Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா? நூல் தொடர்பான சில அவதானங்களும் விமர்சனங்களும் 

அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா? நூல் தொடர்பான சில அவதானங்களும் விமர்சனங்களும்

  • 23

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கடந்த ஏப்ரல் 21 நிகழ்வு இலங்கையில் ஏற்படுத்திய அசாதாரண நிலை இலங்கை முஸ்லிம்களின் இருப்பிற்கே சவாலாக மாறியது. முஸ்லிம் சமூகத்தின் மீது தொடரான குற்றச்சாட்டுகளும், கேள்விகளும் வந்து குவிந்தன. அவற்றில் பிரதானமானதொரு குற்றச்சாட்டே அல்குர்ஆனிய வசனங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் வன்முறையை தூண்டுகிறது என்பதாகும். காலம் வேண்டி நிற்கும் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக மிகக் குறுகிய கால எல்லைக்குள் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர் நளீமி அவர்களினால் அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா? எனும் தலைப்பில் ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்நூல் மிஷ்காத் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நூல் மீதான சில விமர்சன ரீதியிலான அவதானங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா எனும் நூலின் மீதான ஒரு பொதுப் பார்வையை செலுத்தினால், அல்குர்ஆன் போரை நிபந்தனைகளின் அடிப்படையில் விதிவிலக்காக மேற்கொள்ளப்பட்ட செயலாகவே அறிவித்துள்ளது. மாறாக அதனை ஒரு புனிதப் போராக (Holy War) கருதவில்லை. உயிர்களின் அழிவிற்கும், உலக வளங்களின் அழிவிற்கும் காரணமான போரைத் தவிர்த்து சமாதானத்தை ஏற்படுத்துவதே அல்குர்ஆனின் பிரதான இலக்கென நூலின் வாசிப்பிற்கூடாக எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இந்நூலின் உள்ளடக்கமானது; கையாளப்பட்டுள்ள ஆய்வு முறைமை தொடர்பான அடிப்படை விளக்கத்தையும், போர் பற்றிய அல்குர்ஆனிய பார்வையை சுருக்கமாகவும், போர் தொடர்பாக பிழையாக புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களுக்கான விளக்கங்களை, இறுதியில் போரை தூண்டும் வசனங்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதற்கான காரணங்கள் தொடர்பாகவும் ஆராய்கிறது.

ஒரு நூலினைப் புரிந்துகொள்வதற்கு குறித்த நூலின் ஆய்வு முறைமை தொடர்பாக அறிந்திருப்பது அவசியமாகிறது. அந்தவகையில் அல்குர்ஆன் ஆராயப்பட வேண்டிய முறைமைகள் பற்றி இந் நூலானது எடுத்துரைக்கிறது. முதலாவதாக; அல்குர்ஆன் ஆனது التفسير الموضعي முறையில் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாறாக அல்குர்ஆனின் தலைப்புகளின் கீழ் மாத்திரம் நின்று ஆராய்வது பயனைத் தராது. அதாவது அல்குர்ஆனில் குறித்த ஒரு விடயம் தொடர்பான கருத்துக்கள் பல இடங்களில் பரவிக் காணப்படும். அவற்றை ஒன்றாகத் திரட்டி முழு மொத்தமாக (Holistic) நோக்கவேண்டும். இந்நூலின் மூன்றாம் பகுதி இம்முறையிலேயே முழு மொத்த வசனங்களையும் ஒன்றுதிரட்டி போர் தொடர்பான அல்குர்ஆனிய நிலைப்பாடு யாது என்பதை கண்டறிகிறது.

இரண்டாவதாக, அல்குர்ஆனிய வசனங்களை அது இறங்கிய சூழலமைவிற்கேற்ப (Context) அணுக வேண்டும். கலாநிதி யூசுப் அல் கர்ளாவி موجبات تغير الفتوى في عصرنا என்ற நூலில் تغير الزمان، تغير المكان போன்ற சில தலைப்புகளில் அல்குர்ஆனையோ, சுன்னாவையோ அணுகமுன் அவை கொண்டிருந்த சூழலை அவதானிப்பது அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். போர் தொடர்பான வசனங்கள் இறங்கிய பின்னணியை நூலின் மூன்றாம் பகுதி இவ் ஆய்வுமுறைக் கூடாகவே முன்வைக்கிறது.

அடுத்து இந்நூலின் இரண்டாம் பகுதியில்; மனிதன், கருத்துச் சுதந்திரமும் தெரிவுச் சுதந்திரமும், அறிவுப்பூர்வ அணுகுமுறை ஆகிய மூன்று விடயங்களை கருத்திற் கொண்டே போர் தொடர்பான அல்குர்ஆனிய நிலையை நோக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். குறித்ததொரு விடயத்தினை ஆராயும் போது அதனோடு தொடர்புபடும் விடயங்களையும் சேர்த்தே ஆராயவேண்டும். உதாரணமாக ஆன்மீக வாழ்வை எடுத்துக் கொண்டால், அதனை மாத்திரம் வைத்து நோக்காது அவற்றோடு இணைத்து சமூக வாழ்வு, ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பாகவும் நோக்குவது முழுமையான பார்வையைத் தரும். மேலும் ‘ஜிஹாத்’ என்பது ஆயுதப்போராட்டத்துடன் மாத்திரம் சுருங்கி விடக்கூடியது அல்ல. மாறாக உளத்தூய்மைக்கான முயற்சிகள், அறிவு பெறுதலும் சீர்படுத்தலுக்குமான முயற்சிகள், சமூக சீர்திருத்தங்கள் தொடர்பான முயற்சிகள் இவை யாவுமே ஜிஹாத் என்ற வரையறைக்குள் தான் அடங்கும். ஆயுதப் போராட்டம் என்பது அதன் சிறு பகுதியேயாகும்.

இப்பின்னணியில் யுத்தம் மற்றும் சமாதானம் பற்றிய அல்குர்ஆனிய பார்வையை முன்வைக்கிறார். தற்காப்பு மற்றும் அநீதி போன்ற காரணங்களினால் அல்குர்ஆன் போரை அனுமதித்தது என்பதை அடுத்து, அல்குர்ஆனின் இலக்கு போர்கள், வன்முறைகள் அற்ற சமாதான உலகை உருவாக்குவதாகும் என்ற கருத்தை குறிப்பாக இமாம் தாஹிர் இப்னு ஆஷூர் அவர்களின் தப்ஸீரை மையமாகக் கொண்டு எடுத்துரைக்கிறார். இது தொடர்பாக நாம் கருதுவது யாதெனில் يأيها الذين ءامنوا ادخلو في السلم كافة”  البقرة :٢٠٨  ” என்ற வசனத்தில் ” السلم என்ற சொல் சமாதானத்தை குறிக்கிறது என்பதே பொருத்தமானதாகும்.” என்ற கூற்றானது தப்ஸீர் ஆசிரியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இவ்வசனம் யஹூதிகள்( அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தில் நுழைந்த நிகழ்வுடன் தொடர்புபட்டு வருவதனாலும், كافة என்ற சொற்பிரயோகம் இஸ்லாத்திற்குள் நுழைந்த யஹூதிகள் இஸ்லாத்தில் உள்ள சிலவற்றை விடுத்து சிலவற்றை நம்பிக்கை கொண்டிருந்ததால் பூரணமான முறையில் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்ளுமாறு அல்லாஹ் அழைப்பு விடுத்து கூறியமையாகும் என சில தப்ஸீர் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உதாரணமாக التفسير المنير، في ظلال القرآن ஆகியவற்றை குறிப்பிட முடியும். எனவேதான் السلم என்ற சொற்பிரயோகத்திற்கு சமாதானம் என்ற பொருள் கொடுப்பது பொருத்தமா? இல்லையா? என்பது மீளாய்விற்கு உட்படுத்தப்படவேண்டியதாகும்.

அடுத்து இந்நூலின் மூன்றாம் பகுதியில், பிழையாக புரிந்து கொள்ளப்பட்ட அல்குர்ஆனிய வசனங்களுக்கான விளக்கங்களை மிகவும் அறிவார்ந்த முறையில், வரலாற்று ஆதாரங்களுடன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். குறித்த வசனங்கள் யாவுமே பொதுமைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல. அதாவது எல்லா காலங்களுக்கும், எல்லா மக்கள் மீதும் பிரயோகிக்கப்பட வேண்டிய வசனங்கள் அல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். அனைத்து வசனங்களுக்குமான விளக்கவுரைகளை அவதானிக்கும் போது இறுதியாக பின்வரும் முடிவுக்கு வரமுடியும்; அல்குர்ஆன் அனுமதித்தது வரலாற்றில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அநீதிகள், பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல்கள் போன்றவற்றை தடுக்கும் வகையில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஓர் தற்காப்பு யுக்தியாகவே போர் அனுமதிக்கப்பட்டது. அதிலும்கூட போரின் போது கடைபிடிக்கப்படவேண்டிய பல ஒழுக்க நெறிமுறைகள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

இம் மூன்றாம் பகுதியின் முடிவில் பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்ட அனைத்து வசனங்களினதும் விளக்கவுரைகளை சாராம்சப்படுத்தி தனியானதொரு கிளை தலைப்பின் கீழ் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தால் வாசகர்களுக்கு குறிப்பாக பிற மதத்தவர்களுக்கு குறித்த வசனங்கள் தொடர்பான இறுதி நிலைப்பாட்டிற்கு வருவது சற்று இலகுவாக இருந்திருக்கும்.

இந்நூலானது அல்குர்ஆனை மையமாகக்கொண்டு குறித்ததொரு நோக்கத்தின் அடிப்படையில் (Purposeful) எழுதப்பட்ட நூலாக இருந்தாலும், சற்று இஸ்லாமிய வரலாற்றையும் தொட்டுக்காட்டி இருந்தால் வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காது. அதாவது அல்குர்ஆன் ஆனது மேலே குறிப்பிட்டவாறு அநீதிக்கு எதிராக அல்லது தற்காப்பின் அடிப்படையிலேதான் போரை அனுமதித்துள்ளது என்ற கருத்து ஆணித்தரமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய வரலாற்றை எடுத்து நோக்கினால் கலீபாக்கள் காலந்தொட்டு உஸ்மானிய கிலாபத் வரையில் ஆட்சி விஸ்தரிப்பிற்காக போர்கள் இடம்பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவ் யுத்தங்கள் ஏன் இடம்பெற்றது? இஸ்லாமிய வரலாறு அல் குர்ஆனுக்கு முரணாக செயற்பட்டதா என்றால்? நிச்சயம் இல்லை! ஆட்சி விஸ்தரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களைப் பொறுத்தவரையில் அதன் சூழலமைவு, இலக்குகள், தன்மைகள், பின்னணிக் காரணங்கள் என்பவற்றை வைத்து பார்க்கும்போது அவை அல்குர்ஆனிய கொள்கைக்கு முரண்பட்டவை அல்ல என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பிற மதத்தவர்கள் இவற்றை விளங்கிக் கொள்வதற்கான போதிய அளவு அறிவு அவர்களிடம் கிடையாது. ஆகையால் இது தொடர்பான சந்தேகங்களுக்கான பதில் கேள்விக்குறியாகவே இருக்கும். இவற்றை தவிர்க்கும் வகையில் இஸ்லாமிய வரலாற்றில் ஆட்சி விஸ்தரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்பட போர்கள் தொடர்பாகவும் சற்று சுருக்கமாக விளக்கியிருந்தால் நூலின் சம்பூரணத் தன்மைக்கு உதவியாக அமைந்திருக்கும்.

அடுத்து இறுதிப்பகுதி அல்குர்ஆன் எதற்காக போரைத் தூண்டும் வசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது? என்பதற்கான காரணங்களை கூறி நிறைவுறுகிறது. நூலாசிரியர் இறுதியாக ஒரு விடயத்தைக் கூறி இந்நூலினை நிறைவு செய்கிறார், அதாவது அல்-காயிதா, போகோ ஹராம், ஐ எஸ் ஐ எஸ் போன்ற ஆயுதக்குழுக்கள் அல்குர்ஆனின் யுத்தக் கோட்பாட்டை தவறாக விளங்கி வழி பிறழ்ந்தவை, அல்குர்ஆனிய சிந்தனையை விட்டும் தூரமானவை என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட ஏப்ரல்-21 நிகழ்வும் இத்தகைய வழிபிறழ்ந்த சிந்தனைக் குழுவால் உருவாகியதே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு பார்வையில் சரியாகத் தோன்றினாலும், சற்று ஆழமாக பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்த்தால் ஒரு கேள்வி நிச்சயம் தோன்றும். உண்மையில் இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் அல்குர்ஆனிய வசனங்களை தவறாக விளங்கியமையினால் தோற்றம் பெற்றவையா? அல்லது வேறு பல சர்வதேச அரசியல் திட்டங்கள் (International Political Agendas) அல்லது இஸ்லாமிய வெறுப்புத் தொழில் (Islamophobia) அல்லது புதிய உலக ஒழுங்கு (New World Order) என்பவற்றின் அடிப்படையில் தோற்றம் பெற்றவையா? என்பதே அந்த வினா! இஸ்லாத்தை கருவறுப்பதற்காக உருவாக்கப்பட்ட இத்தகைய தீவிரவாதக் குழுக்களை அல்குர்ஆனிய சிந்தனையிலிருந்து வழி பிறழ்ந்ததால் தோன்றியவை எனக் கூறுவது கட்டாயம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். எனவேதான் இவை குறித்த ஆழமான விளக்கங்கள் கூறப்படாவிடினும் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கலாம் அல்லது வேறு வார்த்தைப் பிரயோகங்கள் ஊடாக அவற்றை விளக்கி இருக்கலாம் என்பது பணிவான வேண்டுகோளாகும்.

இறுதியாக இந்நூலானது அநியாயம், அடக்குமுறை, தற்பாதுகாப்பின் அடிப்படையிலே அல்குர்ஆன் போரை அனுமதித்தது என்ற கருத்தை தெளிவாக, உறுதியாக எடுத்துரைப்பதில் வெற்றி கண்டுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. அல்ஹம்துலில்லாஹ். இந்நூலானது கட்டாயம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய, கலந்துரையாடப்பட வேண்டிய ஒரு நூலாகும். குறிப்பாக இந்நூலினை மாற்று மதத்தவர்களுடனான கலந்துரையாடலுக்கு கொண்டு செல்வது காலத்தின் தேவையாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அவதானங்களிலும், விமர்சனங்களிலும் தவறுகள் இருக்கலாம். அவ்வாறு இருப்பின் அவற்றை மன்னித்து அவை தொடர்பாக விழிப்பூட்டுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

பாஹிம் ஸலாம்
ஜாமிஆ நளீமிய்யா
வியூகம் வெளியீட்டு மையம்

கடந்த ஏப்ரல் 21 நிகழ்வு இலங்கையில் ஏற்படுத்திய அசாதாரண நிலை இலங்கை முஸ்லிம்களின் இருப்பிற்கே சவாலாக மாறியது. முஸ்லிம் சமூகத்தின் மீது தொடரான குற்றச்சாட்டுகளும், கேள்விகளும் வந்து குவிந்தன. அவற்றில் பிரதானமானதொரு குற்றச்சாட்டே அல்குர்ஆனிய…

கடந்த ஏப்ரல் 21 நிகழ்வு இலங்கையில் ஏற்படுத்திய அசாதாரண நிலை இலங்கை முஸ்லிம்களின் இருப்பிற்கே சவாலாக மாறியது. முஸ்லிம் சமூகத்தின் மீது தொடரான குற்றச்சாட்டுகளும், கேள்விகளும் வந்து குவிந்தன. அவற்றில் பிரதானமானதொரு குற்றச்சாட்டே அல்குர்ஆனிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *