Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கறுப்பு ஜூனுக்கு ஏழாண்டு பூர்த்தி - நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம் 

கறுப்பு ஜூனுக்கு ஏழாண்டு பூர்த்தி – நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம்

  • 93

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021  07 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

குறித்த கலவரத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பலகோடி பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாகின.

இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

2014 இல் இடம் பெற்றது என்ன?

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான 2014 கலவரங்கள் இலங்கையின் தென்-மேற்குப் பகுதியில் களுத்துறை மாவட்டத்தில், அளுத்கமை, பேருவளை, மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களில் 2014 ஜூன் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சமய மற்றும் இன ரீதியாக பெரும்பான்மை கடும்போக்கு சிங்களப் பௌத்தர்களினால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்.

இத்தாக்குதல்களில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிவாசல்கள் ஆகியன தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்பினர் சோனகர்களுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடுத்து கலவரம் வெடித்தது.

பின்னணி

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சிறுபான்மையினமான முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பெரும்பான்மையினத்தவரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடும்போக்குக் கொள்கையுள்ள பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பு இலங்கையின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்புரைகள் செய்து வருகின்றது.

2014 ஜூன் 11 இல் பொசன் பூரணை நாளன்று குருந்துவத்தை சிறீ விஜயராம விகாரையின் பிரதம குருவும் அவரது வாகன ஓட்டியும் தர்கா நகரைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இத்தாக்குதலைக் கண்டித்து அன்று மாலை குருமார் உட்பட சில பௌத்தர்கள் அளுத்கமை நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து அங்கு இரு இனத்தவரிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டது.

இவ்வார்ப்பாட்டம் வன்முறைகளில் முடிந்தது. பௌத்தக் கும்பல் ஒன்று முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை சூறையாடி தீயூட்டின. ஆர்ப்பாட்டக்காரருக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை எறிந்து அவர்களைக் கலைத்தனர்.

2014 ஜூன் 15 இல் பொதுபல சேனா அமைப்பு அளுத்கமை,ன பேருவளை, தர்காநகர் பகுதிகளில் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியது. அளுத்கமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெருந்திரளான சிங்களவர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரர்,

இந்நாட்டில் சிங்களக் காவல்துறையினரும், சிங்கள இராணுவத்தினருமே சேவையாற்றுகின்றனர். இன்று முதல் மரக்காலயரோ (முஸ்லிம்) அல்லது ஒரு பறையரோ ஒரு சிங்களவரைத் தாக்கினால், அது அவர்களது முடிவாக இருக்கும்,” என கூட்டத்தினரின் பலத்த கரகோசத்தின் மத்தியில் எச்சரித்தார்.

கலவரம்

ஆர்ப்பாட்டக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கோசமிட்டவாறு பேரணிகளை நடத்தினர். முஸ்லிம் வீடுகள், மற்றும் ஒரு பள்ளிவாசல் மீது கற்கள் எறியப்பட்டன. பேருந்துகளில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு தாக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் பௌத்தக் கும்பல்களினால் எர்க்கப்பட்டு சூறையிடப்பட்டன. பேருவளையிலும் கலவரங்கள் இடம்பெற்றன. அச்சத்தினால் வீடுகளில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறினர். காவல்துறையினர் அவர்களுக்கு உதவவில்லை என உள்ளூர் வாசிகள் செய்தியாளர்களுக்குக் கூறினர்.

அளுத்கமையில் வெலிப்பிட்டி பள்ளிவாசலில் காவலுக்கு இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் 2014 ஜூன் 16 அதிகாலையில் வாகனத்தில் வந்திருந்த சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு நாட்களில் 80 பேருக்கு மேல் காயமடைந்தனர். காவல்துறையினர் ஒருவரும் காயமடைந்தார். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டு அவர்களின் படக்கருவிகள் சேதமாக்கப்பட்டன.

2014 சூன் 17 அன்று மாவனெல்லை நகரில் பொதுபல சேனா அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக் கூட்டம் ஒன்றுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அரசின் பதில்

காவல்துறையினர் அளுத்கமையில் 2014 ஜூன் 15 மாலை 6:45 மணிக்கும், பேருவளையில் இரவு 8:00 மணிக்கும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். பாதுகாப்புக்காக மேலதிகமாக இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர். உள்ளூர் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

பொலிவியாவில் ஜி77 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த அப்போதைய இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைதி காக்கும் வண்ணம் அங்கிருந்து அறிக்கை கொடுத்திருந்தார். தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும அவர் உறுதியளித்தார்.

நாட்டில் சமயக் குழுக்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை குறிப்பாக கலவரம் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என உள்ளூர் ஊடகங்களுக்கு அரசு அறிவுறுத்தியது.

கண்டனம்

இந்தத் தாக்குதல்கள் குறித்து தனது கவலையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை வெளியிட்டார். அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கனேடிய அரசும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக அவுஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு புதிய பயண ஆலோசனையை வழங்கியது.

கத்தார், குவைத், பாகிஸ்தான், ஈரான், அப்கானித்தான், மலேசியா ஆகிய நாடுகள் இது தொடர்பில் நேரடியாகத் தலையிடுவதாக உறுதியளித்துள்ளன.

முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறும், அது தவறும் பட்சத்தில் இலங்கைக்கான தமது விசா வழங்கல் முறையில் மாற்றம் கொண்டு வருவதாகவும் வங்காளதேசம், ஈரான், இராக், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைத்தீவுகள், நைஜீரியா, பாக்கித்தான், பலத்தீன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் கொழும்பிலுள்ள தமது தூதரகங்களினூடாக இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளதுடன் அவற்றிற் சில நாடுகள் இந்நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் இலங்கையர் தொழில் வாய்ப்புப் பெறுவதில் தாக்கமேற்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளன.

முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இக்கலவரத்தைக் கண்டித்துள்ளதோடு, வன்முறைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியே தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டியது. முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகத் தோன்றுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜூன் 16 இல் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பல சமய, சமூகத் தலைவர்களும் இத்தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இக்கலவரத்தைக் கண்டித்ததுடன் இது அளுத்கமையுடன் மாத்திரம் நின்று விடுமெனத் தாம் கருதவில்லையெனத் தெரிவி்த்தார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜூன் 17 அன்று முஸ்லிம் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அத்துடன் இந்தியாவின் மத்திய அரசாங்கம் இது தொடர்பில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சு, மிகின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பதுடன், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றின.

முஸ்லிம்களின் நிலைப்பாடு

அளுத்கமை சம்பவம் தொடர்பாக இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், “அரசாங்கம் பன்னாட்டு ரீதியில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் தருணத்தில் இச்சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசை இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளி சந்தர்ப்பவாத அரசியலை செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாரில்லை. எனினும் அளுத்கம சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் பதில் நடவடிக்கைகள் குறித்து எமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

2015 இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு உடனடிக்காரணம் இக்கலவரம் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். LNN Staff

Source: Wikipedia & Short News

பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021  07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட…

பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021  07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட…