பொறுமை பெண்ணுக்கு பெருமை!

  • 15

பெண்ணுக்கு நிகராக பூக்களை வர்ணிப்பது அவர்களின் மென்மையினாலே! மேன்மை தாங்கிய மென்மை இனமான பெண்ணினத்திற்கு அழகு சேர்பபது அவர்களின் பொறுமையே!!! பொறுமைக்கு பெண் உவமையாக கொள்ள காரணம் அவளின் தாய்மைப் பேறே!! தன் தாய்மை அடையும் போது தன் வயிற்றுச்சுமையை பத்து மாதமும் பக்குவமாய் சுமக்கிறாள். தாய்மைக்கு தலையசைப்பது இப் பொறுமையே!

ஆகவே பெண்கள் அணிகலனாய் அணியவேண்டியது பொறுமையையே. பொறுமை இல்லையேல் வாழ்வின் எத் தருணத்திலும் வெற்றியை சுவீகரித்துக் கொள்ள முடியாது. பொறுமை இல்லையேல் இவ்வுலகிலும் சரி மறுவுலகிலும் சரி வெறுமையாய் போவோம். ஏனெனில் மறுமையின் வெற்றி பொறுமையாளருக்கே!

இம்மகத்தான வெற்றியின் கூலி பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்;

“இறைவிசுவாசிகளுக்கு ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் (விளைச்சல்) போன்றவற்றின் நஷ்டங்களாலும், திண்ணமாக நாம் உங்களை சோதிப்போம் (இச்சோதனைகளில்) பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் (சொர்க்கத்தைக் கொண்டு) சுபச் செய்தி கூறுவீராக’ (2:155)

இவ் இறைவாக்கிலிருந்து பொறுமையே பேரின்பம் நிறைந்த சுவன வாழ்விற்கு மனிதனை தகுதியுடையதாக்குகின்றது என்பதை அறிய முடிகின்றது. எவ்வளவு கஷ்டம் நஷ்டம் வந்தாலும் மனமுடைந்து, துவண்டுவிடாமல் பொறுமையை கடைப்பிடிப்பவர்களுக்கு இறைவன் கூறும் நற்செய்தியே இது. பெண்ணின் இயலுமைக்கு ஏற்ப அவளின் இயல்பான குணமான பொறுமையால் அவள் சுவனத்துக்கே சொந்தக்காரி ஆகிவிட முடியும். ஆக பொறுமை கையாள வேண்டிய சந்தர்ப்பங்கிளில் சிலவற்றை பின்வருமாறு அடையாளப்படுத்த முடியும்.

  • அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்.

வாழ்க்கைப் பயணம் என்பது நேர்கோட்டுப் பாதையில் செல்லும் பயணம் அல்ல. ஆகவே இறைவன் மனிதனை நேர்வழியில் பயணிப்பதற்காக ஏவல்கள் மற்றும் விலக்கல்களை எடுத்துக்கூறி நல் வழிப்படுத்துகின்றான்.

அல்லாஹ்வின் கட்டளைகளை செயற்படுத்தும் போது பல கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும் .

  • வெற்றியை அடைய பொறுமையை கையாள வேண்டும்.

பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். நாம் விதையை விதைத்த அடுத்த நொடியே நமக்குப் பழங்கள் கிடைத்து விடுவதில்லை. ஒரு விதை மரமாகிப் பூ பூத்து அது காயாகி பின்னரே கனியாகிறது. இதற்கு பல மாதமோ, வருடங்களோ ஆகலாம். அதற்கு காத்திருப்பவனுக்குத்தான் கனிகள் கிடைக்கும்.

நம்முடைய இலக்கு எதுவோ அதை நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்ததும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடையக்கூடாது . பொறுமையுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

  • மனோ இச்சைக்கு இசைந்து போவதில் பொறுமையாக இருத்தல் வேண்டும்.

தற்காலிக இன்பம் கிடைக்கும் விடயத்தின் பால் எம் மனோ இச்சைகள் அழைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருந்தால் தான் தவறை விட்டும் ஒதுங்கி வாழ முடியும். மேலும் பெண்ணிற்கு ஆசையும், ஆடம்ரமும், பொறாமையும் இலகுவில் தொற்றும் நோய்களாகும் .ஆகவே மனதை ஒரு நிலைப்படுத்தி இவற்றுக்கு ஏற்ற மருந்தாக பொறுமை விளங்குகின்றது.

  • பிறருடன் பழகும்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் .

பெண் என்பவள் சமாத்தியம் பொருந்தியவள். அதனாலே சமுகத்தில் பல பாத்திரம் ஏற்கின்றாள். ஆகவே அவளது குடும்பம், நண்பர்கள் மற்றும் வேலை தளத்தில் பணி புரிவோர் என அனைவரிடமும் சேர்ந்து வாழ பக்குவம் பெற்றவளாய் திகழ வேண்டும். இதற்கு உதவுவது பொறுமையே!

எமது ஐந்து விரல்களில் ஒன்றுகூட மற்றொன்றைப் போல் இருப்பதில்லை. மனிதர்களும் அப்படித்தான் ஒவ்வொருவரும் ஒருவிதம். இதைப்புரிந்து கொண்டு பொறுமையுடன் ஒவ்வொருவரையும் அணுகினால் அனைவரும் நம் வெற்றிக்குத் துணை புரிவார்கள்.

அதுமாத்திரமின்றி இன்றய திருமணங்கள் விவாகரத்தில் முடிய பொறுமையின்மையே காரணமாய் அமைகின்றது. பொறுமையை கையாண்டால் குடும்ப உறவு உதிர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆக அவர்களது சிறுசிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் அவைகளைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும் .

  • சோதனைகள், இழப்புக்கள் என்பன ஏற்படும் போது பொறுமையை கையாள்தல்.

கழா கத்ரில் நம்பிக்கை கொண்டு எல்லாம் விதிப்படி நடந்தது என்று நம்பி இழப்புகளையும் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனிதர்களால் எமக்கு ஏற்படுத்தப்படும் இழப்புக்கள், கஷ்டங்கள் இவற்றுக்கு பழி தீர்க்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும். இவற்றை மன்னிப்பதே உயர்ந்த உள்ளத்திற்கான அடையாளமாகும். எனவே இவற்றுக்கு ஒரே கேடயம் பொறுமையே! அதன் மூலம் நம் வாழ்வை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்! ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) (103:1-3)

இவ்விறை வாக்கின் மூலம் இறைவன் உணர்த்துவது இறைநம்பிக்கையுடன் நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல் உபதேசம் செய்வது ஆகிய குணங்களே ஆகும்.

உலகின் அமைதிக்கான விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும் சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான். இதன் மூலவேராக பொறுமையே காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

பொறுமையான முயற்சியே வெற்றியின் அடிநாதம் என்பதை எல்லா சாதனையாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே வெற்றியின் கிறீடம் ஆணியும் பெண்கள் இம்மை மறுமை வெற்றி பெற பொறுமையை கடைப்பிடிப்போம்.

மருதமுனை நிஜா
ஹுதாயிய்யா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

 

பெண்ணுக்கு நிகராக பூக்களை வர்ணிப்பது அவர்களின் மென்மையினாலே! மேன்மை தாங்கிய மென்மை இனமான பெண்ணினத்திற்கு அழகு சேர்பபது அவர்களின் பொறுமையே!!! பொறுமைக்கு பெண் உவமையாக கொள்ள காரணம் அவளின் தாய்மைப் பேறே!! தன் தாய்மை…

பெண்ணுக்கு நிகராக பூக்களை வர்ணிப்பது அவர்களின் மென்மையினாலே! மேன்மை தாங்கிய மென்மை இனமான பெண்ணினத்திற்கு அழகு சேர்பபது அவர்களின் பொறுமையே!!! பொறுமைக்கு பெண் உவமையாக கொள்ள காரணம் அவளின் தாய்மைப் பேறே!! தன் தாய்மை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *