இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்களேன் …

  • 11

நேற்று ஒரு (முஸ்லிம்) சகோதரரோடு நாட்டு நிலைமை தொடர்பாக சும்மா பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சுவாக்கில் அந்த சகோதரர் இந்த நாட்ல முஸ்லிம்கள் இனிமேல் வாழ்வது ரொம்ப கஷ்டம் சிங்களவர்களிடம் துவேஷ உணர்வு அதிகரித்து விட்டது யூதர்களை விட மோசமாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு அவர்கள் அழிந்தே போக வேண்டும் என்றுறொரு சாபம் விட்டார். அதைக் கேட்டதும் எனது மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். மிகவும் கஷ்டப்பட்டு விழுங்கினேன். அத்தனையையும் என்னோடு பேசியவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக… இருந்தும் என்னையும் மீறி சிங்களவர்களிடம் மட்டுமா துவேஷ உணர்வு இருக்கிறது உங்களிடம் இல்லையா என்று ஒரு கேள்வியை சட்டென்று கேட்டுவிட்டேன்.

நான் தொடுத்த கேள்விக்கனை அவருள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியதோ தெரியவில்லை பொங்கி எழுந்த அந்த நபர் நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தையை சொல்வீங்க… நாங்க போய் அவங்கட கடையெல்லாம் ஒடச்சோமா என்று கேட்டார்…

பதிலுக்கு நானும் சொன்னேன் ஆமாம் கடைகளை உடைக்கவில்லை தான்… ஆனால் அவர்களின் நோக்கம் எங்களை அழிக்க வேண்டும் என்பது உங்களின் நோக்கமும் அவர்கள் அழிய வேண்டும் என்பது தான். அவர்களுக்கு அழிக்க வாய்ப்புக் கிடைத்தது செய்தார்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை அவ்வளவு தான் என்றேன்… அந்த நேரம் அவர்ட முகத்தை கொஞ்சம் பார்க்கணுமே…

அந்த சிவந்த முகத்தின் சிவப்பு உதடுகள் வழியாக கோபத்தில் உமிழ்ந்தது போக மீதியை பதிலாக வார்த்தையாக உதிர்த்தார் ,

நாங்க ஒன்றும் சும்மா அவர்கள் அழிய வேண்டும் என்று சாபம் விடவில்லை அவர்கள் எங்களுக்கு செய்த அநியாயத்தின் காரணமாகத்தான் அப்படி கூறினேன்.

என்று சொன்னார்பதிலலித்த உதடுகள் அமைதியடைய கண்கள் என்னைக் கடுப்போடு நோக்கியது … ஆஹ்… அது சரி இப்போதுதான் நீங்கள் எனது வழிக்கு வந்திருக்கிறீர்கள் … நீங்கள் அவர்கள் மீது கோபப்படக் காரணம் ஒன்று இருக்கிறது என்று நம்புகிறீர்கள் தானே ! அப்படி என்றால் ஏன் அவர்கள் எங்களை வெறுப்பதற்கும் காரணம் ஒன்று இருக்க முடியும் என்று நம்ப மறுக்கிறீர்கள் எனக் கேட்டேன் நான்…

பதிலுக்கு அவர் நிறைய நியாயம் பேசி சமாளிக்க முயற்சி செய்தார் அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் நாங்கள் இப்போது விடயத்திற்கு வருவோம்.

எங்களுக்கு இரத்தம் வரும் போது வருவது இரத்தம் தான் என உணரும் நாங்கள் மற்றவர்களுக்கு வரும் போது மட்டும் அது தக்காளி சட்னி என்று நினைக்கும் மனப்பாங்கை மாற்ற வேண்டும்…

உலகிற்கே அருட்கொடையாக வந்த நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் பிறந்த நாங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னைகளின் போது இப்படி சாபம் விடுவது எந்த வகையில் நியாயம்… மக்காவில், தாயிபில் நபியவர்களும் ஸஹாபாக்களும் எதிர்நோக்காத வெறுப்புணர்வுகளையா நாம் இன்று எதிர்கொள்கிறோம், அன்று நபியவர்கள் வெறுப்புணர்வுக்கு எதிராக வெறுப்புணர்வினைக் கொட்டவில்லை மாறாக அவர்களுக்காக ஹிதாயத்தை வேண்டி துஆத்தான் செய்தார்கள்.

அன்றும் இன்றும் முஸ்லிம் சமூகம் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்குத்தான் முகங்கொடுக்கின்றது ஆனால் அந்தப் பிரச்சினைகளை முன்னைய சமூகம் அணுகிய விதம் வேறு இன்று அணுகும் விதம் வேறு, அன்று நபியவர்களதும் ஸஹாபாக்களினதும் இலக்காக இருந்தது இஸ்லாம் வாழ வேண்டும் என்பது ஆனால் இன்று எங்கள் நோக்கம் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்பது தான் இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அன்று முஸ்லிம்கள் தஃவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள் ஆனால் இன்று வஹ்ன் நுழைந்து விட்டது சுயலாபம் தான் முன்னுரிமை பெறுகிறது.

1000 வருட வரலாற்றைக் கொண்ட நாம் இன்னும் அண்ணளவாக 10% முஸ்லிம்கள் தான் வாழ்கிறோம் , 1400 வருடத்தில் உலகத்தின் இரண்டாவது பெரிய மதமாக மாறிய இஸ்லாம் இங்கு மட்டும் 10% தான் இருக்கிறது என்றால் அது யாருடைய குறை. எங்களின் தஃவா முறைமையில் குறைபாடு இருக்கின்றது என்று தானே அர்த்தம், அதெற்கென்று இங்கு நான் பெரும்பான்மை சமூகம் செய்வதெல்லாம் சரி என்று நியாயம் கற்பிக்க வரவில்லை.

நாம் செய்யும் தவறுகளுக்கு மாற்று மதத்தவர்கள் செய்யும் தவறுகளைக் கொண்டு நியாயம் கற்பிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். முதலில் நாம் நம்மை மீளாய்வு செய்து என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்போம். தனிமனித மாற்றம் தான் சமூக மாற்றத்திற்கான வித்து. எதையும் விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதும் பக்கத்து வீட்டுக்காரனை நோவதும் முட்டாள்தனம்.

நபியவர்களினதும் ஸஹாபாக்களினதும் ஒவ்வொரு எட்டிலும் இஸ்லாத்தை பரப்புவதற்கான வியூகம் இருந்தது, அதை அன்னாரது சீராவை ஆய்வுக் கண்ணோடு பார்ப்பவர்களுக்குப் புரியும். ஆனால் இன்று நாம் செய்யும் ஒரு செயற்பாட்டிலாவது இஸ்லாம் பற்றிய கவலை இருப்பதாகத் தெரியவில்லை. உலகத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களும் சுவனம் செல்ல வேண்டும் என்ற நபியவர்களின் கவலையும் அன்பும் அதற்கான ஆக்கபூர்வமான உழைப்பும் நம்முல் வராத வரை மாற்று மதத்தவரைக் குறை கூற நாம் தகுதி உடையவர்களாக மாட்டோம். ஏனென்றால் நாங்கள் தான் அல்லாஹ்விடம் மாற்று மதத்தவர்களுக்கு சாட்சியாளர்களாக இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

முஸ்லிம்களின் இருப்பை மட்டும் உறுதிப்படுத்தும் முஸ்லிம்களாக இருக்காமல் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் உறுதிப் படுத்தும் முஸ்லிம்கள் என்ற கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்.

Ashik Bin Irfan
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

நேற்று ஒரு (முஸ்லிம்) சகோதரரோடு நாட்டு நிலைமை தொடர்பாக சும்மா பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சுவாக்கில் அந்த சகோதரர் இந்த நாட்ல முஸ்லிம்கள் இனிமேல் வாழ்வது ரொம்ப கஷ்டம் சிங்களவர்களிடம் துவேஷ உணர்வு அதிகரித்து விட்டது…

நேற்று ஒரு (முஸ்லிம்) சகோதரரோடு நாட்டு நிலைமை தொடர்பாக சும்மா பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சுவாக்கில் அந்த சகோதரர் இந்த நாட்ல முஸ்லிம்கள் இனிமேல் வாழ்வது ரொம்ப கஷ்டம் சிங்களவர்களிடம் துவேஷ உணர்வு அதிகரித்து விட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *