சுதந்திரம், கண்ணியம், சுயமரியாதை மனித வாழ்வின் உயர் பெறுமானங்கள். அவமானம், அடிமைத்தனம், இழிந்த வாழ்வின் அடையாளங்கள். இரண்டையும் மனிதன் விலை கொடுத்தே பெற வேண்டும். அதற்கு அர்ப்பணங்கள் தேவை. கொடுக்காமல் எதுவும் கிடைக்காது.

சில பலவீனமான உள்ளங்கள் சுயமரியாதைக்கும் சுதந்திpரத்திற்கும் அதிக விலை கொடுக்க வேண்டும் என தப்புக்கணக்கு போடுகிறது. எனவே அந்த பாரிய விலையை ஏன் கொடுப்பான் என்று நினைத்து தன்னை அதிலிருந்து தப்பிக்க அவமானத்தையும் அடிமைத்துவத்தையும் தங்கள் விருப்ப தேர்வாக தெரிவு செய்கின்றன.

அதனால் அவர்கள் அற்ப வாழ்வு வாழ்கிறார்கள். அதில் அச்சமும் பீதியும் கலக்கமுமே மிஞ்சுகிறது. இழிந்த இந்த வாழ்வின் நிழலில் சிதறுண்ட கோலத்தில் அவர்களின் அவமான வாழ்வு தொடர்கிறது. வெட்கம் வெளியில் தெரிகிறது. அடிமைத்துவத்திற்கு பழக்கப்பட்ட உள்ளங்கள் எத்தகைய இழிவான வாழ்வையும் வாழ விரும்புகிறது.

உண்மையில் இவர்கள் சுயகொளரவத்திற்கு கொடுப்பதை விட அதிகமாகவே அடிமைத்துவத்திற்கு வழங்குகிறார்கள். அவர்கள் அவமானத்தை விலைக்கு வாங்க வாழ்கையின் மொத்தத்தையும் கொடுக்கிறாகள். கண்ணியத்தை இழக்கிறார்கள். அந்தஸ்தை இழக்கிறார்கள். மானம் மரியாதையை இழக்கிறாகள். அமைதி நிம்மதியை இழக்கிறர்கள். சொத்து சுகத்தை இழக்கிறார்கள். இறுதியில் உயிரையும் இழக்கிறார்கள். இது அவமானத்திற்கு அவர்கள் செலுத்தும் வரிகள். அவர்களை அறியாமலே செலுத்தும் வாழ்கை கட்டனங்கள்.

இழிந்த வாழ்வுக்காக அவர்கள் செலுத்தும் உயர்ந்த கட்டனங்கள் கண்ணியமான வாழ்வுக்கு ஈடானது என அவர்கள் நம்புகிறார்கள். இறுதியில் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. கருவேப்பிலை போல் தூக்கியெறிப்படுவார்கள். அவர்களை எஜமான்கள் வாழையடிவாழையாக இப்படித்தான் நடாத்துகிறார்கள். சேற்றில் வாழும் புழுக்களுக்கு இந்த உண்மை பட்டபின்னும் தெரிவதில்லை.

மக்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் சுயமரியாதை வாழ்விற்கோ அல்லது அடிமை வாழ்விற்கோ வரி கட்டித்ததான் ஆக வேண்டும். கண்ணியத்திற்கும் சுதந்திரத்திற்கும் சுயகௌரவத்திற்கு கொடுக்கும் விலை அதற்குரிய நல்ல அறுவடையை தரும். இழிவுக்கும் அவமானத்தற்கும அடிமைத்துவத்திற்கும் கொடுக்கும் பணம் இறதியில் நஷ்டத்தையும் கைசேதத்தையுமே பரிசாக தரும்.

அதிகாரங்களின் பாதத்தில் மண்டியிட்ட எத்தனையே மனிதர்கள் நாய் போல் கேவலப்பட்ட சம்பவங்கள் எம்மாத்திரம்! அதிகாரத்தின் திருப்தியை பெறுவதற்காக தன்மானங்களை காற்றில் பறக்கவிட்ட அற்பர்கள் இறுதியில் அவமானத்தின் சகதியில் அவஸ்தைப்படும் காட்சிகள் தான் மிஞ்சுகின்றன.

கண்ணியமாக வாழ இயலுமையுள்ள மனிதன், சுயமரியாதை காத்து தன்மானத்துடன் வாழ சக்திபெற்ற மனிதன், மனத நேயம் காத்து வாழ முடியமான மனிதன் அதற்கு விலை கொடுப்பது ஆபத்து என்று கருதி இழிவையும் அடிமைத்துவத்தையும் தெரிவு செய்தாதல் இறுதியில் யரை தன் எஜமான் என்று கருதினானோ அவனே மனிதக் கழிவை விட கேவலமாக தன் அடிமையை எடுத்தெறிந்து விடுவான். இது உகில் நாம் காணும் உண்மைகள்.

இத்தகைய அடிமைகள் ஒரு கட்டத்தில் உயரப் பறந்தவர்கள். ஒரு நாள் உச்சியில் இருந்து விழும் போது கருணைகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள். காடு செல்லும் போது கூட பாடை தூக்க வரமாட்டார்கள். அவர்களது எஜமான்கள் என்று நம்பிக் கொண்டிருந்த நச்சத்திரங்களே மண்ணில் வீழ்ந்து விடும்போது இந்த அடிமைகளை கவனிக்க யார் இருப்பார்.

அற்ப சுகத்திற்காக அடிமைவாழ்வை தேர்ந்து எடுத்தவர்கள் மனட்சாட்சியை விற்றவர்கள். மனிதன் என்ற வகையில் உள்ள அடிப்படைப் பொறுப்புக்களுக்கு துரோகம் செய்தவர்கள். சத்தியத்தை காப்பதற்கு பதிலாக அதனை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்த்தவர்கள். வேதனையை சுகம் என்று நினைத்து விலை தந்து வாங்கியவர்கள். எனவே அவர்கள் வாழ்வை விட்டுப் போகும் போது யாரும் கவலைப்படுவதில்லை. மக்கள் மனம் அவர்களுக்காக இரங்குவதுமல்லை.

எத்தனை எத்தனை அணுபவம் கண்முன்னே இருந்தாலும் அடிமைத்தளைக்கு பின்னால் ஓடும் மனிதர்கள் ஏராளம். கானல் நீரைi நம்பி நாக்கை தொங்கவிட்டு அலையும் மனிதர்கள் தாராளம். இறுதியில் அதோ கதிதான். மக்கள் பாவம் பார்க்கவும் மாட்டார்கள். ஏமாற்றிய எஜமான்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவும் மாட்டார்கள்.

மூஸாவைப் பார்த்து அவர்களது சமூகம் ‘நீரும் உமது ரட்சகனும் போய் போராடுங்கள் நாங்கள் இங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்போம்’ என்று கூறிய போது அவர்கள் கண்ணியமான, சுயமரியாதை வாழ்வுக்கு விலை கொடுக்க தயாராகவில்லை. அதன் விளைவாக நாற்பது ஆண்டுகள் பாலைவத்தில் அலைக்கழிக்கப்பட்டார்கள். வேதனையில் வெந்து போனார்கள். அந்த அவமானத்தின் விலையை விட கண்ணிய வாழ்வுக்காக அவர்கள் குறைவான விலையே கொடுக்க வேண்டியிருந்தது. அந்த அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டார்கள். அவர்கள் இழிவை தேர்ந்தார்கள். அதற்க அதிகம் விலை கொடுத்தார்க்ள. இறுதியில் கைசேதம் தான் மிஞ்சியது.

சுத்தியம் கையில் உண்டு. நெஞ்சினிலே வீரம் உண்டு. கண்ணியமான வாழ்வுக்கு விலை கொடுக்க நெஞ்சுரம் உண்டு. ஏன் இழிவை தேட வேண்டும். எதற்காக அடிமைத்துவத்தை விலைக்கு வாங்க வேண்டும். இரண்டிக்கும் விலை கொடுக்கின்றோம். அவமானத்திற்கு அதிக விலை தந்து ஏன் கைசேதத்தை வாங்க வேண்டும்? சுதந்திரத்திற்காக அர்ப்பணங்கள் செய்து குறைந்த விலையில் கண்ணியத்தை ஏன் தேடக் கூடாது?

இனி அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடுவோம். மனிதன் சுதந்திரத்தின் பிள்ளை. அவன் யாருக்கும் அடிமையும் அல்ல. அச்சப்பட்ட கோழையும் அல்ல. அற்ப வாழ்கைக்கு மானத்தை விற்கும் மடையனும் அல்ல.

சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் கண்ணிய வாழ்விற்கும் அவன் கொடுக்கும் விலை அடிமைத்துவத்திற்கம் அவமானத்திற்கும் கொடுக்கும் விலையை விட குறைவானதே. வாழ்வு ஒரு முறைதான். அதில் சரியான பாதையை தெரிவு செய்வது மானமுள்ள மனிதனின் பொறுப்பாகும். அதற்காக இருப்பதையெல்லாம் அர்ப்பணம் செய்வது முதலீடாகும். அதில் மனத்திருப்தி பெறுவதே அவனது தாகமாக இருக்க வேண்டும்.

சத்தியததை நேசிப்பவன் அதற்காகவே வாழவேண்டும். மனித நேயம் வாழவேண்டும் என்பதே அவனது வேட்கையாக அமைய வேண்டும். சுதந்திரத்தை நேசிக்கும் மனிதா உனது தெரிவு அதற்காகவே அமையட்டும். சுதந்திரம் வாழட்டும். அடிமைத்தளை ஒழியட்டும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

Leave a Reply

%d bloggers like this: