நீங்கள் செய்தி வாசிப்பாளரா?

  • 11

செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர் மனநிலையும் உச்சரிப்பும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. செய்தி ஒலிபரப்பும் போது எவ்விதமான உணர்ச்சிக்கும் இடமளித்தலாகாது. சோகம். பயங்கரம், ஏளனம், வேடிக்கை, குதூகலம் முதலிய உணர்ச்சிகளின் வசப்பட்டுக் கொண்டு செய்தியை வாசித்தலாகாது.வேகத்தை நிதானித்துக் கொள்ளுதல் வேண்டும்.

பதினைந்து நிமிட ஒலிபரப்பிலும் ஒரே அளவான கதியை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். சில இடங்களில் அவசரப்பட்டு ஓட்டமாயிருந்தால் பின்னால் விடயமில்லாமல் தவிக்க வேண்டி நேரிடும். அதே போல, ஆரம்பத்தில் தாமதப்பட்டால் பின்னால் ஒட்டமாய் ஓட வேண்டி நேரிடும். ஒரு செய்தியிலிருந்து அடுத்த செய்திக்கு வரும்போது சிறிது நின்று, ஸ்தாயியை உயர்த்தி ஆரம்பிப்பது நல்லது. அப்பொழுதுதான் அது வேறொரு செய்தியென்பதை நேயர்கள் சட்டென்று உணர்ந்து கொள்வார்கள்.

வானொலியில் செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர் குரல் கண்ணியம் நிறைந்தவராகவும், தொனியில் நம்பிக்கையும் உறுதியும் புலப்படுவதாகவும், வாசிப்பிலே தளர்ச்சியோ, தயக்கமோ அல்லது அவதியோ வறட்சியோ தோற்றாதவாறும் இருத்தல் வேண்டும். செய்திப் பிரதியை ஏற்கெனவே நன்றாகப் படித்துப் பொருள் தெளிந்து, தொடர்ச்சிகளைத் தெரிந்து, சொற் கூட்டங்களைக் கருத்துத் தெளிவுக்குத் தக்கவாறு பிரித்துக் குறியீடுகள் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அறிவிப்பாளருக்குப் பொது அறிவு, சர்வதேச அரசியலறிவு. பிற பாஷைப் பெயர்களை உச்சரிக்கும் திறமை ஆகிய விடயங்கள் நல்ல அனுபவத்தில் இருத்தல் வேண்டும். செய்தி ஒலிபரப்பில் எல்லா விடயங்களும், எல்லா நாடுகள் சம்பந்தமாகவும் அடிக்கடி வருமாகையால் மேற்சொன்ன அறிவு இன்றியமையாதது.

செய்தி அறிவிப்பாளர் மூன்று விதமான பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒலிபரப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  • தெளிவுடைமை

அதாவது, செய்தி அறிவிப்பாளர் விடயத்தை நேயர்கள் எவ்விதச்சங்கடமுமின்றி விளங்கிக் கொள்ளத்தக்கதாக வாசித்தல். குரலிலும் வாசிப்பிலும் நல்ல தெளிவு இருத்தலவசியம்.

  • ஏற்புடைமை

சொல்லும் முறை நேயர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருத்தல்.

  • பொருண்மயமுடைமை

சொல்லும் செய்தியில் அறிவிப்பாளரின் தன்மயம் சிறிதளவேனும் ஒலிக்காமல் பொருண்மயமாக மாத்திரம் இருத்தல் வேண்டும்.

இந்த மூன்று பண்புகளை மேலும் விரிவாக நோக்கினால்….

வாசிக்கப்படும் செய்தி கேட்போருக்குத் தெளிவாயிருத்தல் வேண்டும். குரலின் ஏற்றத் தாழ்வும் உச்சரிப்பும் சுத்தமாயிருத்தல் வேண்டும். “ற், ச், த், ல், ழ், ள். வ், ப், ண், ன்” ஆகிய இன ஒலிகள் வானொலியில் ஒரே மாதிரி கேட்கலாமாகையால் உச்சரிப்பில் எவ்வித மயக்கமுமில்லாமல் மிகத் தெளிவாயிருத்தலவசியம்.

சொற்களின் இறுதியொலியை. முக்கியமாக ம், ன். ல், ள், ன, து, ஆகிய ஈற்றெழுத்துக்களை விழுங்கிவிடாது நன்றாக ஒலிக்கும் வண்ணம் உச்சரிக்க வேண்டும்.

குரலிலே அடித்தாற்போல வாசிக்கும் தொனி ஏற்படுவதை நேயர்கள் விரும்பமாட்டார்கள். ஒருவித அமைதியும் பண்பாடும் கொண்டிருக்க வேண்டும். என, என்று, ஆனால், ஆகையால், அதாவது, முதலிய, எனவரும் இடைச் சொற்களையும் விட்டு, கொண்டு, வேண்டும் முதலிய துணை வினைகளையும் அழுத்தாமல் தாழ்த்தி உச்சிப்பதுதான் தமிழ் மரபு.

அறிவிப்பாளர் கையாளும் உச்சரிப்பு நடையும், பாணியும் எல்லோருக்கும் பொதுவானதாக இருத்தல் அவசியம்.

குரலிலே ஏற்றத் தாழ்வு இயல்பாயமைய வேண்டும்.

செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர் தமது குரலின் தன்மையாலும் இயக்கத்தினாலும் செய்தியின் பொருண்மையைக் கெடுத்து விடலாம். நாடகப் பாணி, கதை சொல்லும் பாணி, அல்லது செய்தியைத் தாமே அனுபவித்துக் கொண்டு உணர்ச்சியைக் காண்பிப்பது – இத்தகைய தன் மயமான நடை ஒருபோதும் குறுக்கிட இடமளித்தலாகாது. பற்றற்ற பொருண்மயமான முறையில் வாசித்தல் வேண்டும். கேட்கும் நேயர்கள் சிந்தனையும் கவனமும் செய்தியில் மாத்திரம் ஈடுபடவேண்டுமேயல்லாமல் வாசிக்கும் அறிவிப்பாளர் மீது செல்ல இடமளித்தலாகாது.

ஆகவே, செய்தி அறிவிப்பாளருக்கு, குரல் தெளிவு, உச்சரிப்புச் சுத்தம், பொருள் தெளிவு, தன்மயமற்ற பொருண்மய நிலை ஆகிய பண்புகள் இன்றியமையாதன.

வை.எம்.ஆஷிக்
ஊடகவியலாளர்,ஒலிபரப்பாளர்
வியூகம் வெளியீட்டு மையம்

செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர் மனநிலையும் உச்சரிப்பும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. செய்தி ஒலிபரப்பும் போது எவ்விதமான உணர்ச்சிக்கும் இடமளித்தலாகாது. சோகம். பயங்கரம், ஏளனம், வேடிக்கை, குதூகலம் முதலிய உணர்ச்சிகளின் வசப்பட்டுக் கொண்டு செய்தியை…

செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர் மனநிலையும் உச்சரிப்பும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. செய்தி ஒலிபரப்பும் போது எவ்விதமான உணர்ச்சிக்கும் இடமளித்தலாகாது. சோகம். பயங்கரம், ஏளனம், வேடிக்கை, குதூகலம் முதலிய உணர்ச்சிகளின் வசப்பட்டுக் கொண்டு செய்தியை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *