ஒரு கதவு மூடிவிட்டால் இன்னொரு கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும்…

  • 10

அன்பின் தம்பி தங்கைகளே!

13வருடங்கள் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு உங்கள் அறிவை மதிப்பிடும் உயர்தரப் பரீட்சையையும் எழுதிவிட்டு அதற்கான பெறுபேறுகளையும் பெற்றுள்ளீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான பெறுபேறுகளைப் பெற்றிருப்பீர்கள். இந்தப் பெறுபேறுகள் உங்கள் திறமையையோ அல்லது எதிர்காலத்தையோ தீர்மானிப்பது அல்ல. எனவே, உங்கள் பெறுபேறுகளை வைத்து உங்களை நீங்களே தாழ்வாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.

ஒவ்வொருவருக்கும் அவர்களது உயர்தர பெறுபேறுகள் தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றிருந்தால் நிச்சயமாக அதிகமானவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் வாழ்வே இருண்டு கிடந்திருக்கும்.

உங்கள் எதிர்காலத்தையும் இலட்சியத்தையும் தீர்மானிக்க முதலில் தேவைப்படுவது பெறுபேறு அல்ல. மாறாக, தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமாகும். இந்த இரண்டும் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். இவை உங்கள் பெறுபேற்றை விட பலமானவை, உங்களை உங்கள் இலட்சியப்பாதையில் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்பவை.

உங்கள் பெறுபேற்றைப் பார்த்து உங்களுக்குப் பின்னால் பேசுபவர்களது பேச்சுக்கு காது கொடுத்து உங்களை நீங்களே தரக்குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள். நான்கு பேர் நான்கு விதமாகச் சொல்லும் வார்த்தைகளை நினைத்து நினைத்து உங்கள் நேரங்களையும் இலட்சியங்களையும் வீணடித்து விடாதீர்கள்.
அவர்களது கேலிப் பேச்சினைக் கேட்டு துவண்டுவிடாதீர்கள்.

சிறப்புச் சித்தியோ சாதாரண சித்தியோ…. ஏன்? சித்தி அடையவில்லை என்றாலோ… உங்கள் பெறுபேற்றுக்கு ஏற்ப உங்களுக்கு வாழ்வில் முன்னேறிச் செல்ல பல வழிகள் திறந்தே இருக்கின்றன.

உங்கள் பெறுபேறுகளை உங்கள் நண்பர்களது பெறுபேறுகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு திறமைகள் வெவ்வேறு இலட்சியங்கள் காணப்படுகின்றன. எல்லோருக்கும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான பாதைகள் திறந்திருக்கின்றன. உங்கள் இலட்சியப் பாதையில் ஒரு கதவு மூடிவிட்டால் இன்னொரு கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வாய்ப்பு என்பது நீங்கள் நினைப்பதுபோல் கடையில் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளும் பண்டம் இல்லை; மாறாக ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள திறமை, நன்நம்பிக்கை, ஊக்கம் என்பவற்றை அறிந்து கொண்டு தாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகும்.

எனவே, இது உங்கள் வாய்ப்பைத் தேடும் நேரம். இதனை வீணாக்கிவிடாமல் உங்கள் இலட்சியப் பயணத்தில் புதிதாக நடைபயில எழுந்திருங்கள். வெற்றிகள் என்றும் உங்களுக்காகவே காத்திருக்கின்றன.

இது உங்கள் வாழ்க்கை! இதை நீங்கள் தான் வாழ வேண்டும்! இதை மற்றவர்களது கையில் கொடுத்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை தீர்மாணிப்பதற்கு மற்றவர்களை விட நீங்களே மிகத் தகுதியானவர்கள்; உரிமை உள்ளவர்கள்.

Sasna Baanu Nawas
Thihariya.
(BA.Hons – SEUSL)

அன்பின் தம்பி தங்கைகளே! 13வருடங்கள் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு உங்கள் அறிவை மதிப்பிடும் உயர்தரப் பரீட்சையையும் எழுதிவிட்டு அதற்கான பெறுபேறுகளையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான பெறுபேறுகளைப் பெற்றிருப்பீர்கள். இந்தப் பெறுபேறுகள் உங்கள்…

அன்பின் தம்பி தங்கைகளே! 13வருடங்கள் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு உங்கள் அறிவை மதிப்பிடும் உயர்தரப் பரீட்சையையும் எழுதிவிட்டு அதற்கான பெறுபேறுகளையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான பெறுபேறுகளைப் பெற்றிருப்பீர்கள். இந்தப் பெறுபேறுகள் உங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *