காதல்கள்

சில காதல்கள்
தொற்றுக் காய்ச்சல் போன்றவை
முதலில் ஒரு தும்மல்
பின் உடல் முழுக்க வலி
அகமும் புறமும் எரியும் சூடு
கெட்ட கனவுகளின் ஒரு வாரத்துக்குப்
பிறகு அது அடங்குகிறது
நாம் இப்போது மறதியின் நிம்மதியுடனிருக்கிறோம்.

சில காதல்கள்
அம்மை நோய் போன்றவை
பொங்குவது கட்டியா, குளிரா
என்பதறியாமல் நாம் பதற்றமடைகிறோம்
காதல் தாபத்தில் உடல்
சுட்டு, பழுத்து, சிவக்கிறது
நாம் இதைக் கடந்து வாழ்ந்து விடலாம்
ஆனால் வடுக்கள் எஞ்சுகின்றன
ஆயுள் முழுக்க அந்த நினைவுகளை
நாம் உடலில் சுமக்கிறோம்.

சில காதல்கள்
புற்றுநோய் போன்றவை
முதலில் நாம் அதை அறிவதே இல்லை
வலி அறியத் தொடங்குவதற்குள்
காலம் கடந்திருக்கும்
அவள் இன்னொருவனுடையவள் ஆகியிருப்பாள்
தேவையின்றி வளர்ந்த
அந்த காதல் கட்டிக்கான மருந்துகள்
நம்மை மெலிந்த மன்மதர்களாக்கி விடும்
அலட்சியமாக இருந்து விட்டால்
கத்தி தேவைப்படும்
பின் ஓர் உறுப்பு இழந்தவர்களைப் போல
நாம் இறந்து வாழ்கிறோம்
பிறகும் அது வளர்கையில்
ஒரு மரக்கிளையிலிருந்தோ நதியிலிருந்தோ
உயரமான மேல் மாடத்திலிருந்தோ
சிறு போத்தலுக்குள்ளிருந்தோ
கருணை நிறைந்த மரணம்
நம்மை உசுப்பேற்றி அழைக்கிறது
காதல் நம்மைக் கடந்து வாழ்கிறது.

சில காதல்கள்
பைத்தியம் போன்றவை
நாம் இருப்பது முழுக்க ஒரு கற்பனை உலகத்தில்
அடுத்தவர் அதை அறிவது கூட இல்லை
நாம் முணுமுணுக்கிறோம் பாடுகிறோம்
தனியாய் சிரிக்கிறோம் கலகம் செய்கிறோம்
அலைந்து திரிகிறோம்
சங்கிலிகளாலோ மின் அதிர்ச்சிகளாலோ
அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை
ஏனென்றால், அது ஒரு நோயே அல்ல,
ஒரு கனவு நிலை
அதனால் அது
நட்சத்திரங்களுக்கிடையே வாழ்கிறது.

ஒருபோதும் அடைய வாய்ப்பில்லாத
காதல் தான் மிகவும் வசீகரமான காதல்
அது முடிவதேயில்லை,
ராதையின் காதல் போல!

மலையாள மூலம் : கே.சச்சிதானந்தன்
தமிழில் : ஷிரீபதி பத்மநாபா

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: