அனைவரும் சற்று ஓய்வாக இருக்கும் இந் நாட்களில்….!

  • 8

இரண்டு தினங்களுக்கு முன்னர் மாதத்திற்கு ஒருமுறை வழமையாக ஹதியா கேட்டு வரும் அந்த சகோதரி வந்தார். அவர் அருகில் போனதும் “நாளைக்கு எங்கட town ஐ மூட போராங்களாம். அதான் பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிட்டுப்போக பாத்திட்டுபோக வந்தேன்.” என்று சொன்னார் அந்த சகோதரி.

“பாத்திட்டுபோக வந்தேன் ” என்று சொல்வது ஹதியா கேட்டு போவதையே குறிக்கும். இப்படி எத்தனையோ குடும்பங்கள் ஒருவேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன என்பதை எத்தனை பேர்தான் மனதால் உணர்கின்றனர்?

அகோர வெயிலிலும் ஒவ்வொரு வீடாக அலைந்து பணம் சேகரித்து தமக்கு உணவு வாங்கிக்கொண்டு வரும் அந்த தாயை எதிர்பார்த்து வீட்டிலே காத்திருக்கும் அந்த குழந்தைகளை மனதால் நினைத்துப் பார்த்தவர்கள்தான் எம்மவர்களில் எத்தனை பேர்தான்?

நாட்டின் தற்போதைய நிலையினால் தமக்கான உணவுகளை முன்கூட்டியே சேகரித்துக் கொண்டவர்களே! நாம் எத்தனை நாளுக்கான உணவுகளை சேகரித்துக் கொண்டோம்..?

இறைவன் இந்த கடுமையான நிலையை எம்மை விட்டும் அகற்றிவிடுவானாக என்று பிரார்த்தித்தவளாக… எமது நாட்டினதும், உலக நாடுகளினதும் இந் நிலமை நீடிக்குமாக இருந்தால்! நாம் சேகரித்துக் கொண்டவையும் தீர்ந்து, அரச கஜானாவில் உள்ளவையும் தீர்ந்து போகும் நிலமையும் வருமானால் எம் நிலை எத்தகையது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கையிலே கட்டுக் கட்டாக எத்தனை கோடிகள் புரண்டாலும் பயன் தருமா? காலம் காலமாக சேர்ந்து வைத்த சொத்துக்கள் தான் கையுதவுமா?

இப்போது ஞாபகப்படுத்துங்கள் சேற்றிலே காலூன்றி நிற்கும் அந்த விவசாயிகளையும், அவர்கள் குடும்பங்களையும், உங்களுக்கு கீழே வேலை செய்து உங்கள் ஏச்சுப் பேச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொண்டு தன் குடும்பத்தின் ஒரு வேளை உணவுக்காக உழைப்பவர்களையும்.

உலகத்தில் தனது பரம்பரைக்காக சொத்து செல்வங்களை சேமித்து வைத்தவர்களை கேள்வியுற்றிருக்கின்றோம். ஆனால் அவற்றில் உணவை சேமித்து வைத்தவர்கள் எவரும் கிடையாது. பேராசைக்காரனான மனிதன் உணவை மட்டும்தான் தனக்கு வயிறு நிரம்பி விட்டது போதும் என்று நிறுத்த கோரியிருப்பான்.

அன்பின் உறவுகளே எப்போதும் எம்மையும், எம்மை சூழவுள்ள எமது உறவுகளும் மாத்திரம் என்று எமது சிந்தனைகளை சுருக்கிக் கொள்வதனை விடுத்து எமக்கு கீழ் உள்ளவர்களையும் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்குவோம். பிறர் நலன் கொண்டால் இறைவன் நம் நலன் காத்திடுவான்.

இன்று முழு உலகமும் வெற்றுக் கண்களுக்கு புலப்படாத ஓர் அற்ப virus ன் கீழ் சரணடைகின்றது. உலகத்தையே ஆட்டிப் படைத்த வல்லரசுகளும் அவர்களது நவீன தொழில் நுட்பங்களும் எங்கே போனது.?? இனம், மதம், குழ பேதம், சாதி என்று தம்மை உயர்த்தி சவால் விட்டு மற்றவனை ஒடுக்கிய அந்த கூட்டம் ஏன் இந்த அற்ப virus ன் முன்னாள் ஓடி ஒலிக்கிறது?

இப்போதாவது உணருமா இந்த உலகம்..? இந்த மண்ணில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இனியும் இல்லை என்று.!

முழு உலகமும் தனது மக்கள் தொகையின் ஒருசாராரின் மூலதனத்துடனும், இன்னும் ஒருசாராரின் உழைப்பினாலுமே இயங்குகின்றது. உலகம் ஸ்தம்பிதமில்லாமல் சீராக சுழலுவதற்கு மனித குலம் இனம், மதம், சாதி, நிறம், மொழி பேதமின்றி இணைந்தால் மாத்திரமே முடியும்.

இங்கு பணத்தால் சிறந்தவர் என்றோ, கோத்திரத்தால் சிறந்தவர் என்றோ, இல்லை தான் பெற்ற கல்வியால், தொழிலாள் சிறந்தவர் உயர்ந்தவர் என்ற பேதங்களுக்கு இடம் கொடுக்கத் தேவையில்லை.

அனைவரும் எமக்கு தேவையுடையவர்களே, ஒருவர் சேவையில் இன்னொருவர் நிச்சயமாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்கித்தான் வாழ்கின்றார். ஆகையால் மனம் இறங்கி மற்றவர்களையும் எம்மைப்போன்ற உணர்வுள்ள உறவுகளாக மதிக்க கற்றிடுவோம்.

வீட்டு வாசட்படி வந்து கையேந்தி நிற்கும் உறவுகளை சீ என்று மனதால் திட்டாமல் இறைவன் எமக்கு தந்ததில் அவர்களுக்கும் பங்குண்டு என நினைத்து மனதார கொடுங்கள். எப்போதும் வருபவர்கள், போகிறவர்கள் தானே என்று அவர்களை தரக்குறைவாக மதிப்பிடாமல் அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய முயற்சியங்கள்.

இந்த தேசத்தில் பசியின் கொடுமையால் ஓர் உயிர்தான் பிரிந்து சென்றாலும் நாளை மறுமையில் அதற்காக நாம் இறைவனிடத்தில் விசாரிக்கப்பட மாட்டோம் என்பதற்கு என்ன நிச்சயமிருக்கிறது..??

அல்லாஹ் “அர்-ரஸ்ஸாக்” அவனே படைப்பினங்களுக்கு உணவளித்து போசிப்பவன். அவன் கஜானா என்றும் நிரம்பியே வழிகிறது. கேட்பவர்களுக்கு வாரிவழங்குபவன். எனவே உங்களிடம் இருப்பவைகளை இல்லாத உறவுகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். உங்களுக்கு தேவையானபோது இறைவன் அதனை திருப்பி கொடுப்பதற்கு தகுதியுடையவன்.

Azzamarzy

இரண்டு தினங்களுக்கு முன்னர் மாதத்திற்கு ஒருமுறை வழமையாக ஹதியா கேட்டு வரும் அந்த சகோதரி வந்தார். அவர் அருகில் போனதும் “நாளைக்கு எங்கட town ஐ மூட போராங்களாம். அதான் பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது…

இரண்டு தினங்களுக்கு முன்னர் மாதத்திற்கு ஒருமுறை வழமையாக ஹதியா கேட்டு வரும் அந்த சகோதரி வந்தார். அவர் அருகில் போனதும் “நாளைக்கு எங்கட town ஐ மூட போராங்களாம். அதான் பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *