தலைவர்கள் சமூகத்தைக் கேவலப்படுத்த வேண்டாம்

  • 16

வை எல் எஸ் ஹமீட்

இந்நாட்டில் முஸ்லிம்கள் கௌவரமாக வாழ்ந்த ஒரு சமூகம். இன்று ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற, எள்ளிநகையாடப்படுகின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது. அண்மையில் கம்மன்பில கூட, சில முஸ்லிம் தலைவர்களை அற்பப்பதர் போன்று தூக்கியெறிந்து பேசினார். இவர்கள் இவ்வாறு பேசுவது இதுதான் முதல் தடவையல்ல.

இதற்கு முன்பும் இவ்வாறு கேவலப்படுத்திப்பேசிய நிகழ்வுகள் எத்தனையோ! முஸ்லிம் தலைவர்களை இவ்வாறு தூக்கியெறிந்து பேசுவதுபோல் தமிழ்த்தலைவர்களையோ, மலையகத் தலைவர்களையோ பேசமாட்டார்கள். அத்தலைவர்களும் தனித்துவ அரசியல்தான் செய்கிறார்கள்.

இவ்வாறு சமூகமும் தலைமைகளும் மற்றவர்களால் ஏளனமாக பார்க்கப்படுவதற்கு இத்தலைவர்களும் இவர்களது கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும்தான் பிரதான காரணம்; என்பது மறுக்கமுடியாத உண்மை. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். மொத்த முஸ்லிம் அரசியலையும் படம் பிடித்துக் காட்டுவதற்காகத்தான் “அரசியல்பாதை” என்ற ஓர் கட்டுரைத் தொடரை எழுதிவருகின்றேன். அதில் இந்த விடயங்களை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய நிலைமை என்னவென்றால், தலைவர் அரசுக்கு எதிர்ப்பு; தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் அரசுக்கு ஆதரவு. ஆனால் அவர்கள் தொடர்ந்தும் கட்சிதான். மட்டுமல்ல, அவர்களுக்கு கட்சியில் பதவியுயர்வுகளும் வழங்கப்படும். இது என்ன கொள்கை? என்ன அரசியல்? போதாக்குறைக்கு இந்தக் கேவலத்தை வரவேற்று வாழ்த்துவதற்கும் சிலர். என்ன கோலம். உங்கள் கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் பதவி கொடுங்கள். அதனை நாம் கேள்விக்குட்படுத்தவில்லை. ஆனால் அது சமூகத்தைக் கேவலப்படுத்துவதாக அமையக்கூடாது. இவ்வாறு நடந்துகொண்டால் இந்த தலைமைகளையும் அவர்களைத் தலைவர்களென தலையில் தூக்கிவைத்திருக்கும் சமூகத்தையும் ஏன் மற்றவர்கள் எள்ளிநகையாட மாட்டார்கள்.

ஒன்றில் தலைவர்களும் போய் அரசில் சேருங்கள். உங்களை அரசு ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லையெனில் அரசின் காலில் விழுந்து கதறுங்கள். கௌரவம், தன்மானம் என்ற சொற்கள் தம் அகராதியில் இல்லாதவர்களுக்கு காலில் விழுவதொன்றும் பெரிய விடயமல்ல. அல்லது கைதூக்கியவர்களை விலக்குவதற்கு நீங்கள் ஆயத்தமில்லையெனில் ஆகக்குறைந்தது அவர்களை தனித்து இயங்க விடுங்கள். அல்லது அரசு உங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லையெனி்ல் “எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு ஆதரவு” என்றாவது அறிவித்து விடுங்கள்.

இது என்ன கேவலம். நீங்கள் எதிர்க்கட்சி! உங்கள் பிரதிநிதிகள் ஆளும்கட்சி! ஆனாலும் நீங்களும் அவர்களும் ஒரே கட்சி! அவர்களுக்கு பதவியுவர்வு வழங்குவதும் உங்கள் கட்சி! ஆனாலும் “நீங்களோர் தனித்துவக்கட்சி”

தலைவர்கள், உங்களையும் கேவலப்படுத்தி சமூகத்தையும் கேவலப்படுத்தும் கையாலாத்தன அரசியலை செய்யாதீர்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் உங்களை எப்படிப்பார்ப்பார்கள். நீங்கள் அரசுக்கு எதிரான எதிரணியில். அரசின் சட்டமூலங்களை எதிர்த்து வாக்களிப்பீர்கள். அவர்கள் அரசு ஆதரவு அணியில். இந்நிலையில் நீங்கள் அவர்களுக்கு கட்சியில் பதவியுயர்வு வழங்கினால் “நீங்கள் இ்ரட்டை வேடம் பூணுவதாதக வெளியில் உள்ள அடுத்த சமூகத்தார் நினைக்கமாட்டார்களா? நீங்கள் உண்மையில் எந்தப் பக்கம்? இப்படி செயற்படும்போது உங்களை அடுத்த சமூகத்தவர், அரசியல்வாதிகள் மதிப்பார்களா?

இது வெறுமனே உங்கள் கட்சி விவகாரமல்ல. அவ்வாறாயின் நாங்கள் எழுதவேண்டிய தேவையுமில்லை. இன்று உங்களுடைய தனிப்பட்ட செயல்கள்கூட கவனமாக செய்யவேண்டும். அது சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறது. நீங்கள் சமூகத் தலைவர்கள்

இன்று றிசாட் பதியுதீனைப் பாருங்கள். அவருடைய வீட்டில் நடந்ததைப்போன்று இதுவரை வேறு எங்கும் நடக்கவில்லையா? யாராவது தலைவர்கள் பேசினார்களா? ஆர்ப்பாட்டம் செய்தார்களா? அண்மையில் 15 வயது, 13 வயது சிறுமிகள் பலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட செய்திகளைக் கண்டோம். அச்சிறுமிகளுக்கு நீதிவேண்டும் என யாராவது தலைவர்கள் குரல் கொடுத்தார்களா? ஆர்ப்பாட்டம் செய்தார்களா? ஏன்? சட்டம் தன் கடமையை செய்யும் என்ற நம்பிக்கைதானே அது.
ஏன் றிசாட் பதியுதீனின் விடயத்தில் அந்த நம்பிக்கை இத்தலைவர்களுக்கு இருக்கவில்லை? றிசாட் ஓர் ஆளுந்தரப்பு அமைச்சரென்றாலும் பரவாயில்லை. ஏதோ, அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்பதால் எச்சரிக்கையாக குரல் கொடுத்தோம் எனக்கூறலாம்.

மட்டக்களப்பில் வீீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு

இன்று றிசாட் தனது தடுப்புக்காவல் விடயத்திலேயே எதுவும் செய்யமுடியாத ஒருவராக இருக்கும்போது தடுப்புக்காவலில் இருந்துகொண்டு இச்சிறுமி விவகாரத்தில் என்ன செல்வாக்கு செலுத்திவிட முடியும். இதுவெல்லாம் “எங்கள் பிள்ளைக்கு நீதிகேட்டுத்தான் குரல் கொடுக்கின்றோம். அதிலென்ன தவறு?” என்று கேட்கும் தலைவர்களுக்கு தெரியாதா? தெரிந்திருந்தும் ஏன் குரல் எழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?

இன்று முஸ்லிம் தலைவர்கள் பொதுவாகவும் றிசாட் பதியுதீன் குறிப்பாகவும் தேசியத்தில் என்ன நிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்! என்பது எல்லோர்க்கும் தெரியும். எனவே, அதற்குள் நாமும் ஓர் அரசியலைச் செய்துகொள்வோம்; என்பதுதானே இக்கூக்குரல்களுக்கு காரணம். இவ்வாறான இவர்களை நோக்கிய ஓர் ஏளனப்பார்வைக்கு இவர்களின் கடந்தகால செயற்பாடுகள் காரணம் இல்லை; எனக்கூறமுடியுமா? இவ்வாறான நிலைமைகள் சமூகத்திலும் தாக்கம் செலுத்துவதை நீங்கள் அறியவில்லையா? எனவே, உங்களுடைய தனிப்பட்ட செயற்பாடுகள்கூட கவனமாக கையாளப்படவேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் U L M மொஹீடீன் அவர்கள் பழக்கதோசத்தில் திருமதி பண்டாரநாயக்காவை சிலாகித்துப் பேசியமைக்காக அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி, உயர்பீடத்தின் முன்னால் அவரை விசாரணை செய்து அவர் மன்னிப்புக்கோரி மீண்டும் கட்சியில் சேர்த்த வரலாறைக்கொண்ட கட்சி இது.

அந்த தலைவர் அமர்ந்த கதிரையில் அமர்ந்திருக்கிறீர்கள்; என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

 

வை எல் எஸ் ஹமீட் இந்நாட்டில் முஸ்லிம்கள் கௌவரமாக வாழ்ந்த ஒரு சமூகம். இன்று ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற, எள்ளிநகையாடப்படுகின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது. அண்மையில் கம்மன்பில கூட, சில முஸ்லிம் தலைவர்களை அற்பப்பதர் போன்று…

வை எல் எஸ் ஹமீட் இந்நாட்டில் முஸ்லிம்கள் கௌவரமாக வாழ்ந்த ஒரு சமூகம். இன்று ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற, எள்ளிநகையாடப்படுகின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது. அண்மையில் கம்மன்பில கூட, சில முஸ்லிம் தலைவர்களை அற்பப்பதர் போன்று…