Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் மத்ரஸாக்கள் உருவாக்கப்பட வேண்டும் - மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம் 

பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் மத்ரஸாக்கள் உருவாக்கப்பட வேண்டும் – மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பிரச்சினைகளுக்குத் தீர்வு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும். பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்புகள் மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று பேருவளையை சேர்ந்த மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம் கூறினார்.

கேள்வி: சஹாபாக்கள் மத்தியிலும் கருத்து முரண்பாடு நிலவியுள்ளதல்லவா?

பதில்: ஆம், ரசூல் (ஸல்) அவர்களுடைய காலத்திலேயே கருத்து முரண்பாடு இருந்துள்ளது. கருத்து முரண்பாடு நிலவும் போதெல்லாம் உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்காக ரசூல் (ஸல்) அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த குழுவொன்றை அமைத்து இருந்தார்கள். அதனால் முரண்பாடு வியாபித்து செல்லாது உடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் பிளவு ஏற்பட வாய்ப்பளிக்கப்படவில்லை. கருத்து வேறுபாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு அடிப்படை விடயத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். சுமார் நான்கு, ஐந்து தசாப்தங்களுக்கு இடையே தோன்றிய அமைப்புகள் மத்தியில்தான் இந்த முரண்பாடும் பிரிவினைகளும் தலைதூக்கியுள்ளன.

கேள்வி: அன்று நிபுணர்கள் குழுவொன்று இருந்தது போல இங்கு அகில இலங்கை உலமா சபையுள்ளதல்லவா?

பதில்: எங்களிடையே உருவாகியுள்ள ஒவ்வொரு முகமும் தம் கொள்கையை நிலைநிறுத்திக் கொள்ளவும், தம்மை வளர்த்துக் கொள்ளவும் தமக்கென தனியான மத்ரஸாக்களை அமைத்துள்ளன. அந்த மத்ரஸாக்களிலிருந்து கற்று வெளியாகும் உலமாக்களும் தமது பாதையே சரியென்றும், ஏனையவை பிழையென்றும் விதண்டாவாதத்தில் ஈடுபடுவதால் சாதாரண மக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். எதிர் தரப்பைச் சேர்ந்தோர் உலமா சபையையும் அதன் உயர் மட்டத்தில் உள்ளோரையும் விமர்சிக்கின்றனர். தத்தமது இணையத் தளங்கள் ஊடாக விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருவதையும் அண்மைக் காலங்களில் அவதானித்து வருகிறோம். தராதரம், அந்தஸ்து பாராது சர்வ சாதாரணமாகவே விமர்சிக்கும் நிலைமை உள்ளது.

கேள்வி: இந்நிலையை மாற்றியமைக்க நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: ஆசியா கண்டம் உள்ளிட்ட கீழைத்தேய நாடுகளில் இன்று இஸ்லாத்தின் வளர்ச்சி வீதம் குறைந்து கொண்டு போகிறது. ஏனெனில் இத்தகைய முகாம்களுக்கிடையிலான மோதல்கள் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன. முஸ்லிம்கள் மத்தியிலும் இஸ்லாமிய வழிமுறைகள் முறையாகப் பேணப்படுவதில் சில குறைபாடுகள் நிலவுகின்றன.

எனவே இவர்களது இவ்வாறான வாழ்வியல் முறையைமையைப் பார்த்து இஸ்லாத்தில் இணையும் வீதம் குறைந்து வருகிறது. இதற்குப் புறம்பாக ஐரோப்பா உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகளைக் கற்பதன் மூலம் அதனால் ஈர்க்கப்பட்டும் கவரப்பட்டும் இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். முகாம் மத்ரஸாக்களை விடுத்து எல்லா மத்ரஸாக்களிலும் நவீன காலத்துடன் போட்டி போடும் முறையில் பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் மத்ரஸாக்கள் உருவாக்கப்பட்டு, செயற்பட வேண்டும்.

இன்று காலத்தின் தேவையை விடவும் உலமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மத்ரஸாக்களில் இருந்து வெளியாகும் உலமாக்கள் வேலையின்றித் திண்டாடும் நிலை உருவாகியுள்ளது.

எனவே சகல மத்ரஸாக்களிலும் மார்க்கப் போதனையோடு தொழிற்துறைக்கான கல்வியும் போதிக்கப்பட வேண்டும். நவீன காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் கல்வியும் மத்ரஸாக்களில் புகுத்தப்பட வேண்டும்.

கேள்வி: இன்று பிற சமூகத்தவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: எமது உரிமைகளை நாம் எவ்வாறு பேணுகின்றோமோ அதே போன்று பிற சமூகத்தவர்களது உரிமைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். எமது சகல நடவடிக்கைகளிலும் இஸ்லாம் பிரதிபலிக்கச் செய்யப்பட வேண்டும்.

கேள்வி: இளம் வயதிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள உங்களைப் பற்றிக் கூறுங்கள்…

பதில்: பேருவளை மககொடயை சேர்ந்த அபுல் அஸாஹிம் அஸ்மா ஹுஸைனா தம்பதியின் பிள்ளையாக 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி பேருவளையில் பிறந்தேன். பேருவளை இஸட்.ஏ.எம். ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்தேன்.

அஷ்ஷெய்ஹ் ஹம்ஸா பின் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிமின் வழிகாட்டலில் ஷாதுலிய்யா தரீக்காவின் ஆத்மீக ஈடுபாடுகளில் ஆர்வம் காட்டலானேன். அச்சந்தர்ப்பத்தில் 1989 இல் கெச்சிமலையில் ஹம்ஸா ஆலிமினால் அல் அஷ்ரபியா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதில் முதலாவது மாணவனாக இணைந்து கல்வியைத் தொடர்ந்தேன். அங்கு ஆறு வருடங்கள் கற்றுக் கொண்டிருக்கும் போது எகிப்து அல் அஸ்ஹர் சர்வகலாசாலையில் புலமைப்பரிசில் கிடைத்து, 1996 இல் அங்கு பயணமானேன். அங்கு இஸ்லாமியக் கல்வியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றேன். 2003ஆம் ஆண்டு மலேஷிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கல்வியியல் துறையில் முதுமாணி பட்டம் பெற்றேன்.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி, பொருளியல் துறையில் மற்றொரு முதுமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டேன். 2012 இல் மலேஷியா இஸ்லாமிய வங்கியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். அதன்போது மலேஷியா விஞ்ஞான சர்வகலாசாலையில் கலாநிதி பட்டத்திற்கான பிரவேசம் கிடைத்தது. அங்கு பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினேன். மலேஷியாவில் 2019 இல் எனக்கு கலாநிதி பட்டம் கிடைத்தது.

இங்கு நான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவுள்ளேன். இங்குள்ள கல்வி நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். இலங்கையின் முதலாவது பள்ளிவாசல் எனப் போற்றப்படும் பேருவளை மஸ்ஜிதுல் அப்ராரின் நிர்வாகக் குழுத் தலைவராக அண்மையில் நியமனம் பெற்றேன்.

பேருவளை  பீ.எம். முக்தார்

பிரச்சினைகளுக்குத் தீர்வு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும். பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்புகள் மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று பேருவளையை சேர்ந்த மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம் கூறினார். கேள்வி: சஹாபாக்கள்…

பிரச்சினைகளுக்குத் தீர்வு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும். பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்புகள் மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று பேருவளையை சேர்ந்த மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம் கூறினார். கேள்வி: சஹாபாக்கள்…