Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஸுஹதாக்கள் தினம் - Youth Ceylon

ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஸுஹதாக்கள் தினம்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஏ.எல்.ஜுனைதீன்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம் 3 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது.

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் இரவு நேரம் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் பள்ளிவாசலுக்குள் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களிடையே இத்தினம் இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந்நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் தேசிய ஸுஹதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இச் சம்பவம் குறித்த காத்தான்குடி சகோதரர் ஒருவரின் நினைவு இப்படி இருந்தது,

காத்தான்குடி முதலாம் குறிச்சி பள்ளிவாயலுக்கு அப்போது (1990) மஹ்ரிப் தொழப் போனால் இஷாவையும் தொழுதுவிட்டு இரவு பத்து மணியும் பிந்தித்தான் வீட்டுக்குப் போவேன்.

03-08-1990 ஆம் திகதி அன்று மஹ்ரிப் தொழுகையை தொழுதுவிட்டு ஹவுழுப் பக்கம் உள்ள படிக்கட்டில் நானும் கவிஞர்களான ரீ.எல். ஜவ்பர்கான், எம்.எம். ஜுனைதீன் மற்றும் ஆரிப் (ஹயாத்துக்கான் மாஸ்டரின் இரண்டாவது மகன்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் ஜவ்பர்கான், வீட்டுக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு இஷாவுக்கு அதான் சொல்ல முதல் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஜுனைதீன், ஆரிப், நான் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே இஷாவுக்கு அதான் ஒலிக்கிறது. மூவரும் வுழூவுடனேயே இருக்கிறோம்.

ஜுனைதீனின் ராத்தா பரீனாவின் வீடு பள்ளிக்கு பக்கத்தில் இருப்பதால் இகாமத் சொல்லுவதற்கிடையில் தேநீர் அருந்திவிட்டு வருவோம் என்று ஜுனைதீன் சொல்கிறார்.

ஆரிப், ” நான் வரவில்லை. பள்ளிக்குள் போகிறேன். நீங்கள் ரெண்டு பேரும் தேநீர் குடித்துவிட்டு வாருங்கள் ” என்று சொல்லிவிட்டு பள்ளியின் உள்ளே போய்விட்டார்.

பரீனா ராத்தா ஊற்றித் தந்த தேநீர் கொதிக்கக் கொதிக்க கடும் சூடாக இருந்தது. அவசரமாகக் குடிக்க முடியவில்லை. எங்களோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஜுனைதீனின் நானா அக்பர் அவசரமாகக் குடித்து முடித்து விட்டு பள்ளிக்குப் போய்விட்டார்.

அவ்வல் ஜமாஅத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று என்னை ஜுனைதீன் அவசரப்படுத்திய போதும் தேநீரை சுடச் சுட என்னால் குடிக்க முடியவில்லை.

ஆற்றிக் குடித்து முடிவதற்கிடையில் இகாமத் சொல்லி தொழத் தொடக்கியும் விட்டார்கள். அவசரமாக நானும் ஜுனைதீனும் எழுந்து பள்ளியை நோக்கிப் போக தெருவுக்கு வந்ததுதான் தாமதம். பள்ளிக்குள் ஆயுதங்களால் சுடுகின்ற சத்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பயங்கரமாக கேட்கிறது.

“புலிகள் பள்ளிக்குள் புகுந்து சுடுகிறார்களாக்கும் அன்ஸார்! இருட்டாகவும் இருக்கிறது. பள்ளிக்குள் போவோமா? இல்ல. என்ன ஏதென்று பார்த்துவிட்டு போவோமா?”

என்று ஜுனைதீன் எனது கைகளைப் பற்றிப் பிடித்தவாறு கேட்கிறார்.

சில நொடிகள் நாங்கள் இருவரும் தாமதிகின்றோம். என்ன செய்வதென்றே புரியாத பயம். வீதியெங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. துப்பாக்கி, குண்டு. கிரனைட் என்று ஆயுதங்கள் வெடிக்கும் பெரும் சத்தம் உயிரை உறைய வைக்கிறது.

வீதியை விட்டு மேலும் அகல விடாமல் ஜுனைதீனின் வீட்டார் எங்கள் இருவரையும் தடுத்துவிடுகிறார்கள். என்றாலும் பள்ளிக்குள் போய் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற அவசர உணர்வில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு இருவரும் வேறு வீதி ஊடாக சென்று பள்ளியை அடைகிறோம்.

நாங்கள் போய்ச் சேரும் போது பள்ளிக்குள் கொலை வெறியாடிவிட்டு கோழைப் புலிகள் ஓடித் தப்பிவிட்டார்கள். பள்ளி வாயல் ஜனாஸாக்களாலும் இரத்த வெள்ளத்தாலும் நிரம்பி இருக்கிறது. அழு குரல்கள் ஓங்கிக் கேட்கின்றன.

நண்பர்கள் ஜவ்பர்கான், ஜுனைதீன் ஆகிய இருவரின் வாப்பா மாரும் உடல் முழுக்க துப்பாக்கி சன்னங்கள் துளைத்த நிலையில் ஷஹீதாகி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

எங்களோடு பள்ளி வாயல் படிக்கட்டில் பேசிக்கொண்டிருந்த அருமை நண்பர் ஆரிபும் ஷஹீதாகி இருக்கிறார்.

பரீனா ராத்தாவின் வீட்டில் எங்களோடு தேனீர் அருந்திவிட்டு அவ்வல் ஜமாஅத்தில் இணைந்து கொள்வதற்காக அவசரமாகச் சென்ற ஜுனைதீனின் நானா அக்பர் படு காயத்தோடு கண்களின் பகுதி சிதைவடைந்த நிலையில் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்.

” அன்ஸார். அன்ஸார் என்னைத் தூக்கு.” என்று மரணத் தறுவாய் முணக்கம் ஒன்று எனக்குப் பின்னால் இருந்து கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். என்னுடைய மாமா. கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களோடு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை தூக்கி எடுத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வீட்டை நோக்கிச் ஓடுகிறேன்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ்கடமையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிமார்களும் அவர்களோடு வந்த உறவினர்களும் இன்னும் சில பொதுமக்களும் குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலரும் அடங்குகின்றனர். புலிகளே இப்படுகொலைகளைப் புரிந்தமை வெளிப்படையான விடயமாகும்.

இந்தக் கடத்தல் சம்பவம் இன நல்லிணக்கத்திற்கு மோசமான ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மற்றொரு மிக மோசமான மிலேச்சத்தனமான சம்பவமாக இந்த பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.

கொடூர சம்பவம் இடம்பெற்ற அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத்தாக்குதலையும் நடத்தினர். இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது.

புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர்.

இச்சம்பவத்தில் குடும்பத் தலைவன் உயிரிழந்ததால் அக்குடும்பமே தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டது. இளம் வயதில் வித​வைகளான பல பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள் என இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோக வரலாறுகள் இருக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து பல மாதங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற சிலர் இன்றும் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர். இன்னும் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் வாழும் சிலரும் இருக்கின்றனர்.

இக் குண்டுத் தாக்குதலில் ஊனமுற்று வாழும் மற்றும் ஒருவர் அன்றைய சம்பவம் குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

“1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி எனது தாயைப் பார்ப்பதற்காக நான் தாயின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. 58 நாட்கள் நிரம்பிய குழந்தையும் எனக்கிருந்தது.

அப்போது பள்ளிவாசலில் தொழுக்காக அதான் சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகிய போது எனது தாய் ‘தொழுகை ஆரம்பமாகி விட்டது அவசரமாக பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள்’ என என்னை அனுப்பினார்.

அப்போது நான் மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு வந்தேன். பள்ளிவாசலின் முன்வளவில் எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்டிருந்தார். நானும் அவரும் அவ்விடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அந்த வீதியினால் ஆயுதம் தரித்த சிலர் வரிசையாக வருவதைக் கண்டேன்.

அச்சம் அடைந்த நாங்கள் அவசரமாக வுழூ செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று தொழுகையில் இணைந்து சுஜூது செய்யும் போது பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

தொழுகையில் இருந்த பலர் சரிந்து விழுவதைக் கண்டேன். நானும் காயங்களுடன் விழுந்து விட்டேன். எனது வயிற்றுப் பகுதியில் சிறுவன் ஒருவனும் விழுந்து கிடந்ததை கண்டேன்.

சில நிமிடங்களின் பின்னர் நான் உட்பட பலத்த காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டோம். அங்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு பல மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று இன்று ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றோம்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் சுயமாக தொழிலில் ஈடுபட்டு தொழிலில் முன்னேற்றமாக காணப்பட்ட என்னைப் போன்றவர்கள் இன்று தொழில் எதுவும் செய்ய முடியாதவனாக இருக்கின்றோம்” என்று தெரிவிக்கிறார்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என்பது இலங்கைவாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த இரண்டு பள்ளிவாசல்களிலும் இன்றும் இதன் அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த கால யுத்தம் இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்ற இப் படுகொலைச் சம்பவமும் ஒரு மிகப் பெரிய சான்றாகும்.

ஏ.எல்.ஜுனைதீன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம்…

ஏ.எல்.ஜுனைதீன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம்…