போர்வை மத்ரஸாக்களின் வரலாற்றுப் பின்னணி

ஈழத் திரு நாட்டின் தெற்கு திசையிலே, பசுமையான மலைகளை ஊடறுத்துப்பாயும் நதிகளில் ஒன்று நில்வளகங்கை. எழில் மிகு நில்வளகங்கையின் நதித்தீரத்தில் அழகு மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. போர்வை முஹியத்தீன் பள்ளி வாசல். அழகுக்கு மெருகூட்டும் எழில் மிகு கட்டடக் கலைகளை தன்னகத்தே கொண்டு பார்ப்போர் மனதை ஈர்க்கும் வசீகரத் தோற்றத்துடன் கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இப்பள்ளி வாசல் தென்னிலங்கையில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறது.

இன்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதையருடைய முயற்சிகளின் பலனாக உருவாகிய இப்பள்ளிவாசல் 1914ல் இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் இனக் கலவரம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அப்போழுது ஆட்சி பீடத்தில் இருந்த ஆங்கில அரசு (English Government) இப்பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்வதற்கு உடனடி நடவடிக்ககைகளை மேற்கொண்டது . இதன் பிரதிபலனாக உருவாகிய விசாலமான பள்ளியே இன்று புதுப்பொலிவோடு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.


இப்பள்ளி வாசல் உருவாகிய அதே கட்டடத் தொகுதியோடு இணைந்ததாக மத்ரஸா ஒன்றும் உருவாக்கப்பட்டது . “மத்ரஸதுல் காதிரிய்யா” என இதற்கு பெயர் சூட்டப்பட்டது. இம்மத்ரஸாவின் ஆரம்பகால அதிபராக காலி மக்குளுவையைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கடமையாற்றியுள்ளார். இவர் காலியில் பிரசித்தி பெற்ற உலமா மர்ஹும் அப்துஸ்ஸமி ஆலிம் அவர்களின் தகப்பனாவார். சுமார் 5 வருடங்கள் வரை சிறப்பாக இயங்கிய இம்மத்ரஸா காலப் போக்கில் இடை நடுவில் கைவிடப்பட்டது. இக்காலப் பகுதியில் உள்ளூர் வெளியூர் மாணவர்கள் சுமார் 15 பேர் சன்மார்க்கக் கல்வியை கற்றுள்ளனர். இருந்த பொழுதிலும் தஹ்ஸீலான ஆலிம் எவரும் உருவாகவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். அது மட்டுமன்றி ஈடு செய்ய முடியாத மா பெரும் இழப்புமாகும். இக்காலப் பகுதியில் மார்க்க கல்வியை கற்ற பலர் இதே பள்ளியில் பேஷ் இமாமாகவும் கடமையாற்றியுள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் போர்வையைச் சேர்ந்த I.L.M. அபூபக்கர் ஆலிம் அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள வேலூரில் ஓதிப் பட்டம் பெற்று வந்ததும், அன்னாரது பெரு முயற்சியினால் 1945 ம் ஆண்டு மீண்டும் மத்ரஸா கல்வி ஆரம்பிக்கப்பட்டது. கிதாபு மத்ரஸாவுடன் இணைந்ததாக குர்ஆன் மத்ரஸாவும் உள்வாங்கப்பட்டது. ஒஸ்தாத் அவர்களுக்கு உதவியாக முன்னாள் அதிபர் மர்ஹும் M.H. அப்துல் பாரி அவர்கள் கடமையாற்றினார்கள். இவர்களது அயரா முயற்சியினால் எண்ணற்ற மாணவர்கள் சங்கை மிக்க குர்ஆனை தஜ்வீத் முறைப்படி திருத்தமாக ஓதுவதற்கும் மார்க்க கல்வியை கற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் கிட்டின.

இதே வேளையில் ஒஸ்தாத் அபூபக்கர் ஆலிம் அவர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக மத்ரஸா கல்வி பாதிக்கப்பட்டது. இது எமதூர்வாசிகளுடைய துர் அதிஷ்டமாகும். 1954 ம் ஆண்டு ஒஸ்தாத் அபூபக்கர் ஆலிமுடைய வபாத்துக்குப் பின்னர் மத்ரஸா கல்வி இடை நடுவில் கைவிடப்பட்டது. அத்தோடு மத்ரஸாவின் இயக்கமும் தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே பொது இடங்களிலும் வீடுகளிலும் மத்ரஸாக்கள் இயங்கத் துவங்கின.

இதன் பின்னர் போர்வை வாழ் புத்தி ஜீவிகளினாலும், நலன் விரும்பிகளாலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுதிலும், சிறந்த ஒரு அரபு மத்ரஸாவை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போய்விட்டது. இது விடயத்தில் போர்வையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹும் Al – Haj M.K.M. அத்தாஸ் அவர்கள் விசேட கரிசனை எடுத்து போர்வை பள்ளி வாசல் நம்பிக்கையாளர்களையும், ஊர் முக்கியஸ்தர்களையும் ஒன்று கூட்டி இதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதன் பயனாக மத்ரஸா கல்விக்கு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது. காதிரிய்யா குர்ஆன் பள்ளிக் கூடமாக இயங்கத் துவங்கியது. இக்காலப் பகுதியில் சுஐப்தீன் (முர்ஸி) அவர்களுடைய சேவைக்காலம் மிக முக்கியமானது. இவரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று பல மத்ரஸாக்களிலும், “சரிஆ” கிதாபுக் கல்வியைக் கற்று வருகின்றனர். அத்தாஸ் ஹாஜியாருடைய மறைவுக்கு பின்னரும், அன்னாரது குடும்பத்தார் இம்மத்ரஸாவை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் போர்வையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட Al – Haj: MIM. சரீப் அவர்களையும் இத்துறையில் மறக்க முடியாது. அன்னாரது தூர நோக்குடைய சிந்தனைகள் எமதூர் மத்ரஸா கல்வி வளர்ச்சிக்கு புது மெருகூட்டியது இவர் எமது மத்ரஸாவின் ஸ்தாபகர் Al – Haj. ரிஸ்வி சரீப் அவர்களுடைய தகப்பனாவார் மர்ஹும் சரிப் ஹாஜியார் அவர்கள் போர்வை முஹியத்தீன் பள்ளி பரிபாலன சபைத் தலைவராகவும், தனாதிகாரியாகவும் பணி புரிந்து சேவையாற்றியுள்ளார். அவருடைய கவலையும் போர்வையில் ஒரு கிதாபு மத்ரஸா உருவாக வேண்டுமென்பதாகும்.

இதன் தேவையை வல்ல நாயன் அவரது புதல்வரான மருத்துவ பேராசிரியர் AI – Haj. ரிஸ்வி சரீப் அவர்களுடைய உள்ளத்தில் உதிக்கச் செய்தான். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே “ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் சன்மார்க்கக் கல்வியை கற்றேயாக வேண்டும்.” என்ற நபி மொழிக்கினங்க இதன் அவசியத்தை நன்கறிந்து பேராசிரியர் அவர்கள் தனது முக்கிய உறவினர்களுடனும் ஊர் பிரமுகர்களுடனும் கலந்துரையாடி மத்ரஸாவுக்கு பொருத்தமான ஒரு காணியை வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதன் பிரதிபலனாகவே தற்போதைய கட்டடம் அமைந்துள்ள காணி வாங்கப்பட்டது. இதன் தேவையை உணர்ந்த பேராசிரியருடைய மைத்துனர் அல்ஹாஜ். M.H. முஹம்மத் (நாதிர்) அவர்கள் மலிவு விலையில் இதனைக் கொடுத்து உதவினார். காணியைக் கொள்வனவு செய்த பின்னர் சுமார் 50 மாணவர்கள் தங்கி பாடங்களைக் கற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் சகல வசதிகளுடன் கூடிய மூன்று மாடிகளை கொண்ட ஒரு வரைப்படம் வரையப்பட்டது. திக்குவல்லையை சேர்ந்த ஹம்ஸா முஹம்மத் அவர்களால் இது இனாமாக வரைந்து கொடுக்கப்பட்டது. இதற்கமைய மத்ரஸா கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் சென்ற 15.10.2007 ம் ஆண்டு இனிதே நடந்தேறியது. மருத்துவ பேராசிரியர் அவர்களது புதல்வர்களான வைத்தியக் கலாநிதி ரிகாஸ் சரீப், ஓமர் சரீப் ஆகியோர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சி போர்வை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதெனக் கூறினால் மிகையாகாது. மத்ரஸாவுக்கான கட்டிடப் பணிப் பொறுப்புக்கள் ஜனாப் M.H.M. நிதார் ஆசிரியரிடம் ஒப்படைக்ஒப்படைக்கப்பட்து.

இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு நிர்வாக சபையும் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர் AI – Haj M.H.M. ஸமீன் அவர்கள் தலைவராகவும், முன்னாள் ஆசிரியர் ஜனப் M.H.M. நிதார் செயலாளராகவும் நியமனம் பெற்றனர். இந்த வைபவத்தில் வெலிகம ஹில்ரியா மத்ரஸாவின் அதிபர் முப்தி நஜ்புத்தீன் அவர்கள் கலந்து கொண்டு சன்மார்க்க உரை நிகழ்த்தினார் .

தொடர்ந்து மராமரத்து வேலைகள் ஆரம்பமாயிற்று, முதல் மாடி வேலைகள் பூர்த்தியாகி 2 ம் மாடிக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கீழ் மாடியில் ஹிப்ழு மத்ரஸாவை ஆரம்பித்தால் நலமாகும் என்ற எண்ணக் கருவை வல்லவன் அல்லாஹ் பேராசிரியருடைய மனதில் மலரச் செய்து விட்டான். அதன்பிரகாரம் எமது நிர்வாக சபை அவசரமாக ஒன்றுகூடி மசூரா செய்து ஹிப்ளு மத்ரஸாவை ஆரம்பிப்பதற்கான திகதியை நிர்ணயம் செய்தது. அது மட்டுமல்லாமல் அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தது. இதனுடன் சேர்த்து தஜ்வீத் குர்ஆன் மத்ரஸாவும் ஆரம்பிக்க முடிவாகியது. மத்ரஸாவிற்கு “மத்ரஸதுல் ஸபீலில் ஈமான் அல் அரபிய்யா” பெயர் சூட்டப்பட்டது.

இதன் பிரகாரம் சென்ற 27-12-2009ல் ஹிஜ்ரி 1431 முஹர்ரம் 10 ம் நாள் திறப்பு விழா வைபவம் மிகக் கோலகலமாக நடந்தேறியது. போர்வை வரலாற்றில் இத்தினம் என்றுமே அழியாத ஓர் இடத்தை பிடித்துக் கொண்டது. விழாவிற்கு பேராசிரியர் ரிஸ்வி சரீப் அவர்கள் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். விசேட அதிதியாக பேருவளை ஜாமியா நளீமியா கலா பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாஜ் மௌலவி S.H.M. பளீல் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சிறப்புச் சொற்பொழிவாளர்களாக வெலிகம பாரி அரபுக் கல்லுரியின் அதிபர் அல் – ஹாபிள் அப்துர் ரஹ்மான் (மளாஹிரி) அவர்களும் முன்னாள் கணிதத்துறைப் பேராசிரியர் கலாநிதி மள்ஹர்தீன் அவர்களும் உரைநிகழ்த்தினார்கள். தொடர்ந்து பல பெரியார்களுடைய நல்லாசிகளுடன் விழா இனிதே சிறப்பாக முற்றுப் பெற்றது.

மத்ரஸத்து ஸபீலில் ஈமானி அரபுக்கலையகத்தின் உஸ்தாதாக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மௌலவி ஜௌபர் (ரஹ்மானியா) நியமனம் பெற்றார். தொடர்ந்து நியமனம் பெற்ற உஸ்தாத்மார்களின் அரிய முயற்சியால் 3 ம் ஆண்டு வரை நிறைவு விழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது அதிபராக கடமையாற்றும் மௌலவி M.M. அப்துலாஹ் (பாரி) அவர்கள் நியமனம் பெற்றார். இவருக்கு பக்கபலமாக அல் ஹாபில் சபீன் (இர்சாதி) அவர்கள் துணை நின்றார் பாதில் ஹுஸைன், முஹம்மது தன்ஸீம் ஆகிய மாணவச் செல்வங்கள் திருக்குர் ஆனைச் சுமந்து ஹாபிழ்களாக உருவாகினர். “அல்ஹம்துலில்லாஹ்” இதுவே போர்வை மத்ரஸா வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாகும். போர்வை வாழ் மக்களின் நீண்ட காலக் கனவை வல்ல நாயன் நனவாக்கி வைத்தான்.

மேலும் மௌலவி அப்துல்லாஹ் அவர்களது பெரு முயற்சியால் அகில இலங்க ஜம்மியத்துல் உலமாவின் அனுசரணையின் கீழ் இயங்கும் மக்தப் பிரிவு 2013 ம் ஆண்டின் நடுப்பகுதியில் இங்கு ஆரம்பிக்கப்பட்டது.

எமது மத்ரஸாவில் இயங்கும் மக்தப் தென்னிலங்கையிலுள்ள சிறந்தொரு மக்தப் பிரிவாகக் கணிக்கப்படுகிறது. போர்வையூர் பெற்றார்களுடைய மிகுந்த வரவேற்பு இதற்கு கிடைத்துள்ளது. விசேட பயிற்சி பெற்ற ஒஸ்தாத்மார் இவ்வகுப்புகளை நடாத்தி வருகின்றனர். இன்றைய பெருவிழா அதன் ஒரு வருடப் பூர்த்தியையும் மையமாக கொண்டுள்ளது குறிப்படத்தக்கது.

தற்பொழுது எமது மத்ரஸாவில் ஹிப்ழு, மக்தப், சரீஆ (கிதாபு) ஆகிய மூன்று பிரிவுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றதென்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தென்மாகாண பகுதிநேர மத்ரஸாக்களைப் பொறுத்த வரையில் “சரீஆ” என்னும் கிதாபு கல்வியை ஆரம்பித்த முதல் மத்ரஸாவாக மத்ரஸத்து ஹபீலில் ஈமான் திகழ்கிறது எனவே புது மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதனை செய்யும் முகமாகவே புதிதாக அல் ஹாபிழ் M.M. இர்ஹாம் (பாரி) அவர்களையும் ஆசிரியர் குழுவில் இணைத்துள்ளோம். மென்மேலும் முன்னேற்றமடைய வல்ல நாயன் நமக்கு அருள் புரிவானாக. அறிவொளி பரப்பும் சிறந்த ஓர் அரபுக் கலாபீடமாகத் திகழ்வதற்கு பிரார்த்தித்து நிற்போமாக. ஆமீன்.

மத்ரஸாதுல் ஸபீலில் ஈமானியின் முதலாவது ஹாபிள் கௌரவிப்பு மற்றும் மக்தப் ஒரு வருட சிறப்பு மலர் – 2014

அல்ஹாஜ் எம்.எச்.எம். ஸமீன்
நிர்வாக சபைத் தலைவர்
மத்ரஸது ஸபீலில் ஈமான்