Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவர்கள் கடலோடு அடித்துப் போய் விட்டார்கள் 

அவர்கள் கடலோடு அடித்துப் போய் விட்டார்கள்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தடம் புரண்ட கடல்
பகுதி – 3

இதுவரை கதை

 

எனது ஊரில் நடந்த கல்யாண வீடொன்றிலே பங்கு கொள்ளும் நோக்கத்தில் காலி நோக்கி போகும் புகையிரதமொன்றில் பயணிக்கிறேன். திடீரென்று புகையிரதம் நிறுத்தப்படுகிறது. அதன் பின்னால் நாம் ஒருவரும் எதிர்பாராத விதத்தில் கடல் பொங்கி நாமிருந்த வண்டியை சின்னாபின்னப் படுத்துகிறது. மக்கள் செத்து மடிகின்றனர். ஏதோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நான் அபயம் தேடி ஓடிக் கொண்டிருந்தேன். இன்று அந்த இடத்திலிருந்து,

அபயம் தேடி ஓடும் சனங்களோடு நானும் சேர்ந்து ஓடினேன். ஓடும் பாதையிலே இரண்டு பிள்ளைகள் நின்று அழுது கொண்டிருந்தனர். இருவரையும் அன்பாக அழைத்து இரு கைகளால் பிடித்த வண்ணம் ஓடினேன். அந்தப் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் ஆண் பிள்ளையின் பெயர் நஜாத் அவரின் தாயார், தாயாரின் தாயார், உட்பட இரு தங்கைகளோடு ரயிலில் வந்ததாகச் சொன்னான். அடுத்த பிள்ளையின் பெயர் முனீரா மாத்தறையைச் சேர்ந்தவர் அவரின் உம்மா உம்மும்மாவோடு வந்ததாகச் சொன்னார். இருவரும் பதினொரு வயது மதிக்கத் தக்கவர்கள்.

நாம் போன பாதையிலே ஒரு விகாரை எதிர் பட்டது. அந்தப்பிரதேசம் முழுவதும் மக்கள் கூடி நின்றனர். குறிப்பிட்ட அந்த இடம் சற்று மேடான இடமாகவே காணப்பட்டது. அதனால் அவ்விடத்திலே நீர் நிறைந்திருக்கவில்லை ஆனால் சுற்றுவர எல்லா இடங்களிலும் நீர் தேங்கி நின்றது. என் கரத்தை பிடித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்களும் இடைவிடாது “உம்மா உம்மா” என்று அழுது புலம்பிய வண்ணமிருந்தனர்.

நான் எப்படியாவது உங்கள் உம்மாக்களை தேடிக் கண்டு பிடித்துத் தருகிறேன் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறியவனாய் இருக்கும் போது தூரத்திலே ஒருவர் என்பக்கமாக ஓடி வருவதைக் கண்டேன். கிட்ட நெருங்க நெருங்க அவரின் முகத்தை எளிதாகப் புரிந்து கொண்டேன் அவர் எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவர் அவர் ஓர் ஆசிரியர் அவரின் சொந்த இடம் பேருவளை ஆயினும் அவர் காலியில் கல்யாணம் கட்டியிருந்தார் ஓடி வந்தவர் அவரின் மகளை என்னிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் கடல் பக்கமாக ஓட முயன்றார் . “ஏன் ஸர் என்ன நடந்தது” என்று கேட்டேன் அவரின் வாயில் அழுகையைத் தவிர வேறொன்றும் வரவில்லை. அவரின் இளைய மகளும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தாள். இதைப் பார்த்த என் வசமிருந்த அடுத்த இரு பிள்ளைகளும் ஒப்பாரி வைத்து அழத் தொடங்கி விட்டனர்.

செய்வதறியாது நானும் தடுமாறினேன் அங்கு நின்றிருந்த அதிகமானோர் அழுது புலம்பிய நிலையில் தமது பிள்ளைகளை தமது தாய் தந்தையரைத் தேடிய வண்ணமிருந்தனர். நான் மட்டுமே எவரையும் தேடாது அழுகையின்றி நின்றிருந்தேன். ஆனால் இறைவனின் மாபெரும் இரக்கம் நான் மற்றவர்களுக்காக அழவேண்டியிருந்தது. எங்கிருந்தோ வந்த இந்த இரு ஜீவன்களுக்குமாக கண்ணீர் சிந்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. அவர்களின் பெற்றோரைத் தேடி ஒப்படைக்க வேண்டுமே என்ற பாரிய பொறுப்பு என்னை வந்து சேர்ந்து விட்டது.

என்னிடம் தனது இளைய மகளை விட்டு விட்டு ஓடிய ஆசிரியர் திரும்பி வந்துவிட்டார்.

“அங்கு போக விடுகிறார்கள் இல்லை எனது மனைவியும் எனது ஒரேயொரு மகனும் கடல் அலைகளோடு போய் விட்டார்கள் இஷாம்”

என்று கூறி என்னைக் கட்டிப் பிடித்து கதறி அழத் தொடங்கி விட்டார் அந்த ஆசிரியர். கிட்டடியில் கிடைத்த ஆண் பிள்ளை மேலே அவர் உயிரையே வைத்திருந்தார் அவருக்கு மூன்று குழந்தைகள் இந்தப் பயணத்தில் அவரது மூத்த மகள் ஏதோ இறைவன் கிருபையால் இணைந்திருக்கவில்லை.

பிள்ளைகளை இரு கைகளாலும் பிடித்தவாறு விகாரை வளவில் இன்னும் யாராவது இருப்பார்களா? என்று தேடிப் பார்த்தேன் அப்போது தான் அந்த அதிசயத்தைக் கண்ணுற்றேன். நான் ரயில் பெட்டியின் உள்ளே சந்தித்த அந்த குடும்பம் எனக்கு எதிர் பட்டனர். இறைவன் அருளால் அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தோ அந்த கைக்குழந்தை கூட பத்திரமாக இருந்தது. இதுவோர் அற்புதமான நிகழ்வு என்றே நான் கருதினேன். நான் விகாரை வளவிற்கு செல்லுமுன்னரேயே அவர்கள் அங்கே போய் சேர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களோடு இருந்த வயதான பெண்மணி கடும் குளிரினாலும் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் நடுங்கிக் கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு இடத்தில் ஒருவர் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தார் அவரை மெதுவாக நெருங்கிய நான் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு “ஏன் நீங்கள் அழுறீங்க” என்று கேட்டேன்.

“பாருங்கள் நாணா நான் சென்ற கிழமை வாங்கிய செல்போனும் போய்விட்டதே சும்மாவா 14500/- பெருமதியுள்ள செல்போன்” என்று கூறி மீண்டும் அழுதார்.

“சரி சரி போனா போகட்டும் ஆமா நீங்கள் யாருடன் வந்தீங்க” என்று அவரைக் கேட்டேன்.

“எங்க உம்மா வாப்பாவோட தான் வந்தேன் அவர்கள் இந்த முறை ஹஜ்ஜுக்குப் போக இருந்தாங்க அதனால நாங்க வெலிகமையில உள்ள சொந்தக் காரங்கட வீட்டுக்கு போகத் தான் வந்தோம்” என்றார். அப்போது திருப்பி அவரிடம் நான் கேட்டேன்.

“இப்போது உங்கள் உம்மாவும் வாப்பாவும் எங்கே?”

“அவர்கள் கடலோடு அடித்துப் போய் விட்டார்கள்.”

என்று சுமாராகச் சொன்னார் அவர். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.

“என்ன பிரதர் சும்மா வெகுளித்தனமில்லாம உம்மா வாப்பாவ தேடுங்கள் போனும் மண்ணாங்கட்டியும்” என்று அவருக்கு உபதேசம் செய்தேன். உபதேசம் செய்யும் நேரமா இது ?

உடனடியாக நாங்கள் அந்த இடத்திலிருந்து ஒதுங்கி இன்னொரு இடத்திற்கு போக வேண்டியிருக்கிறது. அந்த விகாரை அமைந்திருந்த வளவைத் தாண்டி அடுத்த பாதைக்குப் போகத் தடையாக ஒர் சிற்றாரு குறுக்கிட்டது. அந்த ஆற்றைக் கடக்க உறுதுணையாக இருந்த ஒடுக்கமான பாலமும் உடைந்து சுக்குநூறாகிப் போயிருந்தது. எவ்வாறாயினும் அக்கரையை நோக்கி செல்வதே எமது ஒரே நோக்கமாக இருந்தது அங்கிருந்த அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்தோம்.

உடனடியாக ஒரு பலமிக்க கயிற்றை தேடியெடுத்து ஆற்றின் இரு மருங்கிலும் இருந்த மரங்களில் கட்டி அதன் உதவியோடு அனைவரும் ஆற்றைக் கடக்கத் தொடங்கினோம். அந்த வேளையில் என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றைக் கடந்து சென்றாலும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த வயோதிப பெண்மணியால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. செய்வதற்கு வேறு வழியில்லை ஒரே வழிதான் எஞ்சியிருக்கிறது. அந்தப் பெண்மணியை என் கழுத்தில் சுமந்து கயிற்றின் உதவியோடு அக்கரையை அடைந்தேன்.

எங்கிருந்தோ வந்த தைரியத்தால் அன்று அப்பெண்மணியை மீட்டுக் கொண்டு வந்து சேர்த்தேன்.

ஓட்டமும் நடையுமாகச் சென்ற போது ஒரு பிரதான பாதை தென் பட்டது. அந்தப் பாதை வழியே தொடர்ந்து பயணித்தோம். எங்கே செல்கிறோம் எங்கே நிக்கப் போகிறோம் என்ற எந்தவிதமான விளக்கமும் இல்லாமல் ஏதோ கால் போகும் போக்கில் நடைபயின்றோம். வர வர மலைப் பாங்கான பூமியே எதிர் பட்டது. அந்தப் பாதையருகே இருந்த ஒருவரிடம் கேட்டேன்.

“இந்தப் பாதையால் சென்றால் எங்கே போகலாம்” அதற்கு அவர் சொன்னார் இந்தப் பாதையால் போனால் மீட்டியாகொடைக்குப் போகலாம்.

இறுதியில் நாங்கள் மீட்டியாகொடையில் இருந்த கியுலேகெதர மகா வித்யாலயத்தில் தங்க வைக்கப்பட்டோம். அந்த தற்காலிக முகாமிலே இன்னும் பலர் வந்து சேர்ந்த வண்ணமிருந்தனர். பகல் சாப்பாட்டிற்கான ஏற்பாடுகளும் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன. பல இயக்கங்களும் ஊடக நிறுவனங்களும் களத்தில் குதித்து தங்கள் பணிகளைத் தொடங்கியிருந்தனர். களைப்பின் காரணமாக நாங்கள் விழுந்த இடங்களிலேயே தூங்கினோம். இவ்வளவு நேரமும் அழுது கொண்டிருந்த அந்த பிள்ளைகளுக்கும் தூக்கம் போய் விட்டது.

இரவாகும் போது அனைத்து இடங்களிலும் இருந்து மக்கள் வரத் தொடங்கியிருந்தனர். ஊடகங்களும் வந்து முகாமிட்டிருந்தனர். நாம் அணிந்திருந்த ஆடைகளும் உடம்போடு ஒட்டியிருந்தன. உப்பு நீரில் நனைந்திருந்ததால் உடம்பெல்லாம் ஒரே எரிச்சலாக இருந்தது.

முகாமில் தங்கியிருந்த அனைவரின் முகத்திலும் பீதியையே காணக் கூடியதாக இருந்தது. முகாமில் இருக்கும் போது முதற்தடவையாக நாங்கள் முகங்கொடுத்த அந்த அனர்த்தத்திற்கு இன்னொரு பெயரை மக்கள் உச்சரிக்கக் கேட்டேன்.

அதுதான் “சுனாமி” என்ற சொல் ஆமாம் இப்போது தான் நாங்கள் முகங்கொடுத்த அந்த பேராபத்திற்கு சுனாமி என்று பெயர் சூடுகிறோம்.

நாங்கள் தங்கியிருந்த அந்தப் பாடசாலையானது ஒரு மலையின் மேலே இருந்ததால் அங்கிருந்து பார்க்கும் போது கடல் தூரத்தில் தெரிந்தது.

சிலர் பயத்தின் காரணமாக பாடசாலைக்கு பக்கத்திலே இருந்த இன்னுமொரு உயரமான மலைக்கு ஏறத் தொடங்கினார்கள் அவர்களின் இந்தப் காரியத்தைக் காணும் போது இவர்கள் எந்தளவு பயந்து போயுள்ளார்கள் என்பதை நமக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

கொழும்பில் இருந்து காலி செல்லும் வழியில் சுனாமி பேரலையில் சிக்கிய இரண்டு குடும்பங்கள் இந்த முகாமிற்கு வந்து எம்மோடு இணைந்து கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்த பஸ் வண்டி கஹவை எனும் பிரதேசத்தில் பாதிப்புக்கு உள்ளானதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சொன்னார்கள் அவர்கள் அனைவரும் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னோடு சேர்ந்து கொண்டார்கள்.

அந்த முகாமைச் சுற்றி வந்த போது என்னைக் கண்ட ஓர் இளைஞன் என்பக்கமாக ஒடோடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து ஓ…வென்று அழத் தொடங்கினான். எங்கேயோ பார்த்த முகமாயிருக்கே என்று யோசிக்கும் போது தான் ஞாபகம் வந்தது “அட ரயில் நிறுத்தப் பட்ட நேரம் என்னோடு கதைத்த அதே இளைஞன்” அப்போது தான் அவன் கதையை எனக்குச் சொல்லத் தொடங்கினான்.

“நாங்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் நாணா. இன்று கிந்தோட்டையிலே நடக்கும் ஒரு உதைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத்தான் சென்று கொண்டிருந்தோம். என்னோடு சேர்த்து பன்னிரண்டு பேர் வந்தார்கள். ஆனா இப்போ நான் மட்டும் தான் தப்பியுள்ளேன் நாணா அடுத்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. நானும் மயிரிழையில் உயிர் தப்பிய ஒருவன் அந்த அலைகளில் அடிபட்டு வந்தபோது யாரோ ஒருவர் என் முடியால் பிடித்து இழுத்தெடுத்தார் பார்க்கும் போது அவர் ஒரு பௌத்த பிக்கு அவரின் இந்த துணிச்சல் மிகுந்த செயலினால் தான் நான் உயிர் தப்பினேன். ஆனால் நான் என் நண்பர்கள் இல்லாமல் எவ்வாறு வீடு செல்வேன்” என்று கூறி மீண்டும் அழத் தொடங்கினான். அந்த இளைஞன் அவன் நிலைமையை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது எனக்கு.

நேரம் செல்லச் செல்ல காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்தது. மக்கள் நாமிருந்த முகாமிற்கும் வந்த வண்ணமிருந்தனர்.

அப்போது தான் அந்த சோகமான நிகழ்வு எனக்கு நடந்தது. நான் புகையிரதத்திலே சந்தித்து கரைசேர்த்த அந்தக் குடும்பத்தினரின் உறவினர்கள் அவர்களைக் கூட்டிச் செல்வதற்காக வந்திருந்தனர். ஆனால் அவர்கள் முகாமிலிருந்து வெளியேறும் போது ஒரு வார்த்தை கூட என்னிடம் கூறாமல் போய் விட்டதை எண்ணிப் பார்க்கையில் சுனாமிக்கு முகங் கொடுத்ததை விட ஒரு வலியை இன்றும் நான் உணர்கிறேன்.

நான் கூட்டிவந்த நஜாத் என்ற சிறுவனை களுத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரிடம் ஒப்படைத்தேன். அவர்கள் கொழும்புக்குப் போவதாக என்னிடம் சொன்னார்கள். அப்போது அவர்களுக்கு என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து கட்டாயம் பிள்ளையை அவரின் தந்தையிடம் ஒப்படைக்குமாறும் கூறியனுப்பினேன்.

பின்னர் அந்தப் பிள்ளை பாதுகாப்பாக அவரின் தந்தை வசம் போய்ச் சேர்ந்துள்ளதை வானொலி மூலம் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து அவர்கள் என்னைக் காண்பதற்காக எனது வீடு தேடி வந்தார்கள். இன்றும் கூட அந்தக் குடும்பத்தினரோடு நெருங்கிய உறவைப் பேணி வருகிறேன்.

நஜாத்தின் காணாமல் போன ஒரு தங்கை மாத்திரம் பின்னர் கிடைத்ததாகச் சொன்னார்கள். நஜாத்தின் தாயான ஆசிரியை, அவரின் தாயார், ஒரு தங்கை உட்பட மூன்று பேருக்கு என்ன நடந்தது என்று இதுவரை காலமும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லையாம்.

ஒரு நாள் முழுக்க முகாமில் தங்கியிருந்த நாம் வீடு செல்வதற்காக தயாரானோம் என்னோடு இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு பாதைக்கு வந்தேன். வழியில் ஒரு டிபர் வண்டி நிறுத்தப் பட்டது. அதில் ஏறி பத்தேகமைக்கு வந்து அங்கிருந்து பஸ் வண்டி மூலம் கராபிட்டிய நகரை வந்தடைந்தோம்.

வீடு வந்த போது மாலை 4 மணி ஆகியிருந்தது. நான் கூட்டிவந்த முனீரா என்ற சிறுமியை காலியிலுள்ள அவரின் மாமா வீட்டில் ஒப்படைத்தோம்.

நான் வீடு போய்ச் சேர்ந்த பின்னரே இந்த அனர்த்தத்திற்கு நான் முகங்கொடுத்ததை எனது குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். நமது ஊரான கட்டுகொடையில் ஏகப்பட்ட அழிவு ஏற்பட்டிருந்தது. நாங்கள் ஏற்பாடு செய்த சிரமதானத்தினூடாக சுத்தஞ் செய்யப்பட்ட மையவாடி பலவிதத்திலும் மக்களுக்கு உபயோகப்பட்டது. சுனாமி அலைகளால் வீடுகளை இழந்த பல பேர் இந்த மேட்டு நிலத்திலே தான் தங்கியிருந்தாக கேள்விப் பட்டேன். அத்தோடு 300 இற்கும் மேற்பட்ட இறந்து போனவர்களின் உடல்களையும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. சுனாமிக்கான ஏற்பாடுகளை நாமே முன்னேற்பாடாக செய்து வைத்திருந்தது போல் அமைந்தது நமது சிரமதானம்.

அழிவுகளையும் மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்து வந்த அந்த ஆழிப் பேரலை என் வாழ்வோடு ஒட்டியிருந்த ஓர் அனுபவப் பெட்டகம் இதனை வாசித்து பின்னூட்டம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.

இன்னொரு விசித்திரமான சுனாமி என் வாழ்வில் வந்தது அந்த அனுபவப் பகிர்வோடு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

கலைமணாளன்.

தடம் புரண்ட கடல் பகுதி – 3 இதுவரை கதை   எனது ஊரில் நடந்த கல்யாண வீடொன்றிலே பங்கு கொள்ளும் நோக்கத்தில் காலி நோக்கி போகும் புகையிரதமொன்றில் பயணிக்கிறேன். திடீரென்று புகையிரதம் நிறுத்தப்படுகிறது.…

தடம் புரண்ட கடல் பகுதி – 3 இதுவரை கதை   எனது ஊரில் நடந்த கல்யாண வீடொன்றிலே பங்கு கொள்ளும் நோக்கத்தில் காலி நோக்கி போகும் புகையிரதமொன்றில் பயணிக்கிறேன். திடீரென்று புகையிரதம் நிறுத்தப்படுகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *