Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ரிஷாட்டின் பாராளுமன்ற உரை - தொனித்த இரு விடயங்கள் - Youth Ceylon

ரிஷாட்டின் பாராளுமன்ற உரை – தொனித்த இரு விடயங்கள்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மொஹமட் பாதுஷா

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது முன்வைத்துக் கூறிய விடயங்கள், இரண்டு விதத்தில் முக்கியமானவை.

ஒன்று, அவரது வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், மரணித்த ஹிசாலினி தொடர்பாக, தன்பக்க நியாயங்களை முன்வைத்திருந்தார்.

இரண்டாவது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற நபர்களின் அனுபவமும் அவஸ்தையும் எப்படி இருக்கின்றது என்பதை எடுத்துரைத்திருந்தார்.

ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹிசாலினி, தீயில் கருகி உயிரிழந்த சம்பவமானது, நீதிக்கான குரல்களை நாட்டில் ஓங்கி ஒலிக்கச் செய்திருந்தது. இது ஒருபுறமிருக்க, சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான யதார்த்தங்களையும் மீள்வாசிப்புச் செய்வதற்கான ஒரு பொறியைத் தட்டி வைத்திருக்கின்றது.

ஹிசாலினிக்கு, நீதி கிடைத்தே ஆக வேண்டும். அவருக்கு மட்டுமன்றி, நாட்டில் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பாலியல் சுரண்டல்கள், வன்புணர்வுகள், இம்சைகள் போன்றவற்றால் அருவருப்பான அனுபவங்களைப் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கின்ற எல்லா சிறுமிகள், சிறுவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும், ரிஷாட் பதியுதீன் எம்.பியோ அவரது குடும்பமோ கட்சியோ, இவ்விவகாரத்தில் தமது பக்கத்தில் இருந்து தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருக்கவில்லை. ஆரம்பத்தில், ஒரு பக்கத்திலிருந்தே பெரும்பாலும் குரல்கள் ஒலித்தன. இது ஒரு வெற்றிடமாக இருந்தது. இப்போதுதான் மறுதரப்பு, பேசத் தொடங்கியுள்ளது.

இதில் முக்கியமானது, கடந்த வாரம் ரிஷாட் எம்.பி,  பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையாகும். ஹிசாலினியின் வீட்டுரிமையாளரான அவர், முதன்முதலாகத் தனது கருத்தை முன்வைத்த சந்தர்ப்பம் இதுவாகும்.

“ஹிசாலினியை, எங்கள் வீட்டுப் பிள்ளை போலவே பார்த்தோம். அவருக்கு போதிய சம்பளத்தையும் வசதிகளையும் செய்து கொடுத்திருந்தோம். இன்று குற்றஞ்சாட்டப்படுவது போன்ற ஒரு காரியத்தை, எனது குடும்பம் செய்யவில்லை. ஏற்கெனவே, சிறுவயதில் புற்றுநோயால் மரணித்த எனது சொந்தச் சகோதரியின் மரணம் ஏற்படுத்திய அதே கவலையை, இந்தப் பிள்ளையின் மரணமும் எனக்கு ஏற்படுத்தி இருக்கின்றது” என்று அவர் பாராளுமன்றத்தில் தன்னிலை விளக்கி இருந்தார்.

“அந்தச் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும். நியாயமான நீதி விசாரணைகளை நடத்துமாறு, அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்று  கூறிய  அவர், “ஹிசாலினியின் தாயாருக்கு கவலை இருக்கும்; ஆத்திரம் இருக்கும். அது வேறு விடயம். ஆனால், அவரை சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சுயஇலாபங்களுக்காக பயன்படுத்துகின்றன” என்றும் கண்டனம் தெரிவித்தார்.

உண்மையில், ஹிசாலினிக்கு அந்த வீட்டில் என்னதான் நடந்திருக்கின்றது என்பதை, நீதிமன்றமே கண்டறிய வேண்டும். ஆயினும், ரிஷாட் எம்.பியின் மேற்படி பாராளுமன்ற உரை, அவரது குடும்பம் சொல்ல நினைக்கின்ற தம்பக்க கருத்துகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

சம்பவம் பற்றி, ஆயிரத்தெட்டு கதைகள் உலா வந்து கொண்டிருக்கும் வேளையில், இவ்விவகாரத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக அலச வேண்டியதன் தேவையை, இவ்வுரை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதேவேளை, “பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான், தனி அறை ஒன்றுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். கழிப்பறைக்குச் செல்வதற்கு மட்டுமே வெளியில் அனுமதிக்கப்படுகிறேன்” எனவும் ரிஷாட், தனது பாராளுமன்ற உரையின் ஊடாக வௌிப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன், 102 நாள்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னிடம், வெறும் ஐந்து  நாள்கள் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், அவர் இந்தப் பாராளுமன்ற உரையின் மூலமாக, நாட்டு மக்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

சிறை வாழ்க்கை என்பது இதுதான். குறிப்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் நபர்களின் நிலை மட்டுமன்றி சிங்களவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்தாலும் அவர்களின் நிலையும் இதுதான் என்பதை, அவரது உரை குறிப்புணர்த்தி நிற்கின்றது.

பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சாதாரணமானோர், இப்படித்தான் நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி, வழக்குகள் முடிவுறுத்தப்படாமல் சிறையில் உள்ளனர் என்ற விடயத்தை, தமிழ் அரசியல்வாதிகள் எவ்வளவு காலமாகச் சொல்லி வருகின்றார்கள்?

1980களில், வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திருநாவுக்கரசின் மறைவைத் தொடர்ந்து, அப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையயிலிருந்த குட்டிமணியை, எம்.பியாக நியமிக்குமாறு, அவர் சார்ந்த கட்சி பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அந்தப் பரிந்துரையை சபாநாயகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் போன்ற அதிகாரத் தரப்புகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருவேளை, குட்டிமணி பாராளுமன்றம் சென்றிருந்தால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அனுபவங்களை எடுத்துரைத்திருப்பார் என்ற கருத்து, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கின்றது. இப்போது, அதனை ரிஷாட் எம்.பி செய்திருக்கின்றார் என்று, அவர்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றது. ஐ.நாவும், ஐரோப்பிய ஒன்றியமும் குறைந்தபட்சம் இதிலுள்ள கடுமையான ஏற்பாடுகளை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்ட விடயத்தில், விடாப்பிடியாக இருந்த அரசாங்கம், இப்போது ஒரு படி கீழே இறங்கி வந்திருப்பதுடன், அது தொடர்பாக ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆணைக்குழு ஒன்றையும் நியமித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்ற அறிவிப்பு, அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே, ரிஷாட் எம்.பியின் பாராளுமன்ற உரையும் ஒலித்திருக்கிறது.

இதற்கு முன்னதாக, ஓகஸ்ட் நான்காம் திகதி, சபை அமர்வுக்கு அழைத்து வரப்பட்ட ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு, இரண்டு நிமிடங்கள் சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் பிரசன்னமாகியிருந்த அச்சபையில் அவர் உரையாற்றினார்.

“ஜனாதிபதி அவர்களே! ஏன் என்னைத் தடுத்து வைத்திருக்கின்றீர்கள்? எனக்கு நீதி வேண்டும்” என்ற தொனியில் ரிஷாட் கோரிக்கைவிடுத்த போது, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

ரிஷாட் எம்.பி, நேரடியாக ஜனாதிபதியை நோக்கி கேள்வி எழுப்பியமை, அதனை உலகம் பார்த்துக் கொண்டிருந்தமை எல்லாம், அரசாங்கத்துக்கு ஒருவித நெருக்குதலைக் கொடுத்திருந்ததாகத் தெரிகின்றது. அடுத்த நாள் அமர்வில், அமைச்சர் வீரகேசர, ஜோன்ஸ்டன் ஆகியோர், சபையில் முன்வைத்த கருத்துகளில், இது ‘சாடைமாடை’யாகத் தொனித்திருந்தது. இந்நிலையிலேயே, ஐந்தாம் திகதி அமர்வில், ஹிசாலினி விவகாரம் பற்றியும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் பற்றியும் ரிஷாட் உரையாற்றி விட்டுச் சென்றிருந்தார்.

இப்போது ஹிசாலினிக்கான குரல்கள், மெல்ல மெல்ல ஓய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில், இது கிட்டத்தட்ட முற்றாக அடங்கி விடலாம். அதுதான் வழக்கமும் யதார்த்தமும் ஆகும்.

உண்மையில், இதனால் கடைசி வரையும் நேரடியாகச் சிக்கல்களைச் சந்திக்கப் போவது, ஹிசாலினியுடைய ரிஷாட்டினுடைய குடும்பங்கள் ஆகும். அதேபோன்று, சிறுவர் தொழிலாளர் பற்றிப் பேசுவது அவசியம் என்றாலும், நடைமுறையில் அதனால் இழப்புகளைச் சந்திக்கப் போவது, அந்தச் சிறுவரின் உழைப்பில் மட்டுமே தங்கியுள்ள  குடும்பங்கள் ஆகும்.

மாறாக, ஆர்ப்பாட்டம் நடத்துவோரும் இவ்விவகாரத்தில் அடிப்படையற்ற கருத்துகளைக் கூறி, இரு சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க முனையும் அரசியல் சக்திகளும் சில ஊடகங்களும் இன்னும் சில நாள்களில், வேறு புதினங்களை வைத்து, மக்களுக்குப் ‘பராக்கு’க் காட்டச் சென்று விடுவார்கள்.

எனவே, இவ்விவகாரத்தை நேரிய பார்வையுடன் நோக்க வேண்டும். ‘ஹிசாலினி’ போன்றவர்களுக்கு நீதி கிடைப்பது மட்டுமன்றி, இனிவரும் காலத்தில் ஹிசாலினிகள், ரிஷானாக்கள் உருவாகாமல் இருக்கவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

இதேவேளை, தடுப்புக்காவலில் உள்ள ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து, நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை வழங்க ஆதாரம் இல்லையென்றால், அவரை இனியும் தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது.

அண்மையில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்த அரசாங்கமானது, நீண்டகாலமாகவழக்குகள் இன்றி சிறையில் வாடும் ஏனைய கைதிகளில் உள்ள ‘குற்றமற்றவர்’களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…