கொரோனா தொற்று நோய் பாடங்களும் படிப்பினைகளும்.

  • 8

உலகின் பேசு பொருளாக மாறியுள்ள கொரோனா வைரஸ் கோவிட் 19 ஒரு தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது. உலகளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றாமல் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் பொறிமுறையை சுகாதார அதிகார சபைகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது விதியாக்கியுள்ளன. மக்கள் பெரும் பதற்றத்தோடும் பரபரப்போடும் அளவுக்கு மீறிய பீதியோடும் நாட்களை கழித்து வருகிறார்கள்.

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் காத்திரமான பல நடடிவக்கைகளை முன்னெடுத்துள்ளன. மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நமது பொறுப்பு என்ன? என்று சிந்திப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது.

இன்று உலக மக்களை கதிகலங்க வைத்துள்ள கொரோனா தொற்று நோய் நிச்சயமாக இறை நியதிகளில் ஒன்றாகும். அல்லாஹ் தனது அறிவுக்கும் நாட்டத்திற்கும் ஏற்ப, அவன் விதித்துள்ள நியதிகளின் அடிப்படையில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்துள்ளான். அவை யாவும் மனித நலன்களுக்காகவே அமையும். அவற்றுள் சில துன்பம் போன்று காணப்பட்டாலும் மனித சுபீட்சத்திற்காகவே அது அமையும். எனவே அதனை ஒரு சோதனையாக பார்ப்பதே அறிவார்ந்த விடயமாகும்.

இது ஈமானை பலப்படுத்தும் வகையில் இறைவன் வழங்கியுள்ள மறைமுகமான அருளாகும். அல்லாஹ்விடம் திரும்புவது இதன் படிப்பினைகளில் மிக முக்கியமானதாகும்.

சூரா பகரா 154 மற்றும் 155ம் வசனங்கள் இந்த உண்மையை எங்களுக்கு தெளிவாக சுட்டுகின்றன. ‘ நிச்சயமாக நாம் உங்களை சிலவகைப் பயங்களாலும், பட்டினியாலும், செல்வங்கள், உயிர்கள் விளைபொருட்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் சோதிப்போம். பொறுமையை மேற்கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. அவர்கள் தங்களுக்கு ஏதேனும் துன்பங்கள் நேரிடும்போது நிச்சயமாக நாம் அல்லாவுக்கே உரியவர்கள், அவனிடமே நிச்சயமாக தரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம் எனக் கூறுவார்கள்.’

வாழ்வு ஒரு போராட்டம். இது வெகுமதிக்குரிய உலகமல்ல. மாறாக இது சோதனைக்குரிய உலகாகும். அதற்கான பல உதாரணங்களை மேற்கூரிய வசனம் காட்டுகின்றன. துன்பங்களையும் கஷ்டங்களையும் மன உறுதியுடன் பதற்றமின்றி எதிர் கொள்ள வேண்டும் என இந்த வசனம் வழிகாட்டுகிறது. பொறுமை இங்கு முக்கிய ஆயுதமாக இருக்க வேண்டும். நாம் அல்லாபஹ்வுக்குரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்ற அடிப்படை தத்துவமே சோதனைகளை எதிர்கொள்வதற்கான ஆதார சுருதியாக எடுத்துக் காட்டுகிறது.

மனிதன் தன் கரங்களால் செய்கின்றவற்றின் விளைவுதான் உலக ஒழுங்கில் ஏற்படும் சீர்கேடுகளாகும் என்ற இன்னொரு முக்கிய பாடத்தை இந்த நோய் எங்களுக்கு கற்றுத் தருகின்றது. இந்தக் கருத்தை சூரா ரூம் 41வது வசனமும் தெளிவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள்; ‘மானக்கேடான கெட்ட பாவங்கள் பரவும் போது தொற்று நோய்கள், முன்னோர்களுக்கு வராத கொடிய நோய்கள் பரவும்’ என்று கூறியுள்ளார்கள். எனவே பாவங்கள் பல்கிப் பெருகி பிழையான பாதையில் பயணிக்கும் அடியானுக்கு தண்டனையாகவோ அல்லது அவன் மீது கருணை காட்டி அல்லாஹ்வின் பால் திரும்புவதற்கான அல்லாஹ்வின் ஒரு படையாக சோதனைகள் தொற்று நோயாக வரலாம் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

மனிதன் பலவீனமானவன். அவனது இயலாமையை கொரோனா சுட்டிக்காட்டுகிறது. ஒரு கண்ணுக்குத் தெரியாத அற்ப வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கிறது. பெருமைக்குரியன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அவனது அபாரா ஆற்றலும் மகிமையும் நாஸ்திகனின் கண்ணகளை விழிபிதுங்க வைக்கிறது. இது கொரோனா கற்றுத் தரும் மற்றுமொரு பாடமாகும்.

மேலும் இந்த உலக வாழ்வின் யதார்த்தத்தை இது உணர்த்துகிறது. உலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளியாக மரணம் வருகிறது. ஆனால் மனிதன் வாழ்வின் பாதியில் மரணிக்கின்றான். அவனுக்கு இன்னொரு வாழ்வு இருக்கிறது. அங்கு தான் வாழ்கை முழுமை பெரும் என்பதை கொரோனா மனிதனுக்கு சிந்திக்க வைக்கிறது.

அவ்வாறே ஹலால் ஹராம் பேணி வாழ வேண்டும் என்ற வாழ்கைப் பாடத்தை கற்றுத்தருகிறது. இஸ்லாம் சுத்தமான, உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவை உட்கொள்வதையே ஆகுமாக்கியுள்ளது. அசுத்தமான உணவுகளை துள்ளியமாக காட்டித் தந்து அதனை நெருங்கக் கூடாது என வழிகாட்டியுள்ளது.

வாழ்கையில் கொடுக்கல் வாங்கள், ஏனைய தொடர்புகள் யாவும் ஹலால் ஹராம் பேணியாதாக அமைய வேண்டும் என இஸ்லாம் தெளிவாகவே வழிகாட்டியுள்ளது. இதனை மீறும்போது சோதனைகள் வந்து ஞாபமூட்டும் விதமாகவே இறை நியதிகள் உள்ளன.

எனவே கொரோனா ஒரு கொடிய நோய் போன்றே இறை நியதிகளின் படி அது உள்ளங்களுக்கு ஒரு மருந்தாகும். ஏன் எதற்காக இந்த சோதனை என்று நோக்கும் போது வழி பிறழ்வுக்குட்பட்டவனை இறை பாதைக்கு திருப்பும் கருவியாக இந்த தொற்று நோய் அமையலாம். அப்போது கறைபடிந்த உள்ளங்களுக்கு அது காயகல்பமாகவே அமையும்.

கொரோனா தொற்று நோய் ஒரு சோதனை. அது மனித குலத்திற்கு ஒரு தீங்கு அன்று. அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு போதும் தீங்கு வருவதில்லை. மனிதன் பார்வைக்கு தீங்கு போல் காணப்படும் யாவும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதே. உண்மையில் அதில் பொதிந்துள்ளவைகள் மறைவான இறையருளாகவே நாம் விசுவாசிக்க வேண்டும்.

மனித அறிவு அந்த சோதனைக்கு பின்னால் உள்ள ரகசியத்தை அதிகமான சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்வதில்லை. சில சமயம் அதனை புரிந்து கொள்ள நீண்ட காலமெடுக்கலாம். சில போது புரியாமலே மரணித்து விடுகின்றோம். இது தான் யதார்த்தம்.

ஒரு முஃமின் என்ற வகையில் அல்லாஹ் எம்மீது விதித்தவையன்றி வேறு எதுவும் எங்களை பீடிக்காது என்ற அசையாத நம்பிக்கை எமக்குள் வேரூன்றி இருக்க வேண்டும்.

இதனை ஒரு விதிவசமாக பார்த்து அதற்குரிய காப்பு நடவடிக்கை எடுக்காமல் விடுவது மார்க்கப்படி ஒரு குற்றமாகவே அமையும். இறை சோதனைகளின் போது பொறுமையுடன் பௌதிக விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதனுடன் சேர்த்து நிவாரணித்திற்காக பிராத்தனைகளில் ஈடுபடுவதும் வாஜிபாகும்.

பொதுவான வழிகாட்டல்கள்

  1. நாம் இலங்கையர் என்ற வகையில் நமது அரசு அறிமுகப்படுத்தும் வழிகாட்டல்களை நாம் பின்பற்றுவது கண்டிப்பான கடமையாகும். தேசத்தின் மீது நேசம் வைத்துள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் இது ஒரு பொறுப்பான கடப்பாடாகும்.
  2. அரசாங்கம் மக்கள் நலன்களுக்காக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளின் போதும் மிகுந்த பொறுமையுடனும் தியாக சிந்தையுடனும் அதன் வெற்றிக்காக ஒத்துழைப்பது தார்மீக பொறுப்பாகும்.
  3. சமூக வளைத்தளங்களில் உலா வரும் வதந்திகளையும் ஆதாரமற்ற செய்திகளையும் பரப்புவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுவதுடன் மக்கள் மத்தியில் அமைதி, நம்பிக்கை ஊட்டும் செய்திகளை வழங்குவதையே ஆர்வமாக கொள்ளுதல் வேண்டும்.
  4. சகல விடயங்களும் இறை நியதிகளின் படியே நடைபெறுகின்றன. தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் தற்காப்பு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகைகள எடுத்தல், சிகிச்சை செய்தல் யாவும் இறை நியதிகளில் உள்ளதாகும். கொனோர வைரஸ் பீடிக்கப்பட்ட ஒருவர் பொறுமை காத்து பதட்டமின்றி இறைவன் கூலியை எதிர்பார்த்து வாழம் போது அவர் மரணித்தால் கூட தியாகி என்ற உயர்ந்த வெகுமதியையே அல்லாஹ் அவனுக்கு வழங்குவான் என்பதே எமது ஈமானாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் சாப்பாட்டு சாமான்களை சேகரிப்பது அல்ல எமது இலக்கு. நாம் எமது வாழ்கையை சரிபார்க்க வேண்டம். இறைவன் பால் திரும்ப வேண்டும். இறை நெருக்கம் எமது மூச்சாக மாறவேண்டும். அப்படியாயின் பாவங்களை விட்டு விட்டு இறைவனிடம் மன்றாட வேண்டும். பிராத்தனைகளிலும் இஸ்திஃபர், திக்ர் களில் அதிகம் ஈடுபடவேண்டும். காலை மாலை திக்ர்களை தவறாமல் ஒதுவதற்கு பயிற்ச்சி எடுக்க வேண்டும். அல்குர்ஆனுடனான தொடர்பு அதிகரிக்க வேண்ம்.

எப்படி நோய் தடுப்புக்காக பாதுகாப்பு நடடிக்கை எடுக்கின்றோம் அவ்வாறே ஆன்மீக வளர்ச்சிக்காகவும் காத்திரமான நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது கொரோனா நமக்கு தரும் மிகப் பெரும் படிப்பினையாகும்.

யா அல்லாஹ் இந்த கொடிய நோயில் இருந்து மக்களை பாதுகாப்பாயாக.
யா அல்லாஹ் எங்கள் சொந்த நாட்டில் எங்களை பாதுகாப்பாக வாழவைப்பாயா!

முஹம்மத் பகீஹுத்தீன்

உலகின் பேசு பொருளாக மாறியுள்ள கொரோனா வைரஸ் கோவிட் 19 ஒரு தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது. உலகளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றாமல் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல்…

உலகின் பேசு பொருளாக மாறியுள்ள கொரோனா வைரஸ் கோவிட் 19 ஒரு தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது. உலகளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றாமல் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *