அசைபோடுதல்

  • 34

வரம்பு கட்டி விதை விதைச்சி
மாடு கொண்டு சூடடிச்சி
அறுவடைக்காகக் காத்து நின்னு
அள்ளி விதைச்ச அழகு நெல்லு
சுளகு கொண்டு புடைச்செடுத்து
சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து
ஆக்கித்தின்ற காலமெல்லாம்
காலமுள்ளில் காணாமலே போயிடுச்சி

வைரமணி ஓசையில்
வண்டி நெறுநெறுங்க
குடும்பமெல்லாம் ஒன்றுசேர்ந்து
கூட்டாஞ்சோறு கூடித்தின்ன
குளத்தோர குச்சிவீட்டுக்கு
குதூகலமாய் சென்று வந்தோம்

அன்புக்கும் பஞ்சமில்லை
ஆக்கினைகள் அதிகமில்லை
ஆடவர்கள் பெண்டிரென
ஆயிரம் பேர் கூடிநின்னு
ஆறு ஊருத் திருவிழாவை
ஆடிப்பாடி கொண்டாடினோம்

முற்றத்துப் பெருவெளியில
முழுநிலவின் பேரொளியில
ஒய்யாரமாய் உட்காந்து
ஓயாத பாட்டி பேச்சை
மணிக்கணக்கா கேட்டிருந்து
மடியுறக்கம் கொண்டிருந்தோம்

அடுப்பு மெழுகி
அத்தி விறகொடிச்சி
மச்சான் வரும் வரைக்கும்
வாளைமீனை வறுத்துவச்சி
வாழையிலை போட்டுவச்சி
வாசற்படியிலே வாஞ்சனையுடன்
வாடிநின்னே வாழ்ந்திருந்தோம்

பால்சொறியும் பசுவினிலே
தித்திக்கும் பால் கறந்து காச்செடுத்த பால் மணமும்
சுட்டுவச்ச கருவாட்டின்
சுண்டியிழுக்கும் வாசனையும்
வெட்டவெளியில போட்ட குட்டித்தூக்கமும்
கண்ணுக்குள் கலையாத
கனவாகக் கலந்திருக்கு

வாய்க்காலின் துறைகளிலே
மொய்த்திட்ட மீனையெல்லாம்
சேலையின் முந்தானையால்
நீரோட வாருனதும்
கிண்ணியில அரச்சுவச்ச
சந்தனத்த தேச்சு
ஓடையில் நீராடுனதும் நெஞ்சுக்குள்ள வந்து நிக்கும்
நினைவுகளா நிலைச்சிருக்கு

ஏரிக்கரை ஓரத்துல – வகிடெடுத்த வதனத்தோடு
குமரிப் பெண்களெல்லாம்
குடங்குடமாய் நீரெடுத்து
இடையசைச்சி நடையசைச்சி
ஒத்தையடிப் பாதையில
பவனி வந்த காட்சியெல்லாம்
காலத்தின் துளிகளிலே கரைஞ்சே போயிடுச்சி

சென்றொழிந்த காலங்களும்
மீண்டு வரப்போவதில்லை
நினைவுகளின் ஆக்கிரமிப்பில் விக்கித்த ஞாபகங்களாய்
அசைபோடும் பழமைகளில்
அலாதியான சுகமொன்று
அப்பிக் கொள்ளத்தான் செய்கிறது

நிலாக்கவி நதீரா முபீன்
புளிச்சாக்குளம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

வரம்பு கட்டி விதை விதைச்சி மாடு கொண்டு சூடடிச்சி அறுவடைக்காகக் காத்து நின்னு அள்ளி விதைச்ச அழகு நெல்லு சுளகு கொண்டு புடைச்செடுத்து சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து ஆக்கித்தின்ற காலமெல்லாம் காலமுள்ளில் காணாமலே போயிடுச்சி வைரமணி…

வரம்பு கட்டி விதை விதைச்சி மாடு கொண்டு சூடடிச்சி அறுவடைக்காகக் காத்து நின்னு அள்ளி விதைச்ச அழகு நெல்லு சுளகு கொண்டு புடைச்செடுத்து சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து ஆக்கித்தின்ற காலமெல்லாம் காலமுள்ளில் காணாமலே போயிடுச்சி வைரமணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *