தலைமைகளின் மௌனம் களையட்டும்

  • 14

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மனதை பிழிந்தெடுக்கும் துயரமாக நீடிக்கிறது. முதலில் அவரது குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதலையும் பொறுமையையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். 1983ம் ஆண்டில் தான் எனக்கு முதன் முதலில் அவருடனான தொடர்பு கிடைத்தது. சுமார் ஒரு வருடகாலம் அவருடன் கலந்து பழகவும் கிடைத்தது. இந்த நாள், அந்த நாளின் பசுமையான பல நினைவலைகளை மனதில் மோதச் செய்கிறது. அதே முகம், அதே சிரிப்பு, அதே பாவம், அதே தோற்றம் என்றும் இளமையாய் இன்றும் தெரிகிறது. அவரில் அன்று நான் கண்ட அந்த புன்னகை, மென்மை இன்றும் மாறமல் மறையாமல் இருக்க காண்கின்றேன். அவர் எனக்கு 83ம் ஆண்டிலேயே தாஹா ஹுஸைனின் சுயசரிதை காவியமான ‘நாட்கள்’ என்ற நூலை கற்றுத் தந்தவர். அதுவே எனது மொழியின் ஏறுபடிகளாக அமைந்தது. அவருடைய குடும்பம் எப்படி கலை மலிந்த நல்தொரு குடும்பமோ அவ்வாறே அவர் விடுமுறை நாட்களில் எனக்கு எழுதிய கடிதங்கள் கலை மலிந்ததாகும். அவை எனது மாணவப் பருவத்திலேயே அறபு மொழிப் பற்றை கொழுந்து விட்டு எரியச் செய்தது. அந்த ஒரு வருடம் கழிந்ததன் பிறகு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை ஒரு அழைப்பாளனாகவே கண்டு வந்தேன். அவருடைய வாழ்வு எளிமையானது. அவருடைய சிந்தனை நடுநிலையானது. அமைதிக்காக உழைத்தார். தேசப் பற்றுக்கு நடைமுறை வடிவம் கொடுத்தார். வம்புக்கு போவதை தடுத்தார். வன்முறையை எதிர்த்தார். சமூக மேம்பாட்டுக்காக உழைத்தார்.

என் அன்புக்குரிய ஆசான் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். வன்முறைக்கு எதரிதாக எழுதியவர். தீவிரவாதத்தை கண்டித்தவர். ஆனால் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார். அதுதான் மனதை பிழிந்தெடுக்கிறது. அன்பானவர். அமைதி வழியில் பாடுபட்டவர். பண்பானவர். யார் சொல்லியும் இதனை கூறவில்லை. நேரில் பழகியதால் தைரியமாக செல்லுகின்றேன். இருந்தும் ஓரு பயங்கரவாதி போல் கைது செய்யப்பட்டுள்ளார் அதுதான் சகிக்க முடியாத வேதனையாக உள்ளது. எனவே அவருக்கான விசாரணையை துரிதப்படுத்தி அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவருக்கு மிக விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இங்கு சில உண்மைகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அவசரகாலச் சட்டம் நீங்கிய பிறகும் கெடுபிடிகள் குறைவதாக இல்லை. இந்நிலையில் பலர் சிறையில் வாடுகின்றனர். பலர் புதிதாக பிடிக்கப்படுகின்றனர். பயங்கரவாதாத்துடன் சம்பந்தமான பிடிவிராந்துகளுக்கு ஒத்துழைப்பது நமது கடமை போலவே தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போது அதற்கு கண்டனம் தெரிவிப்பதும் அத்தகைய கைதுகளுக்கு எதிராக அழுத்தும் கொடுப்பதும் தலைமைத்துவ அந்தஸ்தில் உள்ள அனைத்து சிவில் சமூக நிறுவனங்களினதும் தார்மீகக் கடமையாகும். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கைது இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒரு விடயமே. இது குறித்து சிவில் சமூக நிறுவனங்கள் காத்திரமான எட்டுக்களை எடுக்க வேண்டும் என்பதையே இங்கு ஞாபகமூட்டுகிறறேன்.

இங்கு ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். பயங்கர வாதம் மற்றும் தீவிரவாத சிந்தனைகளுக்கு எதிராக போராடுவது வேறு தஃவா சார்ந்த சிந்தனை முகாம்களின் கருத்து வேறுபாடுகள் வேறு. தீவிரவாத சிந்தனைகளை ஒழிப்பதற்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு தன் கருத்துக்கு முரண்படும் சிந்தனை முகாம்களின் தலைமைகள் சிறைப்பிடிக்கப்படும் போது மௌனம காப்பது ஒரு வகையான சிந்தனைப் பயங்கரவாதமாகும். எனவே வித்தியாசமான சிந்தனைகள் என்பது ஒரு சமூகத்தின் எழுச்சிப் பாதைக்கான மைற்கற்கள். அறிஞர்களின் அபிப்பிராயங்கள் சமூக மேம்பாடு, தேச நலன்கள், சமூக ஒற்றுமை, சகவாழ்வு போன்ற நல்லுறவுப் பாதையில் பயணிப்பதற்கான வழிகாட்டல்களாகும்.

சமூக எழுச்சிப்படிகளில் காலடியெடுத்து வைப்பதற்கு அறிஞர்களின் தேடல்களும், கருத்துக்களுமே துணை நிற்கின்றன. சிந்தனைகள் ஊறும் நீர் ஊற்றுக்களை அடைத்து விட்டு சமூகத்தில் பசுமையான வளர்ச்சியை ஒருபோதும் எதிர்ப்பாக்க முடியாது. ஏகப்பட்ட பிரச்சினைகளும் சவால்களும் உள்ள கொந்தளிக்கும் கடலில் வாழும் போது எமது கவனம் எங்கு குவிமையம் பெற வேண்டும், எதனை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் எடுக்காவிட்டால் முஸ்லிம் சமூகப் கப்பல் மூழ்கிவிடும்.

ஒற்றுமைப் படுவதும் ஒன்றுபட்டு உழைப்பதும் தான் இன்று காலத்தின் தேவையாக மட்டுமல்ல வாஜிபாகவும் உள்ளது. நாம் இழந்த கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கு மீண்டும் ஒன்றுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். முஸ்லிம் சமூகம் என்ற ஒரே குரலில் கூட்டாக களமிறங்குவோம். கூட்டாக குரல் கொடுக்க வேண்டிய தருணத்திரல் குரல் கொடுக்காவிட்டால் அடிமை சமூகமாக செத்து மடியும் இழிவு எம்மை சூழ்ந்து கொள்ளும். எனவே நாட்டு நலனுக்காக ஒத்துழைப்போம். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கைகோர்ப்போம். அவ்வாறே தீமைக்கு எதிராகவும் குரல் கொடுப்போம்.

இன்று நாம் ஒரு சோதனைக்கு முகம் கொடுத்து வருகின்றோம். இதன் விளைவுகளை இறைவனுக்காக ஏற்றுக் கொள்வோம். இது ஒரு மறைவான அருள். சில விஷமிகளின் முட்டாள்தனமமான செய்கைகள் வெளிப்படிடையில் உள்ளத்தில் கவலையை தரும். கண்களில் கண்ணீரை வரவழைக்கும். வீண் பழிகள் கூடவே வரும். எதிர்ப்பு ஊடகங்கள் எண்ணையை ஊற்றி கொழுந்துவிட்டெரியச் செய்யும். இனி வாழந்தென்ன அனைத்தும் முடிந்து விட்டது என்ற பிரமை தோன்றும் அல்லது அப்படி தோன்றச் செய்வார்கள். அதற்காக இது துன்பம் என்று நினைக்காதீர்கள்.

உண்மையில் இது துன்பம் போன்ற இன்பம். துயர் துடைக்கும் அருள். ஈமானை சுத்தப்படுத்தும் ஒத்தடம். இறைவன் இந்த துன்பியல் நிகழ்வக்கு பின்னால் பெரும் பாக்கியங்களை வைத்துள்ளான். அதனை உடனே அறிந்து கொள்வதற்கு மனித அறிவு சக்தி பெறுவதில்லை. எனவே தான் அல்லாஹ் தனது அழகிய திரு நாமங்களில் ஒன்றாக தன்னை மறைவானவன் என்று அறிமுகம் செய்கிறான். அல்லாஹ் இதற்கு பின்னால் பல அருட்கொடைகளை தருவான். அந்த அருள்கள் நிச்சியமாக வெளியாகும். அதனால் தான் அந்த நாமத்துடன் சேர்த்து வெளிரங்கமானவன் எனவும் அல்லாஹ் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளான்.

எனவே பிரச்சினையை முஸ்லிம் சமூகப் பிரச்சினையாக அடையாளப்படுத்துவோம். அதற்கு முகம் கொடுப்பதற்காக தயாராகுவோம். ஒன்றுபட்டு பரஸபரம் உழைக்கும் போது அல்லாஹ்வின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

முஹம்மத் பகீஹுத்தீன்
வியூகம் வெளியீட்டு மையம்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மனதை பிழிந்தெடுக்கும் துயரமாக நீடிக்கிறது. முதலில் அவரது குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதலையும் பொறுமையையும் வழங்க…

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மனதை பிழிந்தெடுக்கும் துயரமாக நீடிக்கிறது. முதலில் அவரது குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதலையும் பொறுமையையும் வழங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *