உறவு

  • 11

”சுதூ…. சுதூ…” என கூவியபடியே ஓடினேன். எனது குரல் அவளுக்குக் கேட்டதோ.. என்னமோ… திரும்பிப் பார்கவில்லை அவள். மீண்டும் ”சுதூ… இன்னகோ..” (சுதூ நில்லேன்) எனக் கூவினேன். நின்றாள் ஓ… அந்த வட்ட முகத்தில் மின்னும் கயல்விழிகளால் சுருங்கிச் சிரித்தாள். அவளது கன்னக்குழி எவ்வளவு அழகு. அதுமட்டுமா? அவளது குணம் அதை சொல்ல வார்த்தையில்லை. நான் அவள் நினைவுகளில் மிதந்துகொண்டிருக்கையில் ”அனே.. பாத்தி… எய்.. ஹெமதாம ஒயா பரக்கு தமா?” ( பாத்தி… நீ எந்நாளும் தாமதம் தான்.?) என்ற வார்த்தைகளைக் கேட்டு அவளது கைகளுக்குள் எனது கைகளை இணைத்துக் கொண்டு ”அய்யோ… அபே அம்மா ஹிந்த தமய் பங்… தன்னவனே இதிங் எயா கென…. கன்ன தீலம தமா மாவ யவன்னே…” (எனது அம்மாவால் தான் தாமதம். உண்டு விட்ட பின் தான் என்னை செல்ல விடுவார்.) என்று முகத்தை சுளித்ததும் அவள் சிரித்து விட்டு”ஆ… கன எகத் அத்யாவசய் தமய் இதிங்… ஹரி…. யமங் இஸ்கோலே கேட்டுவ வகன கலிங்.” (சரிதான். ஊண்ணுவதும் அவசியம் தானே? சீக்கிரம் போவோம் பாடசாலை கேட் மூடுவதற்கு முன்பு) எனக்கூறிவிட்டு அவசர அவசரமாக நடந்தாள் கைகளைப் பிணைத்த படியே.

எனக்கு ‘சுதூ’ அவளது பெயர் ஹிருனி. சிவப்பாக இருப்பதால் பொதுவாக அவ்வாறு தான் கூப்பிடுவோம். அவள் எனது இணை பிரியா நண்பி. கிராமத்திலுள்ள பாடசாலைக்குத் தான் போவோம். முதலாம் வகுப்பு முதல் தற்போது ஓ.எல் வரை ஒன்றாகத்தான் இருக்கிறோம். நானின்றி அவளில்லை, அவளின்றி நானில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாலை நேரங்களில் படிப்பதற்குஹகூட எனது வீட்டுக்கு வந்து விடுவாள். மத,மொழி வேற்றுமை கடுகளவேனும் இருந்ததில்லை.

”பாத்தி…. அத மம ஒயாகே கெதர என்ன பரக்கு வெய். அத்தம்மா கெதர எனவபங்…” (பாத்தி இன்று உனது வீட்டுக்கு வர தாமதமாகும். ஏனெனில் எனது வீட்டுக்கு பாடாடி வருகிறார்.) அவளது முகத்தில் சிரிப்பு. எனக்குத் தெரியும். அடுத்தஊரிலிருந்து அவளது பாட்டி வந்தால் ‘ஹெலப்ப’ செய்து கொண்டு வருவார் அது மிக ருசியாக இருக்கும். நான் அவளை ஆவலுடன் பார்த்து ”ஆ… ஆ… எகனங் ஹெலப்ப கன்ன புளுவங்….” (அப்படியானால் ஹெலப்ப சாப்பிடலாம் )என்ற படியே நாக்கை நீட்டினேன். அவள் சட்டென சிரித்து விட்டு ” ஹரி.. ஹரி… ஹவச ஹம்புவெமு…” (சரி… சாயங்காலம் சந்திப்போம்) எனக் கூறியவாறே சென்றாள்.

இவ்வாறு தான் நம் நட்பு வளர்ந்தது.இந்த நேரம் பார்த்து நாட்டில் இனப் பிரச்சினை தலைவிரித்தாடியது. சிங்களவர் என்றாலே நம்மவருக்கும், முஸ்லிம்கள் என்றாலே அவர்களுக்கும் வெறுப்பு என்ற சூழ்நிலை. நமது பரீட்சைக்கும் இன்னும் நான்கு மாதங்களே உள்ளது என்ற நிலை வேறு. ஆயினும் நானும், சுதுவும் ஒன்றாகவே வலம் வந்தோம். ஒருநாள் எனது பக்கத்து வீட்டு சகீனதாத்தா ”புள்ள நீ அந்த சிங்கள புள்ளோட பழகிய மாயல்ல கவனம்…” என்றதும் கோபம் பொத்திக்கொண்டு வந்தது. எனது ஆருயிரே ஆன நண்பியைப் பற்றி யாரோ குறை கூறுவதா? மனதில் ஓரத்தில் வலித்தது. அவரை முறைத்துப் பார்த்து விட்டு ”தாத்தா…. அவள பத்தி எனக்கு தெரீம்… எகடாள்கள்ளயே ஒரு ஜாயான ஆள்க இருச்சி… அவளப்டியல்ல…. சும்ம போங்கோ…” நானா கத்திப் பேசினேன் என்று நம்பவே முடியவில்லை. ”ஓ….. ஓ… சிங்களத்தீகளோட பழகீட்டு பொறகு வெளங்கும்…” என்ற படி வைது கொண்டு சென்றவரை ப் பார்த்து ‘சீ.. இப்டியானவங்க திருந்தியதே இல்ல…’ மனம் கூச்சலிட்டது.

மறு நாள் காலையில் போன் மணி ஒலித்தது. ஓடிப் போய் காதில் வைத்தேன். ”சுது…” நான் கத்தினேன்… மறுமுனையில் ”ஒவ் மங் தமய்… ஹெட இஸ்கோல வரேங். தெயக் கியன்னோன…”(நான் தான். நாளை பாடசாலை வா ஒரு சங்கதி செல்லவேண்டும்.) அவளது குரல் கரகரத்தது. நான் மறு வார்த்தை பேச முன்பே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உள்ளுக்குள் எனை அறியாப் பயம் குடிகொண்டது.

மறு நாள் வழமை போல பாடசாலைக்கு அவளது கைகளை பிடித்தபடியே சென்றேன். நெடு நேரமாக பேசிக்கொள்ளாமல் மௌனம் காத்தது எனக்கு ஏதோ போல் இருந்தது. வேறு நாட்களென்றால் இந்த ஒற்றையடிப் பாதையில் போகையில் குயிலோசை,மலர்களின் மணம், இளந்தென்றல் எல்லாவற்றையும் ரசித்து ருசித்து மகிழுவோம். ஏன் இன்று மௌனம்… மனம் விம்மியது. தொண்டையை கனைத்த படி நானே பேசினேன். ”சுதூ… எய்பங் மெகம பகமூனவகே என்னே… கதாகரபங்கோ?” (சுது.. ஏன் நீ ஆந்தை மாதிரி… பேசு) அவளது கைகளை அழுத்தி விட்டேன். என்னைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்து விட்டு ”ஹா.. ஹா… ஹரி… வரெங்கோ… இன்ரவல் எகே கியன்னம்…” ( சரி.. வா இடைவேளை நேரத்தில் சொல்கிறேன்.) என்றதும் எனது இதயம் வேகமாக துடித்தது. ‘இவள் என்ன சொல்லப் போகிறாள்?’ ஏதேதோ கற்பனைகளுடன் நான் காத்திருந்தேன்.

நாம் வழமையாக அமரும் வேப்ப மரத்தடியில் அமர்ந்தோம். அவளே தொடங்கினாள். எனது முகத்தை கூர்ந்துநோக்கிவிட்டு ”மங் கியனதேட நுபட அடன்னபே ஹரித?” நான்சொல்வதைக் கேட்டு நீ அழக்கூடாது) அவளது வார்த்தைகளில் வருத்தம் கலந்திருந்தது. கூடவே முகத்திலும் பிரதிபலித்தது. நான் அவளது முகத்தை பிடித்தபடி ”அனே… கியபங் மொகத்த…” (என்னவென்று சொல்லு) மனம் வலித்தது. எனது கைகளை முகத்திலிருந்து எடுத்து விட்டபடி ”பாத்தி….. அபி…. அபி….” ( பாத்தி..நாம்..) வார்த்தைகள் வரவில்லை. எனது மடியில் முகம் புதைத்து அழுதாள். ஓ….. ஏன் இவ்வாறு அழுகிறாள். மனம் பதைபதைத்தது. எனது கண்களிலும் கண்ணீர். அவளது முகத்தை தாங்கிப்பிடித்து ” அனே மகே சுதூ… நுபட மொகத்த உனே கியபங்கோ….” (சுது உனக்கு என்ன நடந்தது சொல்லு) என்கையில்,முகத்தை துடைத்தபடி ”அபி கம அத்தரலா யனவ பங்…. தாத்த கிவ்வா…”(நாம் ஊரைவிட்டு செல்லப் போவதாக தந்தை சொன்னார்.) இவ்வார்த்தைகளைக் கேட்டதும் இடியைக் கேட்ட நாகம் போலானேன்.விம்மியழுதேன். ” பாத்தி…. அடன்னெபா…..”(பாத்தி அழாதே) எனக்கூறியபடி அவளும் அழ ஆரம்பித்தாள். நான் அவளைக் கட்டிக் கொண்டேன். ”அல்லா….. எய் யன்ன ஹதன்னே… ஹிடபங்கோ… நுப தமய் கிவ்வே கவதாவத் மாவ அதாரலா யன்னே கியலா….” (ஏன் போகப் போகிறாய்? நீ தானே அன்று சொன்னாய் என்னை விட்டுவிலகிப் போகமாட்டேன் என) எனது குரல் உடைந்திருந்ததது. ”ஒவ் பங்…. ஹெபய் .. பிரஷ்ன னே பங் தாத்தி பய வெலா… மங் கொச்சர கியல பெலுவத… எயா அகன்னே…… அனே பாத்தி….” (நான் சொன்னேன் தான். தற்போது இனப் பிரச்சினை இது குறித்து தந்தை பயப்படுகிறார். நான் நிறையவே பேசினேன். அவர் உறுதியாக இருக்கிறார்) அவளும் விம்மி விம்மி அழுதாள்.

அந்நாள் எவ்வாறு கழிந்தது என்பதை கூறுவது கடினம். அவ்வளவு அழுதழுதே கடந்தேன். லோகமே சூனியம் போன்ற உணர்வு. இனப் பிரச்சினையை உருவாக்கியவர்களை திட்டித்தீர்த்தது என் நாவு.

எனது வாழ்வில் நான் எதிர்பார்க்காத அந்த கரிய நாள் உதயமானது. நான் சுதுவினது வீட்டுக்குப் போனேன். பெட்டி படுக்கைகள் எல்லாம் லொரியொன்றில் ஏற்றிக்கொண்டிருந்தனர். சுது ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். என்னைக் கண்டதும் ஓடி வந்துகட்டிக்கொண்டாள். எனக்கும் பேச வார்த்கள் இல்லை. அழுகை மட்டும் தான் மொழியானது. சற்றுநேரத்தில் அவளது அம்மா அழைத்தார். அந்த நொடி, சுதுவை விட்டு நானும், என்னை விட்டு சுதுவும் பிரிந்த நொடி பல யுகங்கள் வேண்டும் சோகம் சொல்ல. நான் அவளை அணைத்துக் கொண்டேன். ”சுதூ…. சுதூ….” எனக்கு வார்த்துகள் சிக்கின. அவளும் ஓவென அழுதாள். சற்று நேரத்தில் எனது கண்களை துடைத்து விட்டபடி ”மம யன்னங் ரத்தரங்….” (நான் போகிறேன் தங்ஙமே…) அவள் ஓடிச் சென்று காரினுல் ஏறினாள். அந்தக் கார் சென்ற திசையையே நெடுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் கண்களில் ஈரத்துடனே.

பா. ரிப்தா
SEUSL
வியூகம் வெளியீட்டு மையம்

”சுதூ…. சுதூ…” என கூவியபடியே ஓடினேன். எனது குரல் அவளுக்குக் கேட்டதோ.. என்னமோ… திரும்பிப் பார்கவில்லை அவள். மீண்டும் ”சுதூ… இன்னகோ..” (சுதூ நில்லேன்) எனக் கூவினேன். நின்றாள் ஓ… அந்த வட்ட முகத்தில்…

”சுதூ…. சுதூ…” என கூவியபடியே ஓடினேன். எனது குரல் அவளுக்குக் கேட்டதோ.. என்னமோ… திரும்பிப் பார்கவில்லை அவள். மீண்டும் ”சுதூ… இன்னகோ..” (சுதூ நில்லேன்) எனக் கூவினேன். நின்றாள் ஓ… அந்த வட்ட முகத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *