Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முடக்கம் நீங்கினாலும் திறக்காத கதவுகள் - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

முடக்கம் நீங்கினாலும் திறக்காத கதவுகள்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஜே.ஏ. ஜோர்ஜ்

“நேற்று இரவு கஞ்சிதான் குடித்தோம்; இன்று மதியம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. நிவாரணப் பொருட்கள் தருவதாகக் கூறினார்கள். அதனால் தான் காலை 06 மணிமுதல் தண்ணீர் கூட குடிக்காமல் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால், இதுவரை யாரும் வரவில்லை” – கண்டி, குண்டசாலை, அம்பகோட்டை பகுதி மக்கள், கடந்த புதன்கிழமை (23) இவ்வாறு தமது அங்கலாய்ப்பை  வெளிப்படுத்தியிருந்தனர்.

கொவிட் – 19 கடந்த வருடம் மார்ச் மாதமளவில் இலங்கை மக்களுக்குப் பரிட்சயமாகி, இன்று அந்த மக்களின் அடுத்த வேளை உணவைக்கூட கேள்விக்குறியாக்கிவிட்டு, தனது உருமாற்றப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கொவிட் – 19 முதல் அலையிலேயே முடங்கிபோன நாட்டு மக்கள், மூன்றாவது அலையைத் தாங்கிங்கொள்ள முடியாமல் தவித்து நிற்கின்றனர். ஏற்றுமதி வீழ்ச்சி, பொருளாதாரப் பாதிப்பு, பங்குச்சந்தை சரிவு என உயர்மட்ட விவகாரங்களைப் பேசிக்கொண்டிருக்கும் பலரும், அடிமட்ட மக்களின் அடுப்பங்கரைக்குள் பூனை குடி வந்து பல நாள்கள் ஆகிவிட்டதை உணர்ந்தபாடில்லை.

‘நிவாரணம்’, ‘5 ஆயிரம் ரூபாய்’ என்பன எல்லாம் ஊடகங்களின் அடுக்குமொழிகளுக்கு அழகான தலைப்புகளாய் மாறியிருந்தாலும், சாதாரண மக்களை, எந்தளவு சென்றடைந்தது என்பது கேள்விக்குறியே.

முதலாம், இரண்டாம் கொவிட் அலைகளுக்கு மத்தியில் சற்றே மீண்டு வந்த மக்களுக்கு, கடந்த சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் மகிழ்ச்சி என்பது மருந்துக்குக்கூட இல்லை என்றே சொல்லாம். கொவிட் -19 மூன்றாம் அலையில் சிக்கிய மக்களை மே மாதம் முதல் அமுல்படுத்தப்பட்ட ஒரு மாத பயணக் கட்டுப்பாடு முழுமையாக முடக்கியே போட்டுவிட்டது.

கடந்த 21ஆம் திகதி, பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டபோது, நகரங்களை நோக்கி மக்கள் ஓரளவுக்குப் படையெடுத்திருந்தனர். ஒவ்வொரு கடைகள், வர்த்தக நிலையங்கள் ஏன், மதுபான சாலைகளுக்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

அதனைவிடவும் தங்கக் கடன் நிலையங்களுக்கு முன்பாகவும் அடகு நிலையங்களுக்கு முன்பாகவும், மக்கள் நீண்ட வரிசையில் கால்கள் கடுக்கக் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான உணவுப் பொருள்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு  கூட, எவ்விதமான வருமானமும் இன்றிருந்தவர்கள், தங்களுடைய காதுகள், மூக்கு, கழுத்தில் கிடந்தவற்றை அடகு வைப்பதற்கே பெரும்பாலும் காத்திருந்தனர் என ஒவ்வொரு புகைப்படங்களும் கதை சொல்கின்றன.

கொழும்பில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியிலுள்ள பெரிய, சிறிய என சகல நகரங்களிலும், தங்கக் கடன் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதேவேளை, கொரோனா முதல் அலையின் போது, இலங்கை மக்கள் ஆறு மாதங்களில் நகைகளை அடகு வைத்ததன் மூலம் பல பில்லியன் ரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளனர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது.

இதன்படி, கடந்த வருடத்தின் இறுதி ஆறு மாதங்களில் வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள்,  நகை அடகு நிலையங்களில் இருந்து பொதுமக்கள் 643 பில்லியன் ரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளனர் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில், தங்க நகை அடகுக்கான வணிக வங்கிகளின் முற்பணம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.  இலங்கையில் 64% குடும்பங்கள் கொரோனா வைரஸ் பரவல் தொற்று நெருக்கடியால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7% குடும்பங்கள் தங்கள் வருமானத்தை முழுமையாக இழந்துள்ளதாக, ருஹுனு பல்கலைக்கழகத்தின் மனிதநேய பீடம், சமூக அறிவியல் பீடம் ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வங்கிகள், நிதி நிறுவனங்களில் பொதுமக்களால் நகை அடகு வைக்கப்படும் செயற்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய கொரோனா அசாதாரண சூழ்நிலையில், இலகு கடன்களை அறவீடு செய்வதற்கு நாள்தோறும் வருகை தருபவர்களால் பலத்த சிரமங்களை பல குடும்பங்கள் எதிர்கொள்வதாக பலரும் அங்கலாய்க்கின்றனர்.

இக்காலத்தில் வருமானங்கள் இன்றி வீடுகளில் உள்ள குடும்பங்களிடம் சாதாரண காலத்தில் வழங்கப்பட்ட கடன்களை அறவிட நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வருகை தரும் நிலையில், இதனால், கடன்களைச் செலுத்த முடியாத நிலையில் பல குடும்பங்கள் மன உளைச்சல்களை எதிர்கொண்டுள்ளனர்.

நுண்கடன் சுமையால் கடந்த காலங்களில் பல குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் தவறான முடிவு எடுத்த சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், நுண் கடன்களை வழங்கிய நிறுவனங்கள்,  மக்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

கொரோனா தொற்று நிலையால் பல நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து ஊழியர் குறைப்பு, ஊதியக் குறைப்பு எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான தொழிலில் இருக்கும் ஊழியர்களே பல்வேறு பொருளாதாரத் துன்பங்களுக்கு மத்தியில் அல்லற்படும் நிலையில், அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிய மக்களின் நிலையை சொல்லவேண்டியதில்லை.

ஒரு மாத முடக்கம் என்பது சாதாரண மக்களுடைய மாத வருமானத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. பயணத் தடைக்குப் பின்னராக காலப்பகுதியிலும் வியாபார நடவடிக்கை மற்றும் தொழில்துறைகள் உடனடியாக வழமைக்குத் திரும்பாத நிலையில், அந்த மக்கள்  சொல்லொணா துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கொரோனா முடக்கத்தால் வருமானத்தை இழந்த மக்களுக்கு, அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்த 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தம்மை வந்துசேரவில்லை என்று பலரும் குறை கூறுகின்றனர். சமுர்த்தி  பயனாளிகளுக்கு மாத்திரமே இந்த நிவாரணம் வழங்கப்படுவதாகவும் எனினும், அனைத்து மக்களும் சமுர்த்தி  பயனாளிகள் இல்லை என்பது இந்த மக்களின் தர்க்கமாக இருக்கின்றது.

பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு மத்தியில் அரசாங்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவது என்பது சாத்தியமான விடயமாக இருக்காது. எனினும், பாதிக்கப்பட்ட மக்களை இனங்கண்டு, அவர்களுக்கு வழங்கத் தகுந்த பொறிமுறையொன்று, நாட்டில் இன்று முன்னெடுக்கப்படுகின்றதா என்றால் அது கேள்விக்குறியே!

ஜே.ஏ. ஜோர்ஜ் “நேற்று இரவு கஞ்சிதான் குடித்தோம்; இன்று மதியம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. நிவாரணப் பொருட்கள் தருவதாகக் கூறினார்கள். அதனால் தான் காலை 06 மணிமுதல் தண்ணீர் கூட குடிக்காமல் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால்,…

ஜே.ஏ. ஜோர்ஜ் “நேற்று இரவு கஞ்சிதான் குடித்தோம்; இன்று மதியம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. நிவாரணப் பொருட்கள் தருவதாகக் கூறினார்கள். அதனால் தான் காலை 06 மணிமுதல் தண்ணீர் கூட குடிக்காமல் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால்,…