Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
"பிக்ஹுல் இஃதிகாப்" கொரோனா காலத்தில் இஃதிகாபின் நடைமுறை வடிவம் 

“பிக்ஹுல் இஃதிகாப்” கொரோனா காலத்தில் இஃதிகாபின் நடைமுறை வடிவம்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உள்ளே:

  1. இஃதிகாபின் மகிமையை கூறும் ஹதீஸ்கள்.
  2. இஃதிகாப் இருப்பதற்கான காலம்.
  3. இஃதிகாப் இருக்கும் இடங்கள்.
  4. பெண்கள் இஃதிகாப் இருத்தல்.
  5. கொரோனா காலத்தில் ஆண்கள் வீட்டில் இஃதிகாப் இருத்தல்.
  6. இஃதிகாப் ஏன் ஏதற்கு?
  7. இஃதிகாபை முறிக்கும் கருமங்கள்.
  8. இஃதிகாப் இருப்பவரை பாதிக்காத செயற்பாடுகள்.

ஒரு மனிதன் தனது பொது வாழ்வின் சந்தடிகளை விட்டுத் தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தலே இஃதிகாப் என்பதாகும்.

இது ஒரு சுன்னாத்தான அமலாகும். குறிப்பாக ரமழான் மாதத்தில் அதி கூடிய முக்கியத்துவம் செலுத்தப்பட வேண்டிய ஒரு வணக்கமாகும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இஃதிகாப் என்ற வணக்க வழிபாட்டை கடைப்பிடித்து வந்ததாக சூரா பகராவின் 125ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது. அவ்வாறே மர்யம் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஃதிகாப் இருந்த வரலாற்றை சூரா ஆல-இம்ரான் எடுத்தியம்புகிறது. எனவே இஃதிகாப் என்பது முன்னைய நபிமார்கள் காலம் தொடக்கம் வாழையடி வாழையாக வழிபட்டுவந்த ஒரு மகத்தான வணக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இஃதிகாபின் மகிமையை கூறும் ஹதீஸ்கள்.

இஃதிகாப் இருப்பது நபிகளார் விட்டுச் சென்ற மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு சுன்னத்தான அமலாகும். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘இது குறித்து வந்த ஹதீஸ்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்களின் நடைமுறைகளை கூர்ந்து அவதானிக்கும் போது முஸ்லிம்கள் இதனை எப்படி விட்டு விட்டார்கள் என்பது எனக்கு பெரும் வியப்பாகவே உள்ளது. அபூபக்கர் பின் அப்துல் ரகுமான் (ரழி) அவர்களைத் தவிர வேறு யாரும் இஃதிகாப் இருப்பதை விட்டதாக நான் கண்டதே இல்லை. நிச்சயமாக இது கஷ்டம் என்று கருதியே முஸ்லிம்கள் விட்டு விட்டிருக்க வேண்டும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ரமழான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாப் இருந்தார்கள் என ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

ரமழான் கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புகாரி,முஸ்லிம்)

இஃதிகாப் இருப்பதற்கான காலம்.

இஃதிகாப் இருப்பதற்கென்று குறிப்பிட்ட காலம் கிடையாது. எப்போதும் இருக்கலாம். எவ்வளவு நேரமும் இருக்கலாம். இஃதிகாப் இருக்கும் நிய்யத்தோடு கொஞ்சம் நேரம் பள்ளிவாசலில் தங்கியிருந்தாலும் அது நிறைவேறும்.

அவ்வாறே ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்த நிலையில் இடையில் முறித்துக் கொள்ளவும் முடியும்.

ஆனால் இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்.

ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்தால் அவர் மஃரிப் நேரத்துடன் ஆரம்பித்து அல்லது பஜ்ருத் தொழுகையுடன் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.

‘நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பதற்கு நாடினால் பஜ்ர் தொழுகையை முடித்தவுடன் தனக்குரிய பிரத்தியேகமான இடத்தில் ஒதுங்கிவிடுவார்கள்.’ என்று வந்துள்ள ஹதீஸ் இஃதிகாப் இருப்பவர்கள் சுபஹ் தொழுகைக்குப் பின் தனியான இடமொன்றை ஒதுக்கி அதில் தரிப்பதும் நபி வழி என்பதை காட்டுகின்றது.

இஃதிகாப் இருக்கும் இடங்கள்

இஃதிகாப் இருப்பதற்கு பொருத்தமான இடம் பள்ளிவாசலே என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. ‘இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (சூரா பகரா:187) இந்த அல்குர்ஆன் வசனம் இஃதிகாப் இருக்குமிடம் மஸ்ஜிதுகள் என்றே கூறுகிறது.

எனவே ஜும்மாபள்ளியில் தான் இஃதிகாப் இருக்கவேண்டும் என்றோ அல்லது மக்கா, மதீனா, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளிவாசல்களில் மாத்திரமே இஃதிகாப் இருக்க முடியும் என்றோ கூறமுடியாது. ஏனைய பள்ளிவாசல்களை விட இந்த மூன்று பள்ளிவாசல்களும் மிகவும் சிறப்புக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் போன்றோரின் கருத்துப் படி ஐவேளை தொழுகை நடைபெறுகின்ற எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். இமாம் ஷாபிஈ, இமாம் மாலிக் போன்றோரின் கருத்துப்படி எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். அங்கே ஐவேளையும் தொழுகை நடைபெற வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. ஆனால் ஜும்மா தொழுகை நிறைவேற்றப்படும் பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறந்ததாகும். காரணம் ஜும்ஆ தொழுகைக்காக வெளியேறிச் செல்லும் தேவை கூட ஏற்படாது.

இன்னும் சில அறிஞர்கள் இதற்கு புறம்பாக மஸ்ஜிதுகள் தவிர உள்ள ஏனைய இடங்களிலும் இஃதிகாப் இருக்க முடியும் என அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். மாலிக் மத்ஹப்பை சேர்ந்த சட்டக்கலை வல்லுனரான அறிஞர் முஹம்மத் பின் உமர் (266ஹி – 314ஹி) அவர்கள் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலும் இஃதிகாப் இருக்கலாம் என அறிவித்துள்ளார். ஷாபி இமாமின் பழைய கூற்றின் படி ஆண்களும் பெண்களும் வீட்டில் இஃதிகாப் இருப்பதே மிகவும் சிறந்தது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த முடிவு மாலிக் மத்ஹபின் ஒரு கருத்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பத்ஹுல் பாரி 2ஃ272)

ஆனால் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்த ஒருவர் தன்மீது வாஜிபான அந்த இஃதிகாபை பள்ளிவாசலில் தான் நிறைவேற்ற வேண்டும் எனவும் இவர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர்.

பெண்கள் இஃதிகாப் இருத்தல்

ஏற்கனவே இஃதிகாபின் மகிமை பற்றிய கூறிய ஹதீஸுக்கு ஒப்ப ஆண்களைப் போன்றே பெண்களும் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பது சுன்னத்தான ஒரு அமலாகும். இது பொதுவான சட்ட ஒழுங்காகும்.

ஆனால் பெண்கள் தங்களது வீடுகளில் தொழுகைக்காக ஒதுக்கியுள்ள அறைகளில் இஃதிகாப் இருக்க முடியும் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இது கொரோனா போன்ற தொற்று தொற்று நோய்க் காலங்களில் விதிவிலக்காக சொல்லப்பட்ட அல்லது நெருக்கடி நிலமைகளை கருத்திற்கொண்டு முன்வைக்கப்பட்ட பத்வா அல்ல. பொதுவாக பெண்கள் எல்லாக் காலங்களிலும் வீட்டில் இஃதிகாப் இருக்க ஷரீஆ சட்டத்தில் இடம்பாடு உள்ளது என்பதையே அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புனித ரமழான் மாதத்தின் மகத்தான பாக்கியங்களை அடைந்து கொள்வதில் பெண்களுக்கான வாய்ப்பு வசதிகள் மூடப்படக்கூடாது என்பதே இந்த அபிப்பிராயத்தை கொண்டுள்ள அறிஞர்களின் நியாயமாகும்.

இறைதொடர்பும், அல்லாஹ்வை நெருங்குவதும் உளத்தூமையும் இஃதிகாபின் பிரதான இலக்குளாகும். பெண்களின் தொழுகை அறையில் இஃதிகாப் இருப்பதால் இந்த நோக்கம் நிறைவேறுகிறது.

ஹனபி மத்ஹபினர் பெண்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதைவிட தங்களது வீட்டு தொழுகை அறையில் இருப்பதே மிகவும் சிறந்ததாகும் என்று கூறியுள்ளனர். ஷாம் தேசத்தின் புகழ்பூத்த இஸ்லமிய சட்டத்துறை பேரறிஞரான இப்னு ஆபிதீன் (1198ஹி – 1252ஹி) அவர்கள் தனது ‘ரத்துல் முஹ்தார்’ எனும் நூலில் ‘பெண்கள் அவர்களது வழமையான தொழும் இடத்தில் இஃதிகாப் இருப்பதே விரும்பத்தக்கதாகும்’ என்று கூறியுள்ளார்கள்.

உம்மு ஹுமைத் என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் உங்களுடன் தொழுவதற்கு விரும்புகின்றேன் என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் வீட்டில் தொழுது கொள்வதே சிறந்தது என்று கூறினார்கள். (அஹ்மத், இப்னு ஹிப்பான, அல்பானி (ரஹ்) இந்த ஹதீஸ் ஆதராபூர்வமானது என்று அறிவித்துள்ளார்.) மஸ்ஜித் நபவியில் இறை தூதரின் பின்னால் நின்று தொழுவதை விட பெண்கள் வீட்டில் தொழுவதே சிறப்பானது என நபிகளார் உபதேசித்துள்ளாகள்.

அபூதாவூதில் பதியப்பட்டுள்ள மற்றுமொரு ஸஹீஹான ஒரு ஹதீஸில் ‘பெண்கள் வீட்டின் சாலைகளில் தொழுவதை விட தங்களது அறைகளில் தொழுவது சிறந்ததாகம். மேலும் அவர்கள் அறைகளில் தொழுவதை விட தங்களின் பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் தொழுவது சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் வீட்டை ஒரு மஸ்ஜிதாக எடுப்பதற்கே வழிகாட்டியுள்ளார்கள். எனவே பெண்கள் தங்கள் வீட்டு மஸ்ஜிதில் இஃதிகாப் இருப்பதும் ஆகுமானதே என்ற கருத்தை அறிஞர்கள் முன்மொழிந்துள்ளார்கள்.

கொரோனா காலத்தில் ஆண்கள் வீட்டில் இஃதிகாப் இருத்தல்.

ஆண்களும் பெண்களும் பொதுவாக பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதே ஏற்றமானது என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். ஆனால் பெண்கள் தங்களது வீடுகளில் உள்ள மஸ்ஜிதில் இஃதிகாப் இருப்பதற்கும் அனுமதியுண்டு என்பதையும் கண்டோம்.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஆண்களும் வீட்டில் இஃதிகாப் இருக்க முடியாதா என சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர். இன்று கொரோனோ தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக தனிமைப்படுவது கண்டிப்பான வழிகாட்டலாக உள்ளது. பள்ளிவாசல்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நோய் பரவமால் வீட்டில் ஒரு வகையான இஃதிகாப் தான் இருக்கின்றோம். அதன் நோக்கம் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதே. இந்த சமயத்தில் ரமழான் கடைசிப் பத்தின் விசேட அமல்களில் ஒன்றான இஃதிகாபின் நோக்கத்தை வீட்டில் இருந்தவாறே அடைய முடியாதா என்று சிந்திப்பபதும், இறைதொடர்பையும் நெருக்கத்தையும் வேண்டி வீட்டிலேயே தனிமைப்பட முடியாதா? என்று சிந்திப்பதும் பிழையல்ல.

அல்லாஹ் ஏவியுள்ள விடயங்களை மனிதன் தனது சக்திக்கு உட்பட்ட விதத்தில் நிறைவேற்றுமாறே எதிர்பார்க்கின்றான். அவனுடைய சக்திக்கு மேல் அவனுக்கு பொறுப்பு சாட்டப்படுவதில்லை. எனவே செய்யுமாறு வேண்டப்பட்ட ஒரு விடயத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது கஷ்டமாக இருந்தால் அதனை முடியுமான இலேசான முறையில் செய்வதையே இறைவன் விரும்புகிறான்.

எனவே தற்போதைய நிர்ப்பந்த சூழ்நிலை காரணமாக ஆண்கள் வீடுகளில் உள்ள மஸ்ஜிதுகளில் இஃதிகாப் இருப்பதற்கு பயன் படுத்தலாம் என அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனார்.

மாலிக் மத்ஹப் அறிஞர்களின் கருத்துப்படி ஆண்கள் பெண்கள் வித்தியாசமின்று வீட்டில் இஃதிகாப் இருக்லாம் என்று ஒரு அபிபிப்பிராயம் ஏற்கனவே உள்ளது.

எனவே மேலே கூறிய இஃதிகாபின் ஒழுங்குகளை பேணி வீட்டில் தனித்திருப்பதன் மூலம் இறைவனை நெருங்குவதற்காக எடுக்கும் முயற்சிகள் ஆகுமானதே என்ற முடிவும் காலத்திற்கு பொருத்தமாகவே அமைகிறது. இந்த கருத்தை கலாநிதி அக்ரம் கஸ்ஸாப் அவர்கள் தனது ஆக்கத்தில் ஆதரங்களுடன் விளக்கியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘வீட்டினுள்ளே பிரத்தியேக மஸ்ஜிதுகளை நிர்மானித்து அதனை சுத்தமாகவும் மணம் கமழக் கூடியதாகும் பேணி வருமாரு கட்டளையிட்டார்கள்’ (அஹ்மத் – அல்பானி ஸஹீஹ் என கூறியுள்ளார்)

உண்மையில் இந்த வீட்டு மஸ்ஜித் திட்டம் என்பது குடும்பத்தினர்கள் தொழுகையை பேணுவதற்காக நபிகளார் வழங்கிய வழிகாட்டலாகும். எனவே வீட்டில் உள்ள தொழுகையறை இஃதிகாப் இருப்பதற்கும் பயன்படுத்தலாம் என சிந்திக்க முடியும்.

வீட்டில் பிரத்தியேக அறையொன்றை ஒதுக்க இடவசதி இல்லாதவர்கள் வீட்டின் எந்தவொரு இடத்திலும் இஃதிகாப் நிய்யத்தோடு தனித்திருந்து அந்த இபாதத்தை நிறைவேற்றுவதும் ஆகுமானதே.

இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் சமூகத்திற்கு அருளாகவே உள்ளன. நெருக்கடியான சந்தர்பங்களில் பரந்த விரிந்த பாதைக்கு அது வழிகாட்டுகின்றது. எனவே கால சூழ்நிலைகளுக்கு எற்ப அந்த கருத்து வேறுபாட்டின் உச்ச பயனை அடைவது எமது கடமையாகும்.

இஃதிகாப் ஏன் ஏதற்கு

மனித உள்ளம் அல்லாஹ்வை நோக்கி பயணிப்பது ரப்பானிய பயணமாகும். அந்த ரப்பானிய பயணத்தை மேற்கொண்டு இறை தொடர்பை அதிகரித்து, உள்ளத்தை சீர் செய்து கொள்வதே இஃதிகாபின் மிகப் பிரதான நோக்கமாகும். அவ்வாறே கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பதால் புனித லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும். மேலும் உலக விவகாரங்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டு பற்றற்று வாழ பழுகுவதுடன் ஆசைகளை விட்டு தூரமாகி நோன்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் இஃதிகாப் உதவுகிறது.

இந்த இலக்குகளை வீட்டு மஸ்ஜித்களிலும் அடைவது சாத்தியமே. இங்கு மனைவி மக்களை விட்டும் ஓதுங்கி தனிமையில் இருப்பதும், சகல தொடர்பு சாதனங்களின் பாவனைகளை துண்டித்துக் கொண்டு இறை தொடர்பை வலுப்படுத்துவதற்கான தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்பு போன்ற முயற்தசிகளில் ஈடுபடுவதே முக்கியமாகும்.

இஃதிகாபை முறிக்கும் கருமங்கள்.

எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே இஃதிகாப் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுதல், மயக்கம் அல்லது மனநோய் காரணமாக புத்தி நீங்குதல், ஹைழ், நிபாஸ் ஏற்படுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய விடயங்கள் இஃதிகாபை முறிக்கும் கருமங்களாகும்.

இஃதிகாப் இருப்பவரை பாதிக்காத செயற்பாடுகள்

தேவைக்காக இஃதிகாப் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது இஃதிகாபை பாதிக்காது. நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் தேவையின் நிமித்தம் நபியவர்களிடம் வந்த அவர்களது மனைவி ஸபிய்யா (றழி) அவர்களை வீடுவரை சென்று வழியனுப்பினார்கள்.

முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல், இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடுவதும் இஃதிகாபை முறிப்பதில்லை.

உண்ணுதல், பருகுதல், தூங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வது இஃதிகாபில் எந்ப பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அவ்வாறே வீட்டு மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்கும் போது பெண்கள் சமயல் வேலைகளுக்காக செல்வது இஃதிகாபை பாதிக்க மாட்டாது. பொதுவாக பள்ளிவாசல்களிலும் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் ஏற்பாடு செய்வது வழமையானதே.

சில ஸஹாபாக்கள் இஃதிகாபின் போது சமூக நலப் பணிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள்.

இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது. உண்மையில் இஸ்லாத்தில் துறவரம் என்பது கிடையாது. இஃதிகாப் என்ற பெயரில் சமூக உறவை முற்று முழுதாக அறுத்துவிடக் கூடாது என்பதையே இந்த செயற்பாடுகள் காட்டுகின்றன. இஃதிகாப் அல்லாஹுத்தஆலாவை நெருங்கும் முக்கியமான வணக்கங்களில் ஒன்றாகும். எனினும் இஸ்லாத்தின் தனிப்பண்புகளில் ஒன்றான சமநிலை பண்பை பேணும் வகையில் தான் இஃதிகாபுக்கான நபகளாரின் வழிமுறை அமைந்துள்ளது.

முஹம்மத் பகீஹுத்தீன்




yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

உள்ளே: இஃதிகாபின் மகிமையை கூறும் ஹதீஸ்கள். இஃதிகாப் இருப்பதற்கான காலம். இஃதிகாப் இருக்கும் இடங்கள். பெண்கள் இஃதிகாப் இருத்தல். கொரோனா காலத்தில் ஆண்கள் வீட்டில் இஃதிகாப் இருத்தல். இஃதிகாப் ஏன் ஏதற்கு? இஃதிகாபை முறிக்கும்…

உள்ளே: இஃதிகாபின் மகிமையை கூறும் ஹதீஸ்கள். இஃதிகாப் இருப்பதற்கான காலம். இஃதிகாப் இருக்கும் இடங்கள். பெண்கள் இஃதிகாப் இருத்தல். கொரோனா காலத்தில் ஆண்கள் வீட்டில் இஃதிகாப் இருத்தல். இஃதிகாப் ஏன் ஏதற்கு? இஃதிகாபை முறிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *