துரோகம்

அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. மெதுவாக ஜன்னலருகே சென்று வானத்தை வெறித்தாள். வானமும் தண்ணீரை சிந்திக்கொண்டிருந்தது. அதற்கும் அவளின் கவலை புரிந்தது போல. மழைத்துளிகள் ஓடுகளில் பட்டு பூமியில் புதையுண்டுவது போல அவளது கன்னங்களின் வழியாக கண்ணீர் சென்று மார்புக்குள் புதையுண்டது. தூரத்தில் கார் வரும் ஒலி மழைச் சத்தத்தையும் கிழித்துக்கொண்டு கேட்டது. அவளது முகத்தில் அருவருப்பு பரவியது. ஆவேசத்துடன் ஜன்னலைச் ‘பளார்’ என்ற சத்தத்துடன் அடைத்தாள்.

வினய் குமார் காரை விட்டு இறங்கி மேல் மாடியை நோக்கினார். ஜன்னல் சாத்தப்பட்டிருக்கும் நிலையைக்கண்டு சற்று அசைவற்று அங்கேநின்றுகொண்டிருந்தார் அவரது உள்ளத்தில் ஆயிரம் எண்ணஅலைகள் வீசின. ”ஏங்க…. என்ன இன்னும் சின்னபுள்ள நெனப்பா??.. மழ.. உள்ளிக்கி வாங்க…”] அன்னலட்சுமியின் குரல் கேட்டு சற்று யோசனையுடன் அவளைப் பார்த்துவிட்டு அவள் பின்னே நடந்தார். சோபாவில் அமர்ந்த படியே ”அன்னம்…. அம்மு எங்க?…” அவரின் குரலில் கவலை தொனித்தது. ”அவ ரூம்ல இன்னிக்கி ஸ்கூல் போய் வந்ததிலிருந்து அதுக்குள்ள தான்…. நானும் எத்தனயோ தடவ கதவ தட்டியும் தொறக்றல்ல” அன்னலட்சுமி கோபத்தோடு சொன்னாள்.

”நீ புள்ளய திட்டினியா?” வினய் குமார் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார். அவரின் கோபம் புரிந்தது போல”அப்பா….. நான் திட்டவேயில்ல உங்க செல்ல மகள…” அவள் கூறுவதையும் கவனியாது ”எப்பவும் நா வார டய்ம்கு ஜன்னலருகில காத்துட்டீப்பா…. ஆனா இன்னிக்கு……” ஏக்கப் பெருமூச்சு விட்டார். ”கடவுளே…. அவளுக்கு ஏதாவது படிக்கணுமாக இருக்கும். ஏ/ல் கு ஒரு மாசம் கூட இல்லயே…. வாங்க அவள்டயே கேட்டா போச்சு…” முகத்தில் சிறு புன்னகை பரவ கணவரை அழைத்துக் கொண்டு படியேறினாள்.

”அம்மு….அம்மு…. கதவ தொற… ஒன்ன பாக்க அப்பா வந்திருக்காரு…” அன்னலட்சுமியின் குரல் கேட்டதும் அம்மு என அழைக்கப்டும் அம்ரிதா இன்னும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். கதவு மீண்டும் பலமாக தட்டப்படும் ஓசையும் சற்று நேரத்தில் அப்பாவின் குரலும் கேட்டது. ”விடு.. அன்னம்.. அவ தூங்குறா போல….” படியிறங்கும் ஓசை நின்ற பின் அம்ரிதாவால் அந்நிகழ்வுகளை மறக்க முடியாமல் மீண்டும் ஓசைப்படாமல் அழுது தீர்த்தாள்.அந்த கசப்பான அனுபவங்களை நினைக்க நினைக்க அவளது உள்ளம் படாத பாடு பட்டது.

அன்று மாலை முதல் முறையாக அவள் அக்காட்சியை கண்டாள். ஆங்கிலப் பாட வகுப்பு முடிந்து சக நண்பி தாமரையோடு அந்தப்பூங்காவிற்குப் போனாள். சற்று நேரம் ஆனந்தமாகவே கழிந்தது. திடீரென தாமரை எதிரே கை காட்டி ”அம்மு… அது ஓ அப்பா தானே…” திரும்பிப் பார்த்தவளின் ஐம்புலன்களும் ஒருமித்து அடங்கின போல் ஆகின. அவளது அன்புத் தந்தை ஓர் இளம் பெண்ணின் இடுப்பை வளைத்த படி, அம்ரிதாவின் பிராணமே அந்த இடத்திலேயே போய்விட்டது போல் அசையாமல் நின்றாள். சில வேளை தான் காணும் காட்சி கனவாக இருக்குமோ? அவளது மனது ஆயிரம் கற்பனை செய்து பார்த்தது. மீண்டும் கண்களைக் கசக்கியபடியே பார்த்தவளின் மெல்லுடல் நடுங்கியது. திடீரென தாமரையின் கையைப்பிடித்தவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ”அடி தாமர… அது…. அது……” வார்த்தைகள்தொண்டைக்குள் அடைத்தது போல இருந்தது. தாமரை அவளை அணைத்துக் கொண்டாள். விம்மி விம்மி அழுதவள் ”அடி அவரா இப்டி… சீ…. இந்த உலகத்துல யார நம்ப…..”

அதன் பின் வீட்டுக்கு வந்தவள் தான் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். அவளால் தந்தை செய்த துரோகத்தை தாள முடியவில்லை. ஒரு முடிவோடு கண்களைத் துடைத்தவள் கதவைத் திறந்து கொண்டு படியிறங்கி முன் வாசலுக்கு சென்றாள். அவளது தோற்றத்தைக் கண்ட வினய் குமார் ”அம்மு…. ஒனக்கு ஒடம்புக்கு என்ன?…” பாசக் குரலோடு நெருங்கி வந்தவரை கை காட்டி தடுத்து விட்டு சுட்டெரிக்கும் பார்வையை அவர் மேல் வீசியவள் சட்டென சிரித்தாள். அவளையே விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்து வினய் குமாரை நோக்கி கை காட்டி ” இந்தாள் எங்கிருந்து வாரார்னு கேளும்மா?” அவளது கை கீழே இறங்க முன்னே கன்னம் சூடாவதை உணர்ந்தாள். அன்னலட்சுமி கண்களில் அனல்பறக்க நின்று கொண்டிருந்தாள். ”அடி இந்த பதினேழு வயசு வர கஷ்டப்பட்டு வளத்தவர என்ன பேசுற…” கோபம் தெறித்தது. மெல்லச் சிரித்து விட்டு அம்ரிதா ”அம்மா.. நா ஒரு வார்த்த பேசினதுகே எனக்கு அடிக்ற… நீ பாவம்… நானும் தான்…” வேகமாக படியேறியவள் பயணப் பொதியோடு வருவதை கண்ட அன்னலட்சுமி திகைத்தாள்.

”ஏ… அம்மு ஒனக்கு பைத்தியமா??….” கத்தினாள். அம்ரிதா திரும்பி ”ஆமா… பைத்தியம் தான் துரோகம் செய்றவங்களோட சேர்ந்து வாழ்ந்து கஷ்டப் படுறத விட விட்டுப் போறது நல்லதுன்னு நீயும் ஒரு நாள் புரிஞ்சிப்ப…. இது நரகம்… சீ…” வினய் குமாரை நோக்கி துப்பி விட்டு நடந்த மகளையும் புரியாமல் விழித்துப் பார்த்தாள் அன்னலட்சுமி. தலையை கீழே விட்டபடி அவர் இருந்தார். அம்ரிதாவோ நெஞ்சில் நெருஞ்சி முள் குத்தப்பட்ட வேதனையோடு தாமரையைத் தேடி நடந்தாள்.

பா.ரிப்தா
தர்ஹா நகர்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

Leave a Reply

Your email address will not be published.