குரங்கு மனசு பாகம் 58

சர்மியின் கதறல் நாற்திக்கையும் நடுங்கவைக்க, அவளே உலகமென்று வாழும் அவன் கணவனால், ஒரு உயிரை ஐனனிக்க தன்னவள் கொண்ட அவஸ்தையை எப்படி நேரில் காண முடியுமாயிருக்கும்? அதை எங்கனம் தாக்குப் பிடிக்க முடியுமாயிருக்கும்?

“சேர் நீங்க உங்க வைப்கிட்ட போங்க, அவங்களுக்கு அது ஆறுதலா இருக்கும்.”

“எ.. என்.. என்னால முடியல்ல டாக்டர். எனக்கு என்னமோ நடக்கும் போல இருக்கு. என் வைய்ப் அ இந்த நிலைமையில சத்தியமா என்னால பார்க்க முடியாது. நா.. நான் வெளியவே நிக்குறன் டாக்டர்.”

அதீகின் நிலைமையினை ஊகிக்கும் விதமாக ஏதோ கழுவித் துடைக்கா முகம் போல் வியர்வையால் அவன் முகம் நனைந்திருந்தமையும், பிதற்றல் பேச்சும், கலங்கிய கண்களும், ஓரிடத்தில் நிற்க முடியா தடுமாற்றமும் அவ் வைத்தியரையே இறங்க வைத்திட்டு,

“ஓகே சேர், நீங்க வெளிய நில்லுங்க. எல்லாம் நல்லபடி நடக்கும்” அவனைத் தட்டிக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டாரவர்.

அந்தப் பொழுது நோயாளர்களால் அவ்விடம் அமைதியற்றுக் கிடந்தாலும், அனைத்தையும் விஞ்சிய சர்மியின் அலறல் சத்தம் கணவனுக்கு ஏதோ காய்ச்சலை உண்டு பண்ணி விடும் போல் இருந்தது. கையைப் பிசைந்தவனாக, இறைவனிடம் பிராத்தித்துக் கொண்டு அங்குமிங்குமாய் அழைந்து கொண்டிருந்தான்.

“அபி..” தாயின் நிலை கண்டு இவ்வளவு நேரமாக ஏதோ பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்த மகன், உம்மம்மியின் கைவிட்டு மெதுவாக தன் தந்தையிடம் வந்தான்.

சின்னவனின் முகத்தில் தென்பட்ட பயந்து போன நிலை, அதீகினை வருத்த மகனுக்காகத் தன்னை திடப்படுத்திக் கொண்டான்.

“என்னடா செல்லம்…”

“எனக்கு தங்கச்சி வேணாம் அபி, நான் இனி தங்கச்சி கேட்டு உம்மி கூட சண்ட புடிக்க மாட்டன் அபி. உம்மிக்கு வந்துட சொல்லுங்க அபி, உம்மி அழுகுறாங்க அபி”

மகனின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருக்க தந்தையிடம் விசும்பிக் கொண்டிருந்தவனை தூக்கி தோலில் சாய்த்துக் கொண்டான். என்றாலும்,

“உம்மி அழுகுறாங்க அபி” என்ற அவனின் முனக்கம் மட்டும் விட்டபாடிருக்கவில்லை.

அதற்குள் ராபியா அலைபேசி வாயிலாக தன் கணவர், உறவுக்காரர்கள், அயல் வீட்டினர், தெரிந்தறிந்தவர்கள் என அனைவருக்கும் சர்மியின் நிலையை எத்திவைக்க சிலர் முந்தியடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கே வந்திருந்தனர்.

நேரம் சிறிது கடக்க, மனைவியின் அலறல் ஓய்ந்து இன்னொரு அழுகைச் சத்தமாய் உலகம் பார்க்க வந்த தன் அடுத்த மழலையின் முதல் அழுகை சத்தத்தை வாங்கிக் கொண்டான் அதீக். அவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ஓடிச் சென்று தம்மூலமாய் வந்த இளையவளை பார்க்கத் துடித்தான். ஆயினும் உடனடியாக உள்ளே செல்ல முடியாக் காரணத்தால், அதற்குள் ஆழ்ந்து தூங்கியிருந்த மகனை மாமியாரின் கையில் ஒப்படைத்து விட்டு கதவோரமாய் நின்று காத்திருந்தான்.

தன் அடுத்த செல்வமும், அச் செல்வத்தை பெற்றெடுக்க தன்னவள் கொண்ட பிரயத்தனமும் அதீக் உள்ளத்தில் தாய்மையின் மகோன்னதத்தை தெளிவுபடுத்த, தன் தாயின் நினைவு இலேசாக வந்து போனது. தன்னை பெற்றெடுக்க தன் தாய்… “நோ” அவனால் அந்த நிலையை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க, அதனை அப்போ நினைக்கவும் முடியாத் தடையாக சர்மி கிடந்த அறைக்கதவு திறக்கப் பட்டது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: