பேரினவாதம் தோல்வியடைந்த பேரவை

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தின் மீது பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய  தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக நீதியைத் தேடிய பயணத்தில் ஒரு வெற்றிக்கம்பத்தை அடைந்த தருணமாகவும், 69 இலட்சம் பேரினவாத வாக்குகளினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற அரசாங்கத்தின் துக்க தினமுமாகும்.

இதனாலே பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்ந்தன அதனை இலங்கை மக்களின் கவலைக்குரிய நாள் என்று குறிப்பிட்டார். ஆனால் இது மனித உரிமைகளை மீறியவர்களுக்குத்தான் கவலையான நாளாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை இருமடங்கு வாக்குளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது 22 நாடுகள் பேரேரணைக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் பெரேரணைக்கு எதிராகவும், 14 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளது.

2012, 2013, 2014, 2021 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை இலங்கைக்கு ஆதரவு குறைந்துள்ளதுடன் அதிகமான நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன. என்றாலும், இதில் இலங்கை வாக்களிக்காத 14 நாடுகளையும் தமது அணியேன வலிந்து இணைத்துக்கொண்டு தமக்கு 25 பெரும்பான்மை உள்ளதாக காட்ட முனைகிறது. உண்மையில் தற்போதைய அரசிற்கு வாக்களித்த மக்கள் அவ்வளவு முட்டாள்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகளை அவதானிக்கையில் பெரும்பாலான நாடுகள் பிரபல்யமற்ற நாடுகளாக காணப்படுவதுடன் மூன்று முஸ்லிம் நாடுகளும், மேற்கத்தியத்திற்கு எதிரான ரஷ்யா மற்றும் சீனாவே உள்ளடங்கியுள்ளது.

வாக்களிக்காத நாடுகளில் அதிகமான நாடுகள் முஸ்லிம் நாடுகளாகவே உள்ளன. மேலும் தென்னாசியா நாடுகளான இந்தியா, இந்தோனிசியா, நேபாளம் போன்ற நாடுகளும் வாக்களிக்கவில்லை.

இச் சந்தர்ப்பத்தில் இலங்கை இவ்வாறு தோல்வியடைவதில் செல்வாக்கு செலுத்திய காரணிகள் என்ன? என்பதை ஆராய வேண்டும்.

இலங்கை நான்கு முறை பேரவையில் வாக்களிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது. என்றாலும் கடந்த காலத்தை விட இம்முறை இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு சிறுபான்மை இனங்களும் ஒன்றிணைந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கான உடனடிக் காரணம் கொரோனாவில் மரணித்த குழந்தைகள் உட்பட அனைவரையும் பலவந்தமாக எரித்தமையாகும்.

பெரேரணையில் குறிப்பிட்ட விடயங்களை அவதானிக்கையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் மற்றும் சிறுபான்மை மக்களின் மத உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2012, 2013, 2014 ஆண்டுகளில் இலங்கையை அவதானித்தால் இலங்கையில் நீதியமைச்சராக ரவுப் ஹக்கீம், வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக ரிஷாத் பதியுந்தீன் அவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலம்.

அன்று பொது பல சேனா அமைப்பின் ஆரம்ப கட்டம், முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் தொடங்கிய காலம், ஹலால் பிரச்சினை மற்றும் தம்புள்ளை, ஜெய்லானி என பள்ளிவாசல் மீது கல்லெறிகள் ஆரம்பித்த காலம்.

என்றாலும் அன்று ஒரு முறை இலங்கைக்காக முஸ்லிம் நாடுகளுடன் பேரம் பேச அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் உலமாக்களும் ஜெனிவாவிற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.  அன்று தோல்வியடைந்தால் ஜனாதிபதியை மின்சாரக் கதிரையில் அமர்த்தப்படும் என்றெல்லாம் செய்திகள் வௌிவந்தன.

நல்லாட்சி அரசாங்கமோ பிரேரணை வந்தபோது இணை அணுசரனை வழங்கி வாக்களிப்புகளில் இருந்து தப்பித்துக் கொண்டது.

தற்போதைய பௌத அரசோ தமக்கு நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பேரவையில் உள்ளதென தப்புக் கணக்கு போட்டு தற்போது தடமாறுகிறது. ஆனால் இது இலங்கை மக்களின் தோல்வியல்ல. மாறாக இலங்கை அரசாங்கத்தின் தோல்வியாகும்.

இதில் வாக்களிக்காத நாடுகளில் தென்னாசியா நாடுகள் உள்ளமை இலங்கை அரசு தன் பிராந்திய நண்பர்களையும் இழந்து விட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவு மற்றும் வாக்களிக்காத நாடுகளின் அதிகரிப்பு அதிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளன.

குறித்த அறிக்கையில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது. இது மேற்குலக நாடுகளின் நடவடிக்கை என்று அரசு குற்றம் சாட்டி குறித்த அறிக்கையை நிராகரித்தது.  வெளிவிகார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் இது தொடர்பாக பேசும்போது திமிரான, கோபமான முறையில் உரையாடினார்கள்.

அரசாங்கம் அறிக்கையை முற்றாக புறக்கணித்தமையை அங்கத்துவ நாடுகள் விரும்பவில்லை. இலங்கை அரசின் இவ்வாறான எடுப்பான போக்கை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை என்பது தெளிவாகின்றது.

மாறாக, இது பற்றி அரசாங்கம் முற்று முழுதாக நிராகரிக்காமல், இத் தீர்மானங்களை முன்வைத்த நாடுகளுடன் கலந்துரையாடலுக்கு சென்றால் சிறந்த தீர்வொன்றை பெறலாம்.

குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் மாற்றம் பற்றி மௌனமாக இருக்கவும் முடியாது.

கடந்த ஓராண்டு காலமாக இடம்பெற்ற பலவந்த ஜனாஸா எரிப்புக்கள், மற்றும் அதற்கு முன்னர் முஸ்லிம்கள் மீது கொத்து ரொட்டி, உள்ளாடை, கருத்தடை மருந்துகள், இனக்கலவரங்கள், பள்ளிவாசல்கள் மீது கல்லெறிதல் என முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்கியிருந்தன.

ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டாலும் முஸ்லிம் சமூகம் சார்பாக சர்வதேச அழுத்தங்கள் அதிகம் வந்தது கொரோனாவில் மரணித்தோர் என்ற பெயரில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தலுக்கு எதிராகவாகும்.

குறிப்பாக இதில் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு தனது கண்டனத்தை பேரவையின் கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் முன்வைத்தது.

பிரதமர் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் வருகை தருவதற்கு முன்னர் கொரோனாவில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய முன்வந்தமை, ஜமாத்தே இஸ்லாமி முன்னாள் தலைவரை கைது செய்து மறுநாள் பங்களாதேஷ் விஜயம் மேற்கொண்டமை, பஹ்ரைன் துணை மன்னருடன் தொலைபேசியில் உரையாடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் பேரினவாத நிகழ்ச்சி நிரல் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது. பிரதமர் நல்லடக்கம் செய்ய அனுமதித்து பாகிஸ்தான் பிரதமரும் வாழ்த்து தெரிவித்த பின்னர் அவரின் கட்சி உறுப்பினர்களே அவரின் வார்த்தையை புறக்கணித்தார். வர்த்தமாணி வௌிவந்த பின்னர் எங்கு அடக்குவது என்று ஒரு வார மீளாய்வு.

பாதுகாப்பு அமைச்சரும் ஊடக மாநாடுகளிலும், பாராளுமன்றத்திலும் புர்கா தடை, மத்ரஸா பாடசாலைகள் தடை, இஸ்லாமிய புத்தகங்கள் இறக்குமதிக்கும் அரச பாதுகாப்பு அமைச்சு அனுமதிக்க வேண்டும் என்ற அறிவித்தல், பயங்கரவாதச் சட்டத்தை திருத்தி சில கைதுகள் என சர்வதேச தேர்தலொன்றை எதிர்நோக்கியிருந்த சந்தர்ப்பத்தில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவு வாக்கு தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட வண்ணமிருந்தார். இவை முஸ்லிம் நாடுகளின் வாக்கை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளன.

தற்போது யுத்த குற்றவாளிகள் என்று நாட்டிற்காக  போராடிய வீரர்கள், அதிகாரிகளுக்கு தண்டணை வழங்ப்படுமா? நாடுகளுக்கிடையிலான இராஜ தந்திர உறவில் விரிசல் ஏற்படுமா? சர்வதேச பயணங்கள், இலங்கைக்கான  வௌிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, சர்வதேச வர்த்தகம் என்பவற்றில் குறித்த தீர்மானம் தாக்கம் செலுத்துமா என்று கேள்வியெழுந்துள்ளது.

குறிப்பாக இதன் நேரடித் தாக்கம் என்னவென்றால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக சர்வதேச நாடுகளில் வழக்குத் தொடரலாம் என்பதாகும்.

உள்நாட்டு அரசியலில் ஆட்சி மாற்றத்திற்கும் குறித்த தீர்மானம் செல்வாக்கு செலுத்தும். இதுபற்றி எதிர்காலத்தில் மாகாண சபைத் ​தேர்தலை நடாத்தினால் அவதானிக்கலாம். வாக்களிக்காத இந்தியா கூட இலங்கை 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான தவறான மனப்பதிவு ஏற்படலாம். இதனால் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கான பயணங்கள் குறையலாம். மேலும் சர்வதேச வர்த்தகம் மற்றும் கடன் உதவிகளில் பேரவையின் அறிக்கை செல்வாக்கு செலுத்தினால் நீண்ட காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படலாம்.

ஆனால் இதனை நாம் தோல்வியாக பார்க்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் பக்கம் இதனை தோல்வியாக கருத வேண்டியதில்லை. அரசாங்கத்திற்கு வெற்றி பெறுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருந்தன. குறித்த பிரேரணையை முன்வைத்த நாடுகளுடன் பேரம் பேசியிருக்கலாம். அல்லது ஏற்கனவே சர்வதேசம் ஏற்றுள்ள பரணகம ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கலாம்.

இலங்கையின் இறைமைக்கு பேரவையின் தீர்மானங்கள் அச்சுறுத்தலாக உள்ளதென ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து விலக முடியுமா? என்ற கேள்வியும் தற்போது எழுப்படுகின்றது.

அவ்வாறு விலகினால் இலங்கைக்கு சிக்கல் மேலும் அதிகரிக்கும். இதுவரை ட்ரம்பின் ஆட்சியில் அமெரிக்கா மாத்திரமே விலகியுள்ளது. மனித உரிமை பேரவையில் அதிகமான தடவைகள் பலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இஸ்ரேல் விலகவில்லை. அதாவது எதிரான தீர்மானங்கள் எடுத்தாலும் அதனை விட விலகுவது பாதகமாக அமையும் என்பதாலே விலகவில்லை.

பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையாமல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலக முற்படுவது பொருத்தமான தீர்மானமல்ல.

இப்னு அஸாத்