முஸ்லிம் பிரதேசங்களில் அதிகரித்துள்ள தற்கொலை முடிவுகள்

  • 6

தொழிலொன்றைப் பெற மலேசியா போய் பல சிரமங்களைச் சகித்த பின் இலங்கை வருகிறான் அந்த வாலிபன். பல முயற்சிகளுக்குப் பின்னர் மீண்டும் அரபு நாடொன்றில் வேலை பெற்றுச் செல்கிறான். அங்கும் அவன் நினைத்துப் பார்க்காத வேலையும் சிரமுமாக இருந்து நாடு திரும்புகிறான். ஊரிலே ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருக்கிற நாட்களில் மீண்டும் வெளிநாட்டுக் கனவு வந்து அதற்கான முயற்சிகளில் இறங்க வைக்கிறது. வெளிநாடு போக பணம் வேண்டும். தந்தை தன்னால் முடிந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிற நிலையில் அந்த வாலிபன் தூக்கிட்டு இறந்து போகிறான்.

காதலோ வேறெந்தக் குழப்படிகளோ இல்லாத அந்த அமைதியான வாலிபனின் திடீர் முடிவு ஊரையே திகைக்க வைக்கிறது. சென்ற மாதம் பேருவளை மஹகொடையில் இந்தச் சம்பவம் நடந்தது.

முஸ்லிம் பிரதேசத்தில் தற்கொலை நடந்ததா ? அகல விரிந்த வாய்கள் மூட முன்னரே, பேருவளையிலிருந்து 18 Km தூரத்திலுள்ள களுத்துறையில் முஸ்லிம் பிரதேசமொன்றில் 19 வயது இளைஞன் ஒருவன் முந்தநாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.

ஜப்பான் போக வீட்டில் பணம் தரவில்லையாம். உன்னை ஜப்பானுக்கு அனுப்ப இத்தனையாம் திகதிக்குள் 10 லட்சம் தரவேண்டுமென்று பேருவளையில் உள்ள ஒருவர் சொன்னதாக அந்த வாலிபன் வீட்டில் சொல்லி, வீட்டினரை நான்கு நாட்களாக அதட்டிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். மரணிக்கிற போது அவன் கடவுச்சீட்டுக் கூட எடுத்தவனல்ல என்பது பெருத்த சோகம்.

இளசுகளின் வெளிநாட்டு மோகம் ஒரு மனநோயாக மாறிவருவதில் இன்னும் தற்கொலைகள் கூடுமோ என்கிற அச்சத்தில் எழுதுகிறேன். களுத்துறையில் மரணித்த இளைஞனின் புகைப்படங்களைப் பார்க்கிற போது, அவன் வாழ்க்கையை இலகுவாக எடுத்து மகிழ்ச்சியாக உடுத்து வாழ்ந்தவனாகவே தோன்றுகிறது.

அவனது கனவு வாழ்க்கைக்குள் பிரவேசிக்க அதிக பணம் தேவைதான்.அதிக பணத் தேவைக்கு வெளிநாடு ஒன்றுதான் தீர்வு என ஏமாளி இளைஞர்களுக்குள் ஒரு எண்ணம் திணிக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாடுசென்றவர்கள் பதிவேற்றுகிற புகைப்படங்களில் உள்ளதுதான் அவர்களது யதார்த்த வாழ்வு என இந்தக் கிணற்றுத் தவளைகள் நினைத்துக் கொள்கின்றன. வெளிநாடு சென்றவர்கள் உள்ளூரில் படாத பல சிரமங்களை அங்கு நிர்ப்பந்தத்தில் சகிக்கிறார்கள். அதற்குப் பற்பல காரணங்கள் இருக்கின்றன.

ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்றபின்,வெளிநாடு வராமல் ஊரிலே தற்கொலை செய்து
கொண்டிருக்கலாமெனச் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.அந்த அளவு வேலைகள் கடினமானவை. கௌரவத்துக்காக அல்லது வீட்டினர் அறிந்து கொண்டு வேதனைப் படாதிருக்க அதிகமானவர்கள் இவற்றை வெளியே சொல்வதில்லை. இந்தச் சிரமங்கள், நம்மவர்களின் கழுத்தறுப்புக்கள்,பிரிவுத்துயர், தொழில் பெற அதிக செலவு போன்ற அனைத்தையும் சகித்துத் கொண்டு வெளிநாடு போய் உழைக்க நினைக்கிற இளைஞர்கள் ஏன் அந்த அத்தனை முயற்சிகளையும் நமது நாட்டிலே செய்யத் துணிகிறார்களில்லை ? கூழைக்குடித்து பன்னீரைக் கொப்பளிப்பர்களாகவே அதிக இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. கனவுகளுக்குள் வாழும் இந்தக் காளைகளுக்கு அக்கறை பச்சையாகத் தெரிகிறது. இலகுவாக அதிகம் சம்பாதிக்க முடியுமென்ற நப்பாசை தப்பாசையாக வளர்கிறது.அந்தக் கனவு வாழ்க்கை மீதான காதல் கூடுவதால்,எதிர் பார்ப்பு ஏமாற்றமாவதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதையெல்லாம் உணராத வரை இவர்களுக்கு விடிவதில்லை.

Nabhan Shihabdheen

தொழிலொன்றைப் பெற மலேசியா போய் பல சிரமங்களைச் சகித்த பின் இலங்கை வருகிறான் அந்த வாலிபன். பல முயற்சிகளுக்குப் பின்னர் மீண்டும் அரபு நாடொன்றில் வேலை பெற்றுச் செல்கிறான். அங்கும் அவன் நினைத்துப் பார்க்காத…

தொழிலொன்றைப் பெற மலேசியா போய் பல சிரமங்களைச் சகித்த பின் இலங்கை வருகிறான் அந்த வாலிபன். பல முயற்சிகளுக்குப் பின்னர் மீண்டும் அரபு நாடொன்றில் வேலை பெற்றுச் செல்கிறான். அங்கும் அவன் நினைத்துப் பார்க்காத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *