விழிகள் தேடும் விடியலின் களையா நினைவு

  • 31

ஆயுளில் ஒருமுறை நூல் வெளியிட்டவர்களும் உண்டு. மாதத்திற்கொரு முறை வெளியிடுபவர்களும் உண்டு. என்னுடைய இந்த முயற்சி ஒரு வருட காலம் நிறைவேறா ஆசையை நிறைவேற்றிட காலத்தோடு இட்ட போர். இதன் ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் என்னுடைய சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.பிர்தௌஸ் சத்தார். என் கவிகளுக்கு முதல் வாசகர். கருத்துக்களின் ஆழத்தையும் செம்மையையும் செப்பணிட்டவர். தூண்டல் மீனாய் துள்ளி எழ வழிவகுத்து தந்தவர்.

கவிச்சாரல் சாராவின் “விழிகள் தேடும் விடியல்” எனும் என் கவித்தொகுப்பை வெளியிட்ட நாள் அன்றே அன்று தான். இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. எத்துணை நாள் கனவு.கனவினை நினைவாக்க கடிகாரமாய் சுழன்ற நிமிடங்கள் . அவ்வளவு சிரமங்களையும் சகித்துக் கொண்டது அந்த ஒரு நாளை எதிர்பார்த்து தான்.

விழாவுக்கு முதல் நாள் நண்பகல் இருக்கும். நான் சூட்டிய பெயரோடு எனக்கு பிடித்த அட்டைப்படத்தோடு கைகளுக்கு கிடைத்தது என் கவிக்குழந்தை. அந்நொடி நான் அடைந்த மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் விபரிக்க இயலாது. என் அருகில் இருந்த தோழியை கட்டி அணைத்து கண்ணீரை சிந்தி தீர்த்துக் கொண்டேன் என் மகிழ்ச்சியை.

காலை முதல் “எல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டும்” என்ற அவாவோடு மன வேண்டுதலோடு “என்ன செய்கின்றேன்? என்ன செய்ய வேண்டும்?” என்ற குழப்பத்தோடு ஒருவித பயம் கலந்த மகிழ்ச்சியோடு வேலைகளை பார்க்க, தண்ணீரை தவிர வேறு ஒன்றும் தொண்டையின் கீழ் இறங்கவில்லை. பசியை அப்போது நினைக்கவும் இல்லை.

SEUSL (FIA AUDTRM) அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என் சக தோழர்களால். நேரம் நெருங்க நெருங்க என்னையே நான் மறந்து போகிறேன்.பயத்தை காட்டிக் கொள்ளக் கூடாதென்ற பயத்தில் முனுமுனுக்க இடைக்கிடையே வாழ்த்துகளும் என் தோழிகளிடமிருந்து.

விடுதியில் இருந்து “விழாவின் கதாநாயகி நான்!” என்று அடையாளம் தெரிந்தபடி தான் ஆடையணிந்து விரைந்தோடினேன் விழா நடைபெறும் இடத்தை நோக்கி.

என் அழைப்பை ஏற்று என்னை கௌரவிக்க, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி SMM.மஸாஹிர் அவர்களினை பிரதம அதிதியாக கொண்டு
இஸ்லாமிய கற்கைகள் நெறித்துறைத் தலைவர் கலாநிதி MIM. ஜெஸீல் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக பேராசிரியர் MAM.ரமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் S. யோகராசா, கலாநிதி பிர்தௌஸ் சத்தார், கலாநிதி. சாதியா, சிரேஷ்ட விரிவுரையாளர் MHA. முனாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் FHA.ஷிப்லி, சிரேஷ்ட விரிவுரையாளர் AR.சர்ஜூன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்களும் கவிஞர் அனார் உட்பட கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் மற்றும் என் பெற்றோர் குடும்பத்தினரும் என் சக தோழர்களும் கலந்து கொள்ள இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் மாணவர்ப் பேரவை தலைவர் MN. அனாப் அஹமட் தலைமையில் கிராஅத்துடன் இனிதே ஆரம்பம் செய்யப்பட்டது. அறிவிப்பாளராக நிகழ்வினை தொகுத்து வழங்கியவர் ஓட்டமாவடி ஹில்மி ( ஸலாமி) “விழிகள் வரைந்த ஓவியம்” எனும் கவித்தொகுப்பின் சொந்தக்காரர்.

அரங்கம் முழுவதும் என்னையும் என் “விழிகள் தேடும் விடியல்” எனும் கவித்தொகுப்பை பற்றிய பாராட்டுக்களே நிறைந்திருந்தது. மழைச்சாரலில் நனைந்த ஒரு பூரிப்பு. புகழனைத்தும் இறைவனுக்கே! இறைவனுக்கடுத்த புகழ் என் தந்தை தாய்க்கே சொந்தம். என்னை மேடையிலேற்றி கீழிருந்து மகிழ்ந்திட்டவர்கள். “மேடை ஏற்றுதல்” என்று வெரும் வார்த்தை தான் அது. அதற்கு பின்னால் என் எழுத்துக்களைத்தாண்டி பணத்தேவை முதன்மையாக இருந்தது. பணமிருந்தால் தான் பாட்டிசையும் என்ற கதி. அதற்காக உழைப்பின் உன்னதம் நான் அறிந்து கொள்ளும்படி உழைத்து
உயிரூட்டியவர்.

“நான் கவிதை நூல் வெளியிடப்போகிறேன்” என்று மட்டுமே கூறிய எனக்கு, எதற்கு? ஏன்? என்று கேள்வியைக் கூட தடைக்கல்லாக அவர்கள் நிறுத்தவில்லை. உடைந்த கண்ணாடியாக நான் சிதறும் தருணங்களில் தந்தையை எண்ணிக்கொள்வேன். எங்கிருந்து தான் வருமோ அந்த புத்துணர்ச்சி! ஒட்டு மொத்த பிறவியின் பலனையும் என்னை ஈன்றெடுத்ததற்கான கைமாறையும் அந்த அரங்கத்தில் என் பெற்றோருக்கு சமர்ப்பித்ததாய் மோட்சம். ஆனால் என்றும் இது சிறு துளிதான்.

விழாவில் பலரும் தம் கருத்துகளை பகிர எதை இப்பயணத்தில் தொட்டுச் செல்ல வேண்டும். எதை விட்டுச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். மற்றும் உண்மையை உரத்து சொல்லவும் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் அத்திவாரம் எனவும் கற்றுக் கொண்டேன். கவிஞர் உலகத்தில் நான் ஒரு பெண் என்றபடியால் கவிஞர் அனார் அவர்களின் வாழ்த்துகளும் செதுக்கும்படி அமைந்த அறிவுரைகளும் கவியால் அமைந்திருந்தது. மறக்க முடியாத மீளப் பெறவும் முடியாத பேரின்பம். பெண்ணிணத்துக்கான குரலை நேரில் சந்தித்த அனுபவம் அதுதான்.

இறுதியாக என் உரைக்காக அழைக்கப்பட்டேன். வரவிருந்த கண்ணீரை விழியில் மூடிமறைத்து மனதில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகள் கோர்த்து வாய்திறந்தேன். அது தான் என் முதல் அங்கீகாரம். அரங்கத்தையே அமைதியாக்கி ஏங்கச் செய்து பனித்துளி போல் பார்ப்பவர் விழிகள் தோறும் கண்ணீர் துளி ததும்பி இருந்தது என் பேச்சை நிறைவு செய்து வந்து பார்க்கையில். என்னவோ பெரிய சாதனை புரிந்திட்டதாய் வீரம் எனக்குள்.ஆனால் இது தான் உன் ஆரம்பம்.

என் நூலுக்கு வழங்கப்பட்ட உரைகள்,

அட்டைப்படத்திற்கான உரை – கலாநிதி MSM. மஸாஹீர் (பீடாதிபதி)

அணிந்துரை – பேராசிரியர் S. யோகராசா.

சிறப்புரை – “கவிச்சாரல் சாராவின் வர்ணங்களும் தூரிகைகளும்” எனும் தலைப்பிட்டு கலாநிதி பிர்தௌஸ் சத்தார்

வாழ்த்துரை- “விழிகள் தேடும் விடியல் வழியே விந்தை காணப்புறப்பட்டுள்ள சாரா” தலைப்பில்nசிரேஷ்ட விரிவுரையாளர் FHA. (கவிஞர் நிந்தவூர்.) ஷிப்லி

வெளியீட்டு உரை – MN. அனாப் அஹமட்

முன்னுரை – கவிச்சாரல் சாரா

என்று ஒன்று சேரத் தொகுக்கப்பட்டது இந்நூல். ஒரு பெண்ணின் கஷ்டம் ஒரு பெண்ணுக்கு தான் புரியும் என்பார்கள். ஆனால் என்னை கேட்டால், உயிரான உண்மையான எழுத்தாளனால் மட்டுமே ஒவ்வொரு மனிதனின் மனநிலையையும் ஆத்மார்த்தமாய் ஊடுருவி புரிந்திட முடியும் என்பேன்.

தீப ஒளிக்கு வெளிச்சம் கொடுப்பது தீக்குச்சி மட்டுமல்ல அவ்வாறு என் கவிமகுடம் மேடையேற வித்திட்டவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் நானல்லவா. அந்த வகையில்
நூலை அச்சுப் பதிப்பு செய்தவர் அப்துர் ரஸாக் அவர்களுக்கும் அட்டைப்படத்தை துள்ளியமாக வடிவமைத்து தந்த கவிஞர் ஜவ்பர்தீன் ஜம்ஷீத் அவர்களுக்கும் என் விழா குறித்த செய்தியை பத்திரிகைக்கு அளித்த மருதமுனை நிருபர் PMMA. காதர் அவர்களுக்கும் அறுந்த வேலி தொகுப்பிற்கு சொந்தக்காரர் தோழர் கவிஞர் ஜெஸீல் அவர்களுக்கும் என் அறைத்தோழிகள் மூன்றாம் வருட தோழமைகளுக்கு குறிப்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

என் சரித்திர பக்கத்தின் முதல் படி முயற்சியோடு இன்னும் பயணிப்பேன் இன்ஷா அல்லாஹ்.

கவிச்சாரல் சாரா
புத்தளம்

ஆயுளில் ஒருமுறை நூல் வெளியிட்டவர்களும் உண்டு. மாதத்திற்கொரு முறை வெளியிடுபவர்களும் உண்டு. என்னுடைய இந்த முயற்சி ஒரு வருட காலம் நிறைவேறா ஆசையை நிறைவேற்றிட காலத்தோடு இட்ட போர். இதன் ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் என்னுடைய…

ஆயுளில் ஒருமுறை நூல் வெளியிட்டவர்களும் உண்டு. மாதத்திற்கொரு முறை வெளியிடுபவர்களும் உண்டு. என்னுடைய இந்த முயற்சி ஒரு வருட காலம் நிறைவேறா ஆசையை நிறைவேற்றிட காலத்தோடு இட்ட போர். இதன் ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் என்னுடைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *