மனித உரிமையும் இலங்கையின் ஊடக சுதந்திரமும்!

  • 6

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன. இனம், சாதி. நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல், உளவலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் ,வாழும் உரிமை,சுதந்திரம்,கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,சட்டத்தின் முன் சமநிலை,நகர்வுச் சுதந்திரம்,பண்பாட்டு உரிமை,உணவுக்கான உரிமை,கல்வி உரிமை என்பன முக்கியமானவை.மனிதனின் இன்றியமையாத தேவைகளால் நீர்,நிலம்,காற்று,உறைவிடம்,பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில் கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.

எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுவரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார ,சமூக பண்பாட்டு உரிமைகள் (International covenant on economic , social and cultural rights) என்ற சான்றுவரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்திய சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாகும்.

வாழும் உரிமை, உணவுக்கான உரிமை, நீருக்கான உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சுரிமை, சிந்தனைச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், சமயச் சுதந்திரம், அடிமையாக உரிமை, சித்தரவதைக்கு உட்படா உரிமை, தன்னாட்சி உரிமை, சுயநிர்ணயம், ஆட்சியில் பங்குகொள்ள உரிமை, நேர்மையான விசாரணைக்கான உரிமை, நகர்வு சுதந்திரம், கூடல் சுதந்திரம், குழுமச் சுதந்திரம், மொழி உரிமை, கல்வி உரிமை, பண்பாட்டு உரிமை, சொத்துரிமை, தனிமனித உரிமை என்பனவாகும்.

ஊடகத்துறை என்பது பல்வேறு துறைகளிலும் கலந்திருப்பதால் மனித உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சுதந்திரம் ஊடகத்துறைக்கு பெரிதளவும் உள்ளது. இலங்கையில் ஊடகம் என்பது உண்மைகளை முடக்கும் முகமானதாகவும், உண்மை நிலைக்கு மாறான பரப்புரைகளை நிகழ்த்துவோருக்கு சுதந்திரமானதாகவுமே இருக்கின்றது.

உண்மைச் செய்திகளைத் திரட்டி வெளியிட மறுப்பதை அல்லது தடுப்பதை ஊடக முடக்கம் எனலாம். ஊடக முடக்கம் செய்யப்படும் போது ஊடக சுதந்திரமும் அந்நாட்டில் அற்றுப் போய்விடுகின்றது. ஒரு சம்பவம் என்றால் சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆராய்ந்து அதை ஆதாரபூர்வமாக செய்திகளை வெளியிடுவதே ஊடகதர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் முதல் அண்டம் வரையிலான தகவல்களை செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறி்ந்து கொள்கின்றோம். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரபூர்வமாக அறியத்தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடக தர்மமாகும்.

இலங்கையை பொருத்தவரை சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கோ சம்பவ இடங்களுக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்யவோ, பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மைகளை கேட்டறியவோ முடியாத நிலையே இருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கைச் செய்திகளின் நம்பகத்தன்மை எவ்வாறானதாக இருக்கும். சர்வதேச மட்டத்தில் பிரசித்தப் பெற்ற ஊடகவியலாளர்களே கொல்லப்படும் பொழுது, சாதாரண ஊடகவியலாளர்களின் நிலை எத்தகையதாக இருக்கும்? சாதாரண மக்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வாறானதாக இருக்கும்? எனும் கேள்விகள் தொடர்கின்றது. இலங்கை சிறுபான்மையினரின் கருத்துக்களும், நிலைப்பாடுகளும் வெளியுலகம் அறியமுடியாதவாறு ஒரு ஊடக முடக்கம் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது உண்மையை அறிவிக்கும் ஊடக சுதந்திரம் அற்ற நிலையாகும். இலங்கையில் உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு, கொலை அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் உள்ளன. உண்மை நிலைப்பாடுகளை மக்களுக்கு அறியத்தர முற்படும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் சிறுபான்மையினர்களினால் நடாத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. ஊடகவியலாளர்கள் கைது, காணாமல் போதல், கொலை செய்யப்படல் போன்றவை தொடர்கின்றன. பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் பல ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேற முற்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துயர் சம்பவங்கள் மீண்டும் ஊடக சுதந்திரத்தினை சற்று நெருக்கடியான சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஊடக சுதந்திரமானது ஜனநாயகத்தின் அடிப்படையாக அமைகின்ற நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதன் கீழ் அடிக்கடி நசுக்கப்படுவதோடு பல்வேறு காரணங்களினால் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றது. ஊடகவியலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதோடு தகவல்களை அறிவதற்காக மக்களுக்கு இருந்து வருகின்ற வசதிகள் பாதுகாக்கப்பட வேண்டி இருப்பதோடு மற்றும், வன்முறை, வெறுப்பை ஏற்படுத்தாத நியாயமானதும் நடு நிலையானதுமான அறிக்கயைிடல் ஊக்குவிக்கப்பட வேண்டும். தகவல் கையாளுகை, திட்டமிடப்பட்ட புகைப்படங்கள், கருத்தியல் ரீதியாக பாரபட்சமான அறிக்கைகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான செய்திகள் தற்போது தேசிய சமாதானத்திற்கும் தகவலின் வெளிப்படைத் தன்மைக்கும் ஊடகத்தின் நம்பகத்தன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

எல்லைகளை தாண்டிய ஊடகவியலாளர்கள் (Reporters without Borders) வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஊடக சுதந்திர தின அட்டவணையில் 180நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையில் ஊடகத்துறை 2016ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4வருடங்களாக கடினமான நிலைமையில் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. 04வருடங்களுக்கு முன்னர் ஆரோக்கியமற்றதாக காணப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களினதும் ஊடகங்களினதும் நிலை எவ்வாறாயினதும் இன்று, இலங்கையில் ஊடக சுதந்திரமானது தொற்று நோய் போல் பரவும் தவறான தகவலிற்கு எதிராக போராடும் போது ஏற்படும் மிரட்டல், தணிக்கை, சர்வதிகாரபிரச்சாரம், உடலியல் மற்றும் இணைய துன்புறுத்தல் போன்ற தொன்று தொட்டு காணப்படும் சவால்களிலிருந்து மீள வேண்டும். டிஜிட்டல் மற்றும் வழமையான ஊடகங்களில் காணப்படும் போலியான தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகள் நாடுபூராகவும் ஊடக சுதந்திரத்தை பாதிக்கின்றது. நல்ல ஊடகவியல் அல்லது ஒழுக்கரீதியான, தொழில் தகைமையுடனான ஊடகவியல் இன்றைய சூழலில் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும். நாட்டில் சமுதாயம், அரசியல் தலைமையும் மனம் வைத்தால் மட்டுமே ஊடக சுதந்திரம் காப்பாற்றப்பட்டு மனித உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

Afra Binth Ansar

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய…

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *