ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகை – இலங்கை எதிர்நோக்கும் அபாயம்

  • 28
மேற்குலக நாடுகளின் சந்தைகளே இலங்கைக்குத் தேவை
சீனாவுக்கான ஏற்றுமதிகள் மிகமிக அற்பமே

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

கடந்த 10ஆம் திகதி ஐரோப்பியப் பாராளுமன்றம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றுள்ள நிலையில் ஐரோப்பியப் பாராளுமன்றத்திலுள்ள 683 பிரதிநிதிகளில் 628 பேர் இந்தீர்மானத்திற்கு ஆரதவாக வாக்களித்திருக்கிறார்கள். 15 மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராகவாக்களித்திருக்கிறார்கள்.

இனி இத்தீர்மானம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். வியப்புக்கு இடமின்றி வழமைபோலவே இலங்கைத் தரப்பிலிருந்து அதற்கு எதிராக வீராவேசமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தொலைநோக்குப் பார்வை கொண்ட இலங்காபிமானிகள் GSP+ போன்ற முன்னுரிமைச் சலுகைகளில் தங்கிருப்பதை விடுத்து போட்டித்தன்மை வாய்ந்த உலக சந்தையில் இலங்கை தனது பொருள்களையும் சேவைகளையும் மேம்படுத்துவதன் மூலம் இதுபோன்ற அழுத்தங்களிலிருந்து மீளலாம் என்று ஆலோசனை சொல்கின்றனர். எவ்வாறாயினும் அது உடனடியாக சாத்தியப்படப் போவதில்லை என்ற கசப்பான உண்மையையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகத்தில் அதிகளவில் தங்கியுள்ள நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கும் வழமையான இறக்குமதித் தீர்வைகளிலிருந்து விலக்குப்பெறவும் முன்னுரிமைச்சலுகை வழங்கும் ஒரு ஏற்பாடே இந்த GSP+ ஆகும். அது தெரிவு செய்யப்படும் நாடுகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சலுகைகளை அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய கைத்தொழில் நாடுகளும் வழங்குகின்றன.

இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஐக்கிய அமெரிக்காவினது GSP சலுகைகளால் பெரிதும் நன்மையடைந்து வருகிறது. இச்சலுகைகளைப்பெறும் தகுதியுள்ள பயனாளி நாடுகள் அடையவேண்டும் என எதிர்பார்க்கும் விடயங்களை சலுகை வழங்கும் நாடுகள் அறிவிக்கும். அவை பெரும்பாலும் மனித உரிமைகளின் மேம்பாடு ஜனநாயக விழுமியங்களின் மேம்பாடு சட்டவாட்சி சர்வதேச தர நியமங்களையும் சட்டங்களையும் பின்பற்றல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இவை நாகரிக வளர்ச்சி கொண்ட எந்தவொரு நாடும் அடைய வேண்டும் என எதிர் பார்க்கப்படும் விடயங்களாகும்.

மாறாக GSP சலுகை வழங்கும் எந்த ஒரு நாடும் பயனாளி நாட்டின் சந்தையை தமக்கு சாதகமாக மாற்றவேண்டுமென்றோ அந்நாட்டின் சொத்துக்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றோ கருதவில்லை. பயனாளி நாடுகள் தீர்வையின்றி அல்லது குறைந்த தீர்வைகளுடன் முன்னுரிமை அடிப்படையில் இலகுவில் தமது பொருட்களுக்கான சந்தைகளை பெற்றுக்கொள்ள உதவும் ஒரு அமைப்பாகவே அது செயற்பட்டு வருகிறது.

ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதிலும் மனித உரிமை விடயங்களிலும் மோசமான பதிவுகளைக் கொண்டுள்ள நாடுகள் சலுகைகளைப் பெறுவதற்காக முண்டியடிக்கும் அதேவேளை மேலே குறிப்பிட்ட அடிப்படை விழுமியங்களின் மேம்பாடு குறித்தான கலந்துரையாடல்களின் போது எப்போதும் இருவகையான எதிர்வாதங்களை முன்வைப்பதைக்
காணலாம். அதிலொன்று மனித உரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் வாய்கிழியப் பேசும் சலுகை வழங்கும் நாடுகள் தமது சொந்த நாட்டின் மனித உரிமைகள் ஜனநாயகம் பற்றி முதலில் கவனித்து விட்டு மற்ற நாடுகளின் விவகாரங்கள் குறித்துப் பேசவேண்டும் என்பது. இரண்டாவது வாதம், இறைமைகொண்ட ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேறுநாடுகளுக்கு அருகதை இல்லை அதனால் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு தாம் அடிபணிய மாட்டோம் என்பதாகும். இவ்விரு வாதங்களும் வெறும் விதண்டாவாதங்கள் என்பது சாதாரண குழந்தைக்கும் புரியும். ஏனெனில் சலுகை வழங்கும் எந்த ஒரு நாடும் பயனாளி நாட்டைக் கட்டாயப்படுத்த முடியாது. GSP+ சலுகை வேண்டாமென்றால் எந்த ஒரு பயனாளி நாடும் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்பட வேண்டியதில்லை. தமது இஷ்டப்படி எதனையும் செய்து கொள்ளலாம். மறுபுறம் GSP+ சலுகைகளைப் பெறுவதற்காக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படும் விடயங்கள் ஒன்றும் தீண்டத்தகாத விடயங்களோ பொது மக்களுக்கு எதிரானவையோ அல்ல. மாறாக நாகரிக முதிர்ச்சி கொண்ட எந்த சமூகமும் சுயமாகவே எய்த வேண்டுமென எதிர் பார்க்கப்படும் உயரிய விழுமியங்களாகும்.

எனவே இத்தகைய நாடுகளில் வாழும் பிரஜைகளுக்கு இது பற்றிய புரிதல் இருப்பது அவசியமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் இதனை தமது தாய் நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர். அதுபற்றி எதுவும் புரியாத மக்களும் பூம் பூம் மாடுகள் போல தலையாட்டி அவர்களுக்காக கடைக்குப் போகின்றனர்.

இலங்கையைப் பொறுத்த மட்டில் அது அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் தொடர்ச்சியாகவே இச்சலுகைகளை அனுபவித்து வருகிறது. 2009 இல் இந்நாட்டில் இடம்பெற்ற கோரயுத்தம் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலிகொண்டும் அங்கவீனர்களாக்கியும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் ஜனநாயக விரோத செயற்பாடுகள் போன்றவற்றை முன்னிறுத்தி ஐரோப்பிய ஒன்றியம் 15.02.2010 அன்று இலங்கைக்கு வழங்கியிருந்த GSP+ சலுகைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது. 9.6 சதவீத தீர்வைகளை செலுத்தியே இலங்கைப் பொருள்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரவேசிக்க நேர்ந்தது. இதன் காரணமாக இலங்கை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

பெரும் எண்ணிக்கையிலான சிறிய ஆடைதயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர் பலர் வேலையிழந்தனர். பெரிய நிறுவனங்கள் தமது ஏற்றுமதிகளின் விலைகளைக் குறைப்பதன்
மூலம் தீர்வைப் பாதிப்பைத் தாமே தாங்கிக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளை தக்கவைக்க முயற்சித்தன. மறுபுறம் உயர்விலைகொண்ட ஆடைகளை தயாரிப்பதன் மூலம் சந்தையை பாதுகாக்க முனைந்தன. கடலுணவு ஏற்றுமதிகள் மாலைதீவுகளின் போட்டியைச் சந்திக்க முடியாமல் சந்தைகளை இழந்தன. இந் நிலைமை தொடர்ந்த நிலையில் 2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் 19.05.2017 அன்று இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ முன்னுரிமைச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் ஐரோப்பிய ஒன்றியம் GSP+ சலுகைகளை
இடைநிறுத்தி வைத்திருந்த காலப் பகுதியிலும் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு இச்சலுகைகளைத் தொடர்ச்சியாக வழங்கிவந்தது என்பதாகும்.

எனவே மேற்குலக நாடுகள் இலங்கையுடன் தொடர்பிலிருப்பதை ஒரேயடியாக நிறுத்திவிடாது. ஆனால் அது மேற்குலக நாடுகளுக்கு இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்று அர்த்தப்படாது.

உண்மையில் இலங்கைக்கே மேற்குலக நாடுகளின் சந்தைகள் தேவைப்படுகின்றன. இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடு சீனா என்று கூறப்பட்டாலும் இலங்கையின் ஏற்றுமதிகளில் சீனாவுக்கான ஏற்றுமதிகள் மிகமிக அற்பமே. ஆனால் இலங்கையின் இறக்குமதிகளில் 22.4 சதவீதம் சீனாவிலிருந்து வந்தது.

இலங்கையின் ஏற்றுமதிகளில் 23 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 9 சதவீதம் மாத்திரமே ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது. 2020 இல் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிலிருந்து 2083 மில்லியன் யூரோ பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்தது.

ஆகவே ஏற்றுமதிகளுக்காக இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் தேவைப்படுகிறது. அது மட்டுமன்றி இலங்கையின் முதன்மை ஏற்றுமதிச்சந்தை ஐக்கிய அமெரிக்காவாகும். இலங்கையின் 25 சதவீதமான ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்குச் செல்கின்றன. ஆகவே இலங்கையின் ஏற்று மதிகளில் பெரும்பாலானைவை மேற்குலக நாடுகளுக்கே செல்கின்றன. இதுபோன்றவொரு சந்தை வாய்ப்பை சீனாவால் வழங்கிவிட முடியாது. அவ்வாறு வழங்கக்கூடிய வாய்ப்பிருந்தாலும் சீனா அதனைச் செய்யாது. ஆனால் துறைமுக நகரத்தில் முதலீடு செய்யும் சீனா நிறுவனங்கள் தொழிற்பட ஆரம்பிக்கும் போது சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் அதிகரிக்க வாய்புண்டு. ஆனால் அதிலும் சீனாவுக்கான பொருள் ஏற்றுமதிகள் அதிகரிப்ப தற்கான வாய்ப்புகள் அரிதென்றே கூறலாம்.

எனவே ஐரோப்பிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாகவே கடும் கரிசனையுடன் பார்க்கப்பட வேண்டும். புதிய சந்தைகளை தேடும் அதேவேளை ஏற்கெனவே இருக்கின்ற சலுகைகளுடன் கூடிய சந்தைகளை முட்டாள்தனமான நடவடிக்கைகளால் இழந்துவிடக் கூடாது.

ஒருபுறம் கோரேனாவால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்து வாழ வழியின்றித்துடிக்கும் பாமர மக்கள். மறுபுறம் பொருளாதார இயந்திரத்தைச் சுழலவைக்க ஆபத்தின் மத்தியிலும் கடும் நெருக்கடிக்களுடன் தொழில் புரியும் தொழிலாளிகள். இந்நேரத்தில் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கும் அரசியல்வாதிகளின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் காரணமாக GSP+ இழக்கப்படுமாயின் அது பெரிய நெருக்கடியை உருவாக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சேர்ந்து இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு GSP+ சலுகையை நீக்கினாலோ அல்லது இலங்கையிலிருந்தான இறக்குமதிகளின் அளவை மட்டுப்படுத்தினாலோ இலங்கைப் பொருளாதாரம் சுருண்டு விழும். அதனை சீனாவால் காப்பாற்ற முடியாது.

மேற்குலக நாடுகளின் சந்தைகளே இலங்கைக்குத் தேவை சீனாவுக்கான ஏற்றுமதிகள் மிகமிக அற்பமே கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கடந்த 10ஆம் திகதி ஐரோப்பியப் பாராளுமன்றம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகைகளை…

மேற்குலக நாடுகளின் சந்தைகளே இலங்கைக்குத் தேவை சீனாவுக்கான ஏற்றுமதிகள் மிகமிக அற்பமே கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கடந்த 10ஆம் திகதி ஐரோப்பியப் பாராளுமன்றம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகைகளை…