குப்பை பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த மாவனல்லை மாணவன்
முழு நாடும் மீதொட்டமுல்ல குப்பை சரிவின் இழப்புக்களின் துயரில் தவித்த தருணத்தில் ஒரு இளம் உள்ளம் அத்துயர் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது என்பதற்கான தனது அறிவின் வெளிப்பாட்டை இயந்திரமாக வடிக்க தயாராகிக்கொண்டிருந்தது.
அதன் வெளிப்பாடு, மாவனல்லை ஸாஹிரா கல்லூரியில் தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் M.S.M. அம்ஹர் ‘Instant Garbage Shredding Machine’ எனும் கழிவுப் பொருட்களை நறுக்கும் இயந்திரமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
F 19/3, நாக்கூருகம, மாவனெல்ல என்ற முகவரியில் வசிக்கும் ஷகீர் ஹசன் – ஸீனத்துல் பாத்திமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அம்ஹரின் இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவில் தற்போது பரவலாக பேசப்படுகின்றது.
தந்தை வாங்கித் தந்த திருத்தல், பொறுத்தல் வேலைகளுக்கான உபகரணங்கள் மூலம் சதா தனது முயற்சிகளை மேற்கொண்டுவந்த அம்ஹருக்கு, மீதொட்டமுல்ல பேரிடர் தொடர்பாக பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலான தகவல்கள் பேரதிர்வை ஏற்படுத்தின.
ஏக காலத்தில், பாடசாலையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய புதிய கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டிய தேவை எழவே, கௌரவ அதிபர் ஜவாட் அவர்களின் வழிகாட்டலில் ‘Instant Garbage Shredding’ தொடர்பில் தனக்கிருக்கும் ஆர்வத்தை இயந்திரமாக வடிக்க ஆரம்பித்தார் அம்ஹர்.
தையல் இயந்திர தொழினுட்பத்திற்கு ஒப்பாக, ஒரு முறை அழுத்தி திருகினால் இந்த இயந்திரத்திற்குள் இடப்படும் குப்பைகள், நறுக்கப்பட்டு வெளியேறும். இதனை பசளையாக பயன்படுத்த முடியும் என்கின்றார் அம்ஹர்.
சுமார் 5 – 6 வீடுகளுக்கு ஒரு இயந்திரம் என்ற ரீதியில் இதனை பயன்படுத்த முடியுமாக இருக்கும் என்கின்றார். இவ்வியந்திரத்துக்காக அவருக்கு ரூபா. 1800 மட்டுமே செலவாகியதாம்.
தனது கண்டுபிடிப்பு வலயமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 80 கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த தொழிநுட்பமாக போற்றப்பட்டதுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுத்தந்ததுடன், நாடளாவிய ரீதியில் கடந்த 03/05/2017 அன்று இடம்பெற்ற ‘சகசக் நிமவும் – 2017’ எனும் புதிய கண்டுபிடிப்பாளர் போட்டியின் மாகாண மட்ட போட்டி நிகழ்ச்சியில் 300 கண்டுபிடிப்புக்களுடன் போட்டியிட்டது என்றார். அதன் பெறுபேறுகளுக்காக தற்சமயம் காத்துக்கொண்டிருக்கின்றார்.
தனது அடுத்த நகர்வாக, திண்மக் கழிவுகளை அகற்றும் ஒரு வாகனத்தின் அழவிற்கான இயந்திரமொன்றை தயாரிக்க முயற்சிக்கின்றார் அம்ஹர்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு அரசாங்கமே திணறிக்கொண்டு, கோடிகளில் தீர்வுகளை அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பு சமூகத்திற்கு பேருதவியானதும், தேசிய பங்களிப்பிற்கான அத்திவாரமாகவும் இருக்கின்றது எனலாம்.
பாடசாலைகளிலிருந்து உருவாகும் மாணவர்களிடமிருந்து ஒரு தேசம் எதை எதிர்பார்க்கின்றது என்கின்ற கடனை முழுமையாக தனது இளம் பருவத்திலேயே அம்ஹர் அடைத்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகின்றது. வெளிநாட்டு முதலீடுகளுக்காக ஏங்கி நிற்கும் அரசு, இவ்வாறான சிறு முயற்சிகளுக்கு ஊக்கமளித்து பாரிய சாதனையாளர்களை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும்.
தனது நன்றிகளை அதிபர் ஜவாட், வகுப்பாசிரியர் ரிஸ்வானா, ஆசிரியர் ஸம்னி, தனது பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் அன்புடன் கூறச் சொன்னார் அம்ஹர்.
நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் மாணவர்கள் எந்தளவு கரிசனை கொள்கின்றார்களோ, அந்தளவு அவர்களின் வெளியீடுகளும் பிரதிபலிக்கும் என்பதற்கு செல்வன் அம்ஹர் ஓர் உதாரணம்.
– அனஸ் அப்பாஸ் –