காதலில் உங்கள் மொழி என்ன?? (What is Your Love Language? )

  • 50

அடிக்கடி கோபம் காட்டுகிறாளே…
காரணமே இன்றி சண்டை போடுகிறாளே!
தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தும் என்ன செய்தீர்? என திட்டுகிறாளே!
என எரிச்சல்படும் கணவரா/காதலரா நீங்கள்..??

என் கணவன் முன்பு போல் இல்லை..
என்னுடன் நேரம் செலவழிப்பதில்லை..
என்னை விட அவருக்கு வேலை தான் முக்கியம் எனப் புலம்பும்
மனைவியா/ காதலியா நீங்கள்?

புதிய நண்பரைக் கண்டுவிட்டதால்
பழைய நண்பனை மறந்து விட்டான்.
அவன் முன்பு போல் இல்லை. மாறிவிட்டான்.
எனக் கொந்தளிக்கும் நண்பனா நீங்கள் ??

ஆம்.. உங்கள் உளக்குமுறல்களுக்கான காரணம் உம்மவரின் காதலின்/அன்பின் மொழியை அறியாமல் உறவாடுதலே ஆகும்.

அன்பு தொடர்ந்தும் ஜீவிக்க புரிந்துணர்வு எவ்வளவு முக்கியமோ அதேயளவு அவ்வுறவில் சலிப்பு, வெறுப்பு, விரக்தி என்பன தொடர்ந்தும் குடியேறவிடாமல் காப்பதும் முக்கியம்.

காதலின் மொத்த வெளிப்பாடாக நீங்கள் கருதும் ஒரு விடயம் உங்களின் துணைவருக்கு அர்த்தமற்றதாகப்படலாம். அவருக்கு காதலின் மொத்த வெளிப்பாடாக தெரியும் ஒரு விடயம் உங்களுக்கு அர்த்தமற்றதாகப்படலாம். இதன் போது உறவில் சலிப்பு ஏற்படலாம். இது காலப்போக்கில் விரக்தி ( frustration) மற்றும் வெறுப்பை உண்டாக்கும். காதலின் அடிப்படை உங்களுக்கு பிடித்தமானதை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதல்ல. அவருக்கு பிடித்தமானதை நீங்கள் செய்வது.

காதல்/அன்பு அனைத்து உயிரினத்தினதும் அடிப்படைத் தேவை. இது அறிவார்ந்த ரீதியில் அனுக முடியாத உணர்வுபூர்வமான விடயம். இதை ஒருவர் வெளிப்படுத்தும் விதத்தை ஐந்து வகைக்குள் உள்ளடக்கலாம். இதனையே காதலின் மொழி என்கிறோம்.

இதன் அடிப்படையில் ஒருவரின் காதலின் மொழியை வைத்து அவரின் குணாதிசயங்களையும் கணிக்கலாம்.

வார்த்தைகள் (Words of Affirmation)

அன்பின் வெளிப்பாடாக பெறப்படும் வார்த்தைகள் இவர்களை அதிக மகிழ்ச்சியூட்டும். வார்த்தைகளாலே இவர்களை வசப்படுத்த முடியும். ஊக்குவிக்கும், தூக்கிவிடும், பாராட்டும் வார்த்தைகளையே அன்பின் மொத்த வெளிப்பாடாக கருதுவர். இவர்களுக்கு நாள்முழுவதும் ஒத்துழைப்பாக நின்று உதவி ஒத்தாசை வழங்கினாலும் அதனால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படாது. அவரின் சமையலை அல்லது திறமையை பாராட்டி பாருங்கள் உற்சாகம் ஊற்றெடுத்தோடுவதைக் காண்பீர்.

அதேநேரம் நீங்கள் சிந்திக்காது பேசும் குறைத்து எடைபோடும் வார்த்தைகள், கோபமான வார்த்தைகள் போன்றன மிக விரைவாகவும், ஆழமாகவும் எளிதாகவும் இவர்களை பாதிக்கும். இவ்வண்ணம் இவர்களின் குணவியல்புகளை கூறிக்கொண்டே போகலாம்.

தரமான நேரம் (Quality Time)

உடல் ரீதியாக மட்டுமன்றி உளரீதியாக தன் துணையுடன் உடனிருக்கும் நேரத்தை இது குறிக்கும். அதாவது ” நான் உன்னுடன் இருக்கிறேன்” ( I’m with you) என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்படுவது. காலை முதல் மாலை வரை வீட்டில் கிரிக்கெட் பார்த்து விட்டு முழுநாளும் உன்னுடன் தான் செலவழித்தேன் என நியாயம் கூறுவதெல்லாம் இதில் உள்ளடங்காது.

இவர்களுக்காக வாரி இறைத்தாலும், பரிசுப் பொருட்களால் வீட்டை நிரப்பினாலும் அவை யாவும் நீங்கள் அவர்களுடன் செலவழிக்கும் ஒரு நாளிற்கு ஈடாகாது. இடையிடையே இவருடன் பயணம் செல்லுதல், பேசிக் கொண்டே தேநீர் அருந்துதல் போன்றவன இவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.

ஒத்தாசை வழங்குதல் (Act of service)

தன் துணையுடன் கனிவுடன் உடனிருந்து செய்யப்படும் உடல்ரீதியான உதவிகள் அல்லது ஒத்துழைப்புக்களையே அன்பின் மிகச்சிறந்த வெளிப்பாடாக இவர்கள் கருதுவர். சமையலின் போது குறைந்தது ஒரு காய்கறியாவது நறுக்கி கொடுத்தல், துவைத்த துணிகளை உலர்த்துதல், வீட்டு வேலைகளில் சிறிதளவாவது பங்கெடுத்தல் போன்றவற்றால் இவர்களின் மனதை வெல்லலாம்.

இவர்களிடம் பகிர்ந்தளிப்பு(sharing)அதாவது வேலைகளை பகிர்ந்து செய்தல், கரிசனை(caring ), அதாவது வேலைகளின் போதும் ஏனைய நேரங்களிலும் அக்கறை செலுத்துதல். உதவிகள் (help) அதாவது தன் வேலைப்பளுவைக் குறைப்பதற்கு செய்யப்படும் செயற்பாடுகள் போன்றவையே மிகவும் பெறுமதிக்கு உரியதாக காணப்படும்.

இவர்களிடம் சென்று “உனது வேலை நேர்த்தியாக உள்ளது”, “சமையல் சுவையாக உள்ளது” என்றால் “வெட்டிப் பேச்சு பேசாமல் வேலையைப் பாருங்கள்” என்பார்கள். தன் வேலைப் பழுவைக் குறைப்பதில், உடனிருந்து தோள் கொடுப்பதில் தான் இவரின் அன்பின் நீர்த்தாங்கி நிரப்பமடையும்.

பரிசு பெறுதல் (Receiving Gift )

அன்பின் வெளிப்பாடாக பரிசுகளை பெறுதலை விரும்பும் நபர்கள் இவர்கள். இவர்களை சடவாதிகள் (materialist) என்று தவறாக எடை போட வேண்டாம். கொடுக்கப்படும் பரிசை விட அந்த பரிசுக்கு பின்னால் தன் துணைவரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், செலவிடும் காலம், துணைவரை மகிழ்ச்சிப்படுத்தும் முனைப்பு போன்றவற்றிற்கு பின்னால் உள்ள அன்பினாலே அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

சலிப்புடன் நாட்கள் நகரும் போது நீங்கள் கொடுக்கும் சிறிய பரிசு அவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். அது தங்கமாக, வைரமாக இருக்க வேண்டியதில்லை. ஆசைப்பட்டு எடுக்க தவறிய ஆடையாக இருக்கலாம். விரும்பும் சாக்லேட் ஆக இருக்கலாம். வேலையை இலகுபடுத்தும் சமையல் உபகரணங்களாகக் கூட இருக்கலாம். இவ்வாறு எதிர்பாராத தருணங்களில் கொடுக்கப்படும் அன்பளிப்புக்களால் இவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி வர்ணிக்க முடியாது. அலாதியானது.

அதேநேரம் முக்கியமான சில விஷேட தருணங்களில் உங்களிடம் எதிர்பார்க்கும் சில பரிசுகள் அவர்களை அடையாவிடத்து அவர்கள் அடையும் ஏமாற்றமும் அலாதியானது. அப்போது உங்கள் கொஞ்சலும் குற்றம், கெஞ்சலும் கோபமாக மாறும். எதற்கு இந்த முறுகல் என்று நீங்கள் குழம்பிப் போவது நிச்சயம். அதிலும் நீங்கள் வாங்கித் தருவதாக வாக்களித்து விட்டு, எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு இலகுவாக மறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். சச்சரவுகள் எந்த வழியிலும் வீட்டைத் தட்டலாம்.

தொடுகை (Physical Touch)

இவர்கள் மனவெழுச்சிரீதியாக அல்லது உணர்ச்சிரீதியாக அதிக அன்பின் பிணைப்பை உடையவர்கள் (Emotional attachment). அதாவது அன்பிற்காக ஏங்குபவர்கள், மென்மையான உள்ளம் படைத்தவர்கள் என்றும் சொல்லலாம்.

இவர்கள் தொடுகையின் மூலம் வெளிப்படுத்தப்படும் அன்பை மிகவும் விரும்புவார்கள். அது தவறான தொடுகையோ, இல்லறத்தின் போதான தொடுகையோ அல்ல. மாறாக வேலைகளின் போது வழியும் வியர்வையைத் துடைத்துவிடுதலிலிருந்து பொங்கி அழுது விம்மும் போது கொடுக்கப்படும் இறுக்கமான அணைப்பு, ஆறுதலான கண்ணீர் துடைப்பு, காதல் முத்தம், கட்டியணைப்பு, துவண்டு போகும் போது தோளில் கொடுக்கும் தட்டல், மகிழ்ச்சியில் போடும் ஹைபை, கைகோர்த்தவாறான சாலை நடை வரை அனைத்து அக்கறையான தொடுகைகளையும் குறிப்பிடலாம். இவைகளே இவர்களின் மகிழ்ச்சி உற்பத்தியாக்கிகளாகும்.

இவர்களுக்கு மணிக்கணக்கில் தொடரும் வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க “நீ என்னுடையவள்” என உணர்த்தும் ஒரு அணைப்பு போதும். உடைந்து அழும்போது கூறப்படும் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை விட “நான் உன்னுடன் இருக்கிறேன்” என உணர்த்தும் இறுக்கமான கட்டியணைப்பு போதும். இவர்களை வென்றிடலாம்.

மேற்கூறிய காதலின் 5 மொழிகளுமே தங்களுக்குரியதாக தாங்கள் விரும்புவதாகப் புலப்படும். அவற்றுள் சில சிலபேருக்கு பொருந்தாமலும் போகும். அதேநேரம் காலம், சூழ்நிலைகளைக்கு ஏற்றவாறு உங்களின் காதல் மொழி மாற்றமடையலாம். உதாரணமாக புதிதாக திருமணமான ஒரு மனைவிக்கு பரிசு பெறுதல் காதலின் மொழியாக இருக்கும் போது தாயாக மாறி வேலைப்பளு அதிகரிக்கும் நேரம் காதலின் மொழி உதவி ஒத்தாசையாகவும் மாற வாய்ப்புண்டு.

நிச்சயம் மேற்கூறிய அனைத்தும் காதலின் உயிரோட்டத்திற்கு அவசியம். இருப்பினும் அவற்றுள் குறித்த ஒருமொழி தங்களையும் அறியாது கூடுதல் பிடிமானம் உடையதாக, அவருக்கே உரித்தானதாக இருக்கும்.

அவ்வண்ணம் உங்கள் அன்புக்குரியவரின் காதலின் மொழியை அறிந்து அதில் உரையாடினால் அன்புடனான சுவாரஷ்யம் நிறைந்த வாழ்க்கையை வரமாக பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்.

வாழ்த்துக்கள்!!
றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
கல்லொழுவை
வியூகம் வெளியீட்டு மையம்

அடிக்கடி கோபம் காட்டுகிறாளே… காரணமே இன்றி சண்டை போடுகிறாளே! தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தும் என்ன செய்தீர்? என திட்டுகிறாளே! என எரிச்சல்படும் கணவரா/காதலரா நீங்கள்..?? என் கணவன் முன்பு போல் இல்லை..…

அடிக்கடி கோபம் காட்டுகிறாளே… காரணமே இன்றி சண்டை போடுகிறாளே! தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தும் என்ன செய்தீர்? என திட்டுகிறாளே! என எரிச்சல்படும் கணவரா/காதலரா நீங்கள்..?? என் கணவன் முன்பு போல் இல்லை..…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *