ஒரு சமூகத்தின் நஷ்டஈடு.

  • 8

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென்று தனியான வரலாறு கொண்ட நாமும் எமது மூதாதையரும் இந்நாட்டுக்கும் இந்நாட்டு அரசாங்கத்திற்கும் விசுவாசமுடையவர்கள் என்பதற்கு எம் முன்னோர்களே தக்க சான்றாகும். சமையலறை முதல் அரச மருத்துவர்கள் வரை எம் முன்னோரின் நாணயமும் நம்பிக்கையும் இம் மண்ணை அலங்கரித்ததை நாம் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் இன்றைய சூழலில் இந்த பொக்கிஷத்தை தொலைத்து விட்டு நிர்கதியில் இருக்கின்ற சமூகமாகவும். சதாவும் இந்நாட்டில் குற்ற உணர்வோடு வாழுகின்ற சமூகமாகவும் முஸ்லிம்கள் இருப்பதில் 2019.04.21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பாரிய பங்கெடுத்துள்ளது , அதன் ஒரு வருட பூர்த்தியில் முஸ்லிம்களாகிய நாம் எமது தேசத்திற்கு இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு எந்த இடத்திலும் இடமில்லை அது சாந்தியும், சமாதானமும் மிக்க மார்க்கம், மென்மையான மார்க்கம் என்பதை எமது உயர்ந்த செயற்பாடுகளினால் மாத்திரமே உணர்த்த முடியும். அதற்கு இந்த நிர்கதியான அவசரகாலம் தக்க சந்தர்ப்பமாகும்.

தீவிரவாதிகளின் நாசகார செயலால் கரைபடிந்த எமது மார்க்கத்தையும், முஸ்லிம்களின் தோற்றத்தையும் மீட்டெடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இந்த நேரத்தில் இறந்த தமது சொந்தங்களை நினைத்து பாதிக்கப்பட்டவர்கள் கவலையில் இருக்கும் போது அன்பாலும், ஆறுதலான வார்த்தைகளாலும் அவர்களை ஆறுதல் படுத்துவது முஸ்லிம்களையும் இஸ்லாம் மார்க்கம் பற்றிய நல்லெண்ணத்தை மாற்றுமத சகோதரர்களிடத்தில் தோற்றுவிக்கலாம். ஆறுதல் வார்த்தைகளை பதிவிடுதல் அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்தல் போன்ற உயர்ந்த குணங்கள், பண்புகள் போதும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் புரியவைக்க.

இப்படியான செயற்பாடுகளால் சிறந்த புரிந்துணர்வு கட்டியெழுப்பப்படுவதோடு முஸ்லிம்கள் பற்றிய தப்பெண்ணம் மெல்ல நல்லெண்ணமாய் உருவெடுக்கும்.  கடைகள், தொழில்கள் முடக்கப்பட்டு நாடே கொரோனா அச்சத்தில் நிர்க்கதியாக இருக்கும் போது. யுத்த காலத்தில் ஒரு தாவரத்திற்கேனும் தீங்கு விளைவிப்பதை விரும்பாத உத்தம நபியின் மார்க்கம் எந்த விதத்தில் தீவிரவாதத்தை போதிக்கும்..?  மனிதாபிமானத்தை மண்ணெங்கும் விதைத்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை நாமும் இந்த நேரத்தில் ஒரு வேளை சோற்றுக்கேனும் வழியில்லாமல் நிர்கதியில் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது மாபெரும் கொடையாகும். மனிதத்தை காத்து மார்க்கத்தை போதிக்க இறைவன் தந்த வரமே இந்த கரன்டைன் (Quarantine).. கரடுமுரடான உள்ளங்களை மனிதத்தால் வென்றெடுப்போம்.

அன்று தொட்டு இன்று வரை இந்நாட்டுக்காக எம் முன்னோர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். நாம் என்னதான் செய்தோம்..?  மீட்டிப்பார்க்க இதுதான் சந்தர்ப்பம் தாமதம் வேண்டாம். எம் தாய் நாட்டை தாயைப்போல் நேசிப்போம் தீவிரவாதத்தை அது துளிர் விடும்போதே அழித்து விடுவோம் இதுவே மார்க்கத்திற்கும்,  சமூகத்திற்கும், தேசத்திற்கும் முஸ்லிம்கள் இனிவரும் காலங்களில் ஆற்ற வேண்டிய பங்களிப்புகளில் முதன்மையானது. எமது பேச்சும் நடத்தையும் இலங்கைக்கானதாக இருத்தல் முஸ்லிம்களாகிய நாம் தான் சட்டங்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எனவே நாட்டு சட்டங்களை ஏனையோர் போன்று மதிப்பதோடு இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாக்க ஏனையோருடன் கைகோர்த்து சட்டத்தையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதே இப்பொழுது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்பதற்கு எமது பங்களிப்பாகும். நாட்டை அறிதல் என்பது நாட்டு சட்டங்களை அறிதலாகும்.

பயங்கர வாதிகள் அழித்துவிட்டு அழிந்து போவதற்காக வாழ்ந்தார்கள். உலகில் எண்ணற்றவர்கள் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்பதற்காக வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களான நாம் அவ்வாறானவர்கள் அல்ல. வாழவைப்பதற்காக வாழ்வதே உண்மையில் உயர்ந்த வாழ்வாகும். நீதியையும், சமாதானத்தையும், சுதந்திரத்தையும், மனித உரிமையையும். நற்பண்புகள், உண்மைகள், சத்தியங்கள், நிராசையடைந்த உள்ளங்களை, வறுமைப்பட்டோரை, விஷேட தேவையுடையோர் என நாம் வாழவைக்க வேண்டியோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதுவே தூய இஸ்லாம் அதனை சிறந்த முறையில் விளங்கி அழகான முறையில் மக்கள்மயப்படுத்துவதே ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும். இனியும் இப்படியானதொரு தாக்குதல் வேண்டாம் இழப்புக்கள் அளவிடமுடியாததுதான் முஸ்லிம்களை அவர்களின் உயரிய பண்புகளால் மதிப்பிட மீண்டு, ஒரு வழமையாக்க ஒற்றுமையாய் ஒன்றுபடுவோம்.

நன்றி!

M.I.M ISMAIL
Chinafort,
Beruwala.

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென்று தனியான வரலாறு கொண்ட நாமும் எமது மூதாதையரும் இந்நாட்டுக்கும் இந்நாட்டு அரசாங்கத்திற்கும் விசுவாசமுடையவர்கள் என்பதற்கு எம் முன்னோர்களே தக்க சான்றாகும். சமையலறை முதல் அரச மருத்துவர்கள் வரை எம் முன்னோரின்…

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென்று தனியான வரலாறு கொண்ட நாமும் எமது மூதாதையரும் இந்நாட்டுக்கும் இந்நாட்டு அரசாங்கத்திற்கும் விசுவாசமுடையவர்கள் என்பதற்கு எம் முன்னோர்களே தக்க சான்றாகும். சமையலறை முதல் அரச மருத்துவர்கள் வரை எம் முன்னோரின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *