நான் புரிந்து கொண்ட நபிகள்!

  • 32

“நான் புரிந்து கொண்ட நபிகள்!” இந்த தலைப்பே அளப்பரிய ஆற்றலுடன் ஈர்க்கும் தன்மை கொண்டது. ‘புரிந்து கொண்ட’ என்பதன் மூலமாக ஒரு வரலாற்று நாயகரை பன்முகப்பட்ட கோணங்களில் அணுகலாம் என்பது வெறுமனே ஒரு ஆய்வுக் கண்ணோட்ட ரீதியான ஒரு விடயம் மட்டுமே அல்ல. மாறாக குறித்த ஆளுமையை எமது கால சூழலுக்கு ஏற்ப பல்வேறு மட்டங்களில் பொருத்தியும் பார்க்கலாம் என்பது தான் இதன் அர்த்தம்.

நபிகளாரின் வரலாற்றுப் பாத்திரத்தை பொறுத்தவரையில் ஒரு தீர்க்க தரிசி; இறையியலாளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் பால் தீராத கரிசனை கொண்டவர்; அரசுத் தலைவர்; பல மனைவியுடன் வாழ்ந்து குடும்ப வாழ்க்கையின் ஊடுபாவுகளுக்குள் சஞ்சரித்த எளிய மனிதர் என்று பலவாறு அதனை தொகுத்துக் கொள்ளலாம்.

இந்த ஒவ்வொரு பாத்திரத்தினதும் வழிகாட்டல்கள் நபிகளாரின் காலத்தில் இருந்து வழிந்து நமது நிகழ்காலத்தையும் ஊடுருவி வருவது தான் அதன் சிறப்பம்சம்.

இந்த சிறப்பம்சத்துக்கான காரணம் நபிகளாரின் வாழ்க்கை சரிதையின் மூலாதாரத் தன்மை. புத்தரினதும், ஏசுவினதும் வாழ்க்கை வரலாற்றுடன் ஒப்பிட இது தெளிவான ஒளிக்கற்றைகள் போல ஒரு அம்சம். ஏனைய இறைவாக்கினர், வரலாற்றுப் பாத்திரங்களை பொறுத்தவரையில் அவர்கள் மூலப் போதனைகளே திரிபுபடுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நபிகளாரின் தலைமுடியிலும், தாடியிலும் உள்ள நரைத்த முடியின் எண்ணிக்கை கூட தெளிவாக பதியப்பட்டுள்ள நபிகளாரின் வாழ்க்கை சரிதையின் மூலாதாரத் தன்மையின் துல்லியத்தை சுட்டிக் காட்டிட போதுமானது.

புத்தரையே உதாரணமாக எடுத்துக் கொண்டால் பெளத்தர்கள் பயிலும் வரலாற்றுக்கு மறுதலையானது ஆய்வாளர்கள் கூறும் புத்த வரலாறு.

பெளத்த ‘அதிகார பூர்வ’ வரலாற்றின் படி புத்தர் கெளத்தம சித்தார்தராக ஒரு அரச குல மைந்தன். சீரும் சிறப்புமாக வாழ்ந்த இளவரசரன். வயது முதிர்ந்தவர் – நோய்மை – மரணம் மூன்றையும் காண நேரிட்ட இளவரசர் சித்தார்த்தன் துறவு பூண்டு, ஞானம் பெற்று புத்தரானார் என்பதே இன்று பெளத்தர்கள் கூறும் வரலாறு.

ஆனால் இதற்கு மாறாக – மைக்கேல் கேரிதர்ஸ், டேமியேன் கியோவ்ன் போன்ற – ஆய்வாளர்கள் கூறும் வரலாற்றை பொறுத்தவரையில் புத்தர் ஒரு இளவரசர் அல்ல. புத்தரின் காலத்தில், அவருடைய பிராந்தியத்தில் இனக் குழு அமைப்பே காணப்பட்டது. மன்னராட்சி என்பது உருவாகி இருக்கவில்லை. தவிர புத்தர் தனது சொந்த இனக்குழுவான சாக்கிய குலத்தின் ஒரு முடிவை எதிர்த்து நின்றதால் தான் தனது குடும்பத்தினரை விட்டு தனியே பிரிந்து செல்ல நேரிட்டது.

சாக்கிய குலத்திற்கும், இன்னொரு இனக் குழுவினருக்கும் இடையே நதிநீர் பங்கீடு பிரச்சினை இருந்தது. சாக்கிய குலம் பிரச்சனையை தீர்க்க யுத்தத்தை நாடியது. புத்தர் இந்த முடிவை எதிர்த்து நின்றார்.

சாக்கியர் மரபில் இனக் குழு முடிவை எதிர்த்து நிற்பவர் ஒன்றில் சமூகத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும். அன்றில், உயிரை துறக்க வேண்டும். முன்னதை தேர்ந்து கொண்டார் புத்தர். இதுதான் புத்தர் துறவு பூண்ட வரலாறு. அதாவது வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் வரலாறு.

ஆனால் நபிகளாரின் வாழ்வை பொறுத்தவரையில் நம்பிக்கையாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் முன்னுதாரணமாக கொள்ளும், ஆய்வுக்காக பயிலும் வரலாறும் இரண்டும் ஒன்றுதான். அதில் எந்த பிரிவினையும் இல்லை. அ. மார்க்ஸ் இதனை நூலின் ஒரிடத்தில் கூறிச் செல்கிறார். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை சரிதை அ. மார்க்ஸை கவர்ந்ததற்கு பிரதானமாக இந்த மூலாதாரத் தன்மையின் நம்பகத்தன்மை ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

‘புரிந்து கொண்ட’ என்பதன் மூலமாக நபிகளாரை எப்படி வேண்டுமானாலும் பொருள் கோடல்கள் செய்யலாம் எனும் ஆபத்து இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. உதாரணமாக மாச்சரியம் மிக்க சில மேலைத்தேய ஆய்வாளர்கள் நபிகளாரினை ஒரு பெண் பித்தனாக உண்மைக்கு புறம்பான முறையில் சித்தரிக்க முனைவது.

இந்த ஆபத்தை ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை அதன் கால, இட, சூழல் பரிமாணங்கள் எனும் Context இல் பொருத்திப் பார்ப்பதன் மூலமாக கடக்கலாம். மார்க்சிய ஆய்வுக் கருவிகளை பயன்படுத்தி அ. மார்க்ஸ் இதைத்தான் இந்த நூலில் செய்து இருக்கிறார்.

குறிப்பாக நபிகளாரின் பலதார மணத்தை பொறுத்தவரையில் அதன் சமூக, அரசியல் பின்னணி தெளிவாக – நான் புரிந்து கொண்ட நபிகளில் – எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ரத்த உறவுகளை மேலாக மதிக்கும் கோத்திர வாழ்வமைப்பில் நபிகளாரின் திருமண உறவுகள் புதிதாக உருவாகி வரும் சமூக அமைப்புக்கு எவ்வளவு பலத்தை தரும் என்பது இதன் மூலமாக தெளிவாகிறது.

மதங்களின் இன்றைய பரிமாணங்களை பொறுத்தவரையில் அதற்கு உள்ள விமர்சனங்கள் பலதரப்பட்டவை. ஆனால் எல்லா மதங்களும் அதன் உருவாக்க காலத்தில் நிலவும் சமூக அமைப்புக்கு எதிராக ஒரு கலகமாகவே வெளிப்பட்டன என்பதே உண்மை.

இஸ்லாத்தை பொறுத்தவரையில் இந்த கலகத் தன்மை நான் புரிந்து கொண்ட நபிகளில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மக்கா சமூக அமைப்பின் அடித்தளத்தை நபிகளாரின் தூது எப்படி ஆழ்ந்து உலுக்கியெடுத்தது என்பதை ஒரு மனித உரிமை போராளியை விட வேறொருவர் இவ்வளவு சிறப்பாக கூறிட முடியுமா என்கிற ஐயம் எழுவதே நான் புரிந்து கொண்ட நபிகள் நூலின் சிறப்பம்சம். இஸ்லாம் ஒரு விடுதலை இறையியல் என்று நம்புபவர்களுக்கு அ. மார்க்ஸிடம் சில செய்திகள் உண்டு என்பதை நான் புரிந்து கொண்ட நபிகள் முன் வைக்கிறது.

ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் வாசித்த புத்தகம் தான் நான் புரிந்து கொண்ட நபிகள். பிரதி என் கைவசம் இல்லை. நினைவில் இருந்தே இவற்றை எல்லாம் பதிகிறேன். நூலை வாசிக்கும் பொழுது ஓரிரண்டு தகவல் பிழைகள் இருந்தாக ஞாபகம். நூல் கையில் இருந்தால் அதனையும் பக்க விபரத்துடன் சுட்டி இருக்கலாம். நபிகளாரின் உயர்ந்த மானிடப் பண்புகள் எவ்வளவு கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை, அது எப்படியான சமூக புரட்சிக்கு வழிகோலி மானுட குல வரலாறு அதுவரை காணாத தன்னிகரற்ற நாகரீக அணிவகுப்பை தொடங்கி வைத்தது என்பதை புரிந்து நான் புரிந்து கொண்ட நபிகள் நூலை தாராளமாக பரிந்துரை செய்யலாம்.!

Lafees
வியூகம் வெளியீட்டு மையம்

“நான் புரிந்து கொண்ட நபிகள்!” இந்த தலைப்பே அளப்பரிய ஆற்றலுடன் ஈர்க்கும் தன்மை கொண்டது. ‘புரிந்து கொண்ட’ என்பதன் மூலமாக ஒரு வரலாற்று நாயகரை பன்முகப்பட்ட கோணங்களில் அணுகலாம் என்பது வெறுமனே ஒரு ஆய்வுக்…

“நான் புரிந்து கொண்ட நபிகள்!” இந்த தலைப்பே அளப்பரிய ஆற்றலுடன் ஈர்க்கும் தன்மை கொண்டது. ‘புரிந்து கொண்ட’ என்பதன் மூலமாக ஒரு வரலாற்று நாயகரை பன்முகப்பட்ட கோணங்களில் அணுகலாம் என்பது வெறுமனே ஒரு ஆய்வுக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *