மீண்டும் பயணம் (சிறு கதை )

”நாங்க மட்டுமா போக போற?”

என்ற எனது வார்த்தைகளைக் கேட்ட பர்ஹா என்னை முறைத்துப் பார்த்து விட்டு,

”ஓ… எந்துகன் நீ அப்டி கேக்கிய?”

கேள்விக்கணையை என் மீது தொடுத்தாள்.

”அடி… அது சீனியர்மார் யாருமில்லயா?”

மீண்டும் முறைத்துப் பார்த்து,

”அடி றீமா நாங்க பாலகனுகளா? சேந்து போம்”

எனக்கூறிவிட்டு, மீண்டும்

”அதப் பத்திபொறகு பேசோம். இப்ப படி நாளேக்கி தமிழ் பாடம் இருச்சி ‘எக்ஸேம்’. ‘லாஸ்ட்’ பாடம்”

அவள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.

ஆயினும் என் நெஞ்சில் பரீட்சை முடியப் போகும் சந்தோசமும், வீட்டுக்கு எவ்வாறு போவது? போன்ற எண்ணங்களே அலைபாய்ந்தன. மழையுடன் புயலும் சேர்ந்து வருவது போல. எனது மனம் எண்ணங்களிலேயே லயித்தது. நாம் பல்கலைக்கழக வாழ்வை அனுபவிக்க இந்த வருடமே காலடியெடுத்து வைத்தோம். முதல் பருவத்தேர்வு முடிய இன்னும் ஒரு நாளே இருந்தது. பல்கலைக்கழகம் நமது ஊரிலிருந்து நெடுந்தொலைவிலேயே இருந்தது. இதுவரைக்கும் சிரேஷ்ட மாணவர்களுடனேயே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்த எனக்கு நாளைய பயணம் புது அனுபவமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யாரோ கதவைத்திறந்து கொண்டு வருவது கேட்டு திரும்பிப் பார்த்தேன். பர்ஹா வந்து எனதருகே நின்று எனது நிலையை கூர்ந்து பார்த்துவிட்டு,

”அடி றீமா…. நாளேக்கி எக்ஸேம்டீ. நீ எந்தேன் அம்மட்டு யோசிச்சிய. படி.”

அவளது அக்கறையான வார்த்தைகளைக் கேட்டு மௌனமாக புன்னகைத்துவிட்டு புத்தகத்தை எடுக்க மேசையருகே சென்றேன்.

”இவளுக்கு எக்ஸேம் பயம் கொஞ்சம் சரி இல்லயோப்பிடியும்”

அவள் முணுமுணுப்பது என் காதில் விழுந்தது. உதட்டோரம் அலட்சியப் புன்னகை படிந்தது.

நான் எதிர்பார்த்த கடைசி நாளும் வந்தது. வழமை போல உம்மாவிடம் போனில் கூறிவிட்டு, ‘யா அஹத்’ என்ற திருநாமத்தை உச்சரித்தவளாக நண்பிகளோடு பரீட்சை மண்டபத்துக்குள் நுழைந்தேன். தமிழ் வினாப்பத்திரமும் தரப்பட்டது. ஆயினும் மனமோ குரங்கைப் போல இன்றிரவு வீட்டுக்கு செல்லவிருக்கும் பயணத்தைப் பற்றியே கற்பனைக்கோட்டை கட்டியது.

எப்படியோ பரீட்சையையும் எழுதி முடித்து விடுதியை நோக்கிப் பயணிக்கையில் பல்கலைக்கழக வீதியெல்லாம் வெருச்சோடிக் காணப்பட்டது. அனேகமானோருக்கு பரீட்சை முடிவடைந்திருந்தது என்பதே காரணம் என்று கண்டுபிடித்தேன். எனது மனமோ ஆகாயத்தில் பறப்பது போல மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஆயினும் நெஞ்சோரம் ஏதோ நெருடல் அது என்ன? முதல் முதலாக துணையில்லாமல் போகப் போவது பற்றியா? அல்லது நண்பிகளை பிரிந்து போவதாலா? என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது முக வாட்டத்தை அவதானித்த பர்ஹா,

”அடி றீமா நாங்க அஞ்சு பேர் ஈச்சிதானே போகேலும்….”

முதுகைத் தட்டிவிட்டு சென்றாள். இரவு பஸ் வந்தது. அதில் அமரும் போதே மனம் லேசாக நடுக்கிற்று. பிரயாண துஆக்களை நாவு முணுமுணுத்தது. வாழ்வில் எதிர்பாராத அம்சங்கள் நடைபெறுவது இயல்பு தானே? எனது பக்கத்து இருக்கையில் ஓர் சகோதரி வந்தமர்ந்தார். முதன் முதலாக என்னைப் பார்த்து புன்னகைத்தார். பதிலுக்கு புன்முறுவல் பூத்த என்னுடன் கதைக்க ஆரம்பித்தார். அவருடன் எனக்கு எப்போதோ சந்தித்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்தக் கண்களில் தெரிந்த உண்மை அவருடன் என்னை ஈர்த்துக்கொண்டது. எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்ததால் பேச இலகுவாக இருந்தது. நான் அவரது முகத்தை நோக்கி,

”நீங்க எங்க போற? ”என்றதற்கு ”நான் கொழும்பு யுனிவர்சிட்டீல யூனானி மெடிசிங் பைனல் இயர்.”

எனக் கூறிய படியே பேச ஆரம்பித்தார். இடையில் நான் மறுபடி,

”ஒங்களுக்கு சிங்களம் தெரீமா தாத்தா?”

புன்னகையுடன்,

”ஆமா… தெரியும்மா…”

எனக் கூறியதும் அவரைப் பார்த்து,

”தெரிஞ்சிஈச்சவேணும் தானே. இந்த பக்கத்துல நெறயபேருக்கு சிங்களம் தெரியா? கட்டாயம் தெரிஞ்சிஈச்சவேணும் இந்த கால கட்டத்துல.”

மீண்டும் புன்னகையுடன்,

”ஆமா அது உண்மதான்…”

இவ்வாறு எமது உரையாடல் நீண்டது. இருவரது தொலைபேசி எண்களையும் பரிமாற்றிக் கொண்டோம். இவ்வளவு ஆழமாக இவ்வுறவு நீடிக்கும் என நான் நம்பவேயில்லை. இரவு பஸ் இடைவேளைக்காக அதிகாலை ‘வேவல்தெனிய’ என்ற ஊரில் நிறுத்தியது.

”தங்கச்சி வாங்களே வெளீல போய் நிப்பம். இருந்து. இருந்து. முதுகெல்லம் வலி.”

எனக் கூறிச் சென்றவரின் பின்னால் நானும் இறங்கினேன். அதிகாலைப்பொழுதின் ரம்மியமான இளம் தென்றல் மேனியில் பட்டபோது அதில் கலந்திருந்த குளிர் காரணமாக உடல் நடங்கியது. ஆனால் அதில் ஒரு சுகம் இருந்தது. சிறிது நேரம் நானும் சகோதரியும் பேச்சில் உலகை மறந்தோம்.

”சிச்டர் வழமயா சீனியர்களோட தான். ஆனா இன்னிக்கு யாருமில்ல..”

என்றதும்

”சரி…சரி.. நாங்க இருக்கோம் தானே…”

இவ் வார்த்தைகளால் மனம் ஆறுதலடைந்தது. மீண்டும் கொழும்பை நோக்கி பஸ் புறப்பட்டது. இப்பயணம் பல புது அனுபவங்களைக் கற்றுத் தந்தது.

முற்றும்
F. Rifdha Rifhan
SEUSL

Leave a Reply

Your email address will not be published.