜமாஅத்களின் கீழ் இஸ்லாத்தை கற்று வந்து ஒரே வகுப்பில் இதுபற்றி கலந்துரையாடி தமக்குள் முரண்பட்டு இன்று ஒற்றுமைப்படுத்த முடியாதவாறு சின்னபின்மாகியுள்ளது.

இதற்கான இன்னொரு காரணம் அழைப்புப்பணியில் ஈடுபட வருவோரின் பிரதான இலக்காக இருக்கவேண்டியது சமுகத்தை நல்வழிப்படுத்தல் என்பதாகும். ஆனால் இந்த இலக்கைவிட தமது ஜமாஅத்கான ஆளனியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோள் அழைப்பாளர்களிடம் அதிகரித்மையாகும்.

ஆனால் பிரிந்துள்ள முஸ்லிம் சமூகத்தை அதே அழைப்பாளர்கள் முயற்சித்தால் ஒற்றுமைப்படுத்தலாம். இதற்கான எளிமையான வழிகாட்டலொன்றை கருத்து முரண்பாடுள்ள தராவீஹ் தொழுகையை உதாரணமாக எடுத்து அவதானிப்போம்.

சமுகத்தில் தவ்ஹீத் சிந்தனையுள்ளோரின் கருத்து தராவீஹ் எட்டு என்பது, தரீக்கா சிந்தனையுள்ளோரின் கருத்து இருபது என்பது தமது நிவைப்பாட்டிற்கு ஆதாரமாக புஹாரி, புஹாரியின் விளக்கவுரை பத்ஹுல் பாரி என்பவற்றில் இருந்து ரஸூலுல்லாஹ், உமர்(ரழி) ஆகியோரின் கருத்துக்கனை முன்வைக்கின்றனர்.

ஆனால் புஹாரி கிரதந்தில் தராவீஹ் தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை (இரவுத் தொழுகை) ஆகிய இரு தலைப்புக்களின் கீழும் ஓரே ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு இரவுத்தொழுகைகள் தொடர்பாக இடம்பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றில்​,

இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் நபி அவர்களே! இரவுத் தொழுகை எவ்வாறு? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹ் (நேரம் வந்துவிடுமென) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக என்று விடையளித்தார்கள். (புஹாரி 1137)

இந்த ஹதீஸின்படி இரவத்தொழுகைள் ரக்அத்களுக்கு பதிலாக ஸுபஹுடையநேரத்தால் வரையறுக்கப்பட்டுள்ளதை அவாதானிக்கலாம். எனவே ரமழான் காலத்தில் தொழப்படும் இரவுத்தொழகையும் ரக்அத்களால் வரையறுக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதனால் எட்டு தொழுதாலும் தவறில்லை இருபது தொழுதாலும் தவறில்லை என்பது புலணாகின்றது அவ்வாறே இரவில் தன்னால் இயன்றளவு நீண்டநேரம் தொழவேண்டும் என்று எதிர்பாக்கப்படுவதை அவாதானிக்கலாம்

இந்த உண்மையை திரிபுபடுத்தி சமூகத்தில் ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை ஊக்குவிக்க வேண்டிய அழைப்பாளர்கள் ரமழானில் இரவுநேரங்களில் எட்டு ரக்அத் தொழவேண்டும் இல்லை இருபதுதான் தொழவேண்டும் என  வாதிட்டு வாதிட்டு சமூக​த்தை பிரித்துவிட்டனர்.

இதற்குப் பதிலாக ரமழானில் தராவீஹ் எனும்தொழுகையை தொழ வேண்டும் என்று இரண்டு பிரிவும் வற்புறுத்தியிருந்தால் சமூக வளைத்தளமாகிய வட்ஸ்ஸப்பில் தியானிக்கும் இளைஞர்களுக்கு பதிலாக சமூகத்தளமாகிய பள்ளிவாசல் தொழகைஸப்பில் தொழும் இளைஞர்கள் உருவாகியிருக்கும்.

இவ்வாறு அனைத்து கருத்து முரண்பாடான பகுதிகளிலும் உணர்ச்சி வசப்படாமல் புரிந்துணர்வுடன் மக்களுக்கு தெளிவூட்டியிரிந்தால் இன்று சமுகம் பிளவுபட்டு காட்டிக்கொடுக்கும் நிலைக்கு மாறியிருக்காது. அவ்வாறே முரண்பாடான பகுதிகளில் தமது கருத்தை ஏற்காதோரை சகோதரனாக பார்க்கும் நிலையும் உருவாகியிருக்கும்.

இஸ்லாமிய கருத்து முரண்பாடுகளால் ஒற்றுமை சீர்குலைந்து தமது ஜமாஅத் கருத்துடன் முரண்படும் மாற்றுத் தரப்பாரை தேசிய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலானவர்கள் போன்று காட்டிக் கொடுக்கும் சமுகத்தை  ஒற்றமைப்படுத்த முடியுமா? என சிலரிடம் வினவியபோது வழங்கிய பதில் முடியாது என்பாதாகும். ஆனால் இது நிச்சியம் பொதுமக்கள் இஸ்லாத்தை தெளிவாக புரிந்துகொண்டால் சமுகத்தை ஒற்றுமைப்படுத்த முடியும்,

இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகம் தமது இயக்கத்தின் கருத்தை விட்டுக்கொடுத்து இன்னொரு இயக்கத்தின் கருத்தை ஏற்று ஒற்றுமையாகும் மனநிலையில் இல்லை. ஆனால் அரசின் மூலம் தமது கருத்துக்கு மாற்றமான சட்டமொன்றை சமுகத்தின் மீது திணித்தால் அரசுக்கு பயந்து ஒற்றுமைப்படும் நிலையில்தான் சமூகமுள்ளது.

இலங்கையில் உள்ள ஜமாஅத்களில் கருத்து முரண்பாடான இன்னொரு விடயமே முகத்திரை அணிதல். இது பற்றி ஒரு தரப்பு ரஸூலுல்லாஹ்வின் மனைவிமார்களுக்கு மாத்திரம் கடமை எனும்போது இன்னொரு தரப்பு அனைத்து பெண்களுக்கும் வாஜிப் என்று கூறி சமூகத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவசரகால சட்டத்தின் கீழ் முகத்திரை அணிய வேண்டாம் என்ற சட்டம் வந்தவுடன் அனைவரும் கருத்து பேதங்களை மறந்து ஒன்றுபட்டனர் .

இவ்வாறு தராவீஹ் தொழுகை, பெருநாள் தொழுகை, கந்தூரி, துஆ,விரலசைத்தல், குனூத் போன்ற விடயங்களிலும் அரசினால் சட்டமியற்றி எம்மை அடிமைப்படித்தி ஒற்றமைப்படுத்த முன்னர்   நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமக்கான ஒரு சட்டக்​​கோவையை உருவாக்கவேண்டும். ஏனெனில்  நாம் தற்போது பின்தொடரும் ஜமாத், மத்ஹப், தரீக்காக்கள், இலங்கையில் உருவாக்கப்பட்வையல்ல. மாறாக ஒவ்வாரு  ஜமாத்களும் குறித்த காலப்பகுதியில் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் சமுகக் கட்டமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்பட்டது.

இறுதி 150 வருடங்களில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்), மௌலானா இல்யாஸ் (ரஹ்), ஹஸனுல் பன்னா (ரஹ்) ஆகியோரால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்புக்களான வஹாபிஸம், தப்லீக் ஜமாஅத், இஹ்வானுல் முஸ்லிமீன் என்பன சவுதி, இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில் அப்போது காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டவையாகும்.

சவுதியில் மூட நம்பிக்கைகள், அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் சமூகத்தை சீர்திருத்த அந்தப் பிரதேசத்தில் ஏகத்துவ​​த்தை நிலைநாட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன்             முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களால் உருவாக்கப்ட்ட அமைப்பே வஹாபிஸம்.

இந்தியாவில் முஸ்லிம் பெயருடன் மாத்திரம் தொழுகையின்றி இஸ்லாமியர்கள் என்று வாழ்ந்த சமூகத்தை சீர்திருத்தும் நோக்கத்துடன் மௌலானா இல்யாஸ் (ரஹ்)அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே தப்லீக்  ஜமாத்.

எகிப்தில் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுற்ற காலப்பகுதியில் உலகில் மீண்டும் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே  இஹ்வானுல் முஸ்லிம்.

இவ்வாறு இலங்கையின் இன்றைய சூழலுக்கு ஏற்ப சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு சமூக​த்தை ஒற்றுமைப்படுத்தும்  நோக்கில் இலங்கைக்கான இஸ்லாமிய சட்டக்கோவையை நாம் உருவாக்க வேண்டும்.  ஏனேனில் சவுதி, இந்தியா, எகிப்து நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினை வேறு. இலங்கையின் தற்போதைய பிரச்சினை வேறு. அங்குள்ள சமுகக் கட்டமைப்பு அல்ல இங்குள்ள சமுகக் கட்டமைப்பு.

இலங்கை முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்கள் தீவிர சிந்தனைபோக்கற்றவர்கள், மதங்களில் பிரிவினை இருந்தாலும் அதனை மறந்து  கரைந்து போகமல் கலந்து வாழ விரும்புவோர். தாம் விரும்பும் உலமா எவ்வாறான இக்கட்டான ஆவேசமான நிலைமைகளில் எவ்வாறான கட்டளையிட்டாலும் தம்மால் இயன்றளவு எடுத்து நடக்க முயலுபவர், எனவே இவர்களை ஒற்றுமைப்படுத்த முடியும். ஆனால் இவர்களுக்குள்தான் விபச்சாரம், போதைப்பொருள் பாவனை, வட்டி, களவு, மோசடி போன்ற பாவங்களுடன் தொடர்புள்ளோரும் வாழ்கின்றனர்.

​எனவே இவர்களை இலக்காகக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பானது முஸ்லிம் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளான,

  1. தூய இஸ்லாமிய அகீதா

  2. முஸ்லிம்களுக்கான ஆன்மீக சபை

  3. முஸ்லிம் ஆண்,பெண்களுக்கான ஆடை அமைப்பு

  4. முஸ்லிம்களின் திருமண ஒழுங்கு

  5. மாற்று மதத்துடன் கரைந்து போகாமல் கலந்து வாழ்வது எவ்வாறு

  6. பிக்ஹ் துறையில் கருத்து முரண்பாடான விடயத்தில் ஓர் நிலைக்கு வருதல்

  7. இஸ்லாம் தடுத்தவற்றை சமுகத்திலிருந்து ஒழித்தல்

​போன்றவற்றுக்கு தீர்வை முன்வைக்கும் விதத்தில் அமைய வேண்டும்,

எனவே சமுகத்தலைவர்களே! இன்றே முயற்சிப்போம் சமுகத்தை ஒற்றுமைப்படுத்த அதற்காக உங்கள் வரட்டு கௌரவங்களை விட்டு விட்டு உல்லாசமாக கதைத்து தீர்மானம் எடுப்பதற்கு ஒன்று சேருங்கள்.

பொதுமக்களே! நீங்கள் மதபேதங்களை மறந்து கலந்து வாழ விரும்புவோர். எனவே உங்கள் கருத்தை ஏற்காத ஜமாஅத் சகோதரனையும் ஓர் இஸ்லாமியனாக பார்த்து சேர்ந்து வாழுங்கள்.

Ibnuasad

இலங்கையில் கடந்த 5 வருட கால வரலாற்றிலும் இடம் பெற்ற ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னாலும் இனங்காணப்பட்ட விடயங்களே இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான தலைமைத்துவமும் சட்டக்கோவை (மத்ஹப்¸ஜமாஅத்¸தரீக்கா) ஒன்றும் தயாரிக்க வேண்டியதாகும். மேலும் நமக்கான பலமான…

இலங்கையில் கடந்த 5 வருட கால வரலாற்றிலும் இடம் பெற்ற ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னாலும் இனங்காணப்பட்ட விடயங்களே இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான தலைமைத்துவமும் சட்டக்கோவை (மத்ஹப்¸ஜமாஅத்¸தரீக்கா) ஒன்றும் தயாரிக்க வேண்டியதாகும். மேலும் நமக்கான பலமான…