Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மியன்மாரில் வலுக்கும் சீன எதிர்ப்பு; இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டுமா? 

மியன்மாரில் வலுக்கும் சீன எதிர்ப்பு; இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டுமா?

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அமெரிக்க உலக ஆதிக்கத்துக்கு மாற்றாக அல்லது ஆசிய பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு பொருளாதார மற்றும் இராணுவ வலையமைப்பை மிகவும் திடமான அடிப்படையில் உருவாக்குவதே சீனாவின் தொலைநோக்கு இலக்கு. அது தற்போது இதற்கான பொருளாதார வலிமையை பெற்றிருக்கிறது. போதிய இராணுவ பலமும் ஏற்கனவே அந்நாட்டிடம் உண்டு. அதன் வாய்ப்பான அம்சங்களாக, ஒற்றைக் கட்சி ஆட்சியையும் கம்யூனிசத்தையும் செல்லலாம். அங்கே சவாலுக்கு இன்னொரு கட்சி கிடையாது. ஜனநாயக சுதந்திரமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு தலைமுறையையும் தாண்டி இத்தகைய சூழலுக்கு சீனப்பிரஜைகளும் பழகிவிட்டார்கள். எனவே சந்தை பொருளாதாரத்தையும் உள்வாங்கிக் கொண்டதால் பொருளாதார மலர்ச்சி வெகுவிரைவாகவே அந் நாட்டில் ஏற்பட்டது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் மல்லுக்கு நிற்க அந்நாடு தயாராகவே உள்ளது. தன் இராணுவ பொருளாதார இலக்குகள் எட்டப்பட்ட நிலையில் அடுத்த இலக்காக பிராந்திய கட்டுப்பாட்டையும் ஒரு சமயத்தில் உலக பொலிஸ்காரர்’ அந்தஸ்தையும் எட்டுவதே சீனாவின் தற்போதைய இலக்கு.

இதன் பொருட்டு அது உருவாக்கிய பெருந்திட்டமே Belt and Road என ஆங்கிலத்திலும் எளிய தமிழில் நாம் கடல் பட்டுப்பாதை எனத் தமிழிலும் அழைக்கப்படும் BRI (Belt and Road Initiative) திட்டமாகும். அது மியன்மார், பாகிஸ்தான், இலங்கை என ஆரம்பித்து ஆபிரிக்கா வரை நீடிக்கும் ஒரு வலயமாகும். ஹம்பாந்தோட்டையில் துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் கடன் அடிப்படையில் நிர்மாணித்துத்தர சீன அரசு முன்வந்துள்ளமைக்கான பிரதான காரணம் அதன் பட்டுப்பாதை திட்டத்தின் இரு முக்கிய புள்ளிகளாக இவற்றை வைத்துக் கொள்வதற்காகத்தான் என்பது இந்தியா மற்றும் அமெரிக்காவின் கருத்தாகும். மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கை அரசு சீனாவிடம் 99வருடகால ஒப்பந்தத்தின் கீழ் ஒப்படைத்திருக்கிறது. இதனால், ஹம்பாந்தொட்டை விமான நிலைய நிர்வாகத்தை தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா முயற்சித்ததும், சீனாவின் மறைமுக காய்நகர்த்தல்கள் காரணமாக இந்தியாவின் முயற்சி வியர்த்தமானதும் பழைய செய்திகள். மேலும் யாழ்ப்பாண தீவுப்பகுதிகளில் மின்சார திட்டமொன்றை நிறைவேற்ற சீனா முயன்றதையும் தனது தெற்கு எல்லைக்கு அருகே சீன பிரசன்னத்தை விரும்பாத இந்தியா அதைக் கடுமையாக எதிர்த்தையும் நாம் பார்த்தோம்.

என்றைக்குமே இலங்கையின் நண்பனாகவே சீனா இருந்திருக்கிறது. இலங்கை உணவு நெருக்கடியில் சிக்கியபோது இலங்கை இறப்பருக்கு சீன அரிசி என்ற திட்டத்தை வழியாக சீனா இலங்கைக்கு கைகொடுத்ததையும் 1970இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப தொகுதியை அன்பளிப்பாகவும் சீனா வழங்கியதை உதாரணமாக சுட்டலாம். ஆனால் இதற்கெல்லாம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் அவை நட்புறவும் நல்லெண்ணமும் மட்டுமே. ஆனால் தற்போது சீனா தன் பிராந்திய ஆதிக்கத்தை மென்மேலும் ஸ்திரப்படுத்தும் திட்டத்தில் முழு மூச்சாக இருப்பதாலும் இறுதியாக அது இந்திய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் என்பதாலேயே இந்தியா இவ்விடயத்தில் சீனாவின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் எது சரி, எது தவறு என்று பார்ப்பது அல்ல நமது நோக்கம். ஏனெனில் உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளும் உலகில் ஆதிக்கம் செலுத்தவே முயற்சித்து வந்துள்ளமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். ரோமப் பேரரசு, துருக்கிய பேரரசு, உலகை ஆள்வதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், சீனாவை கட்டியாண்ட ஜப்பான், ஸ்பானியா, போர்த்துக்கேய, ஒல்லாந்தரின் கடல் ஆட்சியும் காலனித்துவமும் என அதிகார போட்டா போட்டி என்றைக்கும் இருந்து கொண்டுதான் இருந்தது. சூரியன் அஸ்தமிக்காத பேரரசை பிரிட்டன் உருவாக்கியது. உலகின் இறுதிப் பேரரசாக சோவியத் ரஷ்யா விளங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு இதனால் எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்க வழி இல்லை. முன்னர் பர்மா என்றும் இப்போது மியன்மார் என்றும் அழைக்கப்படும் நாட்டில் தற்போது ஒரு கலவர சூழ்நிலை காணப்படுகிறது. மியன்மாரை இராணுவமே ஆட்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக ஒரு வலுவான எதிர்கட்டமைப்பை நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி ஏற்படுத்தி ஜனநாயகத்துக்காக போராடிவந்தார். கடந்த பொதுத்தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஜனநாய மறுமலர்ச்சி ஏற்படுவதை விரும்பாத இராணுவத் தலைமை அவரை சிறையில் தள்ளி ஆட்சியை மீண்டும் பெப்ரவரி முதலாம் திகதியுடன் தன்வசம் எடுத்துக் கொண்டது.

இதையடுத்து அந்நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ ஆரம்பித்தன. முதலில் கைகட்டிக் கொண்டிருந்த இராணுவம் தற்போது பதில் தாக்குதல்களில் இறங்கி நூற்றுக் கணக்கில் சுட்டுத்தள்ளியிருக்கிறது. மியன்மார் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சீன வர்த்தக நலன்கள் குறிவைத்து தாக்கப்படுவது நாம் விசேடமாக நோக்கத்தக்கது. முன்னர் தளபதி நீவின் ஆட்சியின்போது, 1967- 68 காலப்பகுதியில் அந் நாட்டின் சீன வர்த்தக நலன்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றத்துக்கு உள்ளாகின. மியன்மாரில் கம்யூனிச பயங்கரவாதம் எழுச்சிபெற சீனா பின்னணியில் இருந்து செயல்படுத்துகிறது என்பதே மக்களின் சீற்றத்துக்குக் காரணம் இந்த வடுக்கள் நீ்ங்க சுமார் இருபது வருடங்கள் எடுத்துக்கொண்டது. அப்போது அந்நாட்டை ஆண்ட மிலிட்டரி அரசை எதிர்த்து கிளர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு சீனா உதவி புரிந்தது. 1988 இல் இது அரங்கேறியது.

மியன்மாரில் சீனா பல திட்டங்களை கையில் வைத்திருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு அவையாக இருப்பது சீனாவுக்கு பிரச்சினையாக உள்ளது. 2008- 09 காலப்பகுதியில் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மைட்சோன் நீர்மின்சாரத் திட்டத்தை நிறைவேற்ற முயன்றபோது அதை கச்சின் பழங்குடிகள் வெற்றிகரமாக எதிர்த்தனர். மியன்மாரின் சிவில் சமூகமும் ஜனநாயகக் கட்சிகளும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. இறுதியில் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் தியன்செய்ன் இட்டத்தை கைவிட நேரந்தது. பத்தாண்டுகளின் பின்னரும் இத்திட்டம் செயற்படுவதற்கான சமிஞ்​​ைஞகள் இல்லை.

ஆனால் தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு சீன ஆதரவு உள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் சீன வர்த்தக நலன்களை குறிவைத்துள்ளன. சீன தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தாக்கப்படுவதோடு அங்கு பணியாற்றும் சீன ஊழியர்களும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இதற்கு இன்னொரு நோக்கமும் உள்ளது. மியன்மாரின் சீன நலன்கள் தாக்குதலுக்கு இலக்காகும் போது தற்போதைய இராணுவ ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவை சீனா வாபஸ் வாங்கும் என்றும் அதனால் மிலிட்டரி நிர்வாகம் ஆட்சிப்பொறுப்பை ஆங்சாங் சூக்கியிடம் கையளிக்கும் என்றும் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். ஆனால் சூக்சியின் அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கவில்லை. மைட்ஸ்சோன் அணைத் திட்டத்துக்கு ஆங்சாஸ் அரசு அனுமதி அளிக்கவில்லை. மியன்மாரில் சீனாசொல்படுத்தவிருந்த க்யோக்பியூ ஆழ்கடல் துறைமுகத்திட்டத்துக்கான முதலீட்டுத் தொகையை சூக்கி நிர்வாகம் குறைத்து விட்டது. கடந்த வருடம் ஜூலை மாதம் யங்கொங் நகர பெருந்திட்டத்தில் ஏனைய வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டதை விரும்பவில்லை.

இன்றைய கலவர நிலைக்கு வருவோமானால், அந்நாட்டில் உள்ள 37க்கும் அதிகமான சீன முதலீட்டுடன் கூடிய தொழிற்சாலைகள் கொளுத்தப்பட்டுள்ளன. மண்டலே மொத்த விற்பனை சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுவது மென்மேலும் சிரமமானதாகி வருகிறது என்று சீன வர்த்தகர்கள் கூறுகின்றனர். மேலும் சீன வர்த்தக முதலீடுகளின் சக முதலீட்டாளர்களாக விளங்குவது மியன்மார் இராணுவ ஆதரவுடன் கூடிய முதலீட்டாளர்களாக இருப்பதால், இம் முதலீடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இரு தரப்பினருக்குமே பாதிப்பாகி வருகிறது. மியன்மாரின் ரக்கைன் கடற்கரைப் பகுதியில் இருந்து சீன யுனான் மாகாணத்துக்கு செல்லும் க்யோக்பியூ. யுனான் எண்ணெய், எரிவாயு குழாய்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தற்போது பிரயோகித்துவரும் அடக்கு முறையை இராணுவ அரசு தளர்த்தாவிட்டால் சீன நலன்கள் மீது மென்மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் சீன – மியன்மார் பொருளாதார வழிப்பாதை கடுமையான பாதிப்பை சந்திக்க நேரும். சீன – பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதையில் இந்த சீன – மியன்மார் பொருளாதார வழிப்பாதை அமைந்திருப்பது கவனிக்கதக்கது.

இது இப்படி இருக்க, பலுச்சிஸ்தான் பிரிவினைவாதிகளும் சீன நிறுவனங்கள் தமது பிராந்திய கனிமவள மற்றும் எண்ணெய்வளத்தை கொள்ளையடிப்பதாகக் கருதுகின்றனர். சீனாவின் மியன்மார் கடல் பட்டுப்பாதை இலக்குகளை பலூச் பிரிவினைவாதிகள் குறிவைத்து வருவது சீனாவுக்கு பிரச்சினையாகி இருக்கிறது.

இது இப்படி இருக்க, இந்தோனேஷீயா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சீன முதலீடுகளுடன் கூடிய பெருந்திட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அல்லது இரத்தாகி வருவாகவும் அறியமுடிகிறது. வங்கதேசத்தில் சீனா மேற்கொள்ளலிருந்த ஆழ்கடல் துறைமுக வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டு அது ஜப்பானிடம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நவீன காலனித்துவத்தை உருவாக்கும் சீனாவின் முயற்சிகளுக்கு இவ்வாறு பாதிப்புகளும் தடைகளும் மிகுந்து வருகின்றன.

அமெரிக்க உலக ஆதிக்கத்துக்கு மாற்றாக அல்லது ஆசிய பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு பொருளாதார மற்றும் இராணுவ வலையமைப்பை மிகவும் திடமான அடிப்படையில் உருவாக்குவதே சீனாவின் தொலைநோக்கு இலக்கு. அது…

அமெரிக்க உலக ஆதிக்கத்துக்கு மாற்றாக அல்லது ஆசிய பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு பொருளாதார மற்றும் இராணுவ வலையமைப்பை மிகவும் திடமான அடிப்படையில் உருவாக்குவதே சீனாவின் தொலைநோக்கு இலக்கு. அது…