அவளைப் பற்ற வைத்த சந்தேகத் தீ……

  • 10

ஆளுமைக் குறைபாடு ஓர் அலசல்

அவள் நன்கு கற்ற அழகிய தோற்றமுடைய ஓர் குடும்பப் பெண். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஓர் இளம் தாய். சில காலமாக அவளது நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து மெது மெதுவாக விலக ஆரம்பிக்கிறாள். எடுத்ததற்க்கெல்லாம் சந்தேகம். பிறர் மீதுள்ள எந்த கோபத்தையும் பலநாள் ஆகியும் அவளால் மறக்க முடியவில்லை. அடுத்தவரின் சிறு பார்வையும் பெரிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. ஒரு வார்த்தையும் மனதில் ஆழமாய் இறங்குகிறது. காலப்போக்கில் தனது சந்தேகத்தை நடத்தையில் வெளிப்படுத்தத் தொடங்குகிறாள்.

அயலவரால் தரப்பட்ட உணவை அவர்கள் அறியாமல் வீசத் தொடங்கி “என் கணவரை என்னிடமிருந்து பிரிக்க ஏதாவது கலந்து தாரீர்களா” என்று முகத்திற்கு நேரே எறிந்து விழும் வரை செல்கிறாள். சொந்த தாய் மற்றும் சகோதரிகளையே நம்ப மறுக்கிறாள். இதனால் தன் அன்புக்குரியவர்களிடமிருந்தே உணர்வளவில் பிரிந்து வாழ்கிறாள். கணவனின் தாய் தனது மகள் மற்றும் ஏனைய மருமகளுடன் ஏதோ சுவாரஷ்யமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவள் அவர்கள் தனக்கெதிராக திட்டம் தீட்டுவதாக கூற ஆரம்பிக்கிறாள்.

கணவன் தன்னைப் பயன்படுத்தவதாக எண்ண ஆரம்பிக்கிறாள். இதனால் கணவனுடன் வாக்குவாதங்கள் தொடர புரிந்துணர்வும், நிதானமுமுள்ள கணவன் கடுமையான முயற்சிக்கு பின் அவளை உளவளத்துணைக்கு அழைத்து வருகிறார். இருப்பினும் அவர் அழைத்துவரும் நேரம் அவளின் இவ் உள நோய் தீவிர நிலையை அடைந்துவிட்டது. தொடர்ந்தேச்சையான மருத்துவ சிகிச்சைக்கு பின்பே அவளை ஆற்றுப்படுத்த முடியும் என்னும் நிலை.

ஆம் அவளின் இந்நிலைக்கு சந்தேக ஆளுமைக் குறைபாடு (Paranoid Personality Disorder) எனப்படும் ஆளுமைக் குறைபாட்டு நோயே காரணம். இந்நோய் தனியே காணப்படும் போது அதன் ஆரம்ப நிலையில் உளவளத்துணை அமர்வுகளின் ஊடாக குணப்படுத்தலாம். ஆயினும் அதன் தீவிரத் தன்மை அதிகரிக்கும் போது மனச்சோர்வு (Depression), மனச்சிதைவு (Schizophrenia) மற்றும் (Severe OCD) அதீத எண்ண மீள் சுழற்சி நோய் போன்றன இணைந்து தாக்கும் போது நோயின் வீரியம் அதிகரித்து குறித்த காலத்திற்கு மருந்துகள் பாவிக்கக் கூடிய நிலை உருவாகிறது. அதிகரித்து வரும் உளவியல் நோய்களில் ஆளுமைக் குறைபாட்டு நோய்கள் மிகவும் முக்கியமானவை. அவை பற்றி சற்று அலசுவோம்.

உங்கள் வாழ்நாளில் நீங்கள் பல நபர்களை சந்தித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் உங்களை, ஆள்பவர்களாக, உங்களுக்கு அடிபணிபவராக, உங்களைக் கவர்பவர்களாக, நீங்கள் வெறுப்பவர்களாக இருக்கலாம். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அவர் பற்றிய ஒரு மனப்பதிவை உங்கள் மனதில் விதைத்துக் கொண்டு தான் செல்கின்றனர். அதேவேளை உங்கள் நடை, உடை, பாவனை, பேச்சு போன்றன உங்கள் பற்றிய ஒரு விம்பத்தை அடுத்தவர்களுக்கு வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வண்ணம் ஒருவரின் மனப்பாங்கு, சிந்தனை, எண்ணம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் தன்னையும் பிறரையும் ஆளுகின்ற ஓர் செயற்பாட்டை ஆளுமை என சுருங்கக் கூறலாம். ஆளுமைகள் உங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் அதேவேளை அதில் ஏற்படும் தீவிர போக்குகள் அல்லது பற்றாக்குறைகள் ஆளுமைப் பிறள்வு நோய்களுக்கு உங்களை ஆளாக்கும்.

உளவியலானது ஆளுமைப் பிறள்வு நோய்களை தொகுப்பு A (cluster A) தொகுப்பு B (cluster B) தொகுப்பு C (cluster C) என முக்கிய மூன்று தொகுப்புக்களின் கீழ் பிரித்து நோக்குகிறது. இதன் ஒவ்வொரு தொகுப்பிற்கு கீழும் பல ஆளுமைப் பிறள்வு நோய்கள் உள்ளன.

ஆளுமைப் பண்புகள் சிறுவயது முதல் காணப்பட்டாலும் அது வயது வரும் போதே உறுதி பெறுகின்றன. சில பண்புகள் வழமைக்கு மாறாக அதிகரித்தோ அல்லது குறைந்தோ விருத்தியடைகின்றன. இதனால் அவரிடம் அதிகம் காணப்படும் ஆளுமைப் பண்புகள் ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இவ்வாறு தோற்றம் பெறும் பண்புகள் ஆளுமைப் பிறள்வாக மாறும் போது குறித்த ஒருவரிடம் கவனிக்கத்தக்க எதிர்மறை மாற்றங்கள் (Negative Changes) வெளிப்படும். குறித்த பண்புகளினால் ஆளிடைத் தொடர்புகளில் (inter personal relationships) பிரச்சினைகள் உருவாகும். குழுக்களாக இணைந்து செயற்பட முடியாமல் போகும். இவ்வாறு இதன் அறிகுறிகள் (symptoms) அதிகரித்துக் கொண்டே செல்லும்.. இறுதியில் அது ஆளுமைப் பிறள்வாக உருவெடுக்கும்.

றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்

ஆளுமைக் குறைபாடு ஓர் அலசல் அவள் நன்கு கற்ற அழகிய தோற்றமுடைய ஓர் குடும்பப் பெண். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஓர் இளம் தாய். சில காலமாக அவளது நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய…

ஆளுமைக் குறைபாடு ஓர் அலசல் அவள் நன்கு கற்ற அழகிய தோற்றமுடைய ஓர் குடும்பப் பெண். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஓர் இளம் தாய். சில காலமாக அவளது நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *