“ஸகாதுல் ஃபித்ர்” சில அவதானிப்புக்கள்.

  • 8

நோன்பு ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இறையச்சைத்தையும் பன்முகப் பண்பாடுளையும் இலக்காகக் கொண்டு கடமையாக்கப்பட்ட உயர்ந்த ஆன்மீக வணக்கமாகும்.

عن أبي هريرة: رضي الله عنه قالَ رَسولُ اللَّهِ ﷺ: قالَ اللَّهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ له، إلّا الصِّيامَ، فإنَّه لي وأَنا أجْزِي به، والصِّيامُ جُنَّةٌ، وإذا كانَ يَوْمُ صَوْمِ أحَدِكُمْ فلا يَرْفُثْ ولا يَصْخَبْ، فإنْ سابَّهُ أحَدٌ أوْ قاتَلَهُ، فَلْيَقُلْ إنِّي امْرُؤٌ صائِمٌ والذي نَفْسُ مُحَمَّدٍ بيَدِهِ. (أخرجه البخاري ومسلم )

ஆதமின் மகன் செய்கின்ற அனைத்து அமல்களும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர அது எனக்குரியது. அதற்கான கூலியை நானே வழங்குவேன். நோன்பு (பாவங்களைத் தடுக்கும்) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்தால் அவர் குடும்ப உறவில் ஈடுபடவும் வேண்டாம். கூச்சலிட்டு சப்தம் போடவும் வேண்டாம். நீங்கள் நோன்போடிருக்கின்ற போது உங்களோடு யாராவது சர்ச்சை செய்தாலும் உங்களை திட்டினாலும் நான் நோன்பாளி எனக் கூறிவிடவும் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- முஸ்லிம்) .

மேற்படி ஹதீஸ் எவ்வாறான உயரிய பண்பாடுகளைக் கொண்டு ஒரு நோன்பாளி
தனது வாழ்வை மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக விளக்கி விட்டது.

நோன்பு வணக்கத்திலும் ஒரு பரிகாரம்

சத்திய முறிவு, கடமையான நோன்பை விட்டதற்கான ஃபித்யா, இஹ்ராம் அணிந்த நிலையில் செய்கின்ற சாதாரண குற்றங்கள், நோன்புடன் மனைவியோடு உடல் உறவு கொண்டதற்கான குற்றப்பரிகாரம், தாயோடு மனைவியை ஒப்புக் காட்டியமைக்கான (ழிஹார்) குற்றப் பரிகாரம் போன்ற பலவற்றில் இஸ்லாம் பொதுவாக அடிமை விடுதலை, தொடர் நோன்புகள் நோற்றல், மற்றும் ஃபித்யா-ஒரு நாள் ஏழையின் உணவு வசதி செய்தல்- போன்ற பல வழிமுறைகளை குற்றங்களின் தராதரத்திற்கு அமைவான பரிகாரமாக அறிமுகம் செய்துள்ளது.

அந்த அடிப்படையில் زكاة الفطر எனப்படும் நோன்பு ஃபித்ராவை நோன்பாளியின் சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாக, அவனைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கோடும் கடமையாக அறிமுகம் செய்வது புதிதான ஒன்றல்ல.

ஸகாத்துல் ஃபித்ர் யார் யார்? மீது கடமை

ஸகாத்துல் ஃபித்ர் என்பது நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னால் பிறந்த குழந்தை முதல் ஒரு குடும்பத்தில் உயிரோடு வாழ்கின்ற, மற்றும் அவர்களின் பொறுப்பில் உள்ள ஆண், பெண் அடிமைகள் அனைவர் மீது கடமையாக்கப்பட்ட வழிமுறையாகும்.

‎عَن ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: “فَرَضَ رَسُولُ اللَّهِ ﷺ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ، وَالذَّكَرِ وَالْأُنْثَى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنَ الْمُسْلِمِينَ”. (رواه البخاري ومسلم وأصحاب السنن)

இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு சாவு (தலா ஒருவருக்கு 2.430. கிரேம்) அளவான பேரீத்தம் பழம், அல்லது தோல் நீக்கப்பட்ட கோதுமை என்பவற்றை முஸ்லிம்களில் உள்ள சிறியவர், பெரியவர், சுதந்திரமான ஆண், பெண்; ஆண், பெண் அடிமைகள் அனைவர் மீதும் கடமையாக்கியதோடு அதனை பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் ஃபித்ராவாக வழங்கிட வேண்டும் என்றும் பணித்தார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

வேறு சில அறிவிப்புக்களில் தயிர், நெய், உலர்ந்த திராட்சை என்றெல்லாம் இடம் பெற்றுள்ளது.

மேற்படி ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு நோன்புக்கான ஸகாத்துல் ஃபித்ர் என்பது மக்கள் பிரதான உணவாகக் கொள்கின்ற பொருட்களின் மூலம் வழங்கப்படல் வேண்டும் என்பதுடன் அது முஸ்லிம்களில் தாராள வசதி உள்ளவர்கள் மற்றும் வசதிவாய்ப்புள்ள வறுமை இல்லாத முஸ்லிம்கள் மீது கடமையாகும் என்பதும் பெரும் பாலான அறிஞர்களின் முடிவாகும்.

கவனிக்க:

மேற்படி பொருள்களுக்குப் பதிலாக பணத்தை வழங்குவது தொடர்பில் அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. அவ்வாறு ஃபித்ரா பேரில் பணம் வசூலிக்கப்பட்டாலும் அதற்கு பொருள்களைக் கொள்வனவு செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்வதே நபிவழிக்கு உடன் பாடான நடைமுறையாகும்.

எப்போது கொடுக்க வேண்டும்?

மேற்படி ஹதீஸ் நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னால் கொடுத்து விட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதே வேளை, நபி (ஸல்) அவர்கள் அதனை

‎أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة (رواه البخاري ومسلم)

பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக வழங்க வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள் (முஸ்லிம்)

எனக் கூறுவதன் மூலம் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக வழங்குவதே வலியுறுத்தப்பட்ட அதி சிறந்த கடமையாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இருந்தாலும் நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக ஃபித்ராவை வழங்கும் வழி முறை பற்றி பின் வரும் செய்தி இவ்வாறு குறிப்பிடுகின்றது .

عن نافع أن ابن عمر رضي الله عنه قال: “وكانوا يعطون قبل الفطر بيوم أو يومين” (رواه البخاري)،

அவர் (நபித்தோழர்)கள் பெருநாள் தினத்திற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக வழங்குவோராக இருந்தனர் என இப்னு உமர் ரழி அவர்கள் கூறியதாக அவர்களின் மாணவரான நாபிஃ (ரஹி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

இதில் நபித்தோழர்கள் அனைவரும் என்ற ஒரு நிலையை சுட்டிக் காட்டப்படுவதன் மூலம் நபித்தோழர்கள் மத்தியில் ஓரிரு நாட்கள் முன்பாக வழங்குவது முரண்பாடாக நோக்கப்படவில்லை என்பது உணர்த்துகின்றது.

இதற்கு ஸகாத்துல் ஃபித்ர் பாதுகாப்புக்காக மூன்று தினங்கள் நிறுத்தப்பட்டிருந்த புகாரியில் இடம் பெறும் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் தொடர்பான செய்தியும் மறைமுகமான அங்கீகார சான்றாகும்.

ரமழான் நடுவில் ஃபித்ராவை நிறைவேற்றலாமா?

ஃபித்ராவை ரமழான் ஆரம்பத்தில், அல்லது அதன் நடுப்பகுதியில் நிறைவேற்றலாம் என ஃபிக்ஹ் துறை சார்ந்த அறிஞர்கள் சுட்டிக்காட்டினாலும் நாம் சுட்டிக்காட்டிய மேற்படி நடைமுறைதான் முரண்பாடான கருத்துக்களில் ஹதீஸுக்கு துணையான, அதற்கு மிகவும் நெருக்கமான முடிவாக அறிஞர்கள் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எனவே ஆதாரம் எதற்கு தெளிவாக இருக்கின்றதோ அதனை முன்னிலைப்படுத்தி பின்பற்றுவதே ஒரு முஸ்லிமின் முடிவில் சிறந்ததாகவும் கொள்ளப்படும்.

நோக்கம் என்ன?

இஸ்லாம் அறிமுகம் செய்துள்ள பரிகாரங்கள் பொதுவாக ஏழை எளிய மக்களின் வாழ்வில் சுபீட்சம், பசியைப் போக்குதல் போன்ற நோக்கங்கள் காணப்படுவதை நிறையவே அவதானிக்க முடியும்.

அதனை பொதுக் காரணியாக ஸகாத்துல் ஃபித்ரிலும் கொள்ளலாமா என்றால் ஏழைகள் நிரம்பி வாழ்ந்த இறைத் தூதரின் காலத்தில் கூட பெருநாள் கொண்டாடும் ஏழைகளின் நோன்பு பெருநாள் உணவாகவே அது வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. என்பதே உண்மை.

பின் வரும் நபி மொழியைக் கவனத்தில் கவனியுங்கள்.

عن عبدالله بن عباس رضي الله عنهما: فرض رسولُ اللهِ ﷺ زكاة الفطرِ طُهرَةً للصائمِ من اللغوِ والرفثِ وطُعْمَةً للمساكينِ من أدّاها قبلَ الصلاةِ فهي زكاةٌ مقبولَةٌ ومنْ أدّاها بعدَ الصلاةِ فهيَ صدقةٌ منَ الصدقاتِ.(أخرجه أبو داود في سننه ، وابن ماجة، والحاكم وصححه)

நோன்பாளிக்கு பரிசுத்தம் வேண்டியும், அவரது சிறு சிறு தவறுகள் சேஷ்ட்டைகளுக்கான பரிகாரமுமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். யார் ஒருவர் அதனை (பெருநாள்) தொழுகைக்கு முன்னதாக நிறைவேற்றினாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட “ஸகாத்” ஆகும். யார் ஒருவர் அதனை அந்த தொழுகைக்கு பின் நிறைவேற்றினாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மமாகும். (அபூ தாவூத், இப்னு மாஜா, முஸ்தத்ரக் அல்ஹாகிம்- அறகவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்).

மேற்படி ஹதீஸ் எப்போதும் ஏழைகளின் பசியைப் போக்கலாம் என்ற பொதுப் பார்வையில் இருந்து விலகி பெருநாள் தினத்தொழுகைக்கு முன்னால் என்ற குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்திருப்பதன் காரணமாக குறித்த அந்த நேரத்திலோ, அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ நிறைவேற்றுவது ஷரீஆவின் சான்றுகளுக்கு மிகவும் ஏற்ற நடைமுறையாகும்.

ஃபித்ராவை சேர்த்து விநியோகம் செய்தல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸகாத்துல் ஃபித்ர் களஞ்சயப்படுத்தப்படும் களஞ்சியசாலையின் காப்பாளராக நபித்தோழர் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமிக்கப்பட்டதையும் அங்கு ஷைத்தான் மூன்று இரவுகள் திருட வந்த நிகழ்வும் நமக்கு தெரிந்ததே.

அந்த செய்தி மூன்று நாட்கள் ஸகாத்துல் ஃபித்ர் பாதுகாப்பு என்பது பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்பிருந்தே அது வசூல் செய்யப்பட்டிருப்பதும் அதனை சேர்த்து தேவையான ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். பார்க்க: ஃபத்ஹுல் பாரி) (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்).

அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்வானாக,

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

நோன்பு ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இறையச்சைத்தையும் பன்முகப் பண்பாடுளையும் இலக்காகக் கொண்டு கடமையாக்கப்பட்ட உயர்ந்த ஆன்மீக வணக்கமாகும். عن أبي هريرة: رضي الله عنه قالَ رَسولُ اللَّهِ ﷺ: قالَ اللَّهُ:…

நோன்பு ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இறையச்சைத்தையும் பன்முகப் பண்பாடுளையும் இலக்காகக் கொண்டு கடமையாக்கப்பட்ட உயர்ந்த ஆன்மீக வணக்கமாகும். عن أبي هريرة: رضي الله عنه قالَ رَسولُ اللَّهِ ﷺ: قالَ اللَّهُ:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *