அனைத்துப் பக்கங்களாலும் அழிவை எதிர் நோக்கியுள்ள இலங்கைச் சுற்றுச் சூழல்

உலக சுற்றுச்சூழல் தினம், கடந்த 50 ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம் திகதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுகின்றது.

2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது என ஐநா தெரிவித்துள்ளது.

எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது” என்பதை நிறுவி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ‘பல்லுயிர்ப் பெருக்கத்தை’ ஐக்கிய நாடுகள் சபை கருப்பொருளாக அறிவித்திருந்தது.

சுற்றுச் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.

 உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.

சுற்றுச் சூழல் தினத்தில் இன்று இலங்கையின் நிலவரமோ, சுற்றுச்சூழல் அனைத்து பக்கங்களாலும் அழிவடைந்த வண்ணமுள்ளது.

பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் என்பவற்றை அவதானித்தால் ஏராளமான இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிறைவான உயிர்ப்பல்வகைமையை பேணிக்காக்கும் விதத்திலும், நாட்டுமக்களின் நலனுக்குமாக அவற்றை தூர நோக்கோடு திட்டமிடாமையினால் அவை அழிவை எதிர்நோக்கியுள்ளது.

கடற்சூழலை அவதானித்தால், கடந்த  மே மாதம் இலங்கையின் மேற்குப்பகுதியில்  கொழும்பு மற்றும் நீர் கொழும்பை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து மிகப் பாரிய சுற்றுச் சூழல் மாசடைவு விபத்தொன்றாகும். அதன் தாக்கம் எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கு காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதன் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் 100 பில்லியனுக்கும் அதிகமாகவுள்ளது.

குறித்த விபத்து காரணமாக பாணந்துறை முதல் நீர் கொழும்பு வரையான மீனவச் சமூகமும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்து தீடிரென ஏற்பட்ட தீ விபத்தொன்றல்ல குறித்த கப்பலானது மலேசியாவின் தஞ்சுங் பிலிப்பஸ் துறைமுகத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தனது  பயணத்தை ஆரம்பித்து மே மாதம் 9 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜபல் அலி துறைமுகத்தை வந்தடைந்து.

அங்கிருந்து மே மாதம் 10 ஆம் திகதி புறப்பட்டு 25 மெட்ரிக் தொன் நைட்ரிக் அமிலம் அடங்கலான 1486 கொள்கலன்களுடன் கட்டாரின் ஹமட் துறைமுகத்தில் மே மாதம் 11 ஆம் திகதி தரித்து நின்று அன்றைய தினத்திலேயே அங்கிருந்து இந்தியாவின் ஹசீரா துறைமுகம் நோக்கி புறப்பட்டு பின்னர் சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை தொடர இருந்தது.

2021 மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து 25 தொன் நைட்ரிக் அமிலத்துடன்  (Nitric acid) பல இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 1486 கொள்கலன்களுடன் பயணித்ததுடன் 2021 மே 19 ஆம் திகதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்பு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது.

இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள அரேபிய கடலில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கியபோது இதில் இரண்டு கொள்கலன்களிலிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததாக கப்பல் சேவையாளர்கள் அவதானித்துள்ளனர்.

அமிலக்கசிவைத் தொடர்ந்து, கப்பல் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளது. ஆனால் அமிலக்கசிவு காரணமாக கட்டார் அரசாங்கம் குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

இதையடுத்து இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திற்குள் நுழைவதற்கும் குறித்த கப்பல் முயற்சித்த நிலையில், அங்கு நுழையவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 2021 மே 20 அன்று  பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது இலங்கையிலிருந்து 3698 கிலோ மீற்றருக்கு அப்பால் கட்டார் பகுதியில் வைத்தே நைட்ரிக் அமிலம் கசிந்ததாக கப்பல் சேவையாளர்கள் அவதானித்துள்ளனர். இது தொடர்பாக அறிந்து கட்டார், இந்தியா  தனது  நாட்டிற்குள் அனுமதிக்காத நிலையில் இலங்கைக்குள் வர அனுமதித்து அது தீ பற்றிய பின் நஷ்டயீட்டைக் கோருவதன் நோக்கம், சமூக நலனை விட ஒரு சிலரின் தனிப்பட்ட நலனுக்காக திட்டமிட்ட சதியா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அந்த விபத்து மீட்பு பணிகள் முடிவடைந்து ஓய்வு பெற நினைத்தால் உள்நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடிய 5 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் வௌ்ளம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை. ஹொரண, கிரியெல்ல, புலத் சிங்கள, இரத்தினபுரி, புத்தளம் மாவட்டத்தில்  புளிச்சாக்குளம் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் பகுதிகள், களுத்தறை மாவட்டத்தில் மதுகம பதுரலிய பிரதேசங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் வெலேவத்த, வெல்லம்பிடிய ஆகிய பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டில் பெய்து வருகின்ற கடும் மழை, மண்சரிவு காரணமாக 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஓர் இயற்கை அனர்த்தம் என்று புறந்தள்ளி விட முடியாது. ஏனெனில் இயற்கையின் சீற்றத்திற்கும் காரணம் மனித செயற்பாடுகளாகும்.

இலங்கையில் அதி வேகப் பாதை திட்டங்கள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்ட பின்னரே வௌ்ள அபாயமும் அதிகரித்துள்ளது. ஏனெனில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகம – வெலிபிடிய பிரதேசத்தில் ஏற்பட்ட வௌ்ளங்கள் அதிவேகப்பாதை அமைக்கப்பட்ட பின்னரே ஏற்பட்டுள்ளது.

அதாவது இலங்கையின் வௌ்ளப்பெருக்கிற்கு காரணம் அதி வேகப்பாதைகள் மற்றும் அதன் சுற்றுச் சூழல் பகுதிகளுக்கான முறையான வடிகால் அமைப்பு இன்மையாகும். வடிகால் அமைப்பு இன்மை காரணமாக நீர் வேகமாக வடிந்தோட முடியாமல் தேங்கி நின்றே பல இடங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில்  மலைகளை உடைத்து, வயல்களையும், குளங்களையும் நிறைத்தே பல இடங்களில் அதிவேக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி என்பது மரங்களை வெட்டி, மலைகளை குடைந்து, ஆறுகளை மறித்து கொங்ரீட் வனாந்தரமாக கட்டிடங்களும் வீதிகளும் அமைப்பதல்ல. மாறாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலாகும்.

இலங்கையில் போருக்கு பின்னர் அபிவிருத்தி வேகம் பிடித்தாலும் இலங்கையின் ஏராளமான இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிறைவான உயிர்ப்பல்வகைமையை பேணிக்காக்கும் விதத்திலும், நாட்டுமக்களின் நலனுக்குமாக அவற்றை தூர நோக்கோடு திட்டமிடாமையின் பிரதிபலன்களே இன்றைய இயற்கை அனர்த்தங்களாகும்.

மனித நடவடிக்கைகளால் இலங்கையின் சுற்றுச்சூழல் அழிவடைந்து கொண்டிருக்கும் தருணத்தில் மரத்தால் விழுந்தவனை மாடு குத்துவது போல், இலங்கையின் மக்கட்சூழலின் கடந்த 15 மாதங்களுக்குள் கொரோனா தொற்றாளர்கள்  201,534  இணங்காணப்பட்டதுடன் 1696 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

伊卜努阿萨德