Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
போதையால் மாறிய‌ பாதை (தொடர் 2) 

போதையால் மாறிய‌ பாதை (தொடர் 2)

  • 82

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இவ்வளவு சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை, இப்படியே தொடர்ந்து சென்றிருந்தால் இன்று உலகின் மிகப்பெரிய கிளப்களில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு இலங்கை வீரனாக என்னைப் பார்த்து பெருமைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்!

ஆனால் எனது தலைவிதி, இல்லை. எனக்கு நானே செய்து கொண்ட சதி, இன்று உங்களிடம் எனது கதையைக் கூறிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு கருப்புப் பக்கம் இருக்கும். யாருக்கும் தெரியாது அவனுக்குள்ளே அது புதைக்கப்பட்டிருக்கும்.

“பட்ட பின்னர் தான் புத்தி வரும்” என்பர். புத்தி வந்த பின், விட்ட தவறை நினைத்து நினைத்தே கவலையுடன் காலம் கழியும். எனது கருப்புப் பக்கத்தை உங்களுக்காக சற்றுத் திறந்து காட்டுகிறேன்.

நான் ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்களில் கற்றுக் கொண்டிருந்த போதே, பெரிய நாநாமார்களுடன் பழக ஆரம்பித்தேன். அவர்களது அணிக்காக உதைபந்தாட்டப் போட்டிகளில் அழைத்துச் செல்வதினூடாகவே அந்தப் பழக்கம் ஏற்பட்டது.

ஒரு கூட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். நல்லவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைத்தவர்களே பாக்கியசாலிகள் ஆவார்கள்.

அந்த நாநாமார்களில் ஓரிருவர் சிகரெட் பிடிக்கும் பழக்கமுடையவர்கள். அவர்கள் எமது வீட்டருகே வசிப்பவர்கள் என்பதால் அவர்களுடனேயே அதிகமாகப் பழக வேண்டியிருந்தது. ரஜினி ஸ்டைலாகப் பிடித்த சிக்ரெட்டும், கமல் பான்பராக் பீடாவைக் கடித்துத் துப்பிய சீன்களும் கண்ணுக்குள்ளே இருந்த காலமது.

கூடவே, விஜய் அஜித் சூர்யா என அனைத்து ஹீரோக்களும் சிக்ரெட்டுக்களைப் பிடித்து, ஸ்டைலாக புகை விட்டு கெத்தாக நடந்து வரும் போதெல்லாம் நமக்கும் அது போலவே செய்ய ஆசை தூண்டிய அறியாமைக் காலமது.

“அமான்! ஒரு ஷொட்?” ஒருநாள் ஒரு நாநா கேட்க,

வாப்பா சிகரெட் வாங்க கடைக்கு அனுப்பிய போது, வாங்கிய சிகரெட்டை முகர்ந்து முகர்ந்து பார்த்துப் பரவசமடைந்திருந்தவனிடம் என்ன கேள்வி கேட்டான். ப்ளடி ராஸ்கல்ஸ்.

எடுத்தேன் ஒரு எடு. வாய்ல வெச்சேன் ஒரு வை. இழுத்தேன் ஒரு இழு. வாயைத் தாண்டி, தொண்டையினூடு முதல் தடவையாக சிகரெட் புகை செல்லுது. சுவர்க்கமே கண்ணுல தெரியுது. இழுத்த இழுவையில் புகை அடி வயிறு வரை சென்று விட்டதால், புரை ஏறி கக்க ஆரம்பித்து விட்டேன்.

“அடேய் மெதுவா டா” ஒரு நாநா கத்த, நான் மெதுவாக இழுத்தேன். ரசித்தேன். சுவனக்காற்றை சுவாசிப்பதென நினைத்தேன். அது சுவனக்காற்றா இல்லை, மரணக்காற்றா எனப் பிரித்தறியும் பக்குவம் அந்த நாட்களில் இல்லாது போனது பேரவலமே. புட்போல் விளையாடிய பின் ஒரு சிகரெட் அடித்தால் தான் தெம்பு வரும் எனும் நிலை உருவானது.

சிகரெட் மீது மோகம் ஏற்பட்டதால், வாப்பாவின் சேர்ட் பொக்கட்டில் இருந்து பணத்தைத் திருட ஆரம்பித்தேன். நான் திருடுவது தெரிந்தும் வாப்பா எதுவும் சொல்ல மாட்டார். என் மேல் அவருக்கு இரக்கம் அதிகம்.

நாட்கள் நகர நகர மூக்குத்தூளை வாய்க்குள் வைத்து போதையேற்றிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. புட்போல் பயிற்சியின் போதும் சிலவேளைகளில் வாயில் மூக்குத் தூள் இருக்கும்.
இந்தப் புதுப்பழக்கத்தினால் ஏதோவொரு உற்சாகத்தை உணர்ந்தேன்.

எனக்கு படிப்பில் ஈடுபாடு இல்லாததாலும், வீட்டாருக்கும் படிப்புக்கும் கிலோமீட்டர் கணக்குத் தொலைவு என்பதாலும் இரவு நேரங்களில் வீட்டில் சும்மா தான் இருப்பேன். அந்த நேரங்களில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடித்துப் பிடித்துப் பேசிக்கொண்டிருப்போம். பாடசாலை நேரத்தில் கூட‌ இவ்வாறான செயற்பாடுகள்‌ நடைபெற்றதுண்டு.

இவ்வாறு இருக்கும் போது தான் நான் மலேசியாவுக்கு இலங்கையணி சார்பாக விளையாடச் சென்று, அரையிறுதி வரை முன்னேறி சாதித்துவிட்டு‌ வந்தோம். ஊரே பெருமைப்பட்டது.‌ எனக்கும் சந்தோசம்.

ஊரிலுள்ள சில விளையாட்டு கழகங்களுக்காக விளையாட அழைப்புக்கள் வந்தன. ஒரு விளையாட்டுக் கழகம் மாதாந்தம் நாற்பதாயிரம் ரூபாய் ‌தருவதாகக் கூறியது. சாதாரண தரத்தில் கற்று‌‌ முடிந்த பின் அந்த கிளப்புக்காக விளையாடினேன். பதினேழு வயது நாற்பதாயிரம் சம்பளம். அதுவும் விளையாடினால் காசு.

கிளப்புகளிலும் கலக்கத் தொடங்கினேன். பல போட்டிகளில் வெற்றி. கலக்கோ கலக்கு. எனது ஃபேவரைட் ஷொட்‌ எப்போதும் போல் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

கையில் அதிக பணம் என்ன செய்ய?

“இதுவரையில் அடுத்தவன் காசில தான் சிகரெட் அடிச்சேன். இனிமேல் சொந்த காசில gகெத்தாக சிகரெட் அடிக்கோனும்” என்று முடிவெடுத்தேன்.

அபின், மாவா, பான்பராக் போன்ற போதை வஸ்துக்களும் எமது புழக்கத்தில் வந்தன. ஒருநாள் நண்பரொருவன் கோல் (call) பண்ணிருந்தான்.

“மச்சான், சட்டப்படி சாமான் ஒண்டு ஊருக்குள்ள இறங்கிருக்குடா KG தெரியும் தானே‌டா. கஞ்சா டா. அடிச்சால் சும்மா நெருப்பு மாதிரி!”

ஆசை வார்த்தைகள் காதுக்கு இதமாக கேட்க, ஒரு கை பார்த்திட வேண்டுமென மனது ஏங்கியது. இவ்வளவு நாட்களாக சிறு சிறு போதையை நுகர்ந்த மனது, புது போதையைத் தேடியது. அதுவும் பென்னம்பெரும் போதையை. நண்பனிடம் காசு கொடுத்து KG வாங்க ஆரம்பித்தோம். சாமானும் கிடைத்தது. அதன் வாசமே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ப்ப்பஹ்ஹ்ஹ். என்ன ஒரு போதை. கண்ணை மூடிக் கொஞ்சம் ருசித்தேன், சுவர்க்க வாசற்கதவு திறந்தது போல உணர்ந்தேன்.

உண்மையில் என் சுவாச வாசலே மூடப்பட அதுதான் ஆரம்பம் எனப் பின்னர் அறிந்து கொண்டேன்.

அன்றொரு நாள் எமது கிளப் மைதானத்தில் புட்போல் ப்ரக்டீஸ் நடைபெற்றது. நைட் அடிச்ச KG என்னை வா வா என்றழைக்க, புட்போல் கண்ணில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. அடிக்கடி நிதானம் இழந்தேன். அடிக்கும் ஷொட்கள் எல்லாம் எனது கட்டுப்பாடின்றி இருந்தது. எனது ஃபேவரைட் ஷொட்‌டை அடிக்க முயன்றேன், எல்லாப் பந்துகளும் கோல் போஸ்ட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தது. கண்ணெல்லாம் மங்கல் போல உணர்ந்தேன். கோச் அருகே வந்தார்.

“என்ன அமான், கண்ணெல்லாம் சிவப்பாக இருக்குது. ஒழுங்காக தூங்கலையோ?”

“ஓ சேர்! நைட் ஒரு கூட்டாளிட வீட்டில Wedding! அதான் தூங்க டைம் இருக்கல்ல!” ஒருவாறு‌ சமாளித்துவிட்டேன்.

“சரி நீங்க வீட்டுக்கு போய் Rest எடுங்க! நாளைக்குப் பார்ப்போம்.”

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சரியான தலைவலி அன்றிரவு நன்றாக தூங்கினேன். நண்பர்கள் call இற்கு மேல் call. அடுத்த நாள் மீண்டும் பயிற்சி. என்னால் பயிற்சியைத் தொடர‌ முடியவில்லை. மனதில் KG யோசனை.

‘வயிற்றுவலி’ என்று கோச்சிடம் சொல்லி விட்டு நாங்கள் கூடும் இடத்திற்கு சென்றேன். நண்பன் கொண்டு வந்திருந்த கஞ்சாவை அவனுடன் சேர்ந்து சுவைத்தேன். அப்போது தான் உயிரே திரும்பி வந்தது. இவ்வாறு அடிக்கடி பொய்க்காரணங்கள் கூறிக் கூறி பயிற்சிகளைத் தவிர்க்க ஆரம்பித்தேன். நான் கஞ்சா பாவிப்பது யாருக்கும் தெரியாது, என்னையும் அந்த நண்பனையும் தவிர. என்னைக் காக்கும் தெய்வமாகவே அவனை நினைத்தேன். என்னை அழிக்க வந்த சாத்தான் எனப் பின்னர் தான் புரிந்தேன்.

பயிற்சிகள் எதுவும் இன்றி நேரடியாக போட்டிகளுக்கு சமூகமளிக்க ஆரம்பித்தேன். நான் தான் எமதணியின் தூணாக இருப்பதால், வேறுவழியின்றி என்னை விளையாட‌ அனுமதித்தார் கோச். எதிரணியின் அத்தனை வீரர்களையும் ஒத்த ஆளாக கடந்து சென்று கோலடிக்கும் வல்லமை பெற்றவன் என என்னை நான் கருதியதுண்டு. பல தடவைகள் அவ்வாறு செய்தும் இருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு எதிரணி வீரனையும் கடந்து செல்ல முடியவில்லை.

காலுக்கு பந்து வரும் போது மனதில் குழப்பமும் சேர்ந்தே வந்துவிடும். பந்தை எப்படி ஆடனும். எதிரணி வீரனை எந்தப் பக்கமாகக் கடக்கனும். தடுமாற்றம் நிறைந்து, நிதானம் இழந்து பந்தை எதிரணியிடம் தாரை வார்த்து விடுவேன். Best Forward ஆக அறியப்பட்ட நான் ஒரு Coward (பயந்தாங்கொள்ளி) போல விளையாட ஆரம்பித்து விட்டேன்.

என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது, நான் ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்று. ஒழுங்காக பாதையில் நடக்க முடியவில்லை. யாருடனும் பேச விரும்பவில்லை.சாப்பாடு‌ உள்ளே இறங்கவில்லை. உறக்கம், அறவே இல்லை. எப்போதும் மனதில் ஒரேயொரு எண்ணம் தான். வாயில் ஒரேயொரு வார்த்தை தான். அந்த இரண்டெழுத்து வார்த்தை KG.

அது இல்லாமல் என்னால் இருக்கவே முடியவில்லை. நான் கஞ்சா பாவிப்பது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. கிளப் என்னைக் கைவிட்டு‌ விட்டது. என்னுடன் சிரித்துப் பேசியவர்கள், என்னைப் பிரித்துப் பார்த்தார்கள். எனது ரசித்தவர்கள், பார்வையாலேயே நக்கலடித்து ருசிக்கப் பார்த்தார்கள். பேசவும் ஆளில்லை. விளையாடவும் மனமில்லை.

கஞ்சாவை அறிமுகப்படுத்தி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் ஒரு கஞ்சா புரோக்கர் எனப் பின்னர் தான் அறிந்தேன். அவன் என்னைப் பாழாக்கிவிட்டு, வேறு யாரோ ஒருவனைப் பாழாக்கச் சென்று விட்டான். ருசி கண்ட வாயால் சும்மா இருக்க முடியாதே. நாக்கு போதையைத் தேடியது. வீட்டாரின் அறிவுரையைக் கேட்காததால் அவர்களுக்கு என்னைப் பற்றி அக்கறையில்லாமல் போய்விட்டது.

மாதாமாதம் நாற்பது/ ஐம்பதாயிரம் பணத்தைக் கண்ட‌ எனக்கு வெறுங்கையுடன் இருக்க முடியவில்லை. வீட்டில் காசு கேட்டேன். யாரும் தரவில்லை. சத்தமிட்டுக் கத்தினேன். எவரது காதிலும் விழவில்லை. முதலில் ஊரிலே தான்‌ யாரும் மதிக்காமல் இருந்தனர். இப்போது வீட்டிலும் என்னைத் தூசுக்குக் கூட‌ மதிக்கவில்லை.

என் மனது துடித்தது. கத்திக் கதற வேண்டும் போல இருந்தது. எங்காவது பாய்ந்து தற்கொலை செய்ய வேண்டும் போல இருந்தது. எனக்கு போதை வேண்டும். அதுக்குப் பணம் வேண்டும். ஓரிரு‌‌ மாதமாக போதையின்றி கஷ்டப்பட்டேன்.

மறுபடியும் ஒருநாள் அவன் வந்தான். வீட்டருகே நான் பாதையை முறைத்துப் பார்த்திருக்கும் போது அவன் வந்தான். அவனே‌ தான். அமாவாசை இரவில் சூரியன் உதித்தால் எப்படி இருக்கும். அப்படி‌ வந்தான். என்னைக் காப்பாற்ற வந்ததாக நான்‌ சந்தோஷப்பட்டேன். அவன்‌ அன்று வராதிருந்தாலாவது, ஒருவேளை நான் திருந்தியிருப்பேன். ஓரிரு மாதமாக போதையை மறந்த வாய், அப்படியே முற்றாக மறந்திருக்கும்.

அவன் அருகே வந்தான்.

“அடேய் மச்சான் எதுசரி இருந்தால் தா’டா, கொஞ்சம் நாளாக ஒன்டுமே இல்லாமல் இருக்கிறேன்’டா” நான்‌ கெஞ்ச ஆரம்பித்தேன்.

“மச்சான், ஒன்டும் நினைச்சிக் கொள்ளாதே. ஓன்ட கேஸ் கேள்விப்பட்டன். இப்ப வீட்டுல சும்மா தான்‌ இருக்கிறாம் எனா.” அவனது பதிலில் ஆர்வம் இல்லை.

“நான் எவ்வளவு சரி தாரன், ப்ளீஸ் பண்ணி சாமன தாவேடா” மீண்டும் கெஞ்சினேன்.

“சரி, இப்ப இருக்கிறது புதிய ஐட்டம். ‘ஐஸ்’ அடிச்சால் சும்மா Gun போல.” அவன் சொல்லும் போதே நாக்கு ஊறியது.

“ஆனால் இது கொஞ்சம் விலையானது, உன்கிட்ட தான் சல்லி இல்லையே.” அவன் என் ஆர்வத்தை தூண்டி விட்டான்.

“நான் நாளைக்கு ஒங்கட வீட்டுக்கு சல்லியோட வாரேன். சாமன் sure தானே.”

“ஓ நீ வா. நான் வீட்ல தான் இருப்பேன்.”

இப்போது தேவையான பொருள் இருக்கிறது. இப்போதைய ஒரே தேவை. காசு, பணம், துட்டு, Money. என்ன செய்ய, வீட்டுக்குப் போனேன்.

“உம்மா, நான் சம்பாதித்த பணத்தை திருப்பி தாங்க, எனக்கு வேணும்”

“அதெல்லாம் உனக்குத் திண்ணப் போட்டே கரைஞ்சிட்டு!” உம்மா உறுதியாக இருந்தார்.

‘இவங்ககிட்ட கேட்டால் சரி வராது செயலில் இறங்க வேண்டியது தான்’ என‌ நினைத்துக் கொண்டே‌ சகுனம் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பகல் வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமயலறையில் பிசி உடனே உம்மாவின் அலுமாரியைத் திறந்து,

தொடரும்
Ifham Aslam (Beruwala)

இவ்வளவு சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை, இப்படியே தொடர்ந்து சென்றிருந்தால் இன்று உலகின் மிகப்பெரிய கிளப்களில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு இலங்கை வீரனாக என்னைப் பார்த்து பெருமைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்! ஆனால் எனது தலைவிதி,…

இவ்வளவு சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை, இப்படியே தொடர்ந்து சென்றிருந்தால் இன்று உலகின் மிகப்பெரிய கிளப்களில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு இலங்கை வீரனாக என்னைப் பார்த்து பெருமைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்! ஆனால் எனது தலைவிதி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *