Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மீண்டும் ஒருமுறை 

மீண்டும் ஒருமுறை

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மழை நீரை தன்னகத்தே உள்வாங்கி சற்று கனத்திருந்த உடலை மீண்டும் தாக்கிய சூரிய கிரகணங்களின் ஒளியானது சரி செய்து விட நிம்மதியாய் உறங்கி போனது அந்த ஓலை வீட்டின் மேற்பரப்பு.

ஒரே அறையென்றும் கூற முடியாத அந்த குறுகிய இடத்தை கால் உடைந்த கட்டிலும் பிய்ந்துபோன பாய்களும் ஓட்டை விழுந்த பாத்திரங்களும் பிடித்துக்கொண்டன.

“அம்மா அம்மா அழாதே”

ஏதேதோ கூறியவாறு புலம்பிக் கொண்டிருந்த தாய் ஸாஜிதா உம்மாவை தேற்ற முயன்றும் தோற்றுப் போனாள் பிஹாமா.

“நான் என்ன புள்ள செய்வேன்? இந்த கொரோனா ஒன்றுவந்து நம்மட நிலைமை இப்படியாகிட்டே. உங்க வாப்பாக்கு இருந்த சின்ன தொழிலும் இதுல இல்லாம போயிட்டு. அந்த மனுஷனும் என்ன தான் செய்ற இவனுகள் விட்டால் தானே திரும்ப கடலுக்கு போகலாம். இல்லாட்டி நம்ம பாடு இப்படியே தான்.”

கட்டியிருந்த சேலையில் ஒரு பகுதியை தன் கண்ணீரை துடைக்கவென ஒதுங்கியிருந்த ஸாஜிதா உம்மா கணவனின் ஒலி கேட்டு முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.

“ம்ம் வாப்பா வந்தா தான் உங்கட சத்தம் குறையும்.”

கூறிய பிஹாமா ஊதா நிறத்தில் உன்னைவிட நான் பெரியது என முந்தியவாறு சண்டை போட்டு தொங்கி கொண்டிருந்த கத்தரிக்காயில் சிலதை பிய்த்துக் கொண்டாள்.

“உம்மா உம்மா”

“என்ன புள்ள சத்தம்?”

“பு பு புழு கத்தரிக்காயில”

“அது வாற தான். அதுக்காக வீசிடாத. அதை வெட்டிட்டு மற்றதை எடுத்துக்கலாம்” தாயின் பேச்சை கேட்டவள் சரி என்பது போல உள்ளே நுழைந்தாள்.

“காலை சாப்பாடு ஏதாவது இருக்கா?”

கனத்த குரலுடன் கரகரத்த தொண்டையை சரி செய்தவாறே பஷீர் வினவ,

“பழைய சோறு இருக்கு. தேங்காய்ப்பால் ஊற்றி தாரன் இருங்க.”

கூறியவள் முழுதாயிருந்த தேங்காயை இரண்டாக உடைத்து துருவி பாலைப் பிழிந்து பழைய சோற்றுடன் இணைத்து கணவன் முன் கொண்டு வந்து நீட்டினாள்.

ஸாஜிதா உம்மாவின் விழிகளில் நீர் முட்டி மோதி விழுந்தது.

“இப்ப என்ன புள்ள நடந்தது?” அவளிடம் பதிலில்லை.

“எப்பவுமே காசு கையில் இருக்குமா? இவ்வளவு நாளும் நல்லாத்தானே இருந்தோம். இப்ப என்னமோ சோதனை இந்த கொரோனா வந்திட்டு. அதனால கடலுக்குப் போய் கொள்ள இயலாமல் இருக்கு. அதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கலாமா? இன்றைக்கு இல்லாட்டி நாளைக்கு கிடைக்கும்.”

மனைவியை சமாதானப்படுத்துவதாய் எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவரின் குரல் தானாகவே அமைதியாகிப்போக ஐம்பதுகளைக் கடந்த அவரது வயதையும் தாண்டி சிறுபிள்ளையின் அழுகை அவரையும் தொற்றிக்கொண்டது.

“புள்ள இன்றைக்கு கத்தரிக்காய் கறி மட்டும் தான். நானும் வாப்பாவும் தின்னுவோம். நீதான் கொஞ்சம் சமாளித்துக்கொள்ளனும்.”

துக்கத்தை புதைத்துக்கொண்டு ஸாஜிதா உம்மா கூற,

“சரிமா அதுக்கு என்ன? நான் தின்னுவேன்.”

ஏற்கனவேயிருந்த அரிசியில் சோறும் தோட்டம் என கூற முடியாத போதும் குடிசைக்கு முன்னால் முளைத்திருந்த கத்தரிக்காய் செடியின் வெளியீடும் அன்றைய நாள் வயிற்றுப் பசியை போக்கியது. தந்தைக்கான உணவை வைத்து விட்டு மீதியை தாயும் மகளும் உண்டனர்.

சாப்பிட்டதும் வீங்கி தடித்து போன கைகளையும் காலையும் தாய் அறியாவண்ணம் மறைத்துக் கொண்டாள் பிஹாமா.

“புள்ள இந்தா மீன் வாங்கி வந்து இருக்கேன். நேரம் போயிட்டு இத ஒரு கறி வைங்க.”

தந்தையின் குரல் கேட்டு வெளியே வந்தவள் கைகளை மறைக்க மறந்துவிட,

“என்ன நடந்த கையில?” தந்தையின் குரல் சற்று உயர்ந்தது..

“அ அது வாப்பா”

அவரது பார்வை கத்தரிச்செடியை நோக்கி திரும்ப அதிலிருந்த காய்களின் வேலைதான் இது என புரிந்தவரின் திட்டுகள் ஸாஜிதா மீது விழுந்தன.

“அந்தப்புள்ளைக்கு கத்தரிக்காய் ஒத்துவராது என தெரியாதா உனக்கு?”

கணவனின் திட்டுக்களை விட குடும்ப வறுமை மனதை குடைய, வெட்டிக்கொண்டிருந்த மீனின் நுணுக்கமான முள் ஒன்று அவளது கைகளை இரண்டு முறை அதே இடத்தில் தைக்க, ‘விடு விடு’ என வீங்கி அடைத்துப் போனது நடுவிரல்.

சுடச்சுட சோறும் நேர்த்தியாய் வெட்டப்பட்டிருந்த மீனின் குழம்பும் தட்டை அலங்காரம் செய்ய, அதிலிருந்த சோற்றுடன் கறியைப்பிசைந்து மனைவிக்கும் மகளுக்குமாக ஊட்டிக் கொண்டிருந்தார் பஷீர்.

“உம் என்று இருக்காத”

கூறியவரை பார்த்த சாஜிதா உம்மாவுக்கு தன் கணவனை நினைத்து பெருமையாகவே இருந்தது.

“பஷீர் பஷீர் விஷயம் தெரியுமா? நாளையிலிருந்து கடலுக்கு போகலாமாம்.”

தூரத்திலிருந்து சத்தம் போட்ட நண்பனின் குரல் இதமாக மனதில் பரவ, ஸாஜிதா உம்மாவின் முகத்திலும் பிஹாமாவின் முகத்திலும் ஆயிரம் விண்மீன்கள் ஒளிர்ந்தன.

“இப்ப சிரிச்சியே. அதுதான் என்னோட சந்தோசம்.”

கூறியவர் முழுதாய் தட்டில் உள்ளவற்றை ஊட்டி விட்டு வெளியே வர, தூரத்திலிருந்து வீசிய காற்று அவரது முகத்தில் வீசி மேலும் உற்சாகப்படுத்த, ஒரு மாத காலத்தின் பின்னர் முதலாய் மலர்ந்தது அவரது முகம் மீண்டும் ஒரு முறை.

முற்றும்

ஷப்ரா இல்முத்தீன்
அட்டாளைச்சேனை.

மழை நீரை தன்னகத்தே உள்வாங்கி சற்று கனத்திருந்த உடலை மீண்டும் தாக்கிய சூரிய கிரகணங்களின் ஒளியானது சரி செய்து விட நிம்மதியாய் உறங்கி போனது அந்த ஓலை வீட்டின் மேற்பரப்பு. ஒரே அறையென்றும் கூற…

மழை நீரை தன்னகத்தே உள்வாங்கி சற்று கனத்திருந்த உடலை மீண்டும் தாக்கிய சூரிய கிரகணங்களின் ஒளியானது சரி செய்து விட நிம்மதியாய் உறங்கி போனது அந்த ஓலை வீட்டின் மேற்பரப்பு. ஒரே அறையென்றும் கூற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *