பெண்ணே விழித்தெழு

அடுப்பங்கரையிற்கு அடிமைப்பட்டு
திறமைகளையெல்லாம்
மூட்டைக்கட்டி
முந்தானை முடிச்சுக்குள்
முடிந்து வைத்துள்ள பெண்ணே!
முதலில் நீ விழித்தெழு!

பெண்ணென்று பெயர் பெற்று
பூமியில் நீ பிறந்து விட்டால்
பிள்ளைகள் வளர்ப்பதுதான்
உன் பணியென்று நினைத்தாயா?

இல்லை
கணவனவன் வீடுதான்
உன்னுலகென்று நினைத்தாயா?
கணவனுக்கு கட்டுப்படு
கட்டாயக் கடமையது.
பிள்ளைகளை வளர்த்துவிடு
இறைவனின் கட்டளையது.

இவற்றிற்கு மேலதிகமாய்
இருக்கிறது பணியுனக்கு.
இதையறியாத நீயும்தான்
இன்னுமறியாமலே
இருப்பதெதற்கு?

அந்நிய ஆண்களிடம் அறிவைதேட
பிள்ளைகளை அனுப்பும்
பெற்றோரின் மனம்சிரிக்க
ஆசானாக விழித்தெழு!

இல்லை
பிரசவ வேதனையால்
துடிக்கும் பெண்ணிற்கு
அந்நிய ஆடவன் கைபட்டால்
என்னாகுமோ என்று
நினைப்பதற்கு முடியாதபடி
ஒரு மருத்துவராக விழித்தெழு!

அண்ணலவர் அழகு மனைவி ஆயிஷாவும்
கன்னத்தில் கைவைக்குமளவு
ஒரு கவிஞர் தான்.
உஹதுப்போரில் தன் மக்களையிழந்த
அம்மாராவும் தீனோங்க
முன்வந்த ஒரு போராளிதான்.

இஸ்லாமிய தீன்வளர பாடுபட்ட
இல்லத்து அரசிகளின்
இதிகாசங்களை நீ அறிவாயா
அதற்காக முன்வந்து
நீயும் கொஞ்சம் உழைப்பாயா

போர்க்களம் இறங்குவது
மட்டும்தான் ஜிஹாதல்ல.
போரிட்டு வெல்வது
மட்டும்தான் ஜிஹாதல்ல.

அறிவற்ற அனாதைகளாக
தத்தளிக்கும் குழந்தைகளுக்கு
அழகாகவும் தெளிவாகவும்
சொல்லிக்கொடு அறிவை.
அதுவும் ஒரு ஜிஹாதே

புறத்துக்காக செலவு செய்யும்
உன்நாவை கொஞ்சம்
பிரச்சாரத்திற்காக பயன்படுத்து
அதுவும் ஒருவகை ஜிஹாதே

உனக்கான உரிமைகளை
இறைவன் கூறியிருக்க
ஊரார் வாயிக்கு பயந்து
இன்னும் ஏன் இருக்கின்றாய்?
உன்னுரிமைகளை உதறிவிட்டு
உன்னையே நீ ஒழிக்கின்றாய்.

இல்லை,
நீ அறியாமை உறக்கத்தில்
ஆழ்ந்துறங்கி இருப்பதை
மார்க்கமும் விரும்பவில்லை.

விழித்தெழு…
இன்றே விழித்தெழு…
அறியாமை உறக்கத்தை விட்டு
மார்க்கத்தின் வரம்புகளை பேணி
மார்க்கத்துக்கும் சமூகத்துக்குமான
உன் பணியை
இன்றே தொடங்கிட
பெண்ணே நீ விழித்தெழு!
பெண்ணே விழித்தெழு!

Rustha salam
SEUSL

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: