இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 04

  • 14

நேசம் கலந்த பயிற்றுவிப்பு

இல்லங்களையும் உள்ளங்களையும் உயிரூட்டும் இந்த ரமழானிலாவது பிள்ளைகளுடன் நேசம் கொண்டு முறையான பயிற்றுவிப்பை வழங்குங்கள். அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள், அவர்களுடன் நேசம் கொள்ளுங்கள் அதுவே சிறந்த பிள்ளைகளாக மாற்றுவதற்கு உந்துகோலாக அமையும்.

அன்பின் பெற்றோர்களே! பிள்ளைகள் மீது வெறும் அன்பு, பாசம் கொடுத்து வளர்த்தால் மட்டும் போதாது. உபதேசம் செய்வது, கல்வி ஞானத்தை வழங்குவது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பாகும். நாம் வழங்கும் அறிவு இம்மையிலும், மறுமையிலும் பயனுள்ளதாக அமைய வேண்டும். இல்லாவிடின் ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவீர்கள்.

வாசிப்பு தேடலில் கிடைத்த ஒரு கதை படிப்பினைக்காக.

சிறிய கிராமம் ஒன்றில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது வீட்டின் ஓரமாக ஒரு புற்றிருந்தது. அதில் ஒரு பாம்பு வசித்து வந்தது. தனது வீட்டிற்கருகில் பாம்பு வசிப்பதையிட்டு அம்மனிதன் சந்தோஷமடைந்தான். காரணம், அந்தப் பாம்பு நாளாந்தம் ஒரு தங்கமுட்டையிட்டது. அவன் அந்த முட்டையை கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தான். ஒருநாள் புற்றிலிருந்து வெளியேறிய பாம்பு அவனது பால் தரும் பசுவை தீண்டி கொன்று விட்டது. அதனைக் கண்ட அவனும் அவனது மனைவியும் பாம்பு அதிக இலாபம் ஈட்டித் தருகிறது. ஆகவே, இவ்விடயத்தை அலட்டிக் கொள்ள தேவையில்லை என முடிவு செய்தனர். நாட்கள் கழிந்தன. புற்றிலிருந்து வெளியேறிய பாம்பு அவர்களின் குடும்ப வாகனமான கழுதையையும் கொன்று விட்டது. ஆனால், அக்கணவனும் அவனது மனைவியும் பாம்பை அடித்துக் கொல்ல நினைக்கவில்லை . காரணம், கழுதையால் வரும் வருமானத்தைவிட பாம்பினால் அதிக வருவாய் கிடைத்தது.

இரண்டு வருடம் கழித்து அப்பாம்பு வீட்டு வேலைக்காரனைத் தீண்டி அவனையும் கொன்று விட்டது. அதை நினைத்து அவர்கள் கவலைப்பட்ட போதிலும் கூட சில நாட்களிலேயே அதை மறந்து விட்டார்கள். பின் அந்தப் பாம்பு அவர்களது பிள்ளையைத் தீண்டியது. அப்போது அந்தப் பாம்பை கொல்ல முயற்சி செய்தனர் பெற்றோர். பாம்பு ஒளிந்து விட்டது. நாட்கள் நகர்ந்தன. அம்மனிதனின் கையிலிருந்த பணம் நிறைவடைந்தது. வேறு வழியின்றி பாம்பை தேடியலைந் தான். பழைய நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து பாம்பை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தான். மீண்டும் தங்க முட்டையிட ஆரம்பித்தது பாம்பு. சில வருடங்கள் கழித்து அவனும் மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரையும் தீண்டிக் கொன்று விட்டது அந்தப் பாம்பு.

இவ்வாறே சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். தங்க முட்டையால் அனைத்தையும் இழந்ததைப்போல் பணத்திற்காக குழந்தைகளை பலிகொடுத்து விடுகின்றனர் .

பணத்திற்காக, உலக ஆசைக்காக எமது குழந்தைச் செல்வங்களை கவனிக்காது விட்டு விடுவது அவர்கள் எங்களை விட்டும் தூரமாகிச் செல்ல வழியேற்பட்டுவிடும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் நாம் சமகாலத்தில் அவர்கள் தவறான பாதையில் செல்வதை உணர்ந்து கொள்வதில்லை.

சில பிள்ளைகள் பெரியவர்களான பின் தமது பெற்றோரை மதிப்பதில்லை. அதற்குக் காரணம் , சிறுவயது முதலே அன்பு, நெருக்கத்தை கொடுத்து பிள்ளைகளை முறையாக வளர்க்காமையே.

நாம் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கவேண்டும், ஒழுக்கத்தை, அறிவை உள்ளங்களில் விதைக்க வேண்டும். இல்லாவிடின் பணத்திற்காக அலைந்து திரிந்து கடைசியில் பணத்திற்காக பாம்பு வளர்த்த கதையாக எமது கதை ஆகிவிடும்.

நாம் எமது பிள்ளைகளுடன் நட்பு கொள்வதினூடாக அனைத்தையும் ஒலிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளவும், நல்ல விடயங்களை சொல்லிக்கொடுக்கவும், இரு தரப்பினருக்கிடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படுகின்றது. இதனால் நல்ல முன்மாதிரியான குடும்பம் உருவாக வழி வகுக்கும்.

“நபி ஸல் அவர்களை விட தனது குடும்பத்தவர்களுடன் அன்பாக நடக்கும் எந்தவொரு மனிதனையும் நான் காணவில்லை. ” (ஸஹீஹ் முஸ்லிம்)

அதே போல் ஒரு கையை தட்டினால் சத்தம் வருமா? இல்லையே அவ்வாறே பிள்ளைகளும் பெற்றோர்களோடு சேர்ந்து செல்ல வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கு நன்கு செவிசாய்த்து நடக்கவேண்டும். அவர்களின் பயிற்றுவிப்பை ஏற்கவேண்டும், உலகத்தில் அதிகம் நேசம் கொள்ள வேண்டிய உறவுகள் எம்மை பெற்றெடுத்த பெற்றோர்களேயாவர்.

அவர்கள் எமக்காக செய்த தியாகம், உழைப்பு அனைத்தையும் மறந்து விடாது நன்றிக்கடனுள்ள பிள்ளைகளாக சமூகத்தில் மிளிரவேண்டும். இதனேயே அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் மரணித்தபின்னும் நண்மைகளை கொடுக்கும் ஸாலிஹான பிள்ளைகளாக இருக்கவேண்டும். இதுவே நீ உண்மையான ஒரு வாழ்க்கையை வாழ்கிறாய் என்பதன் அர்த்தமாகும்.

எனவே எமது ஆசை, விருப்பங்களுக்காக பெற்றோர்களின் மனதை நோகும்படி செய்யாமலும், அவர்களை சந்தோஷப்படுத்தக்கூடிய பிள்ளைகளாக வாழ்ந்து சுவர்க்கத்தை பெற்றுக்கொடுக்கும் பிள்ளைகளாக மாறுவோம்.

அதேபோல் பெற்றோர்களே! பணம், பணம் என்று வாழ்க்கை முழுவதையும் அவ்வாறு கழிக்காமல் பிள்ளைகளுக்காகவும் நேரம் ஒதுக்கி, சிறந்த ஸாலிஹான பிள்ளைகளாக வளர்ப்பதில் ஒவ்வொரு கணவன், மனைவியும் செயற்பட வேண்டும் இதுவே இலட்சிய குடும்பத்தை நோக்கிய நகர்வின் பாலமாகும்.

Faslan Hashim

நேசம் கலந்த பயிற்றுவிப்பு இல்லங்களையும் உள்ளங்களையும் உயிரூட்டும் இந்த ரமழானிலாவது பிள்ளைகளுடன் நேசம் கொண்டு முறையான பயிற்றுவிப்பை வழங்குங்கள். அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள், அவர்களுடன் நேசம் கொள்ளுங்கள் அதுவே சிறந்த பிள்ளைகளாக மாற்றுவதற்கு உந்துகோலாக…

நேசம் கலந்த பயிற்றுவிப்பு இல்லங்களையும் உள்ளங்களையும் உயிரூட்டும் இந்த ரமழானிலாவது பிள்ளைகளுடன் நேசம் கொண்டு முறையான பயிற்றுவிப்பை வழங்குங்கள். அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள், அவர்களுடன் நேசம் கொள்ளுங்கள் அதுவே சிறந்த பிள்ளைகளாக மாற்றுவதற்கு உந்துகோலாக…