பார்த்தாலும் பார்க்காதே

நீ என்னை பார்க்கிறாய் என்று
நான் அறியாத வரை
நான் நானாகத் தான் இருந்தேன்

நீ என்னை தான் பார்க்கிறாய் என்று
தெரிந்த பிறகு நான் நானாகவே இல்லை

இத்தனை பேருக்கு நடுவில்
நீ என்னை மட்டும் பார்க்கிறாய் எனில்
என்னிடம் ஏதோ ஒன்று
உன்னை கவர்ந்திருக்கிறது
அது தான் உன்னை அடிக்கடி
பார்க்க வைக்கிறது

நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்குள் மின்சாரம் தாக்குகிறது

புத்தகத்தை தேடும் என் விழிகள்
இப்போது எல்லாம் உன்னை தேடுகிறது
வகுப்பறை நிலவரம் கூட புரியவில்லை
கள்ளச் சாட்டுடன் மனம் உன்னை தேடுகிறது
பாடம் ஏறவில்லை பாடல் இனிக்கிறது

படிப்பதற்காக பாடசாலை சென்ற
என் நோக்கம் இப்போது
அவனை பார்ப்பதற்காக
என்று மாறி விட்டது.

இதுவரை ஒப்பனை செய்யப்படாத
என் முகத்துக்கு விதம் விதமான
ஒப்பனைகள் தடவப்படுகிறது
எல்லாம் உனக்காக
நீ என்னை பார்க்கும் அந்த நொடிக்காக

இந்நாள் வரை ஏறெடுத்தும்
பார்க்காத கண்ணாடி முன்
பல தடவை நின்று என்னையே ரசிக்கிறேன்
நீயும் என்னை ரசிக்க வேண்டும் என்பதற்காக

எவரையும் மனதில் சுமக்காத இதயம்
இப்போது உன் நினைவுகளை சுமக்கிறது
இறை நினைவையும் மறந்து விட்டு

இனி என் கற்பனை உலகுக்கு
நீ தான் ராஜா ஆகி விட்டாய்
எனக்குள் பேரின்பம்

நடிகைகளைப் போல நானும்
வலம் வந்து கொண்டிருந்தேன்
அவனுக்காக

காலம் போகப்போக
ஒழுக்கம் என்ற ஆடை
என்னிடம் இருந்து குறைந்தது
நாகரீகமாக நானும் மாறினேன்
இப்போது பலரது பார்வையின்
முதல் விம்பமே நான் தான்

ஆனாலும் அவன் என்
வாழ்வில் இருந்து
தூரம் சென்று விட்டான்

என்றாலும் அவனைப் போல
என்னை பார்வையால்
தீண்டும் பலரை கண்டு கொண்டதால்
அவனது தூரம் கூட
எனக்கு வலிக்கவில்லை

வெட்கம் என்ற போர்வை
அகற்றப்பட்டு விட்டது
நான் நினைத்ததை சாதித்து வந்தேன்

வெட்கம் இழந்த பெண்
எதை செய்யவும் தயங்க மாட்டாள்
அது போல நானும் மாறினேன்

இறுதியாக எல்லாமே
என் வாழ்வில் இருந்து பறி போனது

இப்போது நான் எங்கே சறுக்கினேன் என்று
வந்த பாதையை திரும்பிப் பார்த்தேன்
அங்கே அந்த பையனின்
ஒற்றை பார்வை தெரிந்தது

அவன் என் வாழ்வின்
ஒரு பக்கம் மட்டுமே
அவனுக்காக எனது
முழு பக்கத்தையும்
நானே கிறுக்கி கிழித்து விட்டேன்

அவன் பார்த்தான் என்பதற்காக
நானும் அவனை பார்த்தது தான் தவறு

அது அவனது சாதாரண
பார்வையாக இருக்கலாம்
இல்லை வயதுக்
கோளாறாக இருக்கலாம்

அந்த பார்வைக்கு நான் உயிர்
கொடுக்க நினைத்தது பெருந்தவறு

அன்று நான் எனது பார்வையை
தாழ்த்தி இருந்தால் – இன்று
ஒழுக்கம் கெட்டு சீரழிந்திருக்க மாட்டேன்

பெண்மையின் அடையாளமே
வெட்கமும் ஒழுக்கமும் தான்
அவை நாணயத்தின்
இரு பக்கங்கள் போன்றது
ஒன்று போனால்
மற்றையதும் போய் விடும்

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

Your email address will not be published.