குளிர்சாதன வசதி இருந்தால் இறுதி முடிவு வரும்வரை ஜனாஸாவை பாதுகாக்கலாம்

  • 9

கொரோனாவில் மரணித்த வியங்கல்லையைச் சேர்ந்த பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ் அவர்களின் மகனுடனான நேர்காணல்

உங்கள் பெயர் என்ன?

முஹம்மத் பஸிஹ் முஹம்மத் பஸ்ரான். களுத்தறை மாவட்ட வியங்கல்லைதான் எனது சொந்த ஊர்.

உங்களின் உறவினர் யாராவது ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்தாரா?

ஆம், எனது தந்தை இவ்வாறு மரணித்தார்.

அவ்வாறாயின் அவரின் பெயர் என்ன?

பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ்

அவரின் வயது?

60 வயது

உங்கள் தந்தைக்கு கொரோனா தொற்று உள்ளது என்று எப்போது இனங்காணப்பட்டது?

கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் எனது தந்தை மரணித்தார். அதன் பின்னரான மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று இனங்காணப்பட்டது.

PCR பரிசோதனை முடிவு எப்போது கிடைக்கப்பெற்றது?

21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை 04 மணிக்கு

PCR பரிசோதனை அறிக்கை உங்களுக்கு கிடைக்கப் பெற்றதா?

இல்லை. அவர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள். அறிக்கையை கேட்டபோது அதனை வழங்க அவர்களுக்கு அனுமதியில்லை என்றார்கள்.

இந்த PCR பரிசோதனை எத்தனையாவது பரிசோதனை?

முதலாவது பரிசோதனை முடிவு, அதற்கு முன்னர் எமது தந்தை PCR பரிசோதனை மேற்கொள்ளவில்லை.

உங்கள் தந்தைக்கு இதற்கு முன் ஏதாவது நோய் இருந்ததா?

ஆம் அவருக்கு உயர் குறுதியமுக்கம், நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தன.

அந் நோய்களுக்காக அவர் மருந்து பாவித்தாரா?

ஆம், அதற்காக எனது தந்தை தொடர்ந்து மருந்து பாவித்தார்.

அவ்வாறாயின் உங்கள் தந்தைக்கு காய்ச்சல், தடிமல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்ததா?

இதற்கு முன்னர் இவ்வாறான அறிகுறிகள் காணப்படவில்லை, என்றாலும் தந்தை மரணிப்பதற்கு முன்னரான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டன.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் எவ்விடத்திற்கேனும் பயணித்தாரா?

இல்லை, அவர் வீட்டிலே தான் இருந்தார்.

அவ்வாறாயின் உங்கள் வீட்டில் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா?

தந்தை மரணிக்க முன் எமக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கும், எனது தாய்க்கும், எனது சகோதரி ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தியிருந்தோம்.

வைத்தியசாலையில் தகனம் செய்ய சவப்பெட்டிக்கு என்று பணம் எடுத்தார்களா?

இல்லை, திங்கட்கிழமை மாலை தந்தைக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளது ஊர்ஜீதப்படுத்தப்பட்ட பின் எனக்கு இது குறித்து அறிவித்து உமது விருப்பம் என்ன என்று கேட்டார்கள். நான் எமக்கு ஜனாஸாவை அடக்கம் செய்யத் தருமாறே கோரினேன், அது தான் என் விருப்பம் என்றும் இதற்கு மாற்றமான எந்த முடிவிற்கும் நான் இணக்கம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறினேன். எனவே இது குறித்து பொலிஸார், நீதிமற்றில் மனு ஒன்றை இட்டு அதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவித்தார்கள். அத்தோடு எமது இறுதி முடிவு குறித்து கடிதம் ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கூறினார்கள்.

என்றாலும் நான் என்னுடைய விருப்பம், தகனம் செய்வதல்ல, நல்லடக்கம் செய்வதே என்று நேரடியாகவே அவர்களிடம் தெரிவித்தேன். இதற்கான கடிதத்தை என்னால் சமர்ப்பிக்க முடியாது என்றும் கூறினேன். நீதிமன்ற முடிவை நாடுவதாக கூறினார்கள்.

இதற்கிடைப்பட்ட வேளையில் நாம் பல்வேறு தரப்பினருடன் இதுகுறித்து அறிவித்து சாதகமான முடிவொன்றை பெற முயற்சித்தும் அது கைக்கூடவில்லை.

அரசியல் ரீதியான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் காலம் போதாமையினால், அதாவது திங்கட் கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மதியம் நீதிமன்ற முடிவு வருவதற்கு இடைப்பட்ட காலம் குறுகியமையால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் முடிவு வரும் வரையில் ஜனாஸாக்களை குளிரூட்டல் அறையில் வைப்பதற்கான ஏற்பாடுகள் எமது மாவட்டத்தில் இன்மையால் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலே வைத்தியத்தரப்பு நீதிமன்ற முடிவைப் பெற்று தகனம் செய்தனர்.

குறித்த தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் நீதிமன்றில் மேன்முறையீடுயொன்றை தாக்கல் செய்வதற்கான வசதிகளும் கிடைக்கவில்லை.

ஜனாஸா தகனத்திற்காக நீங்கள் கடிதம் மூலமாகவோ நேரடியாகவோ இணக்கம் தெரிவிக்காத நிலையில் பலவந்தமாக ஜனாஸா எரிக்கப்பட்டுள்ளதா?

அவர்கள் எமது விருப்பம் இல்லாமலே நீதிமன்ற உத்தரவைக் கொண்டே செயற்பட்டுள்ளனர். நாகொட வைத்தியசாலையில் பிரேத அறையில் சடலங்கள் நிறைந்து காணப்படுவதால் அவசரமாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலே இம் முடிவை செயற்படுத்தினோம் என்றே காரணம் கூறினர்.

நாகொட வைத்தியசாலை வைத்தியர்கள் உங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

வைத்தியர்களுடன் கதைப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை.

ஜனாஸா தொழுகை நடாத்துவதற்கான அனுமதி தந்தார்களா?

பிரேத அறை அதிகாரிகளின் தொடர்பைக் கொண்டே ஜனாஸா தொழுகை நடாத்த நேரம் கிடைத்தது. என்றாலும் இதற்குப் பின்னர் மக்கொனையில் நடந்த ஜனாஸாவில், ஜனாஸா தொழுகையை தொழுவதற்கான நேரத்தை சரியாக வழங்கவில்லை.

நீங்கள் சமூகத்திற்கு எதாவது கருத்துக்களை கூற விரும்புகிறீரா?

எனது தந்தை மரணித்த சந்தர்ப்பத்தில் ஜனாஸாவை பெற்றுத்தர முன்வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இச்சந்தர்ப்பத்தில் எம்மைத் தொடர்பு கொண்டு ஆறுதல் வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை
தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் எனது தந்தைக்கு ஏற்பட்ட நிலை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கின்றேன்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு குளிர் அறைகளில் ஜனாஸாக்களை வைப்பதற்கான வசதி கொழும்பில் மாத்திரமே காணப்படுகின்றமையால் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் உடல்களையும் குளிர் அறைகளில் வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட விஷேட அறைகள் காலி, களுத்தறை, கண்டி, கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்து சடலங்களை தகனம் செய்யாமல் பாதுகாக்க தனவந்தர்கள் முன்வர வேண்டும்.

Ibnuasad

கொரோனாவில் மரணித்த வியங்கல்லையைச் சேர்ந்த பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ் அவர்களின் மகனுடனான நேர்காணல் உங்கள் பெயர் என்ன? முஹம்மத் பஸிஹ் முஹம்மத் பஸ்ரான். களுத்தறை மாவட்ட வியங்கல்லைதான் எனது சொந்த ஊர். உங்களின்…

கொரோனாவில் மரணித்த வியங்கல்லையைச் சேர்ந்த பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ் அவர்களின் மகனுடனான நேர்காணல் உங்கள் பெயர் என்ன? முஹம்மத் பஸிஹ் முஹம்மத் பஸ்ரான். களுத்தறை மாவட்ட வியங்கல்லைதான் எனது சொந்த ஊர். உங்களின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *