ஆட்சியாளனின் தகுதி பற்றிய இஸ்லாத்தின் பார்வை

  • 71

இஸ்லாம் அரசியல் தகுதியாக அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளையும் கருதுகிறது. ஆட்சியாளர்களின் மன ஆசைகளை அடக்கும் பண்பாட்டுப் பகுதிகளை அமானிதம் எனும் பண்பு கொண்டிருக்கிறது. பணம், ஆட்சியதிகாரம் மீது எல்லைமீறிய ஆசை கொண்டுவிடாமலிக்கவும் அல்லது தான் சார்ந்தவர்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுக்காமலிருக்கவும் அல்லது அவற்றை ஏதாவதொரு வகையில் துஷ்பிரயோகம் செய்யாமலிருக்கவும் அமானிதம் எனும் பண்புதான் மிகப் பெரும் பாதுகாப்பரணாக திகழ்கிறது. பலம் எனும் பண்பு அரசியல், இராணுவ பகுதிகளில் முழுமையாக ஈடுபட்டு முன்மாதிரிமிக்க பணியொன்றை சமூகத்துக்காக செய்து காட்டுவதற்கு துணை நிற்கிறது. சஹாபாக்கள் சிலரிடம் இவ்விரு பண்புகளும் இணைந்திருந்தன. உமர் -ரழி- சிறந்ததொரு உதாரணம். நபியவர்களிடம் கூறப்பட்டது: அல்லாஹ்வின் தூதரே! உங்களைத் தொடர்ந்து நாம் யாரை தலைவராக்குவது? அதற்கவர் கூறினார்: நீங்கள் அபூபக்ரை தலைவராக்கினால் அமானிதம் பேணக்கூடியவராகவும் இவ்வுலகில் பற்றற்று மறுமையில் ஆசை கொண்டவராகவும் காண்பீர்கள். உமரை தலைவராக்கினால் அல்லாஹ் விடயத்தில் எவருக்கும் பயப்படாத பலம் பொருந்தியவராகவும் அமானிதம் கொண்டவராகவும் அவரை காண்பீர்கள். அலியை தலைவராக்கினால் – அவ்வாறு செய்வீர்கள் என நான் கருதவில்லை- அவரை நேர்வழி பெற்றவராகவும் உங்களை நேரான பாதைக்கு அழைத்துச் செல்பவராகவும் காண்பீர்கள்.

இதாப் இப்னு அசீத் அல் உமவிய் -ரழி- இன்னோர் உதாரணம். அனஸ் -ரழி- அறிவிக்கிறார்: நபி -ஸல்- அவர்கள் இதாப் இப்னு அசீதை மக்காவின் பொறுபாளராக நியமித்தார். அவர் நம்பிக்கையாளர்கள் மீது மென்மையானவராகவும் சந்தேகங் கொண்டவர்கள் மீது கடுமையானவராகவும் இருந்தார். அபூ உபைதாவை -ரழி- நபியவர்கள் ‘உம்மத்தின் நம்பிக்கையாளர்’ என வர்ணித்தார்.

அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளும் மிக சொற்பமானவர்களிடமே ஒருசேரப் பெற்றிருக்கின்றன. ஒருசேரப் பெற்ற சிலரிடத்திலும் அவ்விரு பண்புகளையும் சம அளவில் பெற்றவர்கள் மிகமிக குறைவானவர்களே. மனித வரலாற்றில் சஹாபாக்கள் விதிவிலக்கானவர்களல்லர். இப்னு தைமியா கூறுகிறார்: மனிதர்களில் அமானிதம், பலம் இரு பண்புகளையும் பெற்றவர்கள் மிக சொற்பமானவர்கள். எனவேதான் உமர் -ரழி- பின்வருமாறு கூறுபவராக இருந்தார்: யா அல்லாஹ்! மோசமானவனுடைய வீரத்தையும் நல்லவனுடைய இயலாமையையும் உன்னிடம் முறைப்படுகிறேன். ஹாலித் இப்னு வலீத் -ரழி- இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து போராட்டங்களின் தளபதியாக நபியவர்களால் நியமிக்கப்பட்டார். சில போது நபியவர்களின் ஏவல்களுக்கு மாற்றம் செய்திருந்தும் கூட. ஒரு முறை நபியவர்கள் தனது இரு கரங்களையும் வானம் நோக்கி உயர்த்தி பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்: யா அல்லாஹ்! காலித் செய்தவற்றுக்காக நான் உன்னிடம் மன்றாடுகிறேன். காலிதை -ரழி- விட அமானிதம், உண்மை போன்ற பண்புகளில் அபூதர்-ரழி- சிறந்தவராக இருந்தார். எனினும் நபியவர்கள் கூறினார்கள்: அபூதரே! உங்களை பலவீனமானவராக காண்கிறேன். இருவராக இருந்தாலும் நீங்கள் தலைவராக்கப்பட்டுவிட வேண்டாம். அநாதையின் பணத்தை பொறுப்பேற்றிட வேண்டாம்.

பலம், அமானிதம் ஆகிய இரு இரு பண்புகளையும் சம அளவில் பெறாதவர்களுக்கான உதாரணத்தை இப்னு தைமியா பெரிய சஹாபாக்களை கூறி மேலுள்ள பகுப்பாய்வில் விளக்குகிறார்: முதல் உதாரணம் காலித் இப்னுல் வலீத்-ரழி-. பலம் எனும் பண்பு அவரில் மிகைத்திருந்தது. தஹபீ அவரை அழகாக வர்ணிக்கிறார்: அல்லாஹ்வின் வாள், இஸ்லாத்தின் போராளி, போர்க்களங்களின் சிங்கம். அமானிதத்தை மிஞ்சிய அவரது பலம்தான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சமூகத்தை கூட கொலைசெய்யுமளவு தூண்டிவிட்டது. இச்செயலை நபியவர்கள் கண்டித்தது மட்டுமல்லாமல் அல்லாஹ்விடமும் மன்றாடுகிறார். மாலிக் பின் நுவைராவையும் கொலை செய்ய இதுவே காரணமாகி விடுகிறது. உமர்-ரழி- இச்செயலை கண்டித்து பின் பதவியை பறித்துவிடுகிறார்.

காலிதுடைய‌ -ரழி- செயலை இப்னு தைமியா இவ்வாறு விளக்குகிறார்: நபியவர்களுக்கு முரணாக செயற்பட வேண்டும் எனும் மனோநிலை கொண்டவரல்ல காலித் -ரழி-. மாற்றமாக நபியவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர். எனினும் மார்க்க மற்றும் சட்டப் பகுதிகளில் ஏனைய சகாபாக்களது அறிவுத் தரத்தில் அவர் இருக்கவில்லை. குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான தீர்ப்பை அறியாதவராக இருந்தார். ஜாஹிலிய்ய காலத்தில் அவருக்கும் அவர்களுக்கும் மத்தியில் முரண்பாடு இருந்ததாகவும் அதுவே அவர்களை கொல்வதற்கு தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அபூதர் -ரழி- இன்னோர் உதாரணம். உலகில் பற்றற்ற நிலை, பேணுதல், உண்மை, உளத் தூய்மை போன்ற பண்புகள் கொண்டவராக இருந்தார். எனினும் அவருக்கு பதவிகளை கொடுப்பதற்கு நபியவர்கள் விரும்பவில்லை. அவரது பேணுதலையும் தாண்டி அரசியல் தகுதிகளில் ஒன்றான பலம் அவரிடம் காணமப்படவில்லை என்பதே மிக முக்கிய காரணியாகும்.

அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளையும் வித்தியாசமான் அளவுகளில் பெற்ற சஹாபாக்களுக்கு உஸ்மான் -ரழி- அவர்களை இப்னு தைமியா கொண்டு வருகிறார். பலத்தை விட அமானிதம் மிகைத்துவிட்டதை விளக்குகிறார்: உலக ஆசை மிகைத்து அல்லாஹ் மீது பலவீனமான பயம் கொண்டவர்கள் உருவாகியமை, உஸ்மானுடைய -ரழி- பலவீனம் அதன் காரணமாக அவருக்கு நெருக்கமானவர்கள் பதவிகளை பெற்றுக் கொண்டமை போன்ற காரணங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவித்தன. இறுதியாக அநியாயமிழைக்கப்பட்டவராகவும் ஷஹீதாகவும் கொலை செய்யப்படுகிறார். உஸ்மான் -ரழி- கொலைக்கான காரணங்களை அடுத்து வரும் பகுதிகளில் விரிவாக பேச இருக்கிறோம்.

பதவி ஒப்படைத்தல், பதவி நீக்கல் விடயத்தில் குலபாஉர் ராஷிதூன்கள் பின்பற்றிய ‘பூரணப்படுத்தல் வழிமுறை’யை இப்னு தைமியா விளக்குகிறார். அது அவரது அரசியல் பற்றிய ஆழமான பார்வையை எமக்குணர்த்துகிறது. பூரணப்படுத்தல் வழிமுறை என்பதனூடாக நாடுவது, ஆட்சியாளன் அல்லாஹ்வுடனும் சமூகத்துடனும் உண்மையாளனாக இருக்க வேண்டும், தனது பலம்-பலவீனத்தை அறிந்திருக்க வேண்டும், தனது பலவீனத்தையும் குறைகளையும் பிரதியீடு செய்யக் கூடியவர்களை பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும், ஆட்சியாளன் அமானிதம், பலம் இரு பண்புகளிலும் சம அளவு கொண்டிருப்பினுமே. இரு பண்புகளிலும் பூரணத்துவமடைவது மனிதனால் சாத்தியமற்றது. அபூபக்ர்-ரழி- காலிதையும் -ரழி- உமர்-ரழி- அபூஉபைதாவையும் -ரழி- பொறுப்பாளர்களாக நியமித்தமையை இப்னு தைமியா இவ்வாறுதான் ஆய்வு செய்கிறார். கூறுகிறார்: உம்ர் -ரழி- கடுமையானவராக இருந்தார். மென்மையானவரான அபூ உபைதாவை பொறுப்பாளராக்கினார். அபூபக்ர் மென்மையானவராக இருந்தார். காலிதோ கடுமையானவராக இருந்தார். விடயங்கள் மிக நிதானமாக அணுகப்படுவதற்காக கடுமையானவர் மென்மையானவரையும் மென்மையானவர் கடுமையானவரையும் தன்னோடு இணைத்துக் கொள்கின்றனர். இருவரும் அல்லாஹ்வுக்கு விருப்பமானதையே செய்திருக்கின்றனர்.

உமர்-ரழி- பற்றி இப்னு தைமியா கூறுகிறார்: அவர் சிலபோது சமூக நலனை கருத்திற் கொண்டு எல்லைமீறும் சிலரை பதவியமர்த்தியிருக்கிறார். தனது பலத்தாலும், நீதியாலும் அவருடைய எல்லைமீறல் செயல்களை காலப்போக்கில் நீக்கிவிடுவார்.

அபூபக்ர் -ரழி- தொடர்ந்தும் காலிதை -ரழி- பதவியில் வைத்திருந்தமைக்குக் காரணம் பூரணப்படுத்தல் முறைமை என்றுதான் கூற வேண்டும். காலித் -ரழி- மீது அவருக்கு பல விமர்சனங்களிருந்தன. சில கட்டங்களில் அநியாயமாக இரத்தமோட்டியமை, சொத்துவிடயங்களை முறையாக கையாளாமை, கலீபாவுடனான முரண்பாடு போன்ற பல காரணிகள் இருந்தும் அரபிகளில் ஒரு பெருந்தொகையினர் முர்தத்தாக மாறி இஸ்லாத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்த போது அபூபக்ர் -ரழி- காலிதையை -ரழி- பொறுப்பாளராக நியமித்தார். இப்னு ஹஜர் கூறுகிறார்: ‘போராட்டத்தில் கிடைத்தவற்றை காலித் உடனே பிரித்துவிடுவார். அபூபக்ரிடம் -ரழி- கிடைத்தவை, பகிர்ந்தளித்தவை பற்றிய எவ்வித தகவல்களையிம் கொண்டு செல்ல மாட்டார். அபூபக்ருடன் -ரழி- பல விடயங்களில் முரண்படுபவராகவே இருந்தார்’. எனினும் காலிதிடம் -ரழி- இருந்த துணிவும் போராட்ட அனுபவமும் தொடர்ந்தும் அவரை பதவியில் அமர்த்த அபூபக்ரை -ரழி- தூண்டியது. காலிதை -ரழி- பதவி நீக்கிவிடும்படி ஒருமுறை உமர் -ரழி- ஆலோசனை கூறிய போது அபூபக்ர் -ரழி- பின்வருமாறு பதிலளித்தார்: காலிதுக்கு பகரமாக எனக்கு வேறுயார்தான் இருக்கிறார்?. காலிதுடைய செயற்பாடுகள் பற்றிய திருப்தியின்மையை அபூபக்ரிடம் -ரழி- உமர் -ரழி- முறைப்பட்டபோது பின்வருமாறு விடைபகர்ந்தார்: அல்லாஹ் மீது சத்தியமாக! அல்லாஹ் தன்னுடைய எதிரி மீது உருவிய வாளை நான் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டேன்’.

அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளும் பெரும்பாலான மனிதர்களிடம் ஒரு சேரப் பெற்றிருப்பதில்லை, அவ்வாறு ஒரு சேரப் பெற்றவர்களிடத்திலும் அப்பண்புகள் வித்தியாசமான அளவு கொண்டதாகவே அவை இருக்கின்றன என்பதையும் நாம் சரியாக புரிந்து கொள்கின்ற போதுதான் வரலாறையும் வரலாற்று மனிதர்களையும் சரியாக மட்டிடுவதற்கும் கோட்பாடுகளை சரியான இடத்தில் வைத்து அவற்றை புனிதப்படுத்தவும் முடிகிறது. பெரும் ஆளுமை கூட ஒரு புறத்தால் புகழப்படுவார். இன்னொரு புறம் விமர்சிக்கப்படுவார். இராணுவ அனுபவம், நிர்வாகத் திறமை, அரசியல் சாணக்யம் போன்ற பலத்துடன் தொடர்பான விடயங்களை ஆய்வுக்குற்படுத்தும் போது அம்ர் இப்னுல் ஆஸ், முஆவிய இப்னு அபூ சுப்யான் -ரழி- போன்ற பெரும் ஆளுமைகளை கண்டு கொள்கிறார். கட்டாயமாக அவர்களை அவர் புகழ வேண்டியவராகிறார். ஏன், வரலாறு கண்ட மிகப் பெரும் ஆளுமைகளாக அவர்களை அவர் காண்கிறார். அதே ஆய்வாளர் ஆட்சி, பங்கீடுகளில் நீதி, பதவிகளில் பற்றற்ற நிலை, சுயநலமின்மை போன்ற அமானிதத்துடன் தொடர்பான தலைப்புக்களில் ஆய்வு செய்யும் போது மேற்கூறிய ஆளுமைகளை விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

முஆவியா -ரழி- எனும் ஆளுமை பற்றிய இமாம் தஹபியுடைய கருத்தை பாருங்கள்: உமர் -ரழி-, அவரைத் தொடர்ந்து உஸ்மான் -ரழி- முஆவியாவை குறிப்பிட்டதொரு பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தமையே அவரது தகுதியை சுட்டிக் காட்டுகிறது. மிகக் கட்டுக்கோப்போடு அப்பகுதியை ஆண்டார். அவரது கொடை, நிதானத்தில் மக்கள் திருப்தி கொண்டனர். சிலபோது அவரது நடவடிக்கைகளில் சிலர் அதிருப்தியடைந்தாலும் கூட. அவரை விட நல்ல, ஸாலிஹான‌ ஸஹாபாக்கள் பலர் இருந்தனர். எனினும் தன்னுடைய புத்திகூர்மை, நிதானம், நுணுக்கம் போன்ற பண்புகளால் உலகை ஆட்சி செய்ய அவரால் முடிந்தது. அவர் மீதான விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன.

இன்னோர் இடத்தில் இவ்வாறு கூறுகிறார்: அநீதியை விட நீதி மிகைக்கக் கூடியளவு ஆட்சி செய்த ஆட்சியாளர்களுள் முஆவியாவும் உள்ளடங்குகிறார். அவர் தவறுகளை விட்டும் நிரபராதியானவரல்லர். அல்லாஹ் அவற்றை மன்னித்து விடுவான்’. ‘அவர் ஆட்சியை தனது மகனுக்குக் கொடுக்காமல் மக்களிடம் தமக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கொடுத்திருக்கக் கூடாதா!’

அம்ர் இப்னுல் ஆஸின் -ரழி- ஆளுமை பற்றி தஹபி கூறுவதைப் பாருங்கள்: உலகை ஆளக்கூடியவர், குறைஷிகளில் மிகவும் சாணக்கியம் கொண்டவர். உறுதி, நுணுக்கம், சாணக்யம் போன்ற பண்புகளுக்கு உதாரணமாக கூறக்கூடியவர்’. ‘குறைஷிகளின் அறிவு நுற்பம், உறுதி, சாணக்யம், திறமை கொண்டவர்களில் முக்கியமானவராக இருந்தார். கண்ணியமிக்க அரபு ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். மிக முக்கிய முஹாஜிர்களில் ஒருவராகவும் இருந்தார். அல்லாஹ் அவரை மன்னிப்பான். உலகப் பற்றில் குறைந்தவராகவும் சில விடயங்களில் தலையிடாமலும் இருந்திருந்தால் கிலாபத்துக்கு பொறுத்தமானவராக இருந்தருப்பார்.

கலாநிதி முஹ்தார் ஷன்கீதி

இஸ்லாம் அரசியல் தகுதியாக அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளையும் கருதுகிறது. ஆட்சியாளர்களின் மன ஆசைகளை அடக்கும் பண்பாட்டுப் பகுதிகளை அமானிதம் எனும் பண்பு கொண்டிருக்கிறது. பணம், ஆட்சியதிகாரம் மீது எல்லைமீறிய ஆசை கொண்டுவிடாமலிக்கவும்…

இஸ்லாம் அரசியல் தகுதியாக அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளையும் கருதுகிறது. ஆட்சியாளர்களின் மன ஆசைகளை அடக்கும் பண்பாட்டுப் பகுதிகளை அமானிதம் எனும் பண்பு கொண்டிருக்கிறது. பணம், ஆட்சியதிகாரம் மீது எல்லைமீறிய ஆசை கொண்டுவிடாமலிக்கவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *