இசையும் இஸ்லாமும்

  • 213

இசை குறித்து சில விவாதங்கள் முகநூலில் சென்று கொண்டுள்ளன. எதன் அடிப்படையில் அந்த விவாதங்கள் மேலெழுந்தன என்று நானறியேன். எனினும், நீண்ட நெடிய இஸ்லாமிய வரலாற்றில் இசை குறித்த விவாதம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இன்று எம்மை வந்தடைந்துள்ளன என்ற வகையிலும், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆன், ஸுன்னாவே எந்தவொரு விடயம் பற்றிய எமது நிலைப்பாட்டினை உத்தரவாதப்படுத்துவதற்கான அதிகாரபூர்வ அடித்தளம் என்ற வகையிலும் ‘இசை’ குறித்த எமது உரையாடலினை நெறிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு சில விடயங்களினை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழில் கலாநிதி முஹம்மத் உமாராவின் முக்கியமான ஒரு நூலினை “இஸ்லாத்தில் இசை” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார், ஷெய்க் Tharik Ali. கலை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை தர்க்க மற்றும் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் அடிப்படையில் அணுகும் ஒரு நூல் அது. நான் அறிந்த வகையில், எதிர்பார்த்த விவாதங்களையோ / சர்ச்சைகளையோ அது சமூகத்தில் தோற்றுவிக்கவில்லை. (முஸ்லிம் சமூகத்தின் பொதுப்புத்திக்கு மாற்றமான பல விடயங்களினை அந்நூல் உள்ளடக்கி இருந்தமையே இதற்கான காரணம்).

இமாம் யூஸுப் அல் கர்ளாவியின் “பிக்ஹுல் கினா வல் மூஸூக்கியா”, இஸ்லாத்தில் பாடல் மற்றும் இசை குறித்து பேசும் மிக முக்கியமான நூல். ஒரு பிக்ஹுத் துறை அறிஞர் என்ற வகையில், இஸ்லாமிய சட்டவியல் பரப்பினுள் வைத்து இசை குறித்த விவாதத்தினை ஆராய்கிறார் ஷெய்க் கர்ளாவி. ஓரளவு பெரிய நூல். இசை குறித்த நிலைப்பாட்டில், இஸ்லாமிய சட்டவியல் பாரம்பரியத்தை கண்முன் நிறுத்தும் நூலும் கூட. இந்நூலில் ஷெய்க் கர்ளாவி முன்வைக்கும் வாதங்கள் கவனத்திற்குரியவை. இசை குறித்து விவாதத்தினுள் கொண்டு வரப்படும் அல்குர்ஆன், ஸுன்னாவின் அனைத்து ஆதாரங்களையும் அவர் இந்நூலினுள் உள்ளடக்குகிறார். அவரின் கருத்துப் படி, இசை ‘ஹராம்’ என்று ‘திட்டவட்டமாக’ வரும் எந்தவொரு ஹதீஸும் ‘ஸஹீஹ்’ தரத்தை அடைந்தவையல்ல; மறுபுறம், ‘ஸஹீஹ்’ தரத்திலான எந்தவொரு அறிவிப்பும் (இசை ‘ஹராம்’ என்று) ‘திட்டவட்டமான’ கருத்தைக் கொடுப்பவை அல்ல. அதாவது, திட்டவட்டமாக இசை ‘ஹராம்’ என்று வரும், சட்டம் இயற்றும்  தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஹதீஸ் கிரந்தங்களில் அவதானிக்க முடியாது. உதாரணமாக, “இசை நயவஞ்சகத்தை வளர்க்கும்” என்று வரும் ஹதீஸ் மிகப் பலவீனமானது மற்றும் இசை ‘ஹராம்’ என்று வாதிக்கும் பலரும் கூட இந்த ஹதீஸினை ஆதாரம் காட்டாத அளவிற்குப் பலவீனமானவை.

மேலும், ஸூபித்துவ வரலாற்றில்  ஆன்மீகப் பயிற்சிக்காகவும் இசை பயன்படுத்தப்பட்டுள்ளமையை நூலின் இறுதிப் பகுதி பேசுகிறது. (இன்றைய முஸ்லிம் பொதுப்புத்தியில் ஆன்மீகச் சீரழிவாக நோக்கப்படும் இசையினையே, ஆன்மீக  மேம்பாட்டுக்கான ஒரு கருவியாக ஸூபிகள் பயன்படுத்தியமை ஆர்வத்தை தூண்டக் கூடியவை!). மற்றும் அந்தலூசிய (முஸ்லிம் ஸ்பெய்ன்) அறிஞர்களின் இசை பற்றிய நிலைப்பாட்டினையும், அவர்கள் ‘கிதார்’ போன்ற இசைக் கருவிகளை கண்டுபிடித்தமையையும் பற்றி நூல் பேசுவதாக நினைவு. ஷெய்க் கர்ளாவி, கலாநிதி முஹம்மத் உமாரா மற்றுமுள்ள பல அறிஞர்கள் இசை அடிப்படையில் ‘ஹலால்’ என்ற கருத்தினையுடையவர்கள். இசையினை நாம் எதற்கு பயன்படுத்துகிறோம் / பயன்படுத்தும் விடயத்தினைப் பொருத்தே அதன் ஏற்பு அல்லது மறுப்பு அமைய வேண்டும் என்று கருதுபவர்கள். ஷெய்க் Rishard Najimudeen போன்ற நேரடி பிக்ஹுக் கலையை சேர்ந்த ஒருவர், ஷெய்க் கர்ளாவியின் நூலின் கருத்தினை தொகுத்து எழுதுதல் தமிழ் பேசும் உலகிற்கு மிகப் பயனுள்ளதாக அமைய முடியும்.

இசை ‘ஹராம்’ என்ற முஸ்லிம் சமூகத்தின் மனப்பதிவினை வரலாற்றில் வடிவமைத்த காரணிகளில் முதன்மையானது, இசை மற்றும் பாடலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாட்சி சார்ந்து செயற்படுபவர்களாக வாழ்ந்தமை. அதாவது, அரசர்களின் கேளிக்கை மற்றும் களியாட்ட மனோபாவத்திற்கு தீனி போடும் வகையில் இவர்களின் கலைத் திறமை பயன்பட்டமை. இன்றும் கூட களியாட்ட விடுதிகளிலும், அது சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கு முக்கிய பங்கிருப்பதனை அவதானிக்க முடியும். இதுவே நீண்ட நெடிய இஸ்லாமிய வரலாற்று ஓட்டத்தில் முன்னைய அறிஞர்களை இசை ‘ஹராம்’ என்ற நிலைப்பாட்டினைத் தொடரச் செய்தது. சமூகத்தின் ஒரு சாரார் ஒரு விடயத்தினை தவறாக பயன்படுத்துகின்றனர் என்பது, மார்க்க நிலைப்பாடு(பத்வா) ஒன்றினை மேற்கொள்வதற்குப் போதுமானதல்ல; அது அவ்விடயம் சார்ந்த சமூகத்துக்கான எச்சரிக்கை விடுத்தலாகவே அமைய முடியும். கால – சூழல் மாற்றம் மற்றும் அவ்விடயத்தின் மாற்றுப் பயன்பாடு என்பன சமூகத்துக்கு அவ்விடயத்தின் பாலான புதிய தேவைகளையும் சமூகத்துக்கு தோற்றுவிக்க முடியும். இசை ‘ஹராம்’ என்ற நிலைப்பாடும் இவ்வாறானது தான்.

ஒரு பக்கம் திறந்த (ரப்பான் போன்ற) இசைக் கருவிகளை பாவிப்பதனை இஸ்லாம் அனுமதித்துள்ளது, மற்றவைகள் தடுக்கப்பட்டவை என்ற வாதம் மொக்கைத்தனமானது. அக்கால கட்டத்தைப் பொருத்தளவில் அவையே பிரசித்தி பெற்ற, பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகள். இமாம் கஸ்ஸாலி(ரஹ்) குறிப்பிடுவது போன்று, பறவைகளின் கீச்சிடலையும், குயில் கூவும் ஓசையையும் ரசிக்க முடியும் என்றால், அதே ஓசையை ஒரு கருவியின் உதவி கொண்டு இசைக்கும் போது ரசிப்பதனை எவ்வாறு தடுக்கப்பட்டதாக சொல்ல முடியும்?!

அல்லாஹூ அஃலம்!
மனாஸிர் ஸரூக்
வியூகம் வெளியீட்டு மையம்

இசை குறித்து சில விவாதங்கள் முகநூலில் சென்று கொண்டுள்ளன. எதன் அடிப்படையில் அந்த விவாதங்கள் மேலெழுந்தன என்று நானறியேன். எனினும், நீண்ட நெடிய இஸ்லாமிய வரலாற்றில் இசை குறித்த விவாதம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று…

இசை குறித்து சில விவாதங்கள் முகநூலில் சென்று கொண்டுள்ளன. எதன் அடிப்படையில் அந்த விவாதங்கள் மேலெழுந்தன என்று நானறியேன். எனினும், நீண்ட நெடிய இஸ்லாமிய வரலாற்றில் இசை குறித்த விவாதம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *