சுவனம் வாக்களிக்கப்பட்ட ஜமாத்

  • 46

சுவனம் வாக்களிக்கப்பட்ட ஜமாத்

ஜமாஅத்தே இஸ்லாமியா நீங்கள்? – முதலில் சுவர்க்கம் செல்பவர்கள் நீங்கள்தான்.

இல்லை,

தப்லீக் ஜமாஅத்தினரே, நீங்கள்தான் முதலில் சுவர்க்கம் செல்ல வேண்டும்.

இல்லை,

தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவர்களே, சுவனவாசிகள் நீங்கள் மட்டும்தான்.

இல்லை,

ஸலாமா ஊழியர்களே, சுவனத்திற்கு அருகதையானவர்கள் நீங்கள்தான்.

இல்லை,

தரீக்கா அமைப்பினரே, சுவனம் எழுதப்பட்டது உங்களுக்கு மாத்திரம்தான்.

என அல்லாஹ்வின் வார்த்தை இருக்கப்போவதுமில்லை. நபியவர்கள் கூறிச் சென்றதுமில்லை.

நானும் என்னைத் தொடந்தவர்களும் -அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஆ- என்ற அழகிய வார்த்தையில் ஆயிரம் கருத்துக்களை மொழிந்து சென்றார்கள்.

அப்படித் தொடந்தவர்கள்தான் இமாம் மாலிக் (றஹ்), இமாம் ஷாபிஈ (றஹ்), இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (றஹ்), இமாம் ஹனபி (றஹ்) போன்றவர்கள். அவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளில் மிகச் சொற்பமானதை வைத்துக்கொண்டு நாம் இந்த சமூகத்தை மட்டுமல்ல இந்த மார்க்கத்தையே அசைத்துப் பார்க்கிறோம்.

சற்று ஒரு படி கீழே வந்தால், இமாம் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் (றஹ்), மௌலானா இல்யாஸ் (றஹ்), மௌலானா மௌதூதி (றஹ்), இமாம் ஹஸனுல் பன்னா போன்ற நவீன கால அறிஞர்கள்தான் சமகால இயக்கங்களைத் தோற்றுவித்தவர்கள்.

இவர்களிடையே இருந்த புரிந்துணர்வும் உடன்பாடுகளும் சிறிதளவும் எம்மிடமில்லை என்பதுதான் யாதார்த்தம். அவர்களது இயக்கப் பணியில் இஸ்லாம் வாழ்ந்தது. அதனால் அவர்கள் தொண்டு சிறந்தது. அவர்களின் ஒற்றுமை இன்றுவரை எமக்கு உதாரணம். அதனால் அவர்கள் போற்றப்பட்டார்கள். இன்றும் நினைவுகூறப்படுகிறார்கள். மக்களால் மதிக்கப்படுகிறார்கள்.

எமது பணியில் இயக்கம் வாழ்ந்ததில்லை. இஸ்லாமும் வாழ்ந்ததில்லை. அவர்களிடையே இருந்த ஒற்றுமையைவிட வேற்றுமை அதிகம் எங்களில். அவர்களிடையே இருந்த உடன்பாடுகளைவிட முரண்பாடுகள் அதிகம் எம்மில். அவர்களிடம் இஸ்லாம் வாழ வேண்டும் என்ற மிகப் பெரிய தூரநோக்கு இருந்தது. எம்மிடம், இயக்க வெறியும், தலைமைத்துவ அவாவும், போட்டியும், அற்ப உலக ஆசைகளும் நிலைத்து நிற்கின்றன.

நான் சார்ந்த கொள்கை வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நாம் இன்னொரு கொள்கையை நிச்சயமாக விமர்சிக்க மாட்டோம். எனது ஜமாஅத் என்னில் அழகிய சிந்தனைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் இன்னொரு ஜமாஅத்தை விமர்சிக்கும், மட்டம் தட்டும் சிந்தனையைத் தரவில்லை என்பது பொருள். இந்த இரண்டு போக்கும் ஒரு ஜமாஅத்தில் முக்கிய நிலைப்பாடுகள். அப்படி இல்லையென்றால் எனது ஜமாஅத் பற்றிய பாரிய வாசிப்பு, சுயவிசாரணை இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.

ஒரு ஜமாஅத்திடம் இன்னொரு ஜமாஅத்தை விமர்சிக்கும் மனப்பாங்கு இருக்கும்போது அங்கே இஸ்லாம் வாழவில்லை; இயக்கம் ஆள்கிறது என்பதுதான் நிதர்சனம். அடுத்த அமைப்பை விமர்சிக்கும் மனநிலை என்னிடம் அதிகம் இருக்கிறது என்றால் என்னை வளர்ப்பதில் எனது அமைப்பு தோற்றுவிட்டது. அல்லது நான் இன்னும் பண்பட்டவனாய் மாற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு என்னில் வரவேண்டும்.

எனது ஜமாஅத் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களை ஒருங்கிணைக்கும்போது, திட்டமிடும்போது, செயற்படுத்தும்போது அடுத்த அமைப்பின் பணிகளை, நிகழ்ச்சி நிரலை நான் மனதார பாராட்டவில்லை என்றால், அதனை மதிக்கவில்லை என்றால், அதற்கான உதவிகளை, ஊக்குவிப்புக்களை நான் வழங்கவில்லை என்றால் அல்லாஹ்வும், அவனது தூதரும் என்னில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஷைத்தான் என்னை வழிநடாத்துகிறான். அல்லது அல்லாஹ்வின் திருப்தியைவிட உலக மோகமும், தலைமைத்துவ வெறியும், அற்ப ஆசைகளும் என்னை அசைத்துப் பார்க்கின்றன என்பது யாதார்த்தமான உண்மை.

அல்லாஹ்வின் திருப்தி, அவனது தூதரின் வழிகாட்டல்கள் எம்மில் உண்மையான தாக்கம் செலுத்தும்போது இயக்கம் – இஸ்லாம் – அமைப்பு எங்களை அழகாய் வழிநடாத்தும். என்றாலும் நாம் வைத்திருக்கும் அசட்டுக் காரணங்கள் சில்லரைத் தனமான விளக்கங்கள் எம்மை ஷைத்தானிய சிந்தனயோடு நடக்க வைக்கின்றன. உண்மையை எம் கண்களைவிட்டும் மறைக்கின்றன.

உங்களை வழிநடாத்தும் இயக்கம் ஏனைய இயக்கங்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களைத் தருகிறதா? ஏனைய இயக்கங்களிடையே முரண்பாடுகளுடன் பிரிவினையைப் போதிக்கிறதா? இயக்கங்கள் பற்றிய நல்லெண்ணங்களைக் களைகிறதா?

ஏனைய இயக்கப் பணிகளை, நபர்களை விமர்சிக்க களம் அமைத்துத் தருகிறதா? ஏனைய இயக்க உறுப்பினர்களை சகோதரர்களாக பார்ப்பதைவிட்டும் தடுக்கிறதா? ஏனைய இயக்கங்களை மதிக்கக் கற்றுத் தரவில்லலையா? அல்லது அதனை மட்டம் தட்டுகிறதா?

அப்படியாயின் அழகான ஒரு கொள்கையைத் தேடும் உங்கள் பணிக்கு அல்லாஹ் துணை புரியட்டும். ஏனெனில், “மார்க்கத்தை – தீனை – நிலைநாட்டுங்கள், அதிலே பிரிந்துவிடாதீர்கள்” என ஸூறதுஷ் ஷூறா 13 வசனம் சொல்கிறது.

Dr Jmnasree Naleemi

சுவனம் வாக்களிக்கப்பட்ட ஜமாத் ஜமாஅத்தே இஸ்லாமியா நீங்கள்? – முதலில் சுவர்க்கம் செல்பவர்கள் நீங்கள்தான். இல்லை, தப்லீக் ஜமாஅத்தினரே, நீங்கள்தான் முதலில் சுவர்க்கம் செல்ல வேண்டும். இல்லை, தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவர்களே, சுவனவாசிகள் நீங்கள்…

சுவனம் வாக்களிக்கப்பட்ட ஜமாத் ஜமாஅத்தே இஸ்லாமியா நீங்கள்? – முதலில் சுவர்க்கம் செல்பவர்கள் நீங்கள்தான். இல்லை, தப்லீக் ஜமாஅத்தினரே, நீங்கள்தான் முதலில் சுவர்க்கம் செல்ல வேண்டும். இல்லை, தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவர்களே, சுவனவாசிகள் நீங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *