Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
16 வருடம் சிறையில் கழித்து கொரோனாவுக்கு பலியான பொட்ட நவ்பர் - Youth Ceylon

16 வருடம் சிறையில் கழித்து கொரோனாவுக்கு பலியான பொட்ட நவ்பர்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எம்.எஸ்.முஸப்பிர்

பாதாள உலகம் எந்தளவுக்கு பலமானது எனச் சொன்னாலும் அவர்களில் அனேகமானவர்களின் ஆயுட்காலம் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கான பலனை அனுபவித்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது எதிர் தரப்பினராலோ இளம் வயதிலேயே முடிவடைந்து விடுகின்றது. என்றாலும் ஓரிருவர் சில காலம் உயிர் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருப்பது அவர்கள் இந்நாட்டிலிருந்து தப்பிச் சென்று அல்லது சிறையில் அடைக்கப்பட்டவர்களாக இருப்பதனாலாகும்.

அவ்வாறு கடந்த 16 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் சில காலம் உயிர் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்த பொட்ட நௌபர் என பிரபலமாகியிருந்த முஹம்மட் நிசார் நௌபர் என்ற முக்கிய குற்றவாளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தனது 59 வயதில் அடியெடுத்து வைத்திருந்த நிலையில் மரணமடைந்தார்.

90ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு பாதாள உலக குற்றவாளியான பொட்ட நௌபர் அன்றும், இன்றும் ஒரு நீதிபதியை கொலை செய்வதற்கு சதி செய்த ஒரே குற்றவாளியாகும். 2004ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை படுகொலை செய்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் 2005 ஜூலை 04ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நௌபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த காலங்களில் வெலிக்கடை, போகம்பரை, அநுராதபுரம், பதுளை மற்றும் பூசா போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நௌபர், கடந்த 5 வருடங்களாக சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்.

கடந்த காலத்தில் பூசா அதி பாதுகாப்புச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நௌபர் கடந்த 20ம் திகதி சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் அவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியிருந்தது. பின்னர் பொட்ட நௌபர் கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 28ம் திகதி இரவு 7.30 மணியளவில் கொவிட் நியுமோனியா மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட அவருக்கிருந்த மேலும் சில நோய் நிலைகள் முற்றியதால் கொவிட் தொற்றில் உயிரிழந்திருந்தார்.

நௌபரின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் கடந்த 29ம் திகதி இஸ்லாமிய முறைப்படி கொவிட் சடலங்களை நல்லடக்கம் செய்யும் மட்டக்களப்பு ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டது. நௌபர் மரணித்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும், அவரது உறவினர்கள் மற்றும் மனைவி பிள்ளைகள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16 வருட காலத்தில் சிறையில் இருந்து நௌபர் தொலைபேசியூடாக தனது அடியாட்களை வழிநடாத்தி கோடிக் கணக்கில் பணம் ஈட்டி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளான். அவ்வாறு சிறையில் இருந்து கொண்டு நௌபர் மேற்கொண்ட போதைப் பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்காக நௌபரை பல சிறைச்சாலைகளுக்கும் மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் நிருவாகம் கடந்த காலங்களில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

2016ம் ஆண்டிலிருந்து கடுமையான சிறுநீரக நோய்க்கு உள்ளான நௌபர், இதுவரைக்குமாவது உயிருடன் இருந்தது சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு வழங்கிய உயர் சிகிச்சைகளினாலாகும். சிறுநீரக நோய்க்கு உள்ளானதன் பின்னர் பொட்ட நௌபர் 276 தடவைகள் இரத்த மாற்றீட்டுக்கு உள்ளானார்.

90ம் ஆண்டு காலப்பகுதி முழுவதும் கொழும்பு புறக்கோட்டை, கொச்சிக்கடை பிரதேசங்களில் பாதாள நடவடிக்கைகளை முன்னெடுத்த நௌபர், புதுக்கடை பிரதேசத்தில் வசித்த அப்பாவி முஸ்லிம் தம்பதிகளின் மகனாவார். மிகவும் வறுமையில் இளமைப் பருவத்தைக் கடத்திய நௌபரால் சரியான முறையில் கல்வியைக் கற்பதற்கும் முடியாது போனது. பாடசாலையிலிருந்து விலகியதும் கொழும்பு நகரில் பல்வேறு வியாபார நடவடிக்கைகயில் ஈடுபட்ட நௌபர், பின்னர் ஊறுகாய் வண்டியைத் தள்ளிச் சென்று ஊறுகாய் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். எனினும் அது அந்தளவுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாக அது இருக்கவில்லை. அந்நாட்களில் கொழும்பு நகர் முழுவதும் போதைப் பொருள் பாவனை கடுகதி வேகத்தில் பரவிக் கொண்டிருந்தது.

ஊறுகாய் வண்டியைத் தள்ளிக் கொண்டு அனைத்து மூலை முடுக்குகளுக்கும் சென்ற நௌபர், ஊறுகாய் விற்பனைக்கு மத்தியில் வண்டியில் போதைப் பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்யத் தொடங்கினான். நாட்கள் நகர்ந்த போது போதைப் பொருள் விற்பனை அதிகளவு பணத்தை ஈட்டித் தரும் வழியாக நௌபருக்கு விளங்கியது. அதனையடுத்து அவன் போதைப் பொருள் விற்பனை நெட்வேர்க்குடன் இணைந்து கொண்டான். நௌபரின் போதைப் பொருள் விற்பனை வலையமைப்பானது புதுக்கடை உள்ளிட்ட புறக்கோட்டை, கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றது.

90ம் ஆண்டு நடுப்பகுதியில் நௌபர் செல்வந்தனாகி புதுக்கடை பிரதேசத்தில் லொட்ஜ் ஒன்றையும், திருமண மண்டபம் ஒன்றையும் விலைக்கு வாங்கினான். அங்கு அடிக்கடி வந்து சென்றது பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டு சுற்றுலாப்பயணிகளாகும். அவர்களோடு உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த நௌபர் தனது போதைப் பொருள் வலையமைப்பை மென்மேலும் விரிவாக்கிக் கொண்டிருந்தான்.

போதைப் பொருள் நடவடிக்கைகளின் ஊடாக பாதாள உலகிலும் நுழைந்த நௌபர் அந்த சமயத்தில் கொழும்பு பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த தமிழ் பாதாள உலகுடன் இணையுமளவுக்கு நுட்பத்தைக் கடைபிடித்தான்.

நௌபர் ஒரு முஸ்லிம் இனத்தவராக இருந்த போதிலும் அந்நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளிடமிருந்து கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு தமிழ் பாதாள உலகு கொழும்பு நகரில் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்ததால் தமிழ் பாதாள உலகுடன் நௌபர் இணைந்து கொண்டது தனது பலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகும்.

மன்னாரிலிருந்து வந்து கிராண்ட்பாஸ் பிரதேசத்தை மையமாகக் கொண்டு கொழும்பு பாதாள உலகை உருவாக்கிய இசக்கிமுத்து சுனேந்திரன் கருப்பைய்யா என்ற சுதாகரன் அல்லது சுதா என்றவருடன் நௌபர் இணைந்து கொண்டிருந்தான். அந்த பாதாள உலக குழுவில் ரமேஸ், சின்னப்பன் கிரிஸ்டோபர், கிம்புலாஎல குணா, அம்பிகா, தெல் பாலா, நடராஜா விஜேபாலன் போன்ற தமிழர்களே இருந்தார்கள். அந்த குழுவில் இருந்த முஸ்லிம் நௌபர் மாத்திரமேயாகும். சிங்கள பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்திய ஓல்கட் பெரேரா என்ற ஓல்கட் மற்றும் உதய பிரியதர்ஷன என்ற மல்லியா என்பவர்களும் தமிழ் பாதாள உலகுடன் இணைந்து கொண்டார்கள்.

அந்த காலத்தில் தமிழ் பாதாள உலகுக்கு எதிராக மாளிகாவத்தையை மையப்படுத்திய கொழும்பு மாநகர உறுப்பினரான பாபர் இம்தியாஸின் ஆசீர்வாதத்துடன் ஐயூப்கான் மற்றும் குடு நூர் தலைமையில் மலபார் றிழ்வான், திகா பைசர், லீமோலவத்தை றிஸ்வான், பைய்யா, பாஜி, டோஜி, மமஸ்மீ போன்றோர் உள்ளிட்ட முஸ்லிம் பாதாள உலகும் உருவாகியிருந்தது.

எவ்வாறாயினும் கொச்சிக்கடை பாதாள உலகத்தை தலைமை தாங்கியது முக்கியமான குற்றவாளியும், போதைப் பொருள் வியாபாரியுமான நடராஜா விஜேபாலனாகும். விஜேபாலன் வலிமையான உடல் அமைப்பைக் கொண்ட அஜானுபாகுவான ஒருவராகும். நௌபருக்கும், விஜேபாலனுக்கும் இடையிலான மோதல்களைத் தடுப்பதற்கு பல சந்தர்ப்பங்களில் சுதாகரனும் முயற்சி செய்திருந்துள்ளான்.

எனினும் ஒருநாள் நௌபர் தான் காதலித்த முஸ்லிம் யுவதி வரும் வரைக்கும் இன்னும் சில நண்பர்களோடு காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் காத்திருந்தது கொட்டாஞ்சேனை ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அந்நாட்களில் நௌபர் வசித்த வீட்டுக்கு அருகிலாகும். அங்கு மோட்டார் சைக்கிளில் மற்றொருவருடன் வந்த நடராஜா விஜேபாலன் நௌபர் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். அந்த தாக்குதலில் நௌபரின் ஒரு கை பலத்த காயங்களுக்கு உள்ளாகி வாழ்நாள் முழுவதும் அங்கவீன நிலைக்கு தள்ளப்பட்டதோடு, நௌபரின் வலகு கண்ணும் மோசமாகப் பாதிப்படைந்தது.

அன்றிலிருந்து கறுப்பு நிறத்திலான கண்ணாடியை அணியத் தொடங்கிய நௌபர், பொட்ட நௌபர் என பிரபலமடைந்தான். அதுவரைக்கும் நௌபர் ஒரு போதும் அந்த பெயரை விரும்பியிருக்கவில்லை. எனினும் பொலிஸ் ஏடுகளிலும் நௌபரின் பெயர் பொட்ட நௌபர் என்றே பதிவானது. அந்த குண்டுத் தாக்குதலின் பின்னர் விஜேபாலன் தனது காதலியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானான். அந்நேரம் நௌபரின் நண்பனாக இருந்த சுதாகரனும் மரணமடைந்தான்.

அதனைத் தொடர்ந்து நௌபரின் பலம் அதிகரித்துச் சென்றது. போதைப் பொருள் நடவடிக்கைகள், கூலிக்கு ஆட்களைக் கொலை செய்தல் மற்றும் திருட்டுத் தனமாக சுங்க வரி இல்லாமல் இந்நாட்டிற்கு சிகரட்டுக்களைக் கொண்டு வந்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த நௌபர், மிகத் தந்திரமான முறையில் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி லொட்ஜ், திருமண மண்டபம் போன்றவற்றை கொழும்பு நகரில் விலைக்கு வாங்கி வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டான். அத்துடன் நௌபர் பாரியளவில் புறா விற்பனையிலும் ஈடுபட்ட ஒருவராகும். நௌபரின் அனைத்துவித சட்டவிரோத செயற்பாடுகளுக்காகவும் சில உயர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு கொஞ்சமானதல்ல.

ஒரு தடவை பேலியாகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகரான பிரியந்த ஜயகொடி தலைமையிலான குழுவினர் புதுக்கடையில் வசித்த முஸ்லிம் தலைவரான மொஹிதீன் ஹாஜியாரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நௌபரைக் கைது செய்தனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நௌபரைக் கைது செய்வதற்காக நௌபருக்குச் சொந்தமான புதுக்கடையில் அமைந்துள்ள சொகுசு வீட்டுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், அவ்வீட்டின் நுழைவாயிலிலேயே அக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரின் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்ததைக் கண்டனர். அந்த விசாரணைகளின் போது பேலியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நௌபரால் வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டிருந்தனர். அந்தக் கைத்துப்பாக்கியை அந்த இரு உயர் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரே நௌபருக்கு வழங்கியிருந்தமை தெரிய வந்தது. அதே போன்று அந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பின்னர் நௌபரின் ஒத்துழைப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

நௌபரைப் பற்றி முழு நாடும் பேசத் தொடங்கியது மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவின் படுகொலையின் பின்னராகும். நீதிபதி சரத் அம்பேபிட்டிய கடுமையான தீர்ப்புக்களை வழங்கி குற்றவாளிகளுக்கு எவ்விதக் கருணையும் காட்டாத ஒரு நீதிபதியாக பிரபலமடைந்திருந்தார். 1996ம் ஆண்டு மத்திய வங்கி மீது எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் பிரபாகரன் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கியதும் மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவாகும்.

2005 நவம்பர் 19ம் திகதி தனது 58 வது பிறந்த தினத்தன்று துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நீதிபதி சரத் அம்பேபிட்டிய, அதற்கு சில தினங்களுக்கு பின்னர் அதாவது நவம்பர் 23ம் திகதி பொட்ட நௌபருடன் தொடர்புடைய போதைப் பொருள் வழக்கின் தீர்ப்பை வழங்க இருந்தார். அந்த வழக்கிலிருந்து எவ்வகையிலும் தப்பிக்க முடியாது என்பதை நௌபர் நன்கு அறிந்திருந்தான். காரணம் அந்த வழக்கில் நௌபருக்கு பிணை வழங்குவதை நீதிபதி சரத் அம்பேபிட்டிய நிராகரித்திருந்தார்.

எனவே அந்த வழக்கு தீர்ப்புக்கு முன்னர் நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்வதற்கு நௌபர் திட்டமிட்டான். அதற்காக நௌபர் தெரிவு செய்த நாள் 2004ம் திகதி நவம்பர் 19ம் திகதியாகும். இந்த வேலையை முடிப்பதற்காக சுஜித் ரோஹன ரூபசிங்க, சுமிந்த நிசாந்த, உதார பெரேரா மற்றும் லசந்த குமார ஆகிய நால்வர் ஈடுபடுத்தப்பட்டனர். லீட்ஸ் என்ற கெப் சேவை நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 253 – 0882 என்ற இலக்க வெள்ளை நிற வேனில் சென்று நீதிபதி சரத் அம்பேபிட்டியவை சுட்டுக் கொலை செய்வதற்கு நான்கு கொலைகாரர்களையும் தொலைபேசி ஊடாக வழிநடாத்தியது நௌபராகும். குறித்த கெப் சேவையிலிருந்து வாகனத்தைப் பெற்ற நால்வரும் மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்திற்கு அருகிலிருந்தே அந்த வேனில் ஏறியிருந்தனர். மொரட்டுவை பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கூறியே வேன் வாடகைக்குப் பெறப்பட்டிருந்தது.

நீதிபதி சரத் அம்பேபிட்டிய அன்றைய தினம் மாலை நீதிமன்றத்திலிருந்து சரண வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வந்து காரிலிருந்து இறங்கி, காரின் பின் புறத்திலிருந்த தனது பேக்கை எடுப்பதற்கு முயன்ற போது வீட்டினுள் நுழைந்த கொலைகாரர்கள் நீதிபதி மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து விட்டு அங்கிருந்து தாம் வந்த வேனிலேயே தப்பிச் சென்றிருந்தனர். தப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நீதிபதி மறுநாள் வைத்தியசாலையில் உயிரிழந்ததோடு, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் பரிசோதகர் உபாலி ரணசிங்க அவ்விடத்திலேயே உயிரிழந்தார். அந்தக் காலப்பகுதியில் சீசீடிவி கெமராக்கள் இல்லாதிருந்ததால் இக்கொலையைச் செய்தவர்களை இனங்கண்டு கொள்வது அவ்வளவு இலேசான விடயமாக இருக்கவில்லை. கொலைகாரர்கள் வந்த வேன் எல்விட்டிகல மாவத்தையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அதுவரைக்கும் எதுவுமே அறியாதிருந்த அந்த வேனின் சாரதியான சுசந்த நடந்த சம்பவங்களை பொலிஸாரிடம் தெரிவித்து முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டில், கொலைகாரர்கள் நால்வரும் கொலைக்கு முன்னர் செய்த, பேசிய விடயங்கள் அனைத்தையும் வேன் சாரதி தெரிவித்திருந்தார். கொலைகாரர்கள் நீதிபதி சரத் அம்பேபிட்டியவின் வீட்டுக்கு அருகில் மதுபானம் அருந்தியதாகவும், அவர்களுள் ஒருவன் அங்கிருந்த மதிலுக்கு அருகில் வாந்தி எடுத்ததாகவும் அந்த சாரதி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்துள்ளார். எவ்வாறாயினும் கொலை இடம்பெற்று சில நாட்கள் கடப்பதற்கு முன்னரே கொலையாளிகள் பொலிஸாரின் வலையில் சிக்கிக் கொண்டனர். அதன் பின்னர் டீ. என். ஏ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

என்றாலும் அச்சமயத்தில் டீ. என். ஏ தொழில்நுட்பமும் இந்நாட்டினுள் அந்தளவுக்கு முன்னேறியிருக்காத போதிலும் டீ. என். ஏ பரிசோதனையின் மூலம் பெறப்பட்ட சாட்சியங்களும் கொலையாளிகளுக்கும், பொட்ட நௌபருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் மூலமும் நீதிபதி சரத் அம்பேபிட்டியவின் கொலையின் அனைத்து விடயங்களையும் பொலிஸார் வெளிப்படுத்தினர். இதனடிப்படையில் கொலைகாரர்கள் மற்றும் கொலைச் சதிக்கு உடந்தையாக இருந்த நௌபர் உள்ளிட்ட ஐவருக்கும் ஏழு மாதங்கள் என்ற குறுகிய காலத்தினுள் அதாவது, 2005ம் ஆண்டு ஜூலை 04ம் திகதி மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எம்.எஸ்.முஸப்பிர் பாதாள உலகம் எந்தளவுக்கு பலமானது எனச் சொன்னாலும் அவர்களில் அனேகமானவர்களின் ஆயுட்காலம் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கான பலனை அனுபவித்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது எதிர் தரப்பினராலோ இளம் வயதிலேயே…

எம்.எஸ்.முஸப்பிர் பாதாள உலகம் எந்தளவுக்கு பலமானது எனச் சொன்னாலும் அவர்களில் அனேகமானவர்களின் ஆயுட்காலம் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கான பலனை அனுபவித்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது எதிர் தரப்பினராலோ இளம் வயதிலேயே…