ஓட விடுமா ஓட்டு – சிறுகதை

”அவசரமா வாவேன் ஓட்டு போட… ” அடித்தொண்டையால் அதட்டிய உம்மாவைப் பார்த்து

”சரியும்மா… வாரன் கொஞ்சம் பொறுங்கோ… ”

”இவளோட ஒரு பயணம் போறதான் இனி… அல்லா…”

”சரி..சரி போம்…” வெளியே மழை இலேசாகத் தூரிக் கொண்டிருந்தது.

”உம்மா… எவனுகளுக்கு போட்டாலும் ஒன்டு தானே?” அலட்சியமாகக் கேட்ட என்னைப் பார்த்து

”எந்தேன் நீ பேசிய… அப்டியில்ல… பாத்து போடு… ஒனக்கு வெளங்கிய தானே இனி…”

”ஹ்ம்… நல்லா வெளங்கிய உம்மா… எவன் வந்தாலும் ஓட தான் போற…”

பாதையெங்கும் மக்கள் கூட்டம் முகங்களில் இனம் புரியா உணர்வுடன் நடமாடிக் கொண்டிருந்தனர். ரஷீது காக்கா எங்களை நோக்கி புன்னகையுடன் எதிர்பட்டார்.

”ஆ… ஓட்டு போட போறா… சரியா நடூல இருச்சியதுக்கு போடுங்கோ… ” குரலில் கம்பீரம் தென்பட்டது.

”உம்மோவ்… இவனுகளுக்கு இதுவே வேல… பாருங்கோ… ஓட்டுப் போடியது எகட தனிப்பட்ட உரிம… பிஸ்ஸூக…”

”ஆ… போதும்… மிச்சம் சட்டம் பேசாம வா அவசரமா…”

வாக்குச் சாவடியை நெருங்க நெருங்க எனக்குள் இனம் புரியா ஓர் உணர்வு. அடையாள அட்டையைக் காட்டி விட்டு நகர்கிறேன்.

”நகத்த காட்டுங்கோ..”

கையில் பேனாவுடன் காத்திருந்தவரிடம் கையை நீட்டினேன். அவர் பூசிய கறை நகத்தில் ஒட்டிக் கொண்டது.

‘சீ… கற படத்தியது நகத்த மட்டுமா? இல்ல நாட்டேயுமா? ‘

எனக்குள் புதுக் கேள்வி எழும்பியது. அதை வார்த்தைகளாக்க அந்த இடம் சரியாகப் படவில்லை. வாக்களிக்கும் இடத்தை நெருங்கி பேனாவைக் கையிலெடுத்ததும் இலேசாக அது நடுங்கிற்று.

‘யா அல்லா…. நீ தா பாக்கோணும்…’

மீண்டும் ஒருமுறை இந்த ஓட்டு ஓட விடாது என்ற நம்பிக்கையுடன் புள்ளடியிட்டு வருகிறேன்.

( முற்றும் )

Rifdha Rifhan
SEUSL

Leave a Reply

Your email address will not be published.